மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள்

தேமொழி

Jul 22, 2017

Siragu sevvandhi2

பழமைபேசி என்னும் எழுத்தாளருக்குக் கிடைத்த கொழுகொம்பு கதைசொல்வது. பழமைபேசியின்  மொழியையே கடன் வாங்கி இதை விவரித்தால்… காலவெள்ளத்தில் அகப்பட்ட நாம் அவரவர்க்கு விருப்பமான ஏதோவொன்றைப் பிடித்துக் கொண்டபடியே வெள்ளத்தின் போக்கில் பயணிக்கிறோம்.  உயிர்த்தோம்; இருந்தோம்; மரித்தோம் என்பதை மாற்றி, வாழ்ந்தோம் என்பதற்கான இலக்கணத்தை கடைபிடிக்க உதவும் கொழுகொம்பு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்று என்றால், பழமைபேசிக்கு அது அவரது எழுத்து. அதை அவர் திறம்பட செய்துள்ளதற்குச் சான்று அவரது ‘செவ்வந்தி’ சிறுகதைத் தொகுப்பு. எழுதுவதே அவருக்கான தொடுப்பு. செவ்வந்தி பழமைபேசியின் அருமையான சிறுகதைகளின் தொகுப்பு.

அந்தியூர் பழமைபேசியின் “செவ்வந்தி” சிறுகதைத் தொகுப்புகளில் உள்ள கதைகளைப் படிப்பவர்கள் எவரும் அவருக்குச் சற்றும் அறிமுகமில்லாதவர்களாக இருந்தால், அவர் ஒரு அமெரிக்கத் தமிழர் என்பதையே நம்ப மாட்டார்கள். கொங்குதமிழ் கொஞ்சுகிறது அவரது கதைகளில். வட்டார பேச்சு வழக்கு வனப்புடன் ஆட்சி செய்கிறது அவரது வரிகளில். அவரது கதை மாந்தர்கள் யாவரும் அவர் நேரில் சந்தித்த ஏதோ ஒருவரின் ஆளுமையின் தாக்கம் என்பது  நமக்குத் தெளிவாகப் புரிவதால், அவர் எழுத்தின் வழி நாமும் கொங்குமண்டலத்தின் அழகிய அமைதியான வயல் வரப்புகளிலும், ஏரிக்கரையிலும், சிற்றூர் வீதிகளிலும் மண்வாசனையை நுகர்ந்து கொண்டே அவர் சொல்லும் கதையை கேட்டுக் கொண்டே நடக்கும் உணர்வைப் பெறுவோம்.

Siragu sevvandhi1

மொட்டைமலைக் குன்றின் மேல் பெய்யும் மழையைப் போல, சடாரென அதன் போக்கில் அது போய்க் கொண்டே இருக்கிறது காலம் என்று யோசித்துப் பார்க்கக் கூட அவகாசம் இல்லாத அமெரிக்காவின் பரபரப்பான வாழ்க்கையை விவரிக்கும் இவரால், அவரது ‘ககனமார்க்கம்’ கதையில் வரும் விமானப் பயணிகளைப் போலவே வேறு பரிமாணத்திற்கு, இந்திய கிராம சூழ்நிலைக்கும் மிக எளிதில் தாவிவிட முடிகிறது.

இவரது அமெரிக்கச் சிறுகதைகள் அமெரிக்க வாழ்வுமுறையைக் கண்ணெதிரில் தோற்றுவிக்கும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். கோலியர்வில் குளத்தில் கனடியக்கீச்சுகளின் சத்தம், டிப்பர் குருவி, பழுப்பேறிய இலையுதிர் கால மேப்பில் மரங்கள், மிசிசிப்பி ஆற்றின் எழில் வனப்பு எனக் காட்சிகள் வண்ணமயமாக நம் கண் முன்னே விரிகின்றன.  இவற்றுக்குச் சற்றும் குறைந்ததல்ல பழமைபேசியின் வர்ணிப்பில் கண்முன் தோன்றும் ஆனைமலையின் சில்லென்ற காற்றும், தென்னை மரத்தோப்பில் பாடும் செம்போத்தும் குயிலும், வீசும் காற்றில் விட்டு விட்டுக் கேட்கும் மதுரைவீரன் கோயில் பாட்டுச் சத்தமும் நமக்குத் தரும் காட்சிகள்.

தனிமையில் வாழும் நேகன் கோல்டுசுமித்து எதிர்பாராது கிடைத்த ஒரு உறவால் உற்சாகமாகி, பிறகு அவள் வெளியேறியதும் மனம் குமைவதில் கொள்ளும் சோகம் (மணவாளன்), தமிழ்ச்சங்க கூட்டத்தில் நண்பர்களின் வம்பரட்டை தாளாமல் நொந்து கொள்வதில் வெளிப்படும் நகைச்சுவை (நகைச்சுவைத் திருவிழா) என எந்த உணர்வும் எளிதில் உயிர் வடிவம் பெறுகிறது பழமைபேசியின் எழுத்துக்களில். சிவசங்கரி கதை படிக்கும் கைம்பெண் சுதா அக்கா (நந்தியாவட்டை), சிஞ்சுவாடி கிராமத்து உழைப்பாளி அம்மணி (அம்மணி) எனக் கதைகளில் வரும் பத்திரங்கள் யாவும் நம் நினைவில் தீட்டப்பட்டுவிடும் அழியாத ஓவியங்கள்.

“காருக்குள் நெருக்கடி தாளாமல், இருட்டுதான் அழுது கொண்டிருக்கிறதா? அவற்றின் கண்கள் எங்கேயென்று துழாவினான். ஆனால், திடீரென மின்னிய மின்னல் ஒன்றில் செத்துச் சாம்பலாகிப் போனது இருட்டு,” “பரணிலும் பெட்டியிலுமிருந்த குளிர்கால ஆடைகளுக்கு மறுபிரசவம் நெருங்கிக் கொண்டிருந்தது” என்பது போன்ற விவரிப்புகள் பழமைபேசியின் தனிச்சிறப்புமிக்க முத்திரைகள்.

குடும்பத்தில் பெண்குழந்தைகள் பிறந்தால் குறை சொன்னாலும் “ஈனுறது கிடாரின்னா பட்டி பெருகிக் குடும்பம் தழைக்கும்!” எனக் கணக்குப்போடும் முரண் கொண்ட மனித மனம் (செவ்வந்தி), “இருக்குற பொட்டை நாயி ஒன்னு பத்தாக்கும்?” என்று புறக்கணிக்கப்படும் நாய் செல்லியின் பெட்டைக் குட்டிகள் (செல்லி), நகரமயமாக்குதலில் சிதறுண்டுப்போகும் குக்கிராமத்துக் குடும்பம் (சிலந்தி வலை) போன்ற கதையின் கருக்கள் “மாந்தர் குலத்தின் வயது கூடக் கூட, நாகரிகமும் பண்பும் முதிரத்தானே வேண்டும்?” என்று கேட்கும் பழமைபேசியின் வரிகளை மீண்டும் அசைபோட வைக்கிறது. ஆமாம், அவை ஏன் நம்மிடம் இருப்பதில்லை?


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “செவ்வந்தி படம் பிடித்துக் காட்டும் நாகரிகமடைந்த மனிதகுலப் பண்பு நலன்கள்”

அதிகம் படித்தது