செப்டம்பர் 26, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

செம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள்

முனைவர். மி. நோயல்

Nov 2, 2019

அறிவியல் பயன்பாடும், பகுத்தறிவுச் சிந்தனைகளும் தமிழ்ச் சமுதாயத்தின் வாழ்விலும் நெடிய பண்பாட்டுப் பயணத்திலும் நீங்காத இடம் பிடித்திருந்தன. இந்தப் பண்பாட்டுப் பயணம் எப்போது தடுமாறியது? எப்படித் திசைமாறியது? இந்தத் திசை மாற்றத்தின் விளைவுகள் என்ன? அண்மைக்காலங்களில் தமிழ்ப்பண்பாட்டை மீட்டெடுக்க நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகள் என்னென்ன? இன்னும் நாம் என்ன செய்யவேண்டும்? இந்தக் கேள்விகளுக்கான விடையை நாம் இந்த விவாதத்தின் வேதியியல் துறையில் செம்மொழி இலக்கியக்காலங்களில் ஏற்பட்ட வரலாற்றுப் பின்புலங்களை நாம் நிறைவுப்பகுதியில் ஒரு எடுத்துக்காட்டாக ஆராயலாம்.

இது ஆய்வுரை அன்று, இளம் தமிழ்நெஞ்சங்களை உற்சாகப்படுத்திச் சிந்திக்க வைக்கும் ஒரு பயிலரங்க முயற்சி. எனவே இங்கே விடைகளைவிடச் சிந்திக்கத் தூண்டும் இளைய சமூகத்தை விடைதேடும் முயற்சிகளைத் தொடங்கத் தூண்டுவதே நம் நோக்கம்.

செம்மொழிச் சமுதாயக் காலம்

Dec-23-2017-newsletter1

பழமையும் தனித்துவமும் வாய்ந்த மொழிகள் மிகச்சில. 2000 வருடங்களுக்குமேல் பழமை வாய்ந்த மொழிகள் விரல்விட்டு எண்ணிவிடக் கூடியவை. அவற்றில் தமிழும் ஒன்று. ஆனால் நம் தமிழ்ச்செம்மொழியைப் பற்றியும் தமிழ்ச்சமூகம் பற்றியும் பொதிய கள ஆய்வுகள் நடந்திருக்கிறதா? இல்லை என்றால் ஏன்?

ஒவ்வொரு செம்மொழிக்கும் உற்சாகமாகக் குரல் கொடுக்கவும் ஆய்வுகளை முன்னெடுக்கவும் அரசு சார்ந்த நிறுவனங்கள் முன்னால் நிற்கின்றன.

சீன மொழி அந்த நாடு முழுமையும் பேசப்படும் செம்மொழி. சீன மக்கள் யாவரும் அந்தக் கலாச்சாரத்தைப் பெருமையோடு முன்னெடுத்துச் செல்கிறார்கள்.  இலத்தீன் மொழி உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்களின் மறைமொழி.

கிரேக்கமொழி மிகச்சிலரால் மட்டுமே இன்று பேசப்படுகிறது. ஆனால் அதன் அறிவு வீச்சும், இலக்கியங்களும் ஐரோப்பிய நாகரிகத்தின் அடித்தளம். எனவே அது எல்லாரையும் ஈர்க்கிறது.

ஹீப்ரு யூத சமூகத்தின் உயிர்நாடி. அந்தச் சிறிய ஆனால் உயிர்த்துடிப்புள்ள சமூகம் அதைத் தாங்கிப்பிடிக்கிறது.

சமஸ்கிருதம் இந்தியாவின் தெய்வமொழி மட்டுமல்ல இந்தோ ஆரிய மொழிகளின் வேர்கள் அதில் தேடப்படுகின்றன.

தமிழ் உலகெங்கும் இன்றும் 8 கோடி மக்களால் பேசப்படும் மொழி. பழம்பெரும் மொழி. இந்த மொழி கலாச்சாரத்தின் மீது இப்போதுதான் கொஞ்சம் அக்கறை எழுந்திருக்கிறது. இங்கே நடைபெறவேண்டிய பணிகள் ஏராளம்.

செம்மொழிக் காலங்கள்! கள ஆய்வுகள்

இலக்கியங்கள் மட்டும் நம்முடைய பண்பாட்டுக்கான காலத்தை மதிப்பிடும் ஆதாரங்கள் ஆகிவிடாது. ‘கல்தோன்றி மண்தோன்றாக் காலம்.’ போன்ற பல நம் பண்பாட்டின் பழமையை நிலைநாட்டிவிடப் போதுமானவை அல்ல.

பழைய கற்காலம், புதிய கற்காலம், செம்புக்காலம், இரும்புக்காலம் போன்ற காலங்களில் நம்முடைய நாகரிகம் பரவி இருந்ததற்கான அடையாளங்கள் இப்போது மெல்ல மெல்ல வெளிவந்துகொண்டிருக்கின்றன.

இந்தப் பணி வேகம் பிடிக்க வேண்டும். இதற்கு ஈடுபாடுள்ள இளைஞர்கள் வேண்டும். அரசின் ஈடுபாடும் வேண்டும். உலகளாவிய ஆய்வு அமைப்புகள் இந்த முயற்சியில் வழிகாட்டலாம்.

தமிழகத்துக்கு வெளியே இருக்கின்ற தமிழர்களைவிட நமது ஆர்வமும் முயற்சியும் இந்த வகையில் குறைவாக இருக்கிறதா?

அல்லது நமது தமிழர் ஆர்வம் அரசியல் வெத்துவேட்டுகளாகவே முடிந்து போகிறதா?

தமிழகத்தில் எத்தனை இடங்களில் கள ஆய்வுகள் நிறைவு பெற்றிருக்கின்றன?

கி.மு.300க்கு முன் தமிழ்மொழிக்கு வரிவடிவம் இருந்ததற்கான ஆதாரங்கள் போதிய அளவு இருக்கிறதா? நமக்கும் ஹரப்பா நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகள் பற்றி இன்னும் எவ்வளவு நாட்கள் மேலோட்டமாகப் பேசிக்கொண்டிருக்கப் போகிறோம்.

இப்படிக் கேள்விகளை அடுக்கலாம். துடிப்புள்ள இளைய தலைமுறைதான் இவற்றுக்கு ஆய்வுப்பூர்வமாக விடைதேட வேண்டும்.

 அறிவும் அறிவியல் சிந்தனைகளும்

தமிழச் சமுதாயம் அறிவுச் சமூகம் தான். பகுத்தறிவுப் பார்வை கொண்ட சமூகம்தான்.

இயற்கையோடு இசைந்து வாழ்ந்த சமூகம்.

மொழி இலக்கணமே வாழ்க்கை இலக்கணம் ஆகிப்போன சமூகம்.

மலையில், காட்டில், வயலில், கடற்கரையில் பாலை நிலத்தில் வாழ்க்கை முறைகளையே பகுத்துப் பார்த்த சமூகம்.

யார் யார் வாய்க்கேட்டாலும்.

எத்தன்மையதாகினும்- மெய்ப்பொருளைக் காண்பது அறிவுதான் என்று தந்த சமூகம் .

கடல் வணிகம் உள்ளிட்ட பொருளாதார வழித்தடத்தில் சிறந்து விளங்கிய சமூகம்தான்.

கடல்கடந்தும் தமிழர் பண்பாட்டை வளர்த்தெடுத்த சமூகம்தான்.

ஆனால் இந்தச் சமூகத்தில் அறியாமையும் மூடநம்பிக்கையும் பரவியத எப்போது, யாரால்

அறநெறிகளையும் இலக்கியங்களையும் வளமூட்டிய சமணர்களையும் பௌத்தர்களையும் களப்பிரர்கள் என்று ஓரங்கட்டியவர்கள் யார்? எப்படி? எப்போது?

சாதிய மேலாதிக்கமும் , விதியின் மேல் அதிதீவிர நம்பிக்கையும் வளர்ந்தது எப்போது?

யாதும் ஊரே! யாவரும் கேளிர். . . . அப்புறம்?

இந்த அறியாமைப் பயணத்திலிருந்து பகுத்தறிவுப் பாதையில் நாம் மீண்டும் அடியெடுத்து வைத்தது எப்போது? எப்படி?

வேதியியல் பார்வையும் பாதையும்

செம்மொழிக் காலத்தில் நம்முடைய வேதியியல் பாதையும் உயிர்த்துடிப்போடுதான் இருந்தது.

நம்முடைய உலோகவியல் வளர்ச்சி

நாணயங்கள்

சித்த மருத்துவம்! மருந்துகள்

ஆடைகள்! வண்ணங்கள்!

ஓவியக் கலையில் பயன்படுத்தப்பட்ட வண்ணக் கலவைகள்

ஏன்? நமது உணவுமுறை! உணவைச் சமைக்கும் முறை.

இவை. எல்லாம் நமது வேதியியல் சிந்தனைப் போக்கின் வழித்தடங்கள்.

ஆனால் இங்கேயும் தடுமாற்றம் வந்து சேர்ந்தது! ரசவாதம் தங்கத்தைத் தேடி அலைந்தது!

இந்தப் பயணத்தைப்பற்றியும் நாம் கொஞ்சம் சிந்திப்போம்.

நாம் மீண்டும் ஓர் அறிவுச் சமூகமாக வளர வழிதேடுவோம். நமது பண்பாட்டு வழித்தடங்களை அடையாளம் கண்டு கொள்ளவும் முயற்சி எடுப்போம்.

செம்மொழி இலக்கியத்தில்  மண்ணியல்

முன்னுரை

            ‘‘திங்களொடும் செழூம்பரிதி தன்னொடும் விண்ணோடும் உடுக்களோடும்

            மங்குல்கடல் இவற்றோடும் பிறந்ததமிழ்’’

என்ற பாவேந்தர் பாரதிதாசனின் பாடல் வழி தமிழ் மொழியின் தொன்மையினை அறியலாம். தமிழ் இலக்கிய வரலாற்றில் மூவாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே மண்ணியல், தாவரவியல், விண்ணியல், மருந்து, அளவியல், எண்கள், உடை, அணிகலன், இசை, நாட்டியம், கட்டடக்கலை, ஓவியக்கலை முதலிய பலதுறைகளில் அறிவியல் வேரூன்றித் தொடர்ந்திருக்கிறது. அறிவியல் தமிழுக்கும் புதிதல்ல. தமிழருக்கும் புதிதல்ல. அத்தகைய சிறப்புமிக்க தமிழ் இலக்கியங்களில் மண்ணியல் குறித்த செய்திகளை ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.

அறிவியல் பேசும் செம்மொழி இலக்கியங்கள்.

அறிவியல் என்பதற்கு விஞ்ஞானம், நுணங்கியல், இயல்நூல், ஆய்வுத்துறை, அறிவு, பொருளாய்வுத்துறை, புறநிலை ஆய்வுநூல், அறிவு பற்றிய துறை, பருப்பொருள்களை ஆயும் நூல் தொகுதி ஆகிய கருத்துக்கள் அகராதிமை அலங்கரித்து நிற்கின்றன. மனித இனம், வாழ்வு, வளம், நலம், பண்பு, வசதிகள் யாவும் மேன்னிலையடைவதற்கு உறுதுணையாயிருப்பது உலகில் உலாவும் அறிவியலாகும். மண்ணியல், வானியல், இயற்பியல், வேதியியல் உயிரியல், விலங்குகியல், தாவரவியல் ஆகிய பல துறைகள் அறிவியலில் அடங்கும். இவ்வாறான அறிவியலைப் பூமித் தாயின் மக்களில் ஒரு சிலர் அறிவியற் பூங்காவில் நுழைந்து தத்தமக்கான துறையில் ஆர்வங்கொண்டு உலக முன்னேற்றத்தில் உதவிக்கொண்டிருக்கின்றனர். இவர்கள் சேவை மகேசன் சேவையாகும். இனி, பண்டைத் தமிழர்களின் பழைமை வாய்ந்த மண்ணியல் பற்றிய செய்திகள் செம்மொழி இலக்கியங்களில் எவ்வாறு பேசப்படுகின்றன என்ற பாங்கினையும் காண்போம்.


முனைவர். மி. நோயல்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செம்மொழி இலக்கியங்களில் பலதுறை அறிவியல் சிந்தனைகள்”

அதிகம் படித்தது