மார்ச் 28, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தகர்க்கப்படும் தமிழக மாணவர்களின் மருத்துவ இலக்குகள்

சுசிலா

Jul 15, 2017

Siragu-state-govt3மத்திய பா.ச.க அரசின் இந்த நீட் தேர்வின் மூலம், தமிழக மாணவர்களின் மருத்துவக்கனவு, இலக்குகள் தகர்க்கப்பட்டிருக்கிறது என்பது நிதர்சனமான உண்மை. நாட்டிலேயே அதிக மருத்துவக்கல்லூரிகளைப் பெற்றிருப்பதும், அதிக திறமையான மருத்துவ மாணவர்களைக் கொடுப்பதும் நம் மாநிலமே. அப்படி இருக்கையில், 2017 ஆம் ஆண்டான இவ்வாண்டு கடைசி இடத்திற்கு சென்றிருக்கிறது என்றால், அதற்குக் காரணம் நீட் தேர்வு தான்.!

பொதுத்தேர்வு தேவையில்லாத ஒன்று என்பது தான் நம் நிலைப்பாடு. இதன் மூலம் கிராமப்புற, ஏழை மாணவர்கள் பாதிப்படைவார்கள், மேலும் சமூகநீதிக்கு எதிரான, அதாவது இடஒதுக்கீட்டிற்கு எதிரான ஒரு செயல் தான் இந்த பொதுத்தேர்வு என்ற நீட் தேர்வு. பொதுத்தேர்வு என்ற போர்வையில், கேள்வித்தாள்கள் மாநிலத்திற்கு மாநிலம், குறிப்பாக பிராந்திய மொழி கேள்வித்தாள்கள் மாறுப்பட்டிருந்தன. கடினமான கேள்விகள் கேட்கப் பட்டிருந்தன. மறுத்தேர்வு வேண்டும் என்று கேட்டிருந்தும், அது உயர்நீதிமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை மேலும் மாநில அரசு கொண்டுவந்த, மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு 85 விழுக்காடு இடமும் கொடுக்கப்படக் கூடாது என தீர்ப்பு வழங்கி இருக்கிறது சென்னை உயர்நீதிமன்றம்.!

Siragu neet exam1

நம் கண் முன்னே நடக்கும், இந்தக் கொடுமையை என்னவென்று சொல்வது. நம் பிள்ளைகள் மருத்துவம் படிப்பது என்பது, இனிமேல் வெறும் கனவாக போய்விடுமோ என்ற அச்சத்தில் பல பெற்றோர்கள் இருக்கின்றனர். ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி பாடத்திட்டங்கள் இருக்கும்போது, தேர்வு மட்டும் ஒரே பொதுத்தேர்வு என்பது எப்படி நியாயமாகும்… சாத்தியமாகும்.? அந்த பொதுத்தேர்விலும் பாரபட்சமாக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. எழுத சென்ற நம் மாணவர்களையும் பல்வேறு மனஉளைச்சலுக்கு ஆளாக்கினர். பாடத்திட்டத்தை மாற்றுகிறோம் என்று தமிழக அரசு சொல்கிறது. தற்போதுள்ள சமச்சீர் பாடத்திட்டம் நன்றாக தானே உள்ளது. அப்படி உயர்த்த வேண்டுமென்றால் உயர்த்தலாம். அதற்காக பொதுத்தேர்வு வேண்டாம். பன்னிரெண்டாம் வகுப்பு மதிப்பெண்கள் தாராளமாக போதுமே. அப்படித் தான், தமிழகத்தில் உள்ள சி.பி.எஸ்.இ மாணவர்கள் முதலிடத்தில் வந்தார்களா என்றால், அதுவும் இல்லை. 25 இடத்தில் ஒரு இடத்தைக்கூட பெற முடியவில்லை என்பதுதான் உண்மை. இவர்களின் நோக்கம் என்பது எப்படியாவது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்தை அனைவரும் படிக்க வேண்டும், அதன் மூலம் இந்தி, சமற்கிருதத்திணிப்பைக் கொண்டு வந்துவிடலாம் என்ற நினைப்பில் செய்யும் ஒரு சதித்திட்டம் தான் இந்தத் தேர்வு.

அடுத்து பார்ப்போமானால், இடஒதுக்கீடை அழிப்பதற்கான ஒரு ஏற்பாடு, பிற்படுத்தப்பட்டவர்களுக்கு 27 விழுக்காடு மற்றும் தாழ்த்தப்பட்ட, மலைவாழ் மக்களை 22.5 விழுக்காடு என்று மட்டுமே சொல்லியிருக்கிறார்கள்.மொத்தம் 49.5 விழுக்காடு என்பது தான் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மீதமுள்ள 50.5 விழுக்காடு திறந்த போட்டி என்ற அறிவிப்பு முறையில் இலலாமல், இதர பிரிவினர் என்று சொல்லிக்கொண்டு, உயர்சாதி என்று சொல்லிக்கொள்ளும் கூட்டமே கபளீகரம் செய்ய துடித்துக்கொண்டிருக்கிறது.

Siragu neet exam2

நீட் தேர்வு விலக்கு என்ற தமிழக அரசு சட்டமியற்றியும் கூட அதை குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி, வேண்டுமென்றே நீட் என்ற இந்த நுழைவுத்தேர்வை நம் மேல் திணித்துள்ளது மத்திய மோடி அரசு. கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்தை முடக்கக்கூடிய ஒரு செயலாகத்தான் இந்த செயல் பார்க்கப்படுகிறது. தற்போதுள்ள தமிழக அரசு, மத்திய அரசின் அனைத்து செயல்களுக்கும் ஒத்து ஊதப்படுவதனால், மத்திய அரசின் எதேச்சதிகாரப்போக்கு அத்துமீறி போய்க்கொண்டிருக்கிறது. மக்கள் புரட்சி ஒன்றுதான் இவைகளை முறியடிக்கும் ஆற்றல் வாய்ந்தவை.!

மக்களே… சிந்தியுங்கள்… ஒன்றுபடுங்கள்….
சமூகநீதியை பாதுகாப்போம்… கல்வி என்பது நம் உரிமை.!
நீட் தேர்வை ஒழிக்கும்வரை போராடுவோம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தகர்க்கப்படும் தமிழக மாணவர்களின் மருத்துவ இலக்குகள்”

அதிகம் படித்தது