மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை மாநிலக் கல்லூரி: சில நினைவுகள்

காசி விசுவநாதன்

Feb 1, 2012

ஒரு நாள் ( 2005ம் ஆண்டு ) சென்னை அடையாறு சாலை சந்திப்பில் இருந்து, 6 D என்ற பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். வழியில் உள்ள நிறுத்தங்களில் செல்லும்போது அந்த இடங்கள் ஆழிப்பேரலையில் பாதிக்கப்பட்ட இடங்களை ஒட்டி வந்தது. இந்த நினைவுகளுடன் அதனூடாக சென்னை மாநிலக் கல்லூரியின் நிறுத்தம் வந்தது. என் இருக்கையில் இருந்து அந்த அழகிய கல்லூரியின் கட்டிடத்தை பார்வையிட்டேன். அதன் முன் பகுதியில் நின்றிருந்த தமிழ் தாத்தாவின் முழு உருவச்சிலையும் அவர் பணியாற்றிய அந்தக் கல்லூரியயையும் பார்க்கும் போது எப்போதும் பெருமையும் பெருமிதமும்தான். மீண்டும் மாணவனாய் மாறி, இந்த வளாகத்தில் படிக்காத குறையை தீர்த்துக்கொள்ளலாமே, என்ற எண்ணமும் தான் தோன்றியது, நான் இங்கு படிக்கவில்லையே என்ற ஏக்கத்துடன்.

அந்த நிறுத்தத்தில் ஆரவாரத்துடன் சில கல்லூரி மாணவர்கள் இளமைக்கே உரித்தான உவகையுடன், ஒருவரை ஒருவர் கிண்டல் செய்து முன் பின்னாக அமர்ந்து, “சுனாமி வந்தது…,  உன்னைப்பார்த்து பயந்து தான், பின் வாங்கியது. நம் கல்லூரியும் பிழைத்தது…!”  என்று நையாண்டி குறையாமல் பேசியதில் அந்தப் பேருந்து அமர்க்களப்பட்டது. எனது இருக்கையின் அருகே அமர்ந்த மாணவரின் பாட நூல்கள் சில இருந்தன. அவரிடம் அதில் உள்ள கல்லூரியின் கையேட்டைப் படிக்கலாமா ? என்று கேட்டு, படிக்க ஆரம்பித்தேன். அந்தக் கையேட்டில் கல்லூரி வரலாறு ஒன்று, ஆங்கிலத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது. மகிழ்ச்சியுடன் படிக்கத்தொடங்கினேன்.

கிழக்கிந்திய கும்பெனி சிறிது சிறிதாக துணைக்கண்டத்தை ஆக்கிரமிப்பு செய்து ஒருவாறு தன்னை நிலை நிறுத்திக்கொண்ட முதற்கட்ட காலங்களில் மதராசப்பட்டின புனித ஜார்ஜ் கோட்டையின் ஆளுனராக பதவி உயர்வு பெற்ற பாரெனெட்சர். தாமஸ்மன்ரோ அவர்கள் ஒரு நாள் இந்த மாகாணத்திற்கான கல்விக்கொள்கை ஏதும் இதுவரை இல்லாதது குறித்து சிந்தனை செய்து, 1926ஆம் ஆண்டு இதற்கான சென்னை மாகாண கல்விக்குழு ஒன்றினை ஏற்படுத்துகிறார். இது குறித்த வரைவுத்திட்டம் ஒன்றினை உருவாக்க கொல்கத்தாவிற்கும் செய்தி அனுப்புகிறார். அந்த தொடக்க நிலையிலேயே அவர் இறந்தும் விடுகிறார். ஆனால் அவர் வித்திட்ட விதை பழுதில்லை. ( இந்த நிகழ்வு 1830-களில் ஜான் மெக்காலே என்ற வெள்ளையர் இந்தியா வருவதற்கு முன், சர். தாமஸ் மன்ரோ சிந்தனையில் (1926) வந்ததும், இதற்கும் முன்னரே கொல்கத்தாவில் மாகாணக்கல்லூரி ஒன்று செயல்பட்டதும் நினைவிற்கொள்ள வேண்டும் ).

பாரெனெட்சர். தாமஸ்மன்ரோ

இதன் பின், இதற்கான முயற்சிகள் தொடங்கின. மரபு வழியான குலக்கல்வி முறையில் இருக்கும் ஒரு சமுதாயத்தை, முறையான பாட சாலைக்கு கொண்டுவருவது குறித்தும் சிந்தித்துள்ளனர். ஒரு கல்லூரியோ, பல்கலைக்கழகமோ செயல்படவேண்டுமானால் இதற்கு ஒரு அடிப்படை ஆரம்பக்கல்வி அவசியமாகிறது. சென்னையில் மாகாணக்கல்லூரி கொண்டு வரவேண்டுமென்றால், அதற்கு முன்னர் தொடக்கக் கல்வியும் உயர் நிலைக்கல்வியும் தேவை. இதனை முறையாக செயல்படுத்தினால்தான், மேல் நிலைக் கல்விக்கான சாத்தியம் என்பதை அறிந்து, முதலில் தொடக்க கல்விக்கூடம் ஒன்றினை சென்னை எழும்பூரில் எடின்பர்க் இல்லம் என்ற கட்டிடத்தில் முறையாக தொடங்குகின்றனர். {இதற்காக கல்லூரி முதல்வராக திரு. பர்ட்டன் பவல் ( கேம்பிரிட்ஜ் பல்கலையின் கணிதவியல் பேராசிரியர் ) என்பவர் மும்பை வழியாக சென்னை வந்தடைய ஏறக்குறைய 11 திங்களுக்கும் மேல் ஆகிறது.}  பின்னர் இது சென்னை பிராட்வேயிலும் மாற்றப்படுகிறது. 1841-ம் ஆண்டு மீண்டும் எழும்பூரில் தற்போதைய எழும்பூர் நீதி மன்ற வளாகத்தில் உயர் நிலைக்கல்விக்கூடம் ஒன்று தொடங்கப்படுகிறது. இதுவே ஒரு பத்து ஆண்டுகள் உருண்டு மேல் நிலை கல்விப்பிரிவுகளுடன் முறையாக சென்னை மாநிலக்கல்லூரியாக செயல்படுகிறது. எழும்பூரில் உருக்கொண்ட கல்லூரியில் தான் சென்னை பல்கலைக்கழகம் என்று சொல்லப்படும் University of Madras என்பதும் கருக்கொண்டது. சென்னை பல்கலைக்கழகம் பிறந்த ஆண்டு 1854.

சென்னை எழும்பூரில் உள்ள மாகாணக்கல்லூரிக்கு, நிலையான கட்டிடம் ஒன்று மதராசப்பட்டின கடற்கரையில் அமைய, அன்றைய புனித ஜார்ஜ் கோட்டை ஆளுனர் திரு. நேப்பியர் அவர்கள்  1867-ம் ஆண்டு, அடிக்கல் நாட்டினார். அதுதான் இன்றைய சென்னை மாநிலக் கல்லூரி. இதன் பொன் விழா ஆண்டுகளில் தான் சட்டக்கல்வி அறிமுகம் செய்யப்பட்டது. அந்த ஆண்டு வந்த பொன்விழா மலரில் அப்போதைய கல்லூரி முதல்வர் திரு. டேவிட் டங்கன் அவர்கள் எழுதிய குறிப்புகள் தான் மேற்படியான தகவல்கள்.

அன்று அந்தக் கையேட்டில் நான் தெரிந்து கொண்டவையெல்லாம் எனக்கு மிகவும் புதிய தகவல்கள்தான். சென்னை பல்கலைக்கழகத்தை அடுத்த கூவம் ஆற்றின் கழிமுகத்தில் கட்டப்பட்ட  நேப்பியர் பாலத்தையும் கடந்து இந்த தகவல்கள்களை உள்வாங்கிக்கொண்டு, சர்.தாமஸ் மன்ரோ செய்த அருஞ்செயலை எண்ணி வியந்தேன். ஆனாலும் ஒரு குறை, எனக்குத்  தெரிந்த சில மேதைகள், அவர்கள் தமிழர்களின் வாழ்வோடு கலந்தவர்கள், இங்கு பணியாற்றிய தகவல்கள் விடுபட்டுப்போனது ஒரு உறுத்தலாக இருந்தது. வீடு வந்து சேர்ந்ததும் கல்லூரி முதல்வரின் தொலை நகலுக்கு ஒரு வேண்டுகோள் கடிதம் எழுதினேன்.

அதில், இதுவரை அறியாத தகவல்களை கையேட்டின் வாயிலாக அறிந்து கொண்டதையும், அதில் குறிப்பிடப்பட்ட பெருமைக்குரிய வெள்ளைப் பேராசிரியர்களின் பெயர்களும் தகவல்களும் தவிர தங்கள் கல்லூரியில் பணியாற்றி பெருமைப்படுத்திய இரண்டு தமிழர்களை விடுபட்டு பதிவு செய்தது வருத்தமாக உள்ளது என்றும், அதனை வரும் காலங்களில் பதிவு செய்து பெருமைப்படுத்தினால் தமிழ் கூறும் நல்லுலகம் உவகைகொள்ளும் என்றும் பதிவு செய்தேன். அந்த இருவர் :-

1. அருட்பிரகாச வள்ளலார் அவர்களின் தலைமைச் சீடரும், சென்னை மாநிலக் கல்லூரியின் தமிழ்த் துறை பேராசிரியருமான திரு. தொழுவூர் வேலாயுத முதலியார் ஆவர். மற்றொருவர். நாளெல்லாம் தமிழை ஆவணப்படுத்திய தமிழ் தாத்தா திரு. உ.வே.சா. அவர்கள்.

இவர்களின் பெயரினை குறிப்பிட்டு அந்தக் கடிதத்தில் எழுதி, மார்ச்சு- 2005ம் ஆண்டு, தொலை நகல் செய்ய முயன்ற போது, மறு முனையில் இருந்த ஒருவர், தொலை நகல் ஆழிப்பேரலையால் பழுதடைந்து உள்ளது. உங்கள் கடிதத்தை அஞ்சல் செய்யுங்கள் என்றவர், என்னிடம் உங்கள் பெயரென்ன, என்ன காரணத்திற்காய் தொடர்பு கொண்டீர்கள் ? என்றார். நான் கடிதத்தில் உள்ள பொருள் குறித்தும் கையேடு தகவல்கள் குறித்தும் சொன்னபோது, உங்கள் வரலாற்று ஆர்வத்திற்கும்,முயற்சிக்கும் பாராட்டு என்றார். அவரிடம்உங்கள்பெயரென்னஎன்றபோதுமறுமுனையில்இருந்தவர், என்பெயர்தனுஷ்கோடி, கல்லூரியின்முதல்வர் என்றார். மிகுந்த மகிழ்ச்சியோடு அவரிடம் பேசிய போது, கையேட்டில் இருப்பது வழமையான தகவல்கள், ஆனால் நம் பேராசிரியர்களை மறக்கவில்லை, உங்கள் ஆர்வத்தை பாராட்டுகிறேன், கடிதத்தை அனுப்பி வையுங்கள் என்றார்.

அதன் பின் அது குறித்த தகவல் அறிய என்னால் முடியவில்லை. வெளி நாட்டிற்கு இடம்பெயர்ந்துவிட்டதாலும், பல அலுவல் காரணங்களாலும் இதன் தற்போதைய நிலையின் பதிவுகள் எதுவும் திருத்தப்பட்டுள்ளதா ? என்பதனை, இப்போதுஅங்குபடிக்கும்மாணவர்களோஇல்லைஅங்குபணிபுரியும்ஆர்வலர்களோஇதுகுறித்தபதிவுகளைமேம்பட்டதகவல்கள், பதிவுகள்பதிவேற்றம்செய்யப்பட்டுள்ளதாஎன்பதைஅறிந்துமுயற்சிசெய்தால்நன்மையாகஇருக்கும்.

இந்த முயற்சி சில சமயங்களில் மிகவும் அவசியமானதா ? என்ற கேள்வி எழலாம். இது மிகச்சிறிய முயற்சியானாலும், நமது வரலாற்றுப் பதிவுகளின் தொடர் விழிப்புணர்ச்சிதான். இது போன்ற முயற்சிகள் நம்மை வரலாற்றில் தொடர்பில் இருக்கச்செய்யும். இல்லையென்றால் நம்மில் உருவாகும் தலைவர்கள், கச்சத்தீவையும், பீர்மேடு, தேவிகுளம், இடுக்கி என பறிகொடுத்தது போல் ஒரு தலைமுறையை உருவாக்கும். நம் வரலாற்றின் ஒவ்வொரு கட்டங்களையும் அவை சிறிதானாலும் பெரிதானாலும் நாம் தொடர்ந்து கேட்டு, படித்து அறிந்துகொள்வதும், தொடர்பில் இருப்பதும் தலையாய கடமை.


காசி விசுவநாதன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை மாநிலக் கல்லூரி: சில நினைவுகள்”

அதிகம் படித்தது