சென்னைப் புறநகர் என்கிற நரகம்
வெங்கட்ரமணிJan 17, 2015
தலைப்பைப் பார்த்து தப்பு கணக்கு போட்டுவிடாதீர்கள். சென்னை நகரத்திற்குள் வாழ்வதும் கொடுமையான துன்பியல் அனுபவமே. இந்த கட்டுரையின் மூலம் நான் சொல்ல வருவது புறநகரில் நாம் அடையும் துன்பங்களை பற்றிய சித்திரமாகும். நகரத்தில் வாழ்வதற்கும், புறநகரில் வாழ்வதற்கும் உள்ள வித்தியாசம் அனுபவிக்கும் துன்பங்களில் உள்ள தீவிரத்தன்மையில்தான் மாறுபடுகிறது.
உதாரணத்திற்கு புறநகரின் போக்குவரத்தை எடுத்துக்கொள்வோம், பெரும்பாலான புறநகர் சாலைகள் மிகவும் குறுகலானவை. சாலையின் நீளத்திற்கு சற்றும் பொருந்தாதவை. நகரங்களை நிர்மாணிப்பதில் உள்ள முக்கிய கூறு என்பது சாலையின் நீளம் மற்றும் அகலத்தை முடிவு செய்வதாகும். ஆனால் புறநகரின் 3300 அடி நீளமுள்ள சாலைகள் கூட 20 அடி அகலத்தில் அமைகிறது. மழைநீர் வடிகால்கள் சாலையை துருத்திக்கொண்டு நிற்பதும், வாகனங்கள் சாலை நெடுக நிறுத்தப்பட்டிருப்பதும் ஆங்காங்கே சாலை ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதும் இயல்பாக புறநகரில் காணக் கிடைக்கும். ஒரு வேளை குறுகலான ஒரு சாலையில் தவறாக நுழைந்து செல்லும்பொழுது எதிரே வேறு ஒரு பெரிய வாகனம் வந்தால் உங்கள் நிலை சோகமாகிவிடும். எங்கேயாவது சிறிய இடம் இருந்தால் ஒதுங்கி வழி விடலாம் இல்லையேல் பின்னோக்கி செல்ல வேண்டியதுதான். அதற்கும் நமக்குப் பின்னால் வாகனம் எதுவும் இல்லாமல் இருக்க வேண்டும்.
புறநகரில் வாழும் மக்கள் வெகு இயல்பாக காணக்கூடிய மற்ற ஒன்று கைகளால் எட்டி பிடித்துவிடக்கூடிய உயரத்தில் செல்லும் மின்சாரக் கம்பிகள். குழந்தைகளால் கூட எட்டிப்பிடித்து விட முடியும் அளவிற்கு கம்பிகள் வேயப்பட்டிருக்கும். எரியாத தெரு விளக்குகள், தெரு நாய்கள், அடைத்துக்கொண்டிருக்கும் மழைநீர் சகதி, அழுகும் குப்பை, நெருக்கமான குடியிருப்புகள் (Apartments), சாலையை ஆக்கிரமிக்கும் தனியார் கட்டிடங்கள், அரசுப் பள்ளிகள், மருத்துவமனைகள் இல்லாமை, குண்டும் குழியுமான சாலைகள், நடைபாதையற்ற சாலைகள் போன்றவை புறநகரில் வாழும்போது நாம் தினசரி சந்திக்கும் துன்பங்களாகும்.
அடிப்படையான அரசு சேவைகளுக்குக் கூட நெடுந்தூரம் செல்ல வேண்டிய தொந்தரவு. ஏனென்றால் அரசு சேவைக்கு (மின்சாரம், குடிநீர், காவல்துறை, கிராம அதிகாரி, நகராட்சி, பொதுமருத்துவமனைகள், கிணறுகள், தண்ணீர் தொட்டிகள், பேருந்து நிறுத்தங்கள், சமூக கூடங்கள், அரசு பள்ளிகள்) ஒதுக்கப்பட வேண்டிய இடம் ஒதுக்கப்பட்டிருக்காது.
ஏன் இதுபோன்ற எளிமையாக தீர்க்கக்கூடிய பிரச்சனைகள் பல பத்தாண்டுகளாக தீர்க்கப்படாமல் இருக்கின்றன. வின்வெளிக்கு கோள்கள் அனுப்புவதற்கு இணையான கடினமான வேலையா இவை. இது போன்ற பணிகளுக்கு முறையாக பணம் ஒதுக்கப்படுகிறதா? அல்லது ஒதுக்கப்பட்ட பணம் சுருட்டப்படுகிறதா? அல்லது இது போன்ற வேலைகளை திட்டமிட்டு செயலாற்றி பாதுகாக்கும் மனிதர்கள் அசடுகளாகவும், முட்டாள்களாகவும், தகுதியற்றவர்களாகவும் இருக்கின்றார்களா?
உண்மைகளை அறிந்துகொண்டது போதும். இதற்கான காரணங்களையும் தீர்வுகளையும் ஆராய்வோம்.
உற்றுநோக்கினால் புறநகரின் பெரும்பாலான குடியிருப்பு மனைகள் (CMDA) சென்னை பெருநகர் வளர்ச்சிக் குழுமம் அல்லது (DTCP) நகர் ஊரமைப்பு இயக்ககம் போன்ற அரசு ஆணையங்களால் முறையாக அனுமதிக்கப்பட்டவை அல்ல என்று தெரியவரும். அப்படி முறையாக அனுமதி பெற்றிருந்தால் சாலைகளுக்கான நீளஅகலம், பூங்காக்கள், பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், கடைகள், அரசு கட்டிடங்கள், ஏழைகளுக்கான குடியிருப்பு வசதிகள், பேருந்து செல்ல வசதியான வழித்தடங்கள் போன்றவை இயல்பாகவே கிட்டியிருக்கும். அனைத்து சாலைகளும் நகராட்சிகளால் பராமரிக்கப்பட்டிருக்கும, பேருந்து வசதிகள் கிடைத்திருக்கும்.
முன்னர் சொன்னது போல பெரும்பாலான மனைப்பகுதிகள் (Layouts) முறையான அனுமதியின்றியும், பேராசை பிடித்த தனியார் முதலாளிகளால் பொதுப் பயன்பாட்டுக்கான இடங்களும் விற்கப்பட்டும் காணப்படுகின்றன. இந்தத் தொல்லைகளை அரசு எளிமையாக களையமுடியும். சில புதிய விதிகளும், ஏற்கனவே உள்ள விதிகளை அமல்படுத்துதலும் இவற்றை சாதிக்கும்.
முக்கியமாக ஒவ்வொரு தனியார் முதலாளியும் மனைகளை விற்கும் முன்பாக ஒரு குறிப்பிட்ட அளவு நிலத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற விதி அமல்படுத்தப்படவேண்டும். ஏற்கனவே பத்து சகதிவித நிலம் அரசிடம் பூங்காவிற்காகவும் பொதுபயன்பாட்டுக்காக ஒப்படைக்கப்படுகிறது. ஆனால் இது பற்றாது. மேலும் சாலைகள், நீர் வழிகள், மின்சார கம்பிகள், தெருவிளக்குகள் போன்றவை சரியாக அமைக்கப்பட்டிருக்கிறதா என்ற பரிசோதனை மேற்கொள்ளப்படவேண்டும். இவற்றிற்கான விதிகள் அறிவிக்கப்படவேண்டும். சாலைகளின் உயரமும் வடிகால்களின் அளவும் முறைப்படுத்தப்பட வேண்டும். இது போன்ற பணிகளை செய்யும் குத்தகைதாரர் ஐந்தாண்டு காலம் பராமரிப்புப் பணிகளை செய்யவேண்டும் என்ற ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட வேண்டும். ஆக ஒரு மனைப் பகுதி (Layout) விற்கப்படுவதற்கு முன்பாக அரசு ஆணையங்களின் அனுமதி முறையாக பெறப்பட்டு விதிகள் அனைத்தும் மீறப்படாமல் வசதிகள் செய்யப்பட்டு இருந்தால் மட்டுமே விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும். இவற்றுக்கான செலவுகள் அதிகமாக இருந்தாலும் பலன்களும் அதிகமாக இருக்கும். மனைகளின் மதிப்பும் உயர்வாக இருக்கும். விதிகள் வலுவாக இருந்தால் மனைகளை விற்கும் முதலாளிகளும் கட்டிட நிறுவனங்களும் தகுதியுடையவர்களாக இருந்தால் மட்டுமே அவர்களால் லாபம் ஈட்ட முடியும். இதன் மூலம் அனுபவமற்றவர்கள், முட்டாள்கள், காளான் முதலாளிகள் போன்றவர்கள் தவிர்க்கப்படுவார்கள்.
வங்கிகள் இத்தகைய சரியான மனைகளுக்கு மட்டுமே கடன் கொடுக்க வேண்டும். அரசு இதற்கான எந்த முதலீடும் செய்ய வேண்டியதில்லை. கொள்கைகளை சரியாக வகுத்து விதிகளை ஏற்படுத்தி அவை சரியாக பின்பற்றப்படுகின்றனவா என்று கண்காணித்தால் மட்டும் போதுமானது.
மற்றொரு பங்களிப்பாக பயன்படுத்தப்படாமல் இருக்கும் அரசு நிலங்கள் ஏலம் விடப்படவேண்டும். இதன் மூலம் தேவையான அளவு நிலமும், வாழ்வதற்கு நல்ல குடியிருப்பு பகுதிகளும் மக்களுக்குக் கிடைக்கும்.
மேலே சொன்ன ஆலோசனைகள் யாவும் ஏற்கனவே சொல்லப்பட்டதே. எதுவும் புதிய விஞ்ஞானம் அல்ல. அடிப்படைப் பொது அறிவு இருந்தாலே இது போன்ற பிரச்சனைகளை சமாளித்துவிட முடியும். ஆனால் அடிப்படை அறிவுதான் கிடைத்தற்கரியதாக இருக்கிறது.
BVe Consulting Engineers
Engineering Project Consultancy & Property Advisory Services,
Residential-Commercial-Industrial-Infrastructure Designs
Due-diligence studies -Asset valuation services
Chennai -600 083
bv.consultingengrs@gmail.com
வெங்கட்ரமணி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னைப் புறநகர் என்கிற நரகம்”