ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம்

சிறகு நிருபர்

Nov 21, 2015

chennai thaththalikkiradhu5உங்களில் பெரும்பாலானோர் சமீபத்தில் பெய்த பெருமழை ஏற்படுத்திய விளைவுகள் குறித்து அறிந்திருப்பீர்கள். ஏறக்குறைய 120 பேர் உயிரிழந்துள்ளனர். லட்சக்கணக்கான ஏழைமக்கள் உடைமைகளையும் பொருட்களையும் இழந்துள்ளனர். கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான உழைக்குந் திறன் வீணாகியுள்ளது. ஏராளமானோர் பல்வேறு வழிகளில் துன்பப்படுகின்றனர். நகரம் முழுவதும் சேறும், சகதியும், அழுக்கும் காணப்படுகிறது. வழக்கம்போல ஏழை மக்களும் நடுத்தர வர்க்கத்தினரும் இயற்கையின் சீற்றத்திற்கு பலிகடாவாகியுள்ளனர்.

இவ்வளவு கொடூரமான விளைவுகளை நாம் சந்திக்கும் அளவிற்கு இந்த மழை என்ன அவ்வளவு பெரிதா?

திடீரெனவும், முற்றிலும் எதிர்பாராத விதமாகவும் மிகப்பெரிய கனமழையாகவும் இருந்தது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் உறுதியாக இப்படியொரு பேரிழப்பை தரக்கூடிய அளவிற்கு அதன் வீரியம் இல்லை.

இருப்பினும் நாம் ஏன் இந்த நிலையை எதிர்கொள்கிறோம். இதற்கு காரணமாக நான் கூறுவது என்னவென்றால் கொடூரமான ஊழல், அரசின் கையாலாகாதத் தன்மை, திறமையின்மை, அடிப்படை அறிவற்ற நிலை, அரசியல்வாதிகளின் அலட்சியம், அதிகாரிகளின்  மற்றும் ஊழியர்களின் பொறுப்பின்மை, கடைசியாக நமது மக்களின் சமூக அறிவின்மை.

chennai thaththalikkiradhu6கீழே தொகுக்கப்பட்டுள்ள சில காரணங்களை கவனித்துப் படியுங்கள்.

அ. நீங்கள் வருவாய் துறையின் வசம் உள்ள சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களின் வரைபடங்களை இன்றைய கூகுள் வரைபடங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், எந்த அளவிற்கு ஏரிகள், குளங்கள், கால்வாய்கள் மற்றும் நீராதாரங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன என்பதை உணர முடியும். தோராயமாக 60லிருந்து 70 சதவிகிதமான நீராதாரங்களின் நிலம் அழிக்கப்பட்டுவிட்டது. அவை குப்பைகளாலும், மண்ணாலும் நிரப்பப்பட்டு மனைகளாக மாற்றப்பட்டுவிட்டன. நீராதாரங்களுக்கு நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்கள் மூடப்பட்டுவிட்டன. எனவே ஏதேனும் ஓரிரு ஏரிகள் பிழைத்திருந்தாலும் கூட கால்வாய்கள் இன்மையால் நீரானது அந்த ஏரிகட்கு செல்ல இயலாது. அப்படியிருக்கையில் வானத்திலிருந்து கொட்டும் நீர் செல்ல வழியில்லாமல் தேங்கத்தானே செய்யும்.

ஆ. தற்போது பிழைத்திருக்கக்கூடிய நீர்நிலைகளும், கால்வாய்களும் அறவே பராமரிக்கப்படவில்லை. அதில் தேங்கிய வண்டலானது நீரை வெளியேற்றும் சக்தியைத் தடுக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஏரியைத் தூர்வாரும் பணி காகிதங்களில் மட்டும் முடிந்து பணமானது சுருட்டப்படுகிறது. இது ஊரறிந்த ரகசியம்.

இ. ஒரு சில கால்வாய்கள் பிழைத்திருந்தாலும் அவற்றில் நமது மக்கள் குப்பைகளையும், நெகிழிப் பைகளையும், கட்டிட இடிபாடுகளையும் கொட்டி நிரப்புகின்றனர்.

chennai thaththalikkiradhu7ஈ. நகரத்தின் மழை நீர் அல்லது வெள்ளநீர் வடிகால்கள் கேவலமாக வடிவமைக்கப்பட்டுள்ளன. அவற்றின் கொள்ளுந் திறன் எவ்வித விஞ்ஞான வழிகளாலும் வரையறுக்கப்படவில்லை. நீரின் வாட்டம் பெரும்பாலும் தடுக்கப்பட்டு தண்ணீர் நடுத்தெருவில் நிற்கிறது. தினம் தினம் கொட்டப்படும் குப்பைகளும் சேர்ந்துகொண்டு குப்பைத் தொட்டிகளாகவே அவை காட்சியளிக்கின்றன.

உ.பெரும்பாலான, இத்தகைய மழைநீர் தேக்கங்கள் டெங்கு, மலேரியா போன்ற நோய்களை உருவாக்கும் தொழிற்சாலைகளாக மாறியுள்ளன.

ஊ. நீரை எடுத்துச் செல்லும் ஆற்றுப்படுகைகளில் உள்ள மணலானது சுரண்டப்பட்டு அந்தப் படுகைகள் நீரை உறிஞ்சிக் கொள்ளும் தன்மையை முற்றிலும் இழந்துவிட்டது. மணல் இன்மையால் ஆறுகள் நீரை எடுத்துச் செல்லும் கால்வாய்களைப்போல செயல்படுகின்றன. ஆற்றின் கொள்ளளவு இதனால் வேகமாக நிரம்பிவிடுவதால் கால்வாய்களில் அடித்துச் செல்லப்படும் நீர் திரும்பி வசிப்பிடங்களுக்குள்ளேயே நுழைகிறது.

எ. கூவம், பாலாறு மற்றும் பங்கிங்காங் கால்வாயில் கலக்கும் பல முகத்துவாரங்கள் கட்டிடங்களாலும், குடிசைகளாலும் அடைக்கப்பட்டு மொத்த கட்டமைப்புமே பாழாகியுள்ளது. சில காலம் முன்பு தனியார் பல்கலைக்கழகத்தின், சட்ட வரம்பை மீறிய கட்டிடங்கள் அரசால் இடிக்கப்பட்டன. இந்தக் கட்டிடங்கள் பெரிய அளவில் கூவம் ஆற்றை ஆக்கிரமித்திருந்தன.

ஏ. சாலைகள் மாற்றப்படும் பொழுது பழைய சாலை நீக்கப்பட்டு புதியதாக நிறுவப்படவேண்டும். அதற்கு பதிலாக ஏற்கனவே உள்ள சாலைகளின் மீதே புதிய சாலை போடப்படுகின்றது. இதனால் பல பகுதிகளில் உயரம் அதிகரிக்கிறது. 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கட்டிடங்கள் சாலைக்கு மிகக் கீழே இருப்பதால் தண்ணீர் எளிதில் வீடுகளுக்குள் நுழைந்துவிடுகிறது. அரசு நிறுவனமானது அடிப்படையான விடயத்தை முறை செய்வது, உண்மையைக்கூட கவனமின்றி அலட்சியப்படுத்துவது சென்னையில்தான் நடக்கும்.

chennai thaththalikkiradhu3ஐ. சாலையின் இருபுறங்களிலும் அனைத்து விதமான வாகனங்களும் நிரந்தரமாக நிறுத்தப்பட்டுள்ளன. இவை சாலைகளை சுத்தம் செய்வதையும், பராமரிப்பு செய்வதையும் பெரிய அளவில் தடுக்கின்றன. வாகனங்களுக்கு கீழே தேங்கும் நீர், கொசுக்களையும், கிருமிகளையும் உற்பத்தி செய்கிறது. சாலையை அடைத்துக்கொண்டு நிற்கும் வாகனங்களால் ஏற்படும் நெரிசலைத் தவிர உபரியாக இந்தத் தொல்லைவேறு எற்படுகிறது. நமது தெருக்களில் நடைபாதைகள் மிக மிக குறுகலாக இருப்பது வழக்கமாகவே ஆகிவிட்டது.

பல நூற்றாண்டுகளாக பராமரிக்கப்பட்டு வந்த நீர் சேகரிப்பு மற்றும் வடிகால் வசதிகள் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டு, அழிக்கப்பட்டு, மாற்றப்பட்டு வரும் நிலை இருபதாண்டுகளாக தொடர்கிறது. இதனாலேயே வெள்ளத்தின் கொடூர முகத்தையும் பேரழிவுகளையும் சந்திக்க வேண்டியதாக உள்ளது.

chennai thaththalikkiradhu2இவற்றுக்கெல்லாம் தீர்வு என்ன?. இத்தகைய அநீதிகளை எதிர்த்து கடுமையாக குரல் எழுப்புவதே சரியான தீர்வாக இருக்கும். எந்த வழிகள் கிடைத்தாலும், அவை புகார் பெட்டிகளாக இருக்கலாம், புகார் செய்யும் தொலைபேசி எண்களாக இருக்கலாம், அரசு இணையதளங்களாக இருக்கலாம், சமூக வலைதளங்களாக இருக்கலாம், செய்தித்தாள் பத்திகளாக இருக்கலாம். முதலமைச்சரின் தனிப்பிரிவு, மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையர் கூட்டங்கள் என்று அனைத்து வழிகளிலும் குரல் எழுப்புவதே ஓரளவிற்கு பிரச்சினையைத் தீர்க்கும். அரசால் அங்கீகரிக்கப்படாத சொத்துக்களை ஒருபோதும் வாங்காதீர். வெள்ளத்தால் பீடிக்கப்பட்ட பகுதிகளில் முதலீடு செய்யாதீர். முறையான ஆய்வு, சோதனை செய்யக்கூடிய ஒரு நிபுணரிடம் கலந்தாலோசித்து பிறகு சொத்துகளை வாங்கவும்.

மழையை மட்டும் குறைசொல்லிவிட்டு நாம் அமைதியாக இருப்பது தீர்வாகாது.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை ஏன் நீரில் மூழ்கி தத்தளிக்கிறது? ஊழலும் திறமையின்மையுமே முழுமுதற்காரணம்”

அதிகம் படித்தது