ஏப்ரல் 10, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

ஜெயகாந்தனின் சாளரம் காட்டும் நாகரீகம்

முனைவர் மு.பத்மா

Feb 8, 2020

siragu jeyakandhan1

ஜெயகாந்தனின் சிறுதைகளில் ஒன்றான ‘‘புதிய வார்ப்புகள்” தொகுப்பில் சாளரம் என்ற கதையை தேர்ந்தெடுத்துள்ளேன். இச்சிறுகதையில் நடந்திருக்கும் செய்தியை மறைமுகமாக கூறியுள்ளார். அப்படியென்றால் இக்கதையை புரிந்து கொள்வதற்கு இரண்டு முறை படிக்க வேண்டும் ஏனென்றால் நடைமுறைக்கு மாறான விசயத்தை பார்க்கும் பொழுது நாமும் அதை அப்படியே கூறக்கூடாது என்று நாகரீகமாக இக்கதையை கையாண்டுள்ளார்.

சாளரத்தின் தலைப்பு பொருத்தம்

சாளரம் என்பது சன்னல் அவர் வீட்டில் உள்ள சாளரத்தை அவர் திறந்ததே கிடையாது. ஏனென்றால் அது வாடகை வீடு. அதனுடன் அந்த சாளரத்தை திறந்தால் கீழ்வீட்டில் நடக்கும் நிகழ்ச்சி தெரியும். ஒருநாள் புழுக்கமாக இருக்கிறது என்று சாளரத்தை திறந்த பொழுதுதான் ஒரு காட்சியை கண்டார். அக்காட்சியை வைத்து வேறு ஒரு கதை எழுத முடிவு செய்தார் ஆனால் அக்கதைக்கு ஏற்ற தலைப்பு அவருக்குக் கிடைக்கவில்லை. யோசித்துக் கொண்டே இருக்கும். பொழுது வேறு ஒரு சாளரத்தின் வழியே பார்க்கிறார். மீண்டும் ஒரு அவருவருப்பான விசயத்தை அவரால் காணமுடிந்தது. அதைக் கண்டவுடன் தன் கதைக்கு ஏற்ற தலைப்பு ‘‘மிருகம்” என்று வைத்தார். மிகுந்த சந்தோசம் அவருக்கு எவ்வளவு பொருத்தமான தலைப்பு என்று இறுமாப்பு அடைந்தார். எந்த சாளரத்தின் வழி கேள்வி எழும்பியதோ அந்த சாளரத்தின் வழியே பதிலும் கிடைத்தது என்று உற்சாகம் அடைந்தார்.

கதை அமைப்பு

இக்கதை கற்பனையாக எழுதாமல் நேரில் கண்ட காட்சியை வைத்து எழுதியிருக்கிறார். இக்கதையில் பெயர்களை பற்றி குறிப்பிடப்படவில்லை. அது தேவையில்லை என்று நினத்தாரோ என்னவோ! தெரியவில்லை. அவர் ஒரு வாடகை வீட்டில் மாடியில் குடியிருக்கிறார். கீழ் வீட்டில் 45 வயது ஒரு ஆணும் அவரது விதவைத் தங்கையும் வசித்து வருகின்றனர். இவரும் திருமணம் ஆகாதவர். வாடகையை பற்றி கேட்கவே மாட்டார். கொடுக்கும்பொழுது வாங்கிக் கொள்வார். இவருடைய கதைகளை படிப்பதில் வீட்டுக்காரருக்கு மிகவும் பிடிக்கும் என்பதால் செய்தித்தாளில் வெளிவரும் கதைகளை தவறாமல் வீட்டுக்காரரிடம் கொடுக்கப்போகும் பொழுது ஒரு கதவின் மறைவில் நின்று கையை மட்டும் நீட்டி கதை செய்தித்தாளை அந்த வீட்டுக்காரரின் விதவைத் தங்கை வாங்குவாள். ஒருநாள் கூட அந்தப் பெண்ணின் முகத்தை கதை ஆசிரியர் பார்த்ததே இல்லை.

ஒரு நாள் அவர் இருக்கும் வீட்டில் ஒரு சன்னல் திறக்கப்படாமலே இருந்தது. அதுதிறக்காமல் இருப்பதற்குக் காரணம் அந்த சன்னலை திறப்பதால் காற்று எதுவும் வராது. அதனால் அதை திறப்பதற்கான அவசியம் தேவைப்பட வில்லை. இதை திறந்துதான் பார்ப்போமே என்று ஒரு நாள் அந்த சன்னலை திறந்தார். அப்பொழுது அவர் கண்ட காட்சியை நினைத்து ஏன் நாம் இவ்வளவு நாள் திறக்காமல் இப்பொழுது திறந்தோம். இது போன்ற கொடுமையான செயலை, காட்சியை நாம் இதுவரை பார்த்ததும் இல்லை. இனி பார்க்கவும் கூடாது. விதி நம்மை பார்க்கவைத்துவிட்டது என மனம் நொந்து வருந்தினார். இதை ஒரு கதையாக எழுதலாமே என முடிவு செய்து கதையை எழுதி முடித்தார். ஆனால் கதைக்கான தலைப்பு அமையவில்லை. எவ்வளவு யோசித்தும் கதை தலைப்பு அமையாத வருத்தத்தில் சன்னல் ஓரத்தில் வந்து நின்றார். அப்பொழுது ஒரு இறந்த நாயை ஒரு உயிரோடு உள்ள நாய் குதறிக்கொண்டு இருந்தது. அக்காட்சியைப் பார்த்ததும் அவருக்கு கதைத் தலைப்பு கிடைத்துவிட்டது ஆகா! ஒரு மிருகம் இன்னொரு மிருகத்தை உண்கிறது.

இக்கதைக்கு ‘‘மிருகம்” என்று பெயர் வைத்து செய்தி தாளில் கதையையை வெளியிட்டார். கதை செய்தித்தாளில் வந்தவுடன் அக்செய்தித்தாளை வீட்டுக்காரரிடம் கொடுத்தார். மறுநாள் வீட்டக்காரர் அக்கதையை படித்துவிட்டு தன்னைப்பற்றிதான் இக்கதையில் குறிப்பிட்டு இருக்கிறான் என்று நினைத்துக்கொண்டு மாடிக்கு ஏறிச் சென்றார். கதை ஆசிரியர் வீட்டுக்காரரை பார்த்து உட்காருங்கள் என்றார். நான் உன்னை வீட்டை விட்டு காலிபண்ண சொல்வதற்காக வந்தேன் என்று சொல்லிவிட்டு கதை ஆசிரியரின் பதிலுக்கு காத்திருக்காமல் கிளம்பி விட்டார். அவர் உட்காராமல் இருந்தத்தற்கு காரணம் கதை ஆசிரியரின் மேல் இருந்த கோபம் அல்ல. தன் தவறான செயலை நேரில் கண்டு விட்டாரே என்ற குற்ற உணர்வின் காரணமே அவர் உடனே சென்றதற்கு காரணமாகும்.

கதையின் நாகரீகம்

இக்கததையில் கதையாசிரியர் தன் வீட்டுக்காரரின் செயல்களை சாளரத்தின் வழியே பார்த்ததை அவர் வெளிப்படுத்தவே இல்லை. எப்படியென்றால் சன்னலை திறந்தேன் இதுபோபோன்ற ஒரு கொடுமையைக் காணக்கூடாது என்றுதான் கூறியிருக்காரே தவிர வீட்டுக்காரர் திருமணம் ஆகாதவர் அவருடைய தங்கை விதவை அதனால் தன் தங்கை என்ற உறவை பார்க்காமல் ஒரு பெண் என்று நினைத்து தனிமையில் அப்படி நடந்திருக்கிறார் என்று கூறப்படவில்லை. அதனுடன் அண்ணன் தங்கையிடம் இப்படி நடந்து கொள்ளலாமா என்றும் குறிப்பிடவில்லை. அவர் செயல் மிருகத்திற்கு சமமானது. மிருகத்திற்குதான் அம்மா, தங்கை, மகள் என்ற வித்தியாசம் தெரியாது. அது போல் மனிதர்களும் இருக்கிறார்கள் என்பதை கதைத் தலைப்பின் மூலம் அழகாக வெளிக் காட்டியுள்ளார்.

கதை உணர்த்தும் செய்தி

சாளரத்தின் வழியே கண்ட காட்சியை வைத்து கதை எழுதுகிறார். வேறு சாளரத்தின் வழியே கண்ட காட்சி மூலம் கதைத் தலைப்பை தேர்ந்தெடுக்கிறார். கதை ஆசிரியரின் கேள்விக்கும், பதிலுக்கும் சாளரமே விடைகொடுத்தது. ‘‘மிருகம்” என்று அவர் எழுதிய கதைக்கு தலைப்பு வைத்திருப்பதன் மூலம் மனிதன் மிருகமாக மாறி தவறான செயல் புரிந்திருப்பதை வெளிக்காட்டியிருக்கிறார். ஏன் கதையில் பெயர் வைக்காமல் இருந்திருக்கிறார் என்றால் தன் வீட்டுக்காரரை காட்டிக்கொடுக்கக் கூடாது மற்றும் அப்பெண்ணை இழிவுபடுத்தக் கூடாது என்ற எண்ணத்தில் பெயரைக் குறிப்பிடவில்லை.

அண்ணன், தங்கையைப் பற்றி நேரில் கண்டகாட்சியாக இருந்தாலுமே இதை எழுதலாமா? அதனால் பிரச்சினைகள் வருமா என்று அச்சப்படாமல் சமூகத்திற்கு தைரியமாக பெண்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறார். அதுவும் விதவைப் பெண்ணைப்பற்றி தவறாக கூறாமல் ஒரு ஆணை மட்டுமே குறை சொல்லி இருக்கிறார் என்பதன் மூலம் அவரின் நாகரீகம் வெளிப்படுகிறது.


முனைவர் மு.பத்மா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயகாந்தனின் சாளரம் காட்டும் நாகரீகம்”

அதிகம் படித்தது