ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சூரியனும் பொங்கல் பண்டிகையும் (பகுதி- 11)

முனைவர். ந. அரவிந்த்

Jun 19, 2021

தமிழன் வருடங்களை 12 மாதங்களாக பிரித்தான். அவை சித்திரை, வைகாசி, ஆனி, ஆடி, ஆவணி, புரட்டாசி, ஐப்பசி, கார்த்திகை, மார்கழி, தை, மாசி மற்றும் பங்குனி. சித்திரை ஒன்றாம் தேதிதமிழ் புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. தமிழர்களை பொறுத்தவரை நெல் பயிரிடுதல் பிரதான விவசாயமாகும். அரிசியே தமிழர்களின் பிரதான உணவாக இருந்தது. இன்றும் இருக்கிறது. பசுமைப் புரட்சிக்கு முன்புவரை நாம் ஆறு மாதத்தில் அறுவடைக்கு வரும் நாட்டு ரக நெல் மூலம் கிடைக்கும் அரிசியை உண்டு வந்தோம் ஆரோக்கியமாகவும் நம் முன்னோர்கள் வாழ்ந்துவந்தார்கள். ஆடி மாதக் காற்றும், தட்பவெப்பநிலையும் விதை விதைப்பதற்கு ஏற்றகாலம். ஆடி மாதம் நெல் பயிரிட்டால் மார்கழி கடைசியில் நெல்லானது அறுவடைக்குத் தயாராக இருக்கும். அந்தப் புதிய நெல்லிலிருந்து கிடைக்கும் அரிசியில் புது பானையில் உணவு செய்து, அதை இறைவனுக்கும் படைத்து, நன்றிசெலுத்தி உணவருந்தினான் ஆதி தமிழன். தை 1-ஆம்தேதி கொண்டாடப்படும் இந்த பண்டிகை பொங்கல் திருநாள் என அழைக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகையன்று சர்க்கரை பொங்கலும் சமைத்து, உண்டு மகிழ்ந்தான். சர்க்கரை பொங்கல் செய்ய இனிப்பிற்காக நாட்டு வெல்லம் அல்லது பனங்கருப்பட்டியை பயன்படுத்தினான்.

siragu pongalidudhal1

பொங்கலிடுதல்

இந்த பொங்கல் பண்டிகையானது தமிழர் திருநாள் எனவும் அழைக்கப்படுகிறது. விவசாயம் செழித்தோங்க அத்தியாவசிய தேவை சூரிய ஒளி. எனவே இறைவன் தந்த சூரியனுக்கும் முக்கியத்துவம் தந்தான் தமிழன். நாற்று நடுமுன் நிலத்தை உழ நாட்டு காளை மாடுகளை பயன்படுத்தியதால் அவற்றிற்கும் மரியாதை தரும் விதமாக ‘தை’2ம் தேதியை ‘மாட்டுப் பொங்கல்’ என கொண்டாடினார்கள் நம் முன்னோர்கள்..

மாணிக்கவாசகர் பாடிய கீழே உள்ள, ‘திருவண்டப் பகுதி 13-16’ பாடலில் இறைவனின் படைக்கும் திறனை வியந்துள்ளார்.

படைப்பாற் படைக்கும் பழையோன், படைத்தவை
காப்போற் காக்கும் கடவுள், காப்பவை
கரப்போன் கரப்பவை கருதாக்
கருத்துடைக் கடவுள்!

அதன்படி, சூரியனுக்கு ஒளி தந்தவன். சந்திரனில் குளிர்ச்சியை வைத்தவன். தீயில் வெப்பத்தை வைத்தவன். காற்றில் இயக்கத்தை வைத்தவன். நீரில் சுவையைத் தந்தவன். மண்ணில் திட்பத்தை வைத்தவன் என்று இறைவனை வியக்கிறார் மாணிக்கவாசகர். நமக்காக சூரியனையும் அதற்குள் ஒளியையும் தந்த இறைவனுக்கு பொங்கல் பண்டிகையில் நன்றி செலுத்தி வணங்குவது ஒவ்வொரு தமிழனின் கடமையாகும்.

சங்கராந்தி அல்லது மகர சங்கராந்தி என்ற பெயரில் பொங்கல் பண்டிகை தமிழ்நாடு தவிர பிற மாநிலங்களிலும் கொண்டாடப்படுகிறது. மகர சங்கராந்தி நாளில் இருந்து பகல் நேரம் அதிகரிப்பதாலும் மற்றும் இந்த நாள் தானிய அறுவடையுடன் ஒன்றுவதாலும் இது அறுவடைத் திருநாளாகவும், சூரியனுக்கு வரவேற்பும் நன்றியும் தெரிவிக்கும் திருநாளாகவும் கொண்டாடப்படுகிறது. இந்த பொங்கல் பண்டிகை இந்தோனேசியா, தாய்லாந்து, லாவோஸ், நேபாளம், மியான்மர் மற்றும் இலங்கை போன்ற நாடுகளில் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. சூரியன் வடக்கு நோக்கி தன் பயணத்தை திரும்புகின்ற நாள் ‘மகர சங்கராந்தி’ என அழைக்கப்படுகிறது. சமஸ்கிருதத்தில் ‘சங்கரமண’ எனில் ‘நகரத் துவங்கு’ என பொருள்படும். இதுவே ‘சங்கராந்தி’ என அழைக்கப்படுகிறது.

மத்தியகிழக்கு நாடுகளில்கூட தங்கள் வெள்ளாமையை அறுத்து அதன் முதற்பலனாகிய ஒரு கதிர்க்கட்டை கோயிலுக்கு கொண்டு சென்று சமர்ப்பித்து அறுவடைத் திருநாளாக வழிபட்டு கொண்டாடுகின்றனர்.


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சூரியனும் பொங்கல் பண்டிகையும் (பகுதி- 11)”

அதிகம் படித்தது