செயற்கரிய செய்! (கவிதை)
மகேந்திரன் பெரியசாமிJun 16, 2018
உண்டு உறங்கிப்
பரிசெனும் வாழ்வை
வீணாய்த் துறக்கும்
வீரத் திறலே!
கற்றோம் பெற்றோம்
ஒருவழிப் பாதையாய்
உழைப்பில் களித்தோம்-
உழைத்துக் களைத்தோம்-
பிண்டம் வளர்க்க
உழைத்தது போதும்-
அயர்ந்தது போதும்-
அதிர்ந்தது போதும்!
அண்டம் வளர்க்க வேண்டும்!
புவி கீர்த்தி பெருக்க வேண்டும்-
எதையோ யாரிடம்
தேடித் தேடி
எங்கெங்கோ அலைந்து
தொலைந்தது போதும்!
ஆக்க சக்தியை
ஊக்கத்துடன் பெருக்கி
வாழ்வின் மெய்ப் பொருளை
உணர்(த்)/ந்திட வேண்டும்!
மூளையில் சேர்த்த
கனவுகள் யாவும்
உடல் செல்கள் அனைத்திலும்
விதைத்திட வேண்டும்-
உணர்வாய் உயிர்ப்பாய்
காத்திட வேண்டும்-
கருவில் உறங்கிய
கனவுகள் யாவையும்
கட்டுகள் அறுத்து
விடுவிக்க வேண்டும்!
கனவுக் குஞ்சுகள்
உடல் விட்டு வெடித்து
புவியெங்கும் விழட்டும்
வீரிய விதைகளாய்-
பரந்து பெருகி பற்பலவாகி
உயிர்கள் யாவையும்
உய்விக்க வேண்டும்!
இருளைக் கிழித்து
அவ் வீரிய விதைகள்
வெளிச்சப் பூக்களாய்
செழித்திட வேண்டும்-
உயிரோடி ருத்தலா
வாழ்வின் வரையறை?
உயிர்ப்போடு இருத்தலே
வாழ்வின் பெருமறை!
செயற்கரிய செய்!
செயற்கரிய செய்!
செயற்கரிய செயற்கரிய
செயற்கரிய செய்!
செயல் தவம் ஒன்றே
பேச்சினும் பெரிது!
ஒளியில் மகிழ்வில்
திளைத்துச் செயல் செய்!
மகேந்திரன் பெரியசாமி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “செயற்கரிய செய்! (கவிதை)”