ஆகஸ்டு 13, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மொழி இலக்கியங்களில் உடற்கூறு அறிவியல்

முனைவர் க. சத்யா

Oct 19, 2019

siragu udarkooru ariviyal1

கல்தோன்றி மண்தோன்றா காலத்து- வாளொடு
முன்தோன்றிய மூத்தகுடி”
என்று தமிழ்க் குடியின் தொன்மையை புறப்பொருள் வெண்பாமாலை கூறுகிறது.
கன்னடமும் களிதெலுங்கும் கவின் மலையாளமும் துளுவும்
உன் உரத்து உதித்தெழுந்து ஒன்றுபல ஆயிடினும்
ஆரியம்போல் உலகவழக்கு அழிந்தொழிந்து சிதையா
உன் சீரிளமைத் திறம்வியந்து செயல்மறந்து வாழ்த்துதுமே என்று தமிழ் மொழியின் செம்மைத் தன்மையினைப் பாடியுள்ளார் மனோன்மணீயம் பெ. சுந்தரம்பிள்ளை.

செம்மையும், தொன்மையும் நிறைந்த செம்மொழி இலக்கியங்களில் ஆங்காங்கே அறிவியல் சார்ந்த கருத்துகளும் இடம் பெற்றுள்ளன. இதனை மருத்துவ அறிவியல். வானியல், மின்னணுவியல், ஒலியியல், கணிப்பொறி அறிவியல், உடல்கூறு அறிவியல் எனப் பல்வகைப்படுத்தலாம். இவற்றில் உடற்கூறுஅறிவியல் பற்றிய செய்திகளை இக்கட்டுரை தந்து நிற்கின்றது.

உடற்கூறுஅறிவியல்

மனிதன், விலங்குகள், தாவரங்கள் ஆகியனவற்றின் உடலமைப்புகள் பற்றிய அறிவியல் ஆய்வு “உடல்கூறுஅறிவியல்” ஆகும்.
தொல்காப்பியத்தில் உடல்கூறு அறிவியல்

வாழ்விற்கான இலக்கணமாகிய பொருளிலக்கணம் கூறுவது தொல்காப்பியத்திற்கே உரிய தனிச்சிறப்பாகும்.
உயிர்களின் பாகுபாட்டைக் கூறும் தொல்காப்பியர் ஓரறிவு முதலாக ஆறறிவு ஈறாக உள்ள உயிரினங்ககளை வகைப்படுத்தும் பொழுது அவ்உயிரிகளுக்கான உடல் உறுப்புகள் வெளிப்படுகின்றன.

சான்றாக

1. தொடு உணர்வு உள்ள உயிரிகளான புல்லும், மரமும் ஓரறிவு உடையன என்றும்
2. சுவைத்தன்மையை அறியக்கூடிய உறுப்பாகிய நாக்கைப் பெற்றுள்ள உயிரினங்கள் ஈரறிவு உடையன என்றும்
3. நுகர்தல் தன்மை உடைய மூக்கைப் பெற்றுள்ள உயிரிகள் மூவறிவு உடையன என்றும் இவைகளோடு
4. நாக்கைப் பெற்றுள்ள உயிரிகள் நாலறிவு உடையன என்றும்,
5 காதுகளைப் பெற்றுள்ள உயிரிகள் ஐந்தறிவுடையன என்றும் கூறும் தொல்காப்பியர்
மேற்கண்ட ஐந்து உறுப்புகளோடு ஆறாவதாக நன்மை தீமையை ஆராய்ந்து மனத்தால் அறியக்கூடிய மனித இனம் ஆறறிவுடையன என்று கூறுமிடத்திலும் அவ்வறிவு உடைய உயிரினங்களை இனங்கண்டறிந்து வகைமைப்படுத்துமிடத்திலும் தமிழிர்களுடைய அறிவியல் பார்வை பரந்துபட்டிருக்கின்றன.

மனித உடல் உறுப்புகள்

siragu udarkooru ariviyal2எழுத்துகளின் பிறப்பைக் கூறும்பொழுது
உந்தி முதலா முந்துவளி தோன்றித்
தலையினும் மிடற்றினும் நெஞ்சினும் நிலைஇப்
பல்லும் இதழும் நாவும் மூக்கும்

அண்ணமும் உளப்பட என்ற வரிகளில் மனிதனின் உடல் உறுப்புகளான தலை, கழுத்து, நெஞ்சு , பல், நாக்கு , மூக்கு , இதழ், உந்தி (வயிற்றின் அடிப்பகுதி) வெளிப்படக் கூறப்பட்டுள்ளன.

இவ்உறுப்புகளை சங்க இலக்கியங்கள் பலவும் அழகுறக் கூறும்பொழுது அவ்உறுப்புகளின் செயல்பாட்டை படிப்போரின் கண்முன் நிறுத்துகின்றனர். மேலும் எண்வகை மெய்ப்பாடுகளும் வெளிப்படும் பொழுது அவை வெளிப்படும் களங்களாக மனித உடலுறுப்புகள் அனைத்தும் அமைந்துவிடுகின்றன.

உடல்உறுப்புகள் செயல்பாடு

அதியமான் நெடுமான் அஞ்சியின் சினம் மிகுந்த தன்மையைக் கூறும்பொழுது
“மெய்யது வியரே, மிடற்றது பசும்புண்” என்றும்
செறுவர் நோக்கிய கண் தன்
சிறுவனை நோக்கியுஞ் சிவப்பு ஆனாவே (புறம் 100)
என்ற வரிகளில் அவ்வுறுப்புகளின் செயல்பாடுகள் கூறப்பட்டுள்ளன.

கால்

பாண்டியன் நெடுஞ்செழியனின் கால் வலிமையைக் கூறும் இடைக்குன்றூர் கிழார் வணங்கு தொடைப் பொலிந்த வலிகெழு நோன்தான் என்றுரைக்கிறார்(புறம்-78)
கால் தொண்டைமான் இளந்திரையன் நெடுமுடியளந்த திருமாலின் மரபில் தோன்றியவன் எனுமிடத்தில்
. . . . . . நீயிரும்
இருநிலங் கடந்த திருமறு மார்பின் என்றுரைக்கின்றது பெரும்பாணாற்றுப்படை. இருநிலங்களை கடப்பதற்கான கால் எனும்பொழுது அக்கால்களின் வலிமை கூறப்பட்டுள்ளது.

வயிற்றுகோடு

பேரியாழின் தன்மை பற்றிக் கூறும்பொழுது மணம் வீசும் கூந்தல் உடைய பெண்ணின் வயிற்றில் தொடங்கி மார்பில் முடிகின்ற மயிர் வரிசை போன்று நடுவில் தோலை இழுத்துத் தையல் இட்டனர் என்பதை
அடங்குமயிர் ஒழுகிய அவ்வாய் கடுப்ப
அகடுசேர்பு பொருந்தி அளவினில் திரியாது
கவடுபடக் கவைஇய சென்றுவாங்கு உகுடுந்தி
. . . . . . . . . . .
வணர்ந்தேந்து மருப்பின் வள்ளுயிர்ப் பேரியாழ்
என்கிறது (மலைபடுகடாம்-32)

கை

பெண்களின் கைகளிலும் உரோமம் எனும் முடிகள் காணப்பட்டதென்பதை
“பொலந்தொடி தின்ற மயிர்வார் முன்கை”
(நெடுநல்வாடை-141)
எடுத்தியம்புகின்றது.

எலும்பு

உடம்பானது எலும்புகளால் ஆனாது என்பதனை
“உடும்பு உரித்து என்பு எழு மருங்கின்” (புறம்-68)
என்று புறநானூறும்
“என்புதோல் போர்த்த உடம்பு “ என்று திருக்குறளும் எடுத்தியம்புகின்றது.

நாக்கு

நாக்கைப் பற்றிக் கூறம்பொழுது”எரி மறித்தன்ன நா” என்று சிறுபாணாற்றுப்படையும்
“மதந்தபு ஞமலி நாவி னன்ன” என்று மலைபடுகடாமும் எடுத்துரைக்கின்றது.

கூந்தல்

“விரைவளர் கூந்தல்” என்று புறநானூறும்
வயது முதிர்ந்த பெண்களுக்கு நரைத்த கூந்தல் காணப்பட்டதென்பதை
“பெரும்பின் னிட்ட வான்நரைக் கூந்தலர்
நன்னர் நலத்தர் தொன்முது பெண்டிர்” என்று சிறுபாணாற்றுப்படையும்
“நறுவிரை துறந்த நாறா நரைத்தலை என்று புறநானூறும் கூறுகின்றது.
இளம் பெண்களின் கூந்தலைப் பற்றி
“கொடிக் கூந்தல் (குறுந்தொகை 132)
நரைவிரா வுற்ற நறுமென் கூந்தல் (புறம்-228)
என்றும்
“மையுக் கன்ன மொய்யிருங் கூந்தல்”
“அகிலுனவிரித்த அம்மென் கூந்தல்“ (சிறுபாணாற்றுப்படை) என்றும் இலக்கியங்கள் எடுத்துரைக்கின்றது.

மூக்கு

தசைப்பகுதி அற்ற தோலால் போர்த்தப்பட்ட எலும்புகளால் ஆன தென்பதை
“உள் ஊண் வாடிய கரி மூக்கு (அகம்-53)
என்றும்
“நொள்ளை” என்றும் இலக்கியங்கள் கூறுகின்றன.

காது

காதைப் பற்றிக் கூறும்பொழுது “கருமறிக்காது” என்று கூறப்பட்டுள்ளது. காதின் மேற்பகுதியில் லேசான ரோமங்கள் காணப்படுவதால் அது கருமை நிறமுடைய ஆட்டின் காதுபோல தோன்றுகின்றதென்று பெரும்பாணாற்றுப்படை கூறுகின்றது.

கண்

குவளை மலர் போன்ற வடிவுடைய கண் என்பதை “குவளை யுண் கண்” (நற்-205) என்றும் பொலிவிழந்த கண்ணைப்பற்றிக் கூறுமிடத்தில்
“தோளே தொடி கொட்ப ஆனா, கண்ணே
வாள் ஈர் வடியின் வடிவு இழந்தனவே” (நற்-133)
என்றும் கூறப்பட்டுள்ளது.

இதனால் அழகுடன் கூடிய விழிகளின் தன்மையும் , அதே நேரத்தில் உள்ளத்தில் உள்ள வருத்தங்களை கண் வெளிப்படுத்தும்பொழுது அதன் பொலிவற்ற தன்மையும் கூறப்பட்டுள்ளது.

மேலும் உடற்பகுதிகளில் காணப்படுகின்ற வரி போன்ற வெள்ளை நிற கோடுகளை தற்காலத்தில் தேமல் என்று குறிப்பிடுகின்றோம். அவற்றால் அழகு கெடுவது அனைவரும் அறிந்தது. இந்த செய்தியை
“தொய்யில் வனமுகை வரிவனப்பு இழப்ப(நற்-225)
நற்றினை பதிவுசெய்துள்ளது..
உடல் உறுப்புகளில் ஏதேனும் குறைபாடு இருந்தால் அவற்றால் பயனில்லை என்பதனை
“சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும்,
கூறும் , குறளும், உனமும் , செவிடும்,
மாவும், முருளும் உளப்பட வாழ்நர்க்கு
என்பேர் எச்சம் என்றிவை எல்லாம்
பேதைமை அல்லது ஊதியம் இல்”(புறம்-28)
என்று புறநானூறு கூறுகின்றது.

இவைகளில் சிதடும் என்பவை கண்பார்வை இல்லாத தன்மை ஆகும். பிண்டம் என்பது வடிவற்ற தசைத்திரன் ஆகும். மா என்பது விலங்கு வடிவமாகக் குழந்தை பிறத்தல் ஆகும். இவ்வாறு குறைபாடு உடைய உடலமைப்புகளைப் பற்றிக் கூறுமிடத்தில் ஆசிரியரின அறிவு நுட்பமும் அக்காலத்தில் காணப்பட்ட உடல்குறைபாடுகள் பற்றியும் அறியமுடிகின்றது.

வாய்மட்டும் பேச இயலாதவர்களை
“உடம்பி னுரைக்கு முறையா நாவின்”(முல்லைப்பாட்டு-65)
என்றும்
அவர்களும் அரண்மனைகளில் பணி செய்தனர் என்றும் முல்லைப்பாட்டு பதிவு செய்துள்ளது.
இவ்வாறு தொல்காப்பியர் கூறிய உடல் உறுப்புகளையும். அவ்வுறுப்புகளின் செயல்பாடுகளாக இலக்கியங்கள் கூறியதனையும் சான்று காட்டப்பட்டுள்ளன.

இதே வகையில் நன்னூலாரும் முதல் எழுத்துக்கள் பற்றிக் கூறுமிடத்தில் உயிர் வேறு, உடல்வேறு என்பதனை நிறுவியுள்ளார்.
“உயிரும் உடம்பும் ஆம் முப்பது முதலே” என்ற இடத்தில் தமிழ் மொழியை ஒரு உயிரினத்திற்கு ஒப்பிட்டு இருக்கும் ஆசிரியர்அவ்வியுரியின் இயக்கத்திற்குத் தேவையான உயிர் சக்திகளாக 12 உயிர் எழுத்துக்களையும் 18 மெய்யெழுத்துக்களையும் கூறும் நிலையில் உயிர் வேறு உடம்பு வேறு என ஆராய்ந்து பார்க்கும் அறிவியல் திறத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

திருமணம்

களவு வாழ்க்கையின் தன்மை பற்றிக் கூறும் பொழுது எண்வகை மணங்கள் கூறப்பட்டுள்ளன. அவை பிரமம், பிரசாபத்தியம், ஆரியம், தெய்வம். காந்திருவம், அசுரம், இராக்கதம், பைசாசம் என்பன. இவைகளில் காந்திருவம் என்பதற்கு “ஒத்த இருவர் தாமே கூடும் கூட்டம்” என்றுரைக்கின்றனர் உரையாடசிரியர்கள்.

“ஒத்த இருவர்” என்ற இடத்தில் தலைமக்களுக்குரிய ஒப்புமைகளான பிறப்பு, குடிமை, ஆண்மை, ஆண்டு, அழகு, அன்பு, அடக்கம், கருணை, அளவு, செல்வம் என்ற பத்து அமைப்புகள் வந்தடைகின்றன.

இவற்றுள் ஆண்டு என்பதற்கு “ஒருவரினொருவர் முதியரின்றி ஒத்த பருவத்தராதல் அது குழவிப்பருவங் கழிந்து 16 பிராயத்தானும், 12 பிராயத்தாளும்” ஆதல் என்கிறார் இளம்பூரணர்
எண்வகை மணங்கள் இருந்த பொழுதிலும் கந்திருவமே சிறந்தது என்பது போல குழவிப்பருவம் கடந்த மங்கைப்பருவ பெண்ணின் வளதை (12) 16 வயதுடைய தலைமகனின் ஒப்புமைக்காகக் கூறும்பொழுது அவர்களுடைய உடல் முதிர்ச்சியும் கவனிக்கப்படும் ஆதலால் அங்கு “உடல் கூறு அறிவியல்” ஆய்வு வெளிப்படுகின்றன.

கருவுறுதல்

பெண்களின் கருவுறு காலத்தைப்பற்றிக் கூறும்தொல்காப்பியர்
“பூப்பின் புறம்பா டீரறு நாளும்
நீத்தகன் றுரையார்” என்றுரைக்கின்றார்.
இதனையே
“தீண்டாநாண் முந்நாளு நோக்கார் நீ ராடியபி
னீராறு நாளு மிகவற்க வென்பதே
பேரறி வாளர் துணிவு” (ஆசா-கோவை.420)
என்றுரைக்கின்றது.
கருவுறுவதை இலக்கியங்கள் “சூளுறுதல்” என்றுரைக்கின்றன. இதனை குற்றாலக் குறவஞ்சியில் அங்கு இருக்கக்கூடிய கருவுற்ற சங்குகள் தனது சிப்பிகளை வெளிக்கொணர வருத்தமுறுகின்றன என்ற இடத்தில் “சூல்’ எனும் சொல் கையாளப்பட்டுள்ளன.
பெண்களுடைய பேறு காலத்தை சாத்தந்தையார் “பெண்ணீற் றுற்றெனப்”(புறம்-82)
எனப் பாடியுள்ளார்.

மேலும் கருவுற்ற பெண்கள் மண் உண்பர் என்பதனை
“வயவுறு மகளிர் வேட்டு உணின் அல்லது
பகைவர் உண்ணா அரமண் ணினையே”(புறம்-20)
என்கிறார் குறுங்கோழியார் எனும் புலவர்.
அடுத்ததாக மனித உடம்பானது நீரால் அமைந்தது என்பதை
“நீர் இன்று அமையா யாக்கை” என்றும் அவ்வுடம்பின் இயக்கத்திற்கு தேவையான உணவு கொடுத்தவர்களே உயிர்கொடுத்தோராவர் என்பதனை

“உண்டி கொடுத்தோர் உயிர்கொடுத்தோரரே:
உண்டி முதற்றே உணவின் பிண்டம்”
என்றும் பாடப்பட்டுள்ளது.
ஆதலால் மனித உடம்பானது நீராலும், உணவாலும் இயங்குகின்ற தன்மை உடையது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட சான்றுகளின் மூலமாக பண்டைய மக்களின் உடற்கூறுகள் பற்றிய அறிவியல் அறிவு வெளிப்படுத்தப்பட்டுள்ளது.


முனைவர் க. சத்யா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் உடற்கூறு அறிவியல்”

அதிகம் படித்தது