ஜெயகாந்தன் கண்ட வள்ளலார்.
முனைவர் மு.பழனியப்பன்Jan 18, 2020
வடலூர் கடலூருக்கு அருகில்தான் இருக்கிறது. வடலூர் வள்ளல் பெருமானின் உயிர் இரக்கம் ஜெயகாந்தனுக்குள்ளும் இறங்கி அவரையும் இணக்கமாக்கியிருக்கிறது. அதே நேரத்தில் வள்ளல் பெருமானின் உயிர் இரக்கத்திற்கும், அதன் முரணான வன்முறைக்கும் இடையேயான மோதலை உள்வாங்கி எழுதப்பெற்ற நாவல் ஆயுத பூஜை.
மிக மென்மையாக அதே நேரத்தில் வன்மை மறைமுகமாக இந்நாவலில் சொல்லப்படுகிறது. அரசாங்கக் காவலர் பணியைக் கருணையினால் பெற்ற ஒருவர் அதனைத் துறந்து கருணை இல்லம் நடத்தும் பாங்கே இங்குக் கதையாக விளங்குகிறது.
அவருக்கு உடன்பிறந்தவர்கள் பலர். அப்பா ஒரு கலவரத்தில் இறந்து விடுகிறார். அவரைத் தொடர்ந்து அம்மாவும் இறந்துவிட குடும்பப் பொறுப்பு முழுவதும் இவரின் தலையில் விழுகிறது. இவர் தன் தம்பிகள், தங்கைகள் ஆகியோரைக் காப்பாற்ற முயற்சிகள் மேற்கொள்கிறார். வத்தல் வடாகம், வீட்டு வேலைகள் ஆகியன செய்து குடும்பம் ஓடுகிறது. காவல்துறை அளித்த வீட்டை விட்டு இவர் தனியாக ஒருபகுதியில் குடியேறி வாழ்கிறார்.
ஆதரவற்ற குழந்தைகள், மற்றும் அனாதைகள் ஆகியோரை வளர்க்கும் வள்ளலார் இல்லத்தைத் தொடங்கி நடத்துகிறார். இருபத்தைந்து ஆண்டுகளாக இவ்வியக்கம் சிறப்புடன் செயல்படுகிறது.
இந்நிலையில் வள்ளலார் பற்றிய செய்திகள், அவரின் சமுதாயக் கடமை போன்றன இந்நாவில் எடுத்துரைக்கப் பெறுகின்றன.
“எனக்கு வன்முறை ஆயுதங்கள் மீது நம்பிக்கையும் இல்லை. மரியாதையும் இல்லை. அவை சிறிய ஆயுதங்களாயினும் சரி, உலகையே தகர்க்கும் நவீன அணு ஆயுதங்களாயினும் சரி, அவற்றால் மனிதனைத் திருத்தவோ வெல்லவோ முடியாது. அந்த யுகம் மறைந்து போயிற்று”(ப.4) என்று ஜெயகாந்தன் முன்னுரையில் குறிப்பதைப் போல ஆயுத பூஜை என்பது உயிர் வளர்க்கும் ஆயதங்களுக்கு மட்டுமே கொண்டாடப்படும் விழாவாக இருப்பதையே ஜெயகாந்தன் விரும்புகிறார்.
“துப்பாக்கிகளும், அணு நியூட்ரான் ஆயுதங்களும் எதிர் காலத்தில் பூசைக்குரிய துர்தேவதைகளின் சின்னங்களாகத்தான் கருதப்படும் என்பதே இக்கதையின் விரிவான நோக்கம்” என்று ஜெயகாந்தன் குறிப்பிடுவது வன்முறை அற்ற உலகம் வேண்டும் என்ற அவாவினால்தான்.
வள்ளலார் அன்பான, அருளான வாழ்க்கையின் அடையாளமாகத் திகழ்கிறார். வள்ளலார் போலவே இக்கதையின் நாயகனும் வாழ்கிறான்.
“எனது போலீஸ்கார உத்தியோகத்துக்கு இருபதாவது வயதில் ஒரு பெரிய கும்பிடு போட்டுவிட்டு; நான் நாலு முழ வேட்டியும், மேலே ஒரு துண்டும் அணிந்து கொண்டேன். பிரம்மச்சரியம் மேற்கொண்டேன். எனது இந்தச் சின்னஞ்சிறு குடில் வள்ளலார் இல்லம் ஆயிற்று. அப்போது எனக்குப் பல உதவிகள் செய்த தோழர் பொன்னுச்சாமி எங்கள் இல்லத்தின் உற்ற நண்பராகவே ஆனார். (இந்தப் பொன்னுச்சாமிதான் இவரின் தந்தையைக் கலவரத்தின்போது கொன்றவர்)
ஆனால் நானோ கைகளை வீச நடப்பதற்கு நாணினேன். என் கைகளைக் கட்டிக்கொண்டு நடந்தேன். என் உடம்பை வெளியில் காட்டப் பயந்து வெண் துகிலால் முழுக்கவும் மூடிக் கொண்டேன். வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன். பசியால் இளைத்து வீடுதோறும் இரந்தும் பசி தீராத ஏழைகளைக் கண்டு உளம் பதைத்தேன். நோயிலும் துன்பத்திலும் வருந்துகின்றவர்களைக் கண்டு துடித்தேன். பேய்மனம் கொண்டு பிறவுயிர்களைக் கொல்கிறவர்களைக் கண்டு நடுங்கினேன். வலைகளையும் தூண்டில்களையும் கண்ணிகளையும், ஈட்டி, துப்பாக்கிகளையும் ;பார்த்த போதெல்லாம் நான் நடுங்கி நடுங்கி நின்றேன்” (ப. 20) என்று இக்கதையின் நாயகன் வள்ளார் தொண்டனாகவே மாறுகிறான்.
முன்பு காவல் பணியில் இருந்தவனின் உள்ளத்தில் கருணை பிறந்து வள்ளலாரின் அடிபணியும் தன்மை மேலோங்குகிறது.
வள்ளலாராக வாழும் இவரின் செயல் மட்டுமல்லாமல் இக்கதையில் பல இடங்களில் பல திருவருட்பாக்கள் இணைக்கப்பெற்றுள்ளன.
அப்பா என்றே வள்ளலார் இல்லக் குழந்தைகள் அவரை அழைக்கின்றன. திருவருட்பாவில் இடம்பெறும் பாடலான,
“அப்பா நான் வேண்டுவது கேட்டு அருள் புரியவேண்டும், ஆருயிர்க்கெல்லாம் நான் அன்பு செயல் வேண்டும்”(ப. 23) என்ற பாடலில் இடம் பெறும் அப்பா என்ற சொல் அருட்பெருஞ்சோதி ஆண்டவரைக் குறிப்பது: என்றாலும் இங்கே இவரைக் குறிப்பதாகப் பிள்ளைகள் எண்ணிப் பாடுவர்.
அருட்பிரகாச வள்ளலாரின் வேண்டுதல் இந்நாவலில் அப்படியே தரப்பெற்றுள்ளது. “எல்லாமுடைய அருட்பெருஞ்சோதி அற்புதக் கடவுளே! இது தொடங்கி எக்காலத்துக்கும் சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய தடைகளாகிய சமயங்கள் மதங்கள், மார்க்கங்கள், என்பவனவற்றின் ஆசார சங்கற்ப விகற்பங்களும், வருணம், ஆசிரமம் முதலிய உலகாசார சங்கற்ப விகற்பங்களும் எங்கள் மனத்தில் பற்றாவண்ணம் அருள் செய்தல் வேண்டும். சுத்த சன்மார்க்கத்தின் முக்கிய லட்சியமாகிய ஆன்ம நேய ஒருமைப்பாட்டு உரிமை எங்களுக்குள் எக்காலத்தும், எவ்விடத்தும், எள்ளளவும், விலகாமல் நிறைந்து விளங்க செய்வித்தருள வேண்டும். எல்லாமாகிய தனிப் பெருந்தலைமை அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரே தேவரீர் திருவருட் பெருங்கருணைக்கு வந்தனம் வந்தனம்” என்று வள்ளலார் இல்லத்தில் வேண்டுகோள் வைக்கப்படுகிறது. ( ப. 30)
அங்குத் தங்கியுள்ள பிள்ளைகள் அனைவரும் திருவருட்பா பாடுவதில் வல்லவர்கள். சுடர் வண்ணன் ‘நான் கொண்ட விரதம்’ என்றும் பாடலைப் பாடுகிறான். அம்வலவாணன் ‘நீருண்டு பொழிகின்ற காருண்டு’ என்ற பாடலைப் பாடுகிறான். ‘தாயிலார் என்று நெங்சகம் தளர்ந்தேன்’ என்று அப்பாவாகிய வள்ளலார் இல்லத்தின் தலைவர் பாடுகிறார். மற்றொரு சமயத்தில் ‘கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்’ என்ற பாடலை இவர் பாட வளர்ந்த அவ்வில்லப்பிள்ளைகள் அப்பாடலுக்கு அடுத்த பகுதிகளைப் பாடுகின்றனர். மேடையில் வீசுகின்ற மெல்லியப் பூங்காற்றே” (ப.49) என்றவாறு பல இடங்களில் திருவருட்பா பாடப்படுகிறது.
வள்ளலாரின் சொல், செயல், அன்பு, கருணை எல்லாமும் நிறைந்த ஒரு இல்லமாக அவ்வில்லம் விளங்கிவருகிறது. அவ்வில்லத்தில் கொண்டாடப்படும் திருவிழாக்கள் இரண்டு. ஒன்று தைப்பூசம், மற்றொன்று ஆயுத பூசை. ஒரு ஆயுத பூசையின் போது சுத்தியல் அரிவாள் ஆகியன ஒரு சின்னத்தின் அடிப்படையில் வைக்கப்பெற்றிருந்தன.
இதனைக் கண்ட அவ்வூர் காவல் அதிகாரி இவ்வில்லத்தைத் தீவிரமாக கண்காணிக்க வேண்டினார். அப்பாவும் விசாரித்துப் பார்த்ததில் அவரின் வளர்ப்புப் பிள்ளைகள் மற்றொருவர் வழி புரட்சி, கருத்துகளுக்கு ஈடாவதைக் கண்டு கொள்கிறார்.
அவர்கள் இல்லத்திலிருந்து விலகி வன்முறை செயல்பாடுகளில் திரிவதாக ஊர் முழுவதும் செய்தி. இந்நிலையில் அப்பா பெரிதும் வருத்தப்படுகிறார்.
ஜோதி இறந்துபடுகிறான். சுடர்வண்ணன் மனம் திருந்தி வருகிறான். இருந்தாலும் அன்று வள்ளலார் இல்லத்திற்குக் காவல் அதிகாரி வருவதால் அவன் தன் உயிரை தன் துப்பாக்கி கொண்டு இயக்கி மடிகிறான்.
நல்லார்க்கும் பொல்லார்க்கும் நடு நின்ற நாயகமாய் அப்பா நிற்கிறார் என்று கதை முடிகிறது.
இவ்வளவில் தன் வாழ்வில் கண்ட வள்ளலார் இறை அனுபவத்தை மிகச் சிறப்புடன் தன் கதையில படைத்துக் காட்டியுள்ளார் ஜெயகாந்தன்.
முனைவர் மு.பழனியப்பன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஜெயகாந்தன் கண்ட வள்ளலார்.”