மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சூது கவ்வும்- திரை விமர்சனம்

பால முருகன்

May 17, 2013

சமீபத்தில் திரைக்கு வந்த படங்களில் சூது கவ்வும் என்ற படம் மக்களின் பேராதரவைப் பெற்று திரையில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருகிறது. காரணம் இப்படம் முழுக்க முழுக்க நகைச்சுவை கலந்து இருப்பதே. படத்தின் இறுதியில் நாட்டுக்கொரு நல்ல செய்தியும் கூறத்தவறவில்லை.

தேன் மேற்குப் பருவக்காற்று, நடுவுல கொஞ்சம் பக்கத்தக் காணோம், பீட்சா போன்ற வெற்றிப் படங்களில் நடித்த கதை நாயகன் விஜய் சேதுபதிக்கு மீண்டும் ஒரு வெற்றியைத் தேடித்தருவதற்காகவே வெளிவந்திருக்கும் படமே சூது கவ்வும்.

ஆட்களைக் கடத்தி பணம் பறிக்கும் தொழிலைச் செய்பவர் விஜய் சேதுபதி. அடி உதை கூடாது, அதிகாரத்தில் இருப்பவர்களைக் கை வைக்கக்கூடாது. செய்யும் தொழிலில் சிக்கல் என்றால் இதை விட்டு அடுத்ததைச் செய்ய வேண்டும் போன்ற 5 திட்டங்களை தனது ஆட்கடத்தல் தொழிலுக்கு வகுத்துக் கொண்டு களம் இருங்குகிறார்.

ஒரு ஓட்டைக் காரும், ஒன்றுக்கும் உதவாத ஐடியாக்களைத் தரும் கற்பனைக் காதலியான சஞ்சிதா செட்டியுடன் இணைந்து  ஆட்கடத்தல் தொழிலில் பல சொதப்பல்களைச் செய்கிறார். இவருடன் வேலை இல்லாத மூன்று இளைஞர்கள் கூட்டு சேருகிறார்கள். இந்த நான்கு பேரும் கத்தியின்றி, ரத்தமின்றி ஆட்களைக் கடத்துகின்றனர். இவர்களிடம் ஒருவன் வந்து,  நேர்மையான நிதி அமைச்சராக இருக்கும் எம்.எஸ்.பாஸ்கரின் மகனைக் கடத்தினால் இரண்டு கோடி தருவதாக ஆசை காட்டுகிறான். முதல் முறையாக தனது 5 கொள்கையை விட்டு அதிகார மட்டத்தில் கை வைக்கத் துணிந்து விடுகின்றனர்.

மந்திரி மகனோ, இவர்களின் கடத்தலுக்கு தானாகவே வந்து உதவுகிறான். என்னை தயவு செய்து கடத்துங்கள், கிடைக்கும் இரண்டு கோடி ரூபாயில் உங்களுக்குப் பாதி எனக்குப் பாதி என்கிறான். இவன் கூறியதைக் கேட்டு இவனைக் கடத்தும் நாடகத்தை நடத்துகின்றனர். ஒரு வழியாக இரண்டு கோடி ரூபாய் இவர்களின் கைக்கு வந்ததும் மந்திரி மகனுக்கும், ஆட்கடத்தல் கும்பலுக்கும் தகராறு தொடங்குகிறது. இதனால் மொத்த பணத்தையும் மந்திரி மகன் எடுத்துக் கொண்டு ஓடி விடுகிறான்.

இந்த ஆட்கடத்தல் கும்பலைப் பிடிப்பதற்காகவே சிறப்பு போலீஸ் அதிகாரியான யோக் ஜெப்பி நியமிக்கப்படுகிறார். மந்திரி மகனையும், பணத்தையும் இழந்த விஜய் சேதுபதி கும்பல், இந்த சிறப்பு போலீஸ் அதிகாரியிடம் மாட்டிக் கொள்கிறது. இவரிடமிருந்து இந்த கும்பல் தப்பினார்களா? இல்லையா என்பதே மீதிக்கதை.

விஜய் சேதுபதி 40 வயது மனிதராக தோற்றத்தில் உருமாறி இருக்கிறார். ஆறு பை (சிக்ஸ்பேக்) எனக் கூறிக் கொண்டு தான் உடலை முறுக்கேற்றும் தற்போதைய  தமிழ் கதாநாயகர்கள் மத்தியில் படம் முழுதும் முதியத்தோற்றத்தில் தோன்றி எடுத்துக்கொண்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து பாராட்டு வாங்குகிறார்.

சாலையில் சென்று கொண்டிருக்கும் ஒரு இளம் பெண்ணைக் கடத்துவது சொதப்பலாகி, அவளிடமே விஜய் சேதுபதி அடிபட்டு, தன் காரை ஒட்டிக் கொண்டு ஓடும் ஆரம்பக்காட்சியே அமர்க்களப்படுத்துகிறது. நடிகை நயன்தாராவுக்கு கோவில் கட்டியதால் ஊரை விட்டே துரத்தப்படும் சிம்கா, தான் வேலை பார்க்கும் ஸ்டார் ஓட்டலுக்கு வந்த ஜாக்குவார் ரகக் காரை ஒட்டிப்பார்க்கும் ஆசையில், அக்காரை வெளியில் ஓட்டிக்கொண்டு சென்றதால் வேலையை இழக்கும் ஸ்டார் ஹோட்டல் கார் பார்க்கர் (ஓட்டுநர்) ரமேசு, தான் விரும்பாத பெண்ணால் மென்பொருள் நிறுவனத்திலிருந்து தனது வேலையை இழக்கும் இவர்களின் நண்பரான அசோக் ஆகிய இவர்கள் மதுக்கடையில் ஒன்றில் விஜய் சேதுபதி அறிமுகம் கிடைக்க அப்போதிலிருந்து அனைவரும் இணைந்தே ஆட்கடத்தல் தொழில் செய்ய முனைகின்றனர்.

இந்தக் கூட்டணி இணைந்ததும் கடத்தல் தோழில் இன்னும் சுவராசியமாகிறது. நேர்மையான மந்திரியான எம்.எஸ்.பாஸ்கரின் மகனைக் கடத்துவதிலிருந்து கதை சூடுபிடிக்கிறது. இல்லாத காதலியை இருப்பதாக நினைத்துக் கொண்டு விஜய் சேதுபதி சஞ்சிதா செட்டியிடம் பேசுவதையும், சிரிப்பதையும், அழுவதையும் பார்த்து இந்த மூவருமே பயப்படுவது கலகலப்பு.

என்ன பண்ணப் போறோம்னு தெரியாம சென்னைக்கு வர்றவன்தான் சாதிக்கிறான், பிளானோடு வர்றவன் ஊருக்கே போயிடுறான்,  “நாளைக்கு  சண்டே நாங்க ஒர்க் பண்ண மாட்டோம் ( கடத்த மாட்டோம்), பணத்தை திங்கட்கிழமை கொண்டு வாங்க, என்ற வசனங்களும், மந்திரி மகனைக் கட்டிப்போட்டு விட்டு சாப்பிடப் போகிறோம் என எழுதுவதற்குப் பதிலாக “சப்பிடப் போறோம்” என்று எழுதி வைப்பதிலும் , மற்றொரு இடத்தில் ஒரு இளம்பெண்ணைக் கடத்தி அப்பெண்ணை காருக்குள் வைத்து, அவளின் வாயிற்குள் துணியை திணிக்கின்றனர். அவளோ துப்பிவிட்டு “நான் சத்தம் போடமாட்டேன் தயவு செய்து இந்தத் துணிய மட்டும் வாயில வைக்காதீங்க ரொம்ப நாறுது” எனக் கூறும் வசனங்களில் திரையரங்கில் ஒரே சிரிப்பலை. இப்படி  3 நிமிடத்திற்கு ஒரு முறை திரையரங்கில் சிரிப்புச் சத்தம் கேட்கிறது.

நேர்மையான அமைச்சரான எம்.எஸ்.பாஸ்கரின் மகனாக வரும் கருணாகரன், சிம்கா, ரமேஷ், அசோக் செல்வன், என்கவுண்டர் போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி , ரௌடி டாக்டர் அருள் தாஸ், முதல்வர் ராதாரவி, கான்ஸ்டபிள் வெங்கடேசு, டி.ஐ.ஜி. பாய்ஸ் ராஜன், நம்பிக்கைக் கண்ணன், சிவக்குமார் உள்ளிட்ட ஒவ்வொரு பாத்திரமும் இதில் பங்கேற்று நடித்திருப்பவர்களும் சூது கவ்வும் படத்திற்கு பெரும் பலம்.

இதில் போலீஸ் அதிகாரியாக வரும் யோக் ஜெப்பி படத்தின் இறுதி வரை  ஒரு வார்த்தை கூடப் பேசாமல் குரூரம் காட்டுகிறார். இறுதியில் இவர் தனக்குத் தானே சுட்டுக்கொள்வது நகைச்சுவை. மந்திரியின் மகனான கருணாகரன், நேர்மையான தன் தந்தையிடமிருந்து இரண்டு கோடி திருடுவதைக் கண்ட முதல்வர் ராதாரவி, கருணாகரனை நேரில் அழைத்து உன் அப்பனைப் போல் நேர்மையாக இருந்து சம்பாதிக்காமல் இருப்பதை விடுத்து நீ இவரிடமே இரண்டு கோடி திருடியிருக்கிறாய். உன்னைப் போல ஒருவருக்குத் தான் எம்.எல்.ஏ பதவி கொடுக்க வேண்டும். தவிர உன் அப்பனிடம் இந்த இரண்டு கோடி திருடியது போல அரசியலில் நீ மக்களிடம் திருடவேண்டும். நீ மக்களிடத்தில் 300 கொடியாவது திருடுவாய் என்ற நம்பிக்கை எனக்கு  இருக்கிறது. ஆதலால் உனக்கே எம்.எல்.ஏ. சீட் என்று முடியும் இக்காட்சி  நாட்டு நடப்பை அப்படியே பிரதிபலிக்கிறது.

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணின் இசையில் கானா பாலாவின் “காசு பணம் துட்டு மணி மணி “ மாமா டவுசர் கழண்டுச்சே, கம்னா கம் கம்னாட்டி கோ போன்ற பாடல்கள் பட்டி தொட்டி எங்கும் ஒலிக்கிறது. தினேஷ் கிருஷ்ணனின் ஒளிப்பதிவு, லியோ ஜான் பாலின் படத்தொகுப்பு படத்திற்கு மேலும் பலம் சேர்க்கின்றன. இயக்குனர் நலன் குமாரசாமியின் இயக்கத்தில் “சூது கவ்வும்” படம் கோடை காலத்தில் மனத்தைக் குளிர்விக்கும் படமாக திரை உலா வந்து கொண்டிருக்கிறது.

“மொத்தத்தில் சூது கவ்வும் படம் பார்ப்பவர்களின் மனதையும் கவ்வும்”


பால முருகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சூது கவ்வும்- திரை விமர்சனம்”

அதிகம் படித்தது