நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சுற்றுப்புறச்சூழல் காப்போம்

சுசிலா

Jun 10, 2017

Siragu environment2

உலக சுற்றுப்புறச்சூழல் தினமாக ஜூன் 5 – ந்தேதி உலகெங்கிலும் அனுசரிக்கப்பட்டது. அதற்கான விழிப்புணர்வை மக்களிடம் சேர்ப்பதில் சமூக ஆர்வலர்கள் இவ்வாண்டு அதிக அக்கறை எடுத்துக்கொண்டனர் என்றுதான் சொல்ல வேண்டும். பொதுவாக மரம் வளர்ப்பது என்பது சில ஆண்டுகளாக நம்மிடம் குறைந்திருந்தது. அதிலும் நம் மண்சார்ந்த மரங்கள் நடுவது என்பது எல்லோருக்கும் ஒரு விருப்பமில்லா செய்கை என்ற மாயை உருவாகி இருந்தது என்றுதான் கூற வேண்டும்.

ஏனென்றால், நம் மரங்கள் வளர்வதற்கு தாமதமாகும், வளர்ந்து பயன் தர பலஆண்டுகள் ஆகிறது என்ற ஒரு மனநிலைதான் காரணம். வெளிநாட்டு மரங்கள் வெகு விரைவில் வளர்ந்து, பெரிய மரமாகி நிழல் தருகின்றன. அதனால் தான் நம் மக்களும் சரி, அரசாங்கமும் சரி, சாலை இரு மருங்கிலும் இந்த மண்சாரா மரங்களை வளர்த்து வைத்திருக்கின்றனர். சென்ற 2016 -ஆம் ஆண்டு சென்னையில் வந்த ‘வர்தா புயல்’ காரணமாக பல மரங்கள் வேரோடு சாய்ந்தன.

Siragu environment3

இந்த கோடை வெப்பம் அதிக அனலாக தகித்ததிற்கு மரங்கள் இல்லாமையும் ஒரு முக்கியக் காரணமாக ஆகிவிட்டது இந்த நிகழ்வு தான் மக்களிடம் மிகச்சரியான முறையில் சென்றடைந்திருக்கிறது. மண்சார்ந்த மரங்களை நடவேண்டும் என்ற ஒரு விழிப்புணர்வை அளித்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். இந்த சுற்றுப்புறச்சூழல் தினத்தில் பல இடங்களில் மரங்கள் நடப்பட்டன. பல தனியார் நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், மாணவர்கள், சமூக ஆர்வலர்கள், சூழியியல் ஆர்வலர்கள், பொது மக்கள் என அனைவரும் இதில், தங்களுக்கான பங்களிப்பை முன்னெடுத்திருக்கிறார்கள் என்பது மிகவும் வரவேற்புக்குரிய ஒன்றாகும். பிரபல தனியார் நிறுவனம் ஒன்று, ஒரு லட்சம் வேப்பமரங்கள் நட்டிருப்பதாக ஒரு புள்ளிவிவரத்தை பதிவு செய்திருப்பது மகிழ்ச்சியான செய்தியாகும்.!

மரங்கள் நடுவதிலும், மழை பெறுவதிலும், நம் வளிமண்டலத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்வதிலும் உள்ள விழிப்புணர்வு நெகிழிப்பொருட்கள் பயன்பாட்டிலும் மக்களுக்கு வர வேண்டும் என்பது தான் இக்கட்டுரையின் மிக முக்கிய நோக்கமாகும். இந்த நெகிழிப்பொருட்கள் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியவை. வரும் காலத்தில் கடலில் மீன்கள் இருப்பதை விட நெகிழிப்பொருட்கள் தான் அதிகம் இருக்கும் என்று சர்வதேச ஆய்வு ஒன்று சொல்கிறது. இதனை உணர்ந்து இப்போதே நாம் அனைவரும் அதன் பயன்பாட்டை நிறுத்திவிடவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

Siragu environment4

கடலில் மட்டுமல்ல… மண்ணையும் கூட பாழ்படுத்தி இருக்கிறது இந்த நெகிழிப்பொருட்கள். மழைநீர் மண்ணுக்குள் புகவிடாமல் தடுத்து, நிலத்தின் நீர்மட்டத்தை குறைத்திருக்கிறது என்பது அச்சத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. மேலும் குப்பைகளில் கிடக்கும் இந்த நெகிழிப் பைகளைத் தின்று விடும் கால்நடைகள் தங்கள் உயிரையும் பறிகொடுக்கின்றன.!

Siragu environment6

திருமணங்கள், நம் வீட்டு விசேசங்கள் என அனைத்திற்கும் நாம் தண்ணீர் பாட்டில்கள், இனிப்பு, பழச்சாறு, காப்பி, தேநீர் ஆகியவற்றிற்கு இந்த நெகிழிக் கோப்பைகளை பயன்படுத்தும் பழக்கத்தை அறவே தவிர்ப்போம். சில இடங்களில் வாழை இலை போன்ற நெகிழி இலை பயன்பாட்டில் உள்ளது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிக அவசியாமாகும். சாலையோர மற்றும் சிறு உணவகங்களில் கூட, சூடான குழம்பு வகைகளை இந்த நெகிழி பைகளில் ஊற்றித்தான் கொடுக்கிறார்கள். இதில் உள்ள வேதியியல் பொருட்கள் உணவுடன் கரைந்து நம் உடல் நலத்திற்கும் கேடு விளைவிக்கிறது. சுற்றுப்புறச் சூழலையும் கெடுத்துவிடுகிறது. அக்காலத்தில் உள்ளது போன்று நம் வீட்டுப் பாத்திரங்களை, தூக்கு, வாளி, போன்றவற்றில் வாங்கி வரும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வோமாக.!

மனிதன் மற்றும் அனைத்து உயிர்களும் வாழக்கூடிய இந்த புவியை அதற்கே உரிய இயற்கை வளங்களுடன் பாதுகாத்து வரும் நம் சந்ததியினரிடம் ஒப்படைப்போம். அவர்களுக்கும் இதன் முக்கியத்துவத்தைக் கற்றுக் கொடுப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுற்றுப்புறச்சூழல் காப்போம்”

அதிகம் படித்தது