மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..

சா.சின்னதுரை

Dec 26, 2015

Peter Van Geit (3)பெல்ஜியம் நாட்டை சேர்ந்தவர் பீட்டர் வெய்ன் கெய்ட். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்த இவர், காஞ்சிபுரம் மாவட்டம் பாலவாக்கத்தில் வசித்து வருகிறார். தான் நடத்திவரும் மலையேறும் குழுவுடன் இணைந்து சென்னை வெள்ளத்தில் சிக்கிய 130 பேரையும், 50 செல்லப்பிராணிகளையும் பீட்டர் வெய்ன் கெய்ட் பத்திரமாக மீட்டுள்ளார். அது மட்டுமல்லாமல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உணவு, உடை, மருந்து உள்ளிட்டவற்றையும் பீட்டர் வழங்கினார். கிட்டத்தட்ட 3000 குடும்பங்களுக்கு உதவி செய்துள்ளார். தற்போது பீட்டரும் அவரது குழுவினரும் ஒவ்வொரு பகுதியாகச் சென்று தேங்கிக் கிடக்கும் குப்பைகளையும் சாக்கடை அடைப்புகளையும் தூய்மைப்படுத்தி வருகின்றனர். பீட்டர், சாக்கடையில் இறங்கி தேங்கி கிடக்கும் பிளாஸ்டிக் பொருட்களை அகற்றி வருவதோடு, குப்பைகளை கைகளால் அள்ளி, அதனை மிதிவண்டிகளில் ஏற்றி அகற்றி வருவது சென்னை மக்களை வியப்படையச் செய்துள்ளது. இளைஞர்கள் அவரது சேவையைப் பார்த்து வியந்து போவதோடு தாங்களும் அவருடன் களம் இறங்கி வருகின்றனர். ‘சிறகு’ அவரை சந்தித்தது. அவருடன் ஒரு நேர்க்காணல்:

உங்களைப்பற்றி?

பீட்டர் வெய்ன் கெய்ட்: பெல்ஜியம் நாட்டின் Lokeren தான் என் சொந்த ஊர். கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு தமிழகம் வந்தேன். பாலவாக்கத்தில் தங்கி உள்ளேன். ‘சிஸ்கோ’ நிறுவனத்தில் திட்ட இயக்குனராக பணியாற்றி வருகிறேன். இந்தியாவில் உள்ள மலை பிரதேசங்கள் மீது எனக்கு அதிக ஈர்ப்பு ஏற்பட்டது. அதன் பிரதிபலிப்பாக கடந்த 2008-ம் ஆண்டு ‘சென்னை டிரெக்கிங் கிளப்’பை (மலையேறும் குழு) உருவாக்கி நடத்தி வருகிறேன்.

உங்கள் மலையேறும் குழு பற்றி?

பீட்டர் வெய்ன் கெய்ட்: தற்போது இந்த குழுவில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த 26 ஆயிரம் பேர் உறுப்பினர்களாக உள்ளனர். பெரும்பாலானவர்கள் இளைஞர்கள். நாங்கள் நாடு முழுவதும் உள்ள மலைப் பிரதேசங்களில் பயணம் செய்து, அங்குள்ள குப்பைகள், பிளாஸ்டிக், கழிவுப் பொருட்களை அகற்றும் பணியை மேற்கொண்டு வருகிறோம். மேலும் உறுப்பினர்களுக்கு காட்டுயிர்கள் மற்றும் இயற்கை வளங்களைப் பாதுகாப்பதன் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்.

சென்னை வெள்ளம் மீட்புப்பணி குறித்து?

Peter Van Geit (5)பீட்டர் வெய்ன் கெய்ட்: சென்னை நகரை புரட்டிப் போட்ட மழை வெள்ளத்தைக் கண்டு முதலில் அதிர்ச்சியடைந்தேன். சென்னை என் தாய் வீடு மாதிரி. வெள்ளத்தால் சென்னை நகரம் தத்தளித்தபோது நம்மால் முடிந்த ஏதாவது உதவியை மக்களுக்கு செய்ய வேண்டும் என்று எண்ணினேன். எங்கள் மலையேறும் குழுவை அழைத்துக்கொண்டு வெள்ளம் பாதித்த பகுதிகளில் சிக்கிய மக்களை மீட்கும் முயற்சியில் இறங்கினேன். அப்போது பள்ளிக்கரணையில் மழை வெள்ளத்தில் சிக்கிய உயிருக்குப் போராடிய குழந்தைகள், முதியோர்கள், கர்ப்பிணி பெண்கள் உள்பட 130 பேரை பத்திரமாக மீட்டோம். மேலும் வெள்ளத்தில் சிக்கிய மாடுகள், நாய்கள், பூனைகள் உள்பட 50 செல்லப்பிராணிகளைக் காப்பாற்றி ‘புளூ கிராஸ்’ அமைப்பிடம் ஒப்படைத்தோம்.

நிவாரண உதவிகள் குறித்து?

பீட்டர் வெய்ன் கெய்ட்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மற்றும் கடலூர் மக்களுக்கு ஒரு நாள் மட்டும் உணவு வழங்கினால், அது அவர்களுக்கு நிவாரணமாக அமைந்து விடாது என்று எண்ணி, அவர்கள் ஒரு வார காலம் சமைத்து உண்ணுவதற்கு தேவையான சமையல் பொருட்கள், பாத்திரங்கள், துணி வகைகள், மருந்து மாத்திரைகள், கொசுவர்த்திச் சுருள், மெழுகுவர்த்தி உள்பட 25 பொருட்கள் அடங்கிய பைகளை 3 ஆயிரம் குடும்பத்தினருக்கு வழங்கினோம். இப்பணியை நாங்கள் மேற்கொள்வதற்கு வெளிநாடுகளில் இருந்து குவிந்த நிதி பெரிதும் உதவியது.

தூய்மைப்படுத்தும் பணிகள் குறித்து?

Peter Van Geit (4)பீட்டர் வெய்ன் கெய்ட்: வெள்ளம் வடிந்து சென்னை நகரம் இயல்புநிலைக்குத் திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. தற்போது நகர் முழுவதும் குப்பைகள் குவிந்துள்ளன. இத்தகைய சூழலில் நாம் அரசை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. மக்களே களத்தில் இறங்க வேண்டும். நகரை புனரமைக்கும் பணிக்கு தமிழக அரசுக்கு எங்களால் இயன்ற பங்களிப்பை அளிப்போம்.

அதன்படி, எங்கள் குழு சார்பில் சென்னை நகரில் ஆழ்வார்ப்பேட்டை, எம்.ஆர்.சி.நகர், காந்தி நகர், கோட்டூர்புரம், முகப்பேர், கீழ்ப்பாக்கம், வேளச்சேரி, அசோக் நகர் ஆகிய 8 இடங்களில் தூய்மைப்படுத்தும் பணிகள் மேற்கொண்டுள்ளது. குழு உறுப்பினர்களுடன் பள்ளிக் கல்லூரி மாணவர்கள், பொதுமக்கள், தன்னார்வலர்களும் உற்சாகமாகக் கலந்துக்கொள்ள வருகிறார்கள்.

பருவநிலை மாற்றம் மிகப் பெரிய சவாலாக உருவெடுத்து வருகிறதே?

பீட்டர் வெய்ன் கெய்ட்: பருவநிலை மாற்றம் என்பது உலக நாடுகள் அனைத்துக்குமான அச்சுறுத்தல் என்பதை மறந்துவிடக் கூடாது. இதனைக் கட்டுப்படுத்த உலக நாடுகள் விரைந்து செயலாற்ற வேண்டும். பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவது தொடர்பான நமது முயற்சிகள் வெற்றிபெற, நமது அன்றாட வாழ்க்கை முறையில் மாற்றம் ஏற்பட வேண்டியதும் அவசியமாகும். இதன் மூலம்தான், இந்தப் பிரச்சனையால் உலகம் எதிர்கொண்டு வரும் பாதிப்பை நம்மால் குறைக்க இயலும். புவிவெப்பமடைதல் நிகழ்வை கட்டுக்குள் கொண்டு வர வேண்டும், இல்லையெனில் அதன் தீவிர விளைவுகளைச் சந்திக்க தயாராக இருக்க வேண்டும். அத்தகைய இயற்கைப் பேரழிவுகளைச் சந்திக்கும் ஏழை நாடுகளிடம் அதற்கான பொருளாதார வலுவில்லை என்பதே உண்மை.

இதைப் பற்றிய சிந்தனைகளும் விவாதங்களும் மக்களிடையே பரவலாக்கப்பட்டு, வளர்க்கப்பட வேண்டும். இயற்கையை பாதுகாக்க வேண்டிய முயற்சியில் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு உண்டு. இயற்கை காப்பாற்றப்பட்டால்தான், நாமும் பாதுகாக்கப்படுவோம்.

Peter Van Geit (1)தமிழக கன மழைக்கு பருவநிலை மாற்றம் தான் காரணமா?

பீட்டர் வெய்ன் கெய்ட்: சென்னை மழையை வெறுமனே பருவநிலை மாற்றத்துடன் தொடர்புப்படுத்தக்கூடாது. வடகிழக்கு பருவமழை கூடுதலாக பெய்ய, பருவநிலை மாற்றம் ஒரு காரணியே தவிர, அதுவே முழு காரணம் எனசொல்ல முடியாது. 40 அல்லது 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை, வரலாறு காணாத அளவுக்கு கனமழையின் தாக்கம் தொடர்ச்சியாக இருந்து வருவதாக வானிலை ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. எனினும் பருவநிலை மாற்றம் குறித்து உலக நாடுகள் காலம் தாழ்த்தாமல் முடிவெடுக்க வேண்டிய தருணம் வந்துவிட்டது.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சென்னை வெள்ளத்தில் 130 பேரை காப்பாற்றிய பெல்ஜியம் நாட்டவர்..”

அதிகம் படித்தது