நவம்பர் 26, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை நகரில் இனிமையான கேழ்வரகுக் கூழ் விற்கும் மீனாட்சி

சித்திர சேனன்

Mar 21, 2015

DSC00995கேள்வி: உங்களைப் பற்றி கூறுங்கள்?

பதில்: என் பெயர் மீனாட்சி. (46). எங்கள் ஊர் மேடவாக்கம் தாண்டி உள்ள சித்தாலப்பாக்கம். எனக்கு 2 பெண் குழந்தைகள், 1 பையன். கணவர் உடம்பிற்கு முடியாமல் வீட்டில் இருக்கிறார். பிள்ளைகள் படிக்கிறார்கள். ஒரு பெண்ணிற்கு திருமணம் ஆகிவிட்டது.

கேள்வி: எத்தனையோ தொழில்கள் இருக்க இந்தத் தொழிலை ஏன் செய்கிறீர்கள்?

பதில்: என் குடும்ப வறுமைக்கு நானும் பல அலுவலகத்திற்கு சென்று வேலை பார்த்தேன். ஆனால் என் உழைப்பிற்கேற்ற ஊதியம் கிடைக்கவில்லை. சரி சுயதொழில் செய்யலாம் என்றால் பெரிய முதலீடு தேவைப்படுகிறது. ஆதலால் என் சக்திக்குத் தகுந்தாற்போல் சிறிய முதலீட்டில் இந்த கூழ் கடையை தொடங்கினேன்.

கேள்வி: எத்தனை வருடமாக இந்த கூழ் கடையை நடத்துகிறீர்கள்?

பதில்: நான் கடந்த 18 வருடங்களாக இந்த கடையை நடத்தி வருகிறேன்.

கேள்வி: இந்த கூழ் கடை நடத்த என்னென்ன பொருட்கள் தேவை? செலவு என்ன?

பதில்: இரண்டு கிலோ கேழ்வரகு மாவு ஒரு கிலோ நொய் அரிசி ஐந்து கிலோ விறகு. தொட்டுக்கிட மாங்காய் ஊறுகாய்,எலுமிச்சை ஊறுகாய்,மோர் மிளகாய்,பச்சை மிளகாய்,சுண்டைக்காய், வத்தல்,புதினா ஊறுகாய்கொத்தவரங்காய், வத்தல்,அப்பளம்,கருவாடு தொக்கு என இத்தனையும் தேவை. தவிர கேழ்வரகு கூழ்,மோர்,பெரிய வெங்காயம்,நொய் அரிசி என இக்கலவையே எனது கடைக்கு முதலாகும்.

2 கிலோ கேழ்வரகு மாவு – 100 ரூபாய்,நொய் அரிசி 1 கிலோ – 40 ரூபாய், 1 கிலோ விறகு 15 ரூபாய் வீதம் 5 கிலோ விறகு – 75 ரூபாய்தொட்டுக்கொள்ள வேண்டிய பொருட்கள் 100 ரூபாய் ஆகும். ஆதனால் ஒரு நாளைக்கு 315 ரூபாய் முதலீட்டில் தொடங்கும் இத்தொழிலில் நாளொன்றுக்கு 800 முதல் 1000 ரூபாய் வரை சம்பாதிக்கிறேன். இதில் எனக்கு செலவு போக மிச்ச லாபம் 500 முதல் 700 ரூபாய் வரை கிடைக்கிறது. ஊறுகாய் போன்ற பொருட்களை ஒரு முறை வாங்கினால் போதும் அவை ஒரு வாரத்திற்கு வரும்.

கேள்வி: உங்கள் வாடிக்கையாளர் யார்?

பதில்: ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்கள் காரிலும்,பேருந்திலும் வந்து கூழ் குடிக்கின்றனர். அவர்கள் உடல் நலம் பேணுவதற்காக அவ்வாறு செய்கிறார்கள் என நினைக்கிறேன். தவிர நடைபாதைவாசிகள்,அலுவலகம் செல்வோர்,அரசு அதிகாரிகள் என அனைவரும் வருகின்றனர். இதில் தின வாடிக்கையாளர்கள் பல பேர் உள்ளனர். இதில் பலர் அவர்கள் குடிப்பது மட்டுமல்லாமல்மதியம் குடிக்கவும்,அவர்களின் உறவினர்களுக்கும் பார்சல் கொண்டு செல்பவர்களும் உண்டு.

DSC00994

கேள்வி: ஒரு சொம்பு கூழ் என்ன விலை?

பதில்: ஒரு சொம்பு கூழ் 2 வருடங்களுக்கு முன் பத்து ரூபாய்க்கு விற்றேன். இந்த இரண்டு வருடங்களாக விலைவாசி ஏற்றத்தால் 15 ரூபாய்க்கு விற்க வேண்டிய சூழல் உள்ளது.

கேள்வி: எத்தனை மணிக்கு கடை துவங்கி எத்தனை மணிக்கு முடிப்பீர்கள்?

பதில்: காலை 7 மணிக்கு துவங்கி மாலை 4 மணி வரை விற்பேன். சில நாட்கள் 1 அண்டாவானது மதியத்திற்குள் தீர்ந்துவிடும். சில நாட்கள் 4 மணி வரை இருக்கும்.

கேள்வி: மீந்து போன கூழை என்ன செய்வீர்கள்?

பதில்: கீழே கொட்ட மனதில்லாததால் இறுதியாக வருபவர்களுக்கு அதிகக் கூழ் கொடுப்பேன். அப்படியும் மீந்ததை வீட்டிற்கு எடுத்துச் சென்று மாடு குடிப்பதற்கு பயன்படுத்துவேன்.

இந்த வெயில் காலத்தில் பழச்சாறு,கூல்டிரிங்ஸ்,இளநீர்,மோர்கடை,தர்பூசணி எனப் புதுப்புது கடைகள் முளைத்திருக்கிறதே அதனால் உங்களின் வியாபாரம் பாதிக்காதா?

எத்தனை கடைகள் வந்தாலும் என் கடையில் கூட்டம் குறைவதில்லை. ஏனென்றால் ஆரோக்கியமான உணவு உண்ண வேண்டும் என்ற எண்ணத்தின் வெளிப்பாடே என் கடை வியாபாரத்தின் ரகசியமாகும். காலை உணவு எவ்வளவோ இருந்தாலும் மக்களுக்கு பக்க விளைவு இல்லா ஆரோக்கியம் தரும் இந்தக் கூழை இன்றும் விரும்பிக் குடிப்பவர்கள் இருக்கும் வரை இந்த கூழ் வியாபாரம் பாதிக்காது.

கேள்வி: ஒரு அண்டா கூழ் எவ்வளவு விலைக்குப் போகும்?

பதில்: ஒரு சொம்பு கூழ் ரூ.15 வீதம் இந்த அண்டாவில் 50 சொம்பு கூழ் இருக்கும். 750 ரூபாய் வரை ஒரு அண்டா கூழ் விற்பனையாகும்.

கேள்வி: இந்த ரோட்டோர கடைக்கு ஏதும் பிரச்சனை வந்துள்ளதா?

பதில்: இங்கே இருக்கும் டிராபிக் காவலர்களும் மற்ற காவலர்களும் வந்து கூழ் குடிப்பார்கள். அதில் சிலரே காசு கொடுப்பார்கள். மாநகராட்சியினர் வந்து  கடையை காலி செய் அல்லது கடையை ரோட்டோரம் இல்லாது நகர்த்திப் போடு என மிரட்டுவர். சிலர் பணமும் கேட்பர். எல்லாம் சமாளித்துதான் இந்தக் கடையை ஓட்டுகிறேன்.

கேள்வி: கூழ் தொழில் மட்டுமல்லாது வேறு வேலை ஏதும் செய்கிறீர்களா?

பதில்: இந்தக் கடையிலேயே பூவும் விற்கிறேன். 1000 ரூபாய்க்கு பூ வாங்கினால் 1500 க்கு விற்பேன். இதில் நாளொன்றுக்கு 500 ரூபாய் லாபம் கிடைக்கிறது. ஆக பூ மற்றும் கூழ் வியாபாரம் இரண்டும் சேர்ந்து நாளொன்றுக்கு 1000 முதல் 1200 ரூபாய் வரை லாபம் கிடைக்கிறது.

தவிர சிறு தொழில் செய்து பிழைப்பவர்களுக்கு அரசு தாட்கோ மூலம் கடனுதவி வழங்குகிறது. எங்களைப்போல் சிறுதொழில் செய்து பிழைக்கும் பெண்களுக்கு அரசு கடனுதவி வழங்கினால் என் தொழில் மட்டுமல்ல என்னைப் போன்ற சாலையோர கடைவாசிகளுக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று இவரின் ஏக்கத்தையும் கூறினார்.

கேள்வி: நாள் முழுக்க வெயிலில் காய்கிறோம் என்று வருத்தப்படுகிறீர்களா?

பதில்: வழி இல்லை. அதனால வருத்தப்பட என்ன இருக்கிறது. உழைக்கவேண்டும் என்று தான் தோன்றுகிறது.

குறிப்பு:

நமக்கு நேர்காணல் வழங்கிய மீனாட்சி என்ற அம்மாளின் கடையானது சென்னை – வேளச்சேரி பேருந்து நிலையத்திற்கு அருகில் தாம்பரம் கிழக்கு செல்லும் சாலையின் இடதுபுறத்தில் உள்ளது.

கேள்வி: கூழ் குடித்தால் என்னென்ன பயன்கள்?

பதில்: இவற்றைக் குடித்தால் உடல் சூடு தணியும், குடல் நோய் வராமல் தடுக்கும், உடலுக்கு வலிமை சேர்க்கும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை நகரில் இனிமையான கேழ்வரகுக் கூழ் விற்கும் மீனாட்சி”

அதிகம் படித்தது