மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மொழி இலக்கியங்களில் பரத்தை அழைப்பு முறைகள்

முனைவர் மு.பழனியப்பன்

May 12, 2018

Siragu sanga ilakkiya thirumanam3

செம்மொழி இலக்கியங்கள் பன்னூறு ஆண்டுகாலத்திற்கு முன்னால் தமிழர்தம் பண்பாடுச் செறிவு மிக்க வாழ்வினைப் படம் பிடித்துக்காட்டும் வரலாற்று ஆவணங்களாக விளங்குகின்றன. தலைவன்,தலைவி ஆகிய இருவருக்குமான இல்லறப் பாங்கினையும்,தலைவனின் வீரப்பாங்கினையும் எடுத்துரைக்கும் செம்மொழி இலக்கியங்கள்,பண்பாட்டு விலகல்களையும் சுட்டிக்காட்டாமலில்லை. குறிப்பாகத் தலைவனின் ஒழுக்கம் தலைவியைத் தாண்டி மற்றொரு பெண்ணை நோக்கிச் செல்லும் நிலையில் அதாவது கற்பு கடந்து செல்லும் நிலையில் ஏற்படும் பண்பாட்டு விலகல்களையும் செம்மொழி இலக்கியங்கள் நேர்மையுடன் பதிவு செய்துள்ளன. அதே நேரத்தில்,பரத்தை என்ற அழகு,அன்பு,ஏக்கம்  கொண்ட பெண்ணின் அவல மிகு வாழ்வினையும் அவை எடுத்துக்காட்டுகின்றன.

சங்க காலத் தலைவன் என்பவன் வண்டு போன்ற இயல்பினன். பல மலர்கள் தாவும் நிலையை அவன் வண்டுகளிடம் இருந்துப் பெற்றானா அல்லது வண்டு அவனிடம் இருந்துப் பெற்றதா என்பது புரியாமல் ஒரு பரத்தை தன்னை வெறுக்கும் தலைவியைச் சாடுகிறாள்.

    ~~மகிழ்நன் மாண்குணம் வண்டு கொண்டனகொல்?

 வண்டின் மாண்குணம் மகிழ்நன் கொண்டான்கொல்?

 அன்னது ஆகலும் அறியாள்,

     எம்மொடு புலக்கும்,அவன் புதல்வன் தாயே”

(ஓரம்போகியார்,ஐங்குநூறு பாடல் எண். 90)

பூக்களாய்ப் பெண்களும் வண்டினமாய் ஆண்களும் சங்க காலத்தில் வாழ்ந்திருந்தனர் என்பது இப்பாடலின் வழி பெறப்படும் கருத்தாகும்.

தலைவனின் இயல்பு என்பது அவனுக்குக் கிடைத்திருக்கும் அகம் சார்ந்த விடுதலை என்பதை உட்கொண்டு நோக்கினால் இப்பண்பாட்டு விலகலைச் சரியெனப் புரிந்து கொள்ள இயலும்.

    தலைவனின் இயல்பினை மற்றொரு பாடல் தெற்றென விளக்குகிறது.

    ~~முன்பகல் தலைகூடி நன்பகல் அவள் நீத்து

     பின்பகல் பிறர் தேரும் நெஞ்சமும் ஏமுற்றாய்”

 (மருதன் இளநாகன்,கலித்தொகை,பாடல்எண்74)

முன்பகல் தலைவியைக் கூடியவன்,நன்பகலில் அவளை நீத்துப் பின்பகலில் பிற மகளிர் தேடும் இயல்பினனாகத் தலைவன் விளங்குகிறான்.

இத்தகைய தலைவனுக்கு நுகர்பொருளாக விளங்குபவள் பரத்தை என்றாலும்,அவளும் தலைவன் மீது அன்பும்,பாசமும் கொண்டவள் என்பதைச் செவ்விலக்கியங்கள் காட்டுகின்றன. பரத்தை வெறும் பொருள் கருதியவள் என்ற நிலை செம்மொழி இலக்கியங்களில் இல்லை என்பதை உணர்ந்தால் பரத்தையின் மேன்மை தெரியலாகும்.

;பரத்தையிடம் உடலின்பம் பெற மட்டும் தலைவன் வரவில்லை. அவளின் நெருக்கம் அவனுக்குக் கூடுதல் இன்பத்தை,இளைப்பாறலைத் தருகின்றது. பரத்தை ஒருத்தியுடன் தலைவன் இருக்கும் இனிய நிலையை

    ~~ பொய்கை ஆம்பல் அணிநிறக் கொழுமுகை

      வண்டுவாய் திறக்கும் தண்துறை ஊரனொடு

      வில்கை விரலின் பொருந்தி அவன்

      நல்அகம் சேரின் ஒரு மருங்கினவே”

                 (வில்லக விரலினர்,குறுந்தொகை,பாடல் எண் 370)

என்ற பாடல் காட்டுகிறது. வில்லைப் பிடித்திருக்கும் விரல்கள் எவ்வாறு கவனமாக இறுக்கமாக வில்லைப் பிடித்துக்கொண்டு எய்த வேண்டிய இலக்கை நோக்கிட உதவுமோ,  அது போன்ற நெருக்கம் உடையவளாகப் பரத்தை தலைவனுடன் ஒட்டி உறவாடியிருக்கிறாள். செம்மொழி இலக்கியங்களில் பயன்படுத்தப்பெற்றுள்ள மிகச் சிறந்த தேர்ந்தெடுத்த உவமைகளில் இதுவும் ஒன்றாகும். இவ்வுமையில் வில்லினை இயக்க இருகைகளும் தேவை. ஒருகரம் வில்லினைப் பிடிக்க மறுகரம் நாணைப் பிடித்து இழுக்க வேண்டும். நாண் எப்போதும் விசையுடன் இருக்கும். நாண் போன்றவள் தலைவி. அவளை வில்லின் நாணைப் பயன்படுத்தும் கரம்போல தள்ளி வைத்துப் பார்க்கிறான் தலைவன். ஆனால் வில்லுடன் ஒருங்கிணைந்து அதனைத் தாங்கும் கரமாக இங்குப் பரத்தை அமைகிறாள். தலைவனுடன் நெருக்கமான வாழ்வினைப் பரத்தை பெறுகிறாள்.

பரத்தையுடன் தலைவன் புனலாடும் இனிய நெருக்கமிகு காட்சியை ஒருதலைவி தன் கூற்றாக உரைக்கிறாள்.

    ~~பெறாஅக் காவிரி நீத்தம்,

குழை மாண் ஒள் இழை நீ வெய்யோளொடு,

வேழ வெண் புணை தழீஇ,பூழியர்

கயம் நாடு யானையின் முகன் அமர்ந்தாஅங்கு,

ஏந்து எழில் ஆகத்துப் பூந் தார் குழைய,

நெருநல் ஆடினை,புனலே”

             (கயமனார்,அகநானூறு,பாடல்எண்.6; 6-11)

என்ற நிலையில் தலைவனுக்கு முழு நிறைவைத் தரும் இனியவளாகப் பரத்தை விளங்குகிறாள்.

தலைவனுடன் பரத்தையானவள் உயிர்,உடல்,இளமை அனைத்தையும் பகிர்ந்து கொள்கிறாள். தலைவியின் எதிர்ப்புகள் இருந்தபோதும் அவ்வெதிர்ப்பைத் தாண்டி வரும் தலைவனின் ஆற்ற முடியா இன்பத்தை அவள் ஆற்றுவிக்கிறாள்.

தலைவனின் மனைவியான தலைவி யாருடனும் சண்டை போடுகின்ற இயல்பினள். அவளின் இணைவில் சர்ச்சைகள் மட்டுமே மிஞ்சுகின்றன. எனவே அவன் சர்ச்சை இல்லாத அன்பு நிறைந்த பரத்தை இல்லம் நாடி வருகிறான். பரத்தையர் வீட்டில் அவன் சண்டை ஒலியையே கேட்டதில்லை. விவாதங்களே அங்கு நிகழ்வதில்லை. தலைவனின் விருப்பப்படியே எல்லாம் நடக்கின்றன.  இதமான ஒலிகளே கேட்கின்றன.

தலைவன் பரத்தை இல்லம் நோக்கி வருவதற்கான காரணங்கள் இவைதாம். “மனையோள் யாரையும் புலக்கும்,எம்மை மற்று எவனே?” (ஓரம்போகியார்,ஐங்குநூறு பாடல்எண் 87)  என்ற ஐங்குறுநூற்றின் அடிகள் மனையாளின் தீராச் சண்டை இயல்பினை எடுத்துரைப்பதாக உள்ளது.

பரத்தையானவள் தலைவன் நீங்கினால் நிறம் சாய்கிறாள்,புணருங்கால் புகழ் பூக்கும் இயல்பினளாக விளங்குகிறாள். தன் இயல்பினைத் தலைவியும் பெறுவாள் என்று தலைவனுக்கு அறிவுறுத்துகிறாள்.

    ~நீங்குங்கால் நிறம் சாய்ந்து,புணருங்கால் புகழ் பூத்து

    நாம் கொண்ட குறிப்பு இவள் நலம்”

(மருதன் இளநாகன்,கலித்தொகை,பாடல்எண். 78(11-12))

இத்தகைய அன்பினைக் கொண்டவளாக பரத்தை விளங்குகிறாள்.

தலைவன் தன்னை நீங்கித் தலைவியுடன் வாழ்கிறான் என்பதை அறிந்த பரத்தை மகிழ்கிறாள். மேலும் தன்னிடம் வராததற்குப் பிழை கண்டதுபோல தலைவியிடம் கண்டுவிடாதே என்று மொழிகிற இயல்பினளாகப் பரத்தை விளங்குகிறாள்.

    ~நன்றும்

    விழுமதின் கொண்ட கேண்மை நோவ்விதின்

    தவறும் நற்கு அறியாய் ஆயின் எம்போல்

    ஞெகிழ்ந்ததோள்,கலுழ்ந்த கண்ணர்

    மலர்தீயந்தனையர் நின் நயந்தோரே”

                      (அம்மூவனார்,நற்றிணை பாடல்எண் 315, 8-12)

என்ற  பாடலில் தலைவியைப் பிரிந்து விட வேண்டாம். அவள் எம்மைப்போல் தோள் நலம் இழந்து,கலங்கும் கண்ணீருடன்,தீயில் கருகிய மலர்போல் ஆகிவிடுவாள். அந்த நிலைக்கு நீ அவளை விட்டுவிடாதே. எமக்கு இதுவே நடப்பு என்றாலும் யாம் ஏற்கும் தன்மைக்கு உரியவளாகிவிட்டோம் என்கிறாள் இப்பரத்தை.

தான் வருத்தம் கொண்டாலும்,  தலைவி வருந்தாமல் வாழவேண்டும் என்னும் பெருந்தன்மை உடையவளாகப் பரத்தை விளங்கியுள்ளாள்.

ஐங்குநுறூற்றின் பரத்தை,தலைவியின் பிடியில் தலைவன் இருக்கும் இயல்பினைக் கண்டு தன்னிடம் அவன் இன்பம் நுகர வருவதில்லை என்று வருந்தாமல் அது தலைவனின் இயல்பு என ஏற்கிறாள்.

    ~~அம்ம வாழி தோழி மகிழ்நன்

     ஒண்தொடி முன்கையாம் அழப் பிரிந்துதன்

     பெண்டிர் ஊர் இறை கொண்டனன் என்ப”

                      (ஓரம்போகியார்,ஐங்குநூறு,பாடல்எண் 40)

அகநானூற்றின் தலைவன் ஒருவன் ஒரு பரத்தையை நாடிப் பின் மற்றொரு பரத்தையின் நெருக்கம் பெறுகிறான். இதனை அறியாது பழைய பரத்தையைத் தலைவி ஏசுகிறாள். இதனைக் கேட்டுக் கோபம் கொள்ளாமல் முதற் பரத்தை செய்த செயல் இனிமையுடையதாக அமைகிறது.

    ~~அவனே,

ஒண் தொடி மகளிர் பண்டை யாழ் பாட,

ஈர்ந் தண் முழவின் எறிகுணில் விதிர்ப்ப,

தண் நறுஞ் சாந்தம் கமழும் தோள் மணந்து,

இன்னும் பிறள் வயினானே மனையோள்

எம்மொடு புலக்கும் என்ப வென் வேல்,

மாரி அம்பின்,மழைத்தோற் பழையன்

காவிரி வைப்பின் போஒர் அன்ன,என்

செறிவளை உடைத்தலோ இலெனே உரிதினின்

யாம் தன் பகையேம்அல்லேம்; சேர்ந்தோர்

திரு நுதல் பசப்ப நீங்கும்

கொழுநனும் சாலும்,தன் உடன் உறை பகையே”

             (உலோச்சனார்,அகநானூறு,பாடல்எண். 186: 11-21)

இந்தப் பாடலில் தலைவன் வரவில்லை எனில் தன் வளையல்களை உடைத்து விடும் இயல்பினர் பரத்தையர் என்ற செய்தி பெறப்படுகிறது. அவ்வாறு உடைக்காமல் ஒரு பரத்தை நிற்கிறாள்.

பரத்தை –தலைவன் -அறிமுகம்- முடிவிலா முடிவு

கவலை சூழ்ந்த தலைவன் பக்கம் இன்பத்தை மட்டுமே அளிப்பவளாகப் பரத்தை விளங்குகிறாள். அவள் சிறு துயரத்தைக் கூட தலைவனுக்கு அளிப்பதில்லை. ஆனால் தலைவன் அவளுக்கு மிகப் பெருந்துயரத்தைத் தன் பிரிவினால் தர இயலும்.

தலைவன் பரத்தையைத் தானே தன் இயல்பும் அவளின் இயல்பும் அறிந்து கூடுகிறான். தலைவனின் தனிப்பட்ட விருப்பமே அவன் எப்பரத்தையைக் கூடுவது என்பதில் முன்நிற்கிறது. இருப்பினும்,பரத்தையைத் தலைவன் அறிய வேண்டிய சூழலும் தேவைப்படுகிறது.

விழாக்கள் முடிந்தபிறகு,பரத்தை ஒருத்தி தழையாடை உடுத்தித் தன்னைப் பல தலைவர்கள் காண நடக்கிறாள். இதன்வழி அவள் தான் இன்பம் பெற விரும்புகிறேன் என்பதை ஆண் உலகிற்கு அறிவிக்கிறாள். இது எல்லை கடந்த நிலையாகும்.

~~தழை அணிந்து அலமரும் அல்குல்,தெருவின்,

இளையோள் இறந்த அனைத்தற்கு,பழ விறல்

ஓரிக் கொன்ற ஒரு பெருந் தெருவில்,

காரி புக்க நேரார் புலம்போல்,

கல்லென்றன்றால்,ஊNர் அதற்கொண்டு,

காவல் செறிய மாட்டி,ஆய்தொடி

எழில் மா மேனி மகளிர்

விழுமாந்தனர்,தம் கொழுநரைக் காத்தே.”

         (கபிலர்,நற்றிணை,பாடல்எண், 320;;;: 3-10)

இப்பாடலில் பரத்தையானவள் தழையாடை கட்டிக்கொண்டு அவ்வாடை அசைய நடந்து வரும் போக்கினை உடையவள். இதன்வழி தலைவர்க்குத் தான் பரத்தமை ஏற்றமையை ஒருத்தி வெளியுலகிற்கு அறிவிக்க இயலும். இவளைக் கண்டதும் தலைவியர் தலைவர்களைத் தம் கைக்குள் அடைக்கலப்படுத்துகின்றனர்.

தலைவனின் பார்வை பட்ட பரத்தை நெடுநாளாகத் தன்னைக் காண வராத தலைவனைக் கவர முயல்கிறாள். தலைவன் வீடு அமைந்துள்ள இடத்தில் அவன் பார்க்கும்படியாக அவள் கைகளை வீசி நடக்கிறாள்.

~~துறைகேழ் ஊரன் பெண்டு தன் கொழுநனை

நம்மொடு புலக்கும் என்ப நாம் அது

செய்யாம்ஆயினும்,உய்யாமையின்,

செறிதொடி தெளிர்ப்ப வீசி,சிறிது அவண்

உலமந்து வருகம் சென்மோ தோழி!

ஒளிறு வாட் தானைக் கொற்றச் செழியன்

வெளிறு இல் கற்பின் மண்டு அமர் அடுதொறும்

களிறு பெறு வல்சிப் பாணன் எறியும்

தண்ணுமைக் கண்ணின் அலைஇயர்,தன் வயிறே”

         (ஆலங்குடி வங்கனார்,அகநானூறு,பாடல்எண். 106)

என்ற இப்பாடலில் தலைவி தன்னைத் திட்டும் தலைவி முன்னராக நடந்து சென்று அவளின் மனம் கலங்கும்படித் தலைவனைக் கைக்கொள்ள முயற்சி செய்கிறாள்.

மற்றொரு பரத்தை தலைவனின் இல்லம் தேடிவந்து அவன் வீட்டுக் கதவைத் தட்டுகிறாள்.

~~கண்டது நோயும் வடுவும் கரந்து,மகிழ் செருக்கி,

பாடு பெயல் நின்ற பானாள் இரவில்

தொடி பொலி தோளும்,முலையும்,கதுப்பும்,

வடிவு ஆர் குழையும்,இழையும்,பொறையா

ஒடிவது போலும் நுசுப்போடு,அடி தளரா,

ஆராக் கவவின் ஒருத்தி வந்து அல்கல் தன்

சீர் ஆர் ஞெகிழம் சிலம்ப,சிவந்து,நின்

போர் ஆர் கதவம் மிதித்தது அமையுமோ?

ஆயிழை ஆர்க்கும் ஒலி கேளா,அவ் எதிர்

தாழாது எழுந்து நீ சென்றது அமையுமோ?”

         (மருதன் இளநாகனார்,கலித்தொகை,பாடல்எண்.90)

இப்பாடலில் பரத்தை ஒருத்தி தலைவன் இல்லத்தின் கதவினைத் தட்டி தன் அடக்க முடியாத ஆசையை வெளிப்படுத்தி நிற்கிறாள். தொடி  அணிந்த தோள்,பெருத்த நகில்,அழகிய சுருண்ட கூந்தல்,மீன் போன்ற காதணி இவை போன்ற பிறவும் கொண்டவள் பரத்தை என்று வருணிக்கப்படுவது பரத்தையின் மிகு அழகைக் காட்டுவதாக உள்ளது. மேலும் இவ்வளவு எடையால் அவளின் இடை தாங்காது துவள்கிறதாம்.

இத்தனை வளப்பம் உடையவள் தலைவனைத் தேடி அவன் இல்லம் புகுகிறாள். சில நேரங்களில் பரத்தையர் வாழும் தெருவிற்கு வருகைதரும் தலைவனை உரிமை உடைய பரத்தை இழுத்து அணைத்துக்கொள்ளவும் வாய்ப்புண்டு. அவனைக் கைப்பற்றவும் வாய்ப்புண்டு.

    ~~மண் கனை முழவொடு மகிழ் மிகத் தூங்க,

தண் துறை ஊரன் எம் சேரி வந்தென

இன் கடுங் கள்ளின் அஃதை களிற்றொடு

நன் கலன் ஈயும் நாள் மகிழ் இருக்கை

அவை புகு பொருநர் பறையின்,ஆனாது,

கழறுப என்ப,அவன் பெண்டிர்; ‘அந்தில்,

கச்சினன்,கழலினன்,தேம் தார் மார்பினன்,

வகை அமைப் பொலிந்த,வனப்பு அமை,தெரியல்,

சுரியல் அம் பொருநனைக் காண்டிரோ? என,

ஆதிமந்தி பேதுற்று இனைய,

சிறை பறைந்து உரைஇச் செங்குணக்கு ஒழுகும்

அம் தண் காவிரி போல,

கொண்டு கை வலித்தல் சு10ழ்ந்திசின்,யானே”

         (பரணர்,அகநானூறு,பாடல் எண். 76)

தலைவன் பரத்தையின் வீடு சென்றான் என்று முரசு போல ஓயாது முழங்குகிறாள் தலைவி. இதனைக் கேட்டுக் கோபம் கொள்கிறாள் பரத்தை. தன் வீடு வந்த தலைவனை தான் கையகப்படுத்திக்n;காள்வேன் என்று சூளுரைக்கிறாள்.

மற்றொரு பரத்தை சூரியனைச் சுற்றும் நெருஞ்சியாகத் தலைவனைத் தான் ஆட்டிவைப்பேன் என்கிறாள்.

         ~~தேர் தர வந்த நேர் இழை மகளிர்

ஏசுப என்ப,என் நலனே அதுவே

பாகன் நெடிது உயிர் வாழ்தல் காய் சினக்

கொல் களிற்று யானை நல்கல்மாறே

தாமும் பிறரும் உளர்போல் சேறல்

முழவு இமிழ் துணங்கை தூங்கும் விழவின்,

யான் அவண் வாராமாறே வரினே,வானிடைச்

சுடரொடு திரிதரும் நெருஞ்சி போல,

என்னொடு திரியானாயின்,வென் வேல்

மாரி அம்பின் மழைத் தோற் சோழர்

வில் ஈண்டு குறும்பின் வல்லத்துப் புற மிளை,

ஆரியர் படையின் உடைக,என்

நேர் இறை முன்கை வீங்கிய வளையே!”

         (பாவைக் கொட்டிலார்,அகநானூறு,பாடல்எண். 336)

தலைவியின் பழிச் சொற்களைப் பொறுப்பது என்பது மதம் கொண்ட யானைத் தன் பாகனைத் தாக்காது நன்றி பாராட்டுவது போன்றதாகும். மேலும் தலைவி புறம் கூறினாள் தலைவனைத் தன் பின் சுற்றும் அளவிற்கு வகைப்படுத்துவேன். அவ்வாறு செய்யவில்லை என்றால் என் கைவளையல்களை உடைத்துக்கொள்வேன் என்று வஞ்சினம் கொள்கிறாள் இப்பரத்தை.

“வருகதில் அம்மஎம் சேரி சேர

அரிவேய் உண்கண் அவன்பெண்டிர் காண

தாரும் தானையும் பற்றி ஆரியர்

பிடிபயின்று தரூஉம் பெருங்களிறு போல

தோள்கந் தாகக் கூந்தலின் பிணித்துஅவன்

மார்புகடி கொள்ளேன் ஆகின் ஆர்வுற்று

இரந்தோர்க்கு ஈயாது ஈட்டியோன் பொருள்போல்

பரந்து வெளிப்படாது ஆகி

வருந்துக தில்ல யாம்ஓம்பிய நலனே”.

(பரணர்,அகநானூறு –பாடல் எண் 276)

இப்பாடலில் தலைவனை அவனின் மாலை,ஆடை பற்றி இழுக்கும் இயல்பினைப் பெற்றவளாகப் பரத்தை விளங்குகிறாள்.

மேலும் பெண் யானை கொண்டு ஆண்யானையைப் பிடிக்கும் வழக்கம்போல,தோள் என்னும் கட்டுத்தறியில் கூந்தல் என்னும் கயிறு கொண்டுத் தலைவனைத் தான் பிணிப்பேன் என்று இப்பரத்தை பேசுகிறாள்.

வந்த தலைவனை தன்னிடம் இருந்து நீங்கிவிடாது இருக்கச்செய்யும் போக்கும் பரத்தையிடம் இருந்துள்ளது.

~~தொடுத்தேன்,மகிழ்ந! செல்லல்…என் நலம் தந்து சென்மே!” (பரணர் அகநானூறு,பாடல்எண். 396)  என்ற கோரிக்கையைப் பரத்தை வைக்கிறாள். அதாவது என்னை விட்டுப் பிரியாதே. அவ்வாறு பிரிந்தால் என் நலனைத் தந்து செல் என்கிறாள் பரத்தை. அவளிடம் பெற்ற நலனை எது கொண்டு தலைவனால் அடைக்க இயலும்.  அவள் இழந்த நலனை இளமையைத் தலைவன் மீட்டுக் கொடுத்துவிட இயலுமா.

இவ்வாறு பொதுவாய் நடந்து,தலைவனை வீடுவரை சென்று அழைத்து,அவனை ஆடை,மாலை இழுத்து தன்னின்பம் தரும் அரும் செயல்களுக்கு உரியவளாகப் பரத்தை விளங்குகிறாள். இதனால் இவள் பெற்ற நன்மை எள்ளளவும் இல்லை என்பதே செவ்விலக்கியப் பதிவாகும்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் பரத்தை அழைப்பு முறைகள்”

அதிகம் படித்தது