நவம்பர் 21, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தந்தை பெரியார் பார்வையில் கற்பு !!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Mar 16, 2019

siragu karpu2
கற்பெனப்படுவது யாது எனின் அது சொற்றிறம்பாமை !! அதவாது சொல் தவறாமை. இன்னும் விளக்கி சொல்ல வேண்டும் என்றால் நாணயம், சத்தியம், ஒப்பந்தத்திற்கு விரோதமில்லாமல் இருப்பது என்ற கருத்துகள் கொண்டதாக இருக்கின்றது என்கிறார் பெரியார். கற்பு என்பதை பகுபதமாக்கி பார்க்கின்றபோது கல் -கற்பு என்கின்ற இலக்கணம் சொல்லப்பட்டு வருகின்றது. இந்த இடத்தில் அந்த சொல்லை பகாப்பதமாக (பிரித்தால் பொருள் தராதது) மகளிர் நிறை என்று காணப்படுகின்றது. இந்த இடத்தில் மகளிர் என்பது பெண்களையே குறிக்கும் பதமாக எப்படி ஏற்பட்டது என்று விளங்கவில்லை என்கிறார். கற்பு என்பதற்கு அழிவில்லாதது, உறுதியுடையது என்கின்ற பொருள்கள் உண்டு. அழிவில்லாதது என்கின்ற சொல்லுக்கு, உண்மையான கருத்துப் பார்க்கும்போது, சுத்தமான அதாவது கெடாதது, மாசற்றது என்பதாகத்தான் கொள்ளலாம். இந்த சுத்தம் என்ற சொல்லும் ஆங்கிலத்தில் கெடாதது என்கின்ற கருத்தில்தான் காணப்படுகின்றது. அதாவது chastity என்கிற ஆங்கில சொல்லுக்கு virginity என்பதே பொருள். அதை அந்தப் பொருளின்படி பார்த்தால் இது ஆணுக்கென்றோ அல்லது பெண்ணுக்கென்றோ சொல்லாமல் பொதுவாக மனித சமூகத்திற்கே – எவ்வித ஆண், பெண் புணர்ச்சி சம்மந்தமே சிறிதும் இல்லாத பரிசுத்த தன்மைக்கே உபயோகப்படுத்தி இருப்பதை காணலாம். ஆகவே கற்பு என்பது பெண்களுக்கு மாத்திரமானது அல்ல, குறிப்பாக ஆணோ, பெண்ணோ ஒரு தடவை கலந்த பின்பு எவ்வளவு சுத்தமாக இருந்தாலும் கற்பு போய்விடுகிறது என்கின்ற கருத்தை கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.siragu karpu4

ஆக தந்தை பெரியாரின் கருத்துப்படி தமிழிலும் சரி ஆங்கிலத்திலும் சரி கற்பு என்பது இருபாலாருக்கும் பொதுவான ஒரு சொல்லாகத்தான் இருக்கின்றது என்கிறார். ஆனால் ஆரிய பாஷையில் மட்டும் கற்பு என்பதற்கு அடிமை என்ற கருத்து நுழைக்கப்படுவதாக பெரியார் கருதுகின்றார். அதாவது பதியை கடவுளாகக் கொண்டவள், பதிக்கு அடிமையாய் இருப்பதையே விரதமாகக் கொண்டவள், பதியை தவிர வேறு யாரையும் கருதாதவள் என்று பொருள் வருவதுடன், பதி என்றாலே அதிகாரி, எஜமான், தலைவன் என்கின்ற பொருள் இருப்பதால் அடிமைத்தன்மையை இச்சொல் புலப்படுத்துகின்றது என்பது பெரியாரின் முடிபு. இலக்கியங்களில் தலைவன் -தலைவி என்றும், புராணங்களில் நாயகன்- நாயகி என்றும் சமத்துவப் பொருளில் கூறிவிட்டு, கற்பு எனும் நிலைக்கு வரும்போது அது பெண்களுக்கு மாத்திரம் தொடர்புபடுத்தி கூறும் நிலை உள்ளது என்கிறார்.

தந்தை பெரியார் சொன்ன கருத்து இன்றும் உண்மையாக உள்ளது. அண்மையில் தமிழ்நாட்டையே உலுக்கியுள்ள பொள்ளாச்சி பாலியல் வன்புணர்வு குறித்து பாதிக்கப்பட்ட பெண்களையே குறிவைத்து இந்த பொதுச் சமூகம் தங்கள் அறிவுரையை வழங்கி வருகின்றது. காரணம் கற்பு என்பது பெண்ணுக்கு மட்டுமே உரியது, அனுமதி இன்றி அவளை வன்புணர்வு செய்தபோதும் பெண் மட்டுமே கற்பு இழந்தவள். குற்றம் செய்த ஆண் தண்டனைக்கு உட்பட்டவனாக இருக்கலாம், ஆனால் அவனை குற்றம் செய்யத் தூண்டியது பெண் தான். அவள் தான் அவனை காதலன் என நம்பிச் சென்றாள். சென்ற இடத்தில் தன் தோழர்களுடன் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்தாலும் பெண் தான் குற்றத்தை தூண்டியவள் என அரிய வகை தீர்ப்புகள் இந்தியச் சமூகத்தில் மட்டும் தான் வழங்கப்படும். பெண்ணுக்கு அநீதி இழைக்கப்படும் கொடுமையை விட, அந்த அநீதிக்கு பெண்ணே காரணம் என்று சொல்லப்படும் வாதம் இருக்கிறதே அது தான் மிகக்கொடுமையானது.

siragu pengalukku1

பொள்ளாச்சியில் பெண் எடுக்க பதற்றம், என்று சமூக வலைதளத்தில் செய்தி பதியப்பட்டு அதற்கு நூற்றுக்கணக்கான நபர்கள் சிரித்து வைத்திருக்கின்றனர் என்று எண்ணும் போது பெண்ணை பண்டமாக பார்க்கும் பார்வையே அவள் மீது வன்முறை நிகழ்த்தப்படும்போது அந்தப் பண்டம் கெட்டுவிட்டதாகவும், இனி அதனை பயன்படுத்த முடியாது என்ற அறிவற்ற வக்கிரமான பார்வையை சொல்கின்றது. இந்த வன்முறையைச் செய்த ஆண் கெட்டுப்போவதில்லையா? குற்றம் செய்த ஆணைப் பெற்ற தாயும் கூட ஒரு பெண்ணாக யோசிக்காமல் பேசுவதெல்லாம் எந்த வகையில் நியாயம்?

பெண் உடல், வெளி தெரிந்தால் அங்கு அவள் கற்பு போய் விடுவதாகத்தான் இன்றும் இந்தச் சமூகம் கதைத்து வருகின்றது. அந்தக் கருத்தில் இருந்துதான் இந்த நையாண்டி தொடங்குகின்றது. முதலில் பெண் உடலில் எந்த புனிதமும் இல்லை, கற்பும் இல்லை என்பதோடு பெண் உடல் அவமானமும் அல்ல. அதை வைத்துக் கொண்டு மிரட்டினால் அடிபணிய வேண்டிய தேவையும் இல்லை என்பதை பெண்கள் உணர வேண்டும்.

தந்தை பெரியார் சொல்வது போல பெண்களை அடிமையாக நடத்தும் பாங்கு, அவளுக்கு மட்டுமே கற்பு உள்ளதாக பேசும் பாங்கு என்பது சட்டத்தாலும், மதத்தாலும் மட்டும் ஏற்பட்டதென்று சொல்வதற்கில்லாமல் பெண் சமூகமும் ஒப்புக்கொண்டு இந்நிலைக்கு உதவி புரிந்து வருவதாலும் இது உரம் பெற்று வருகிறதென்றே சொல்ல வேண்டும்.

அதற்கு அருமையான ஒப்புமை கொடுத்து இந்த நிலையை விளக்குகின்றார் பெரியார். அநேக வருடங்களாக பழக்கங்களால் தாழ்த்தப்பட்ட சாதியார் எனப்படுவோர் எப்படித் தாங்கள் தாழ்ந்த வகுப்பார் என்பதையும் ஒப்புக்கொண்டு, தாமாகவே கீழ்ப்படியவும், ஒடுங்கவும், விளங்கவும், முந்துகின்றார்களோ அது போலவே பெண் மக்களும் தாங்கள் ஆண் மக்களின் சொத்துகளென்றும், ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்களென்றும் அவர்களது கோபத்திற்கு ஆளாகக் கூடாதவர்கள் என்றும் நினைத்துக் கொண்டு, சுதந்திரத்தில் கவலையற்று இருக்கின்றார்கள். உண்மையாக பெண்கள் விடுதலை வேண்டுமானால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்புமுறை ஒழிந்து, இரு பிறப்பிற்கும் சமமான சுயேச்சைக் கற்பு முறை ஏற்படவேண்டும் என்கிறார்.

siragu karpu1

விபச்சாரித்தனம் என்பதை எவ்வளவோ கண்டிக்கிறோம். ஆனால் ஆண் விபச்சாரத்தைப் பற்றி பேசுவோரே கிடையாது. அப்படி இருந்தாலும் அதற்கு பல குறைவு (Weakness) என்று சொல்லி விடுகிறோம். பெண் விபச்சாரத்தை நாணயக் குறைவு, ஒழுக்கக் குறைவு, கெட்ட குணம், இகழத்தக்கது, கண்டிக்கத்தக்கது, வெறுக்கத்தக்கது என்றெல்லாம் சொல்கிறோம். ஆணும், பெண்ணும் சேர்ந்தால் தான் விபச்சாரமே தவிர பெண்ணும், பெண்ணும் சேர்ந்து விபச்சாரம் செய்து விட முடியாது.

(பெரியார், குடி அரசு – 16.06.1935) இந்தக் கருத்தை தந்தை பெரியார் 1935 இல் கூறியிருக்கிறார். அதாவது மேற்கத்திய நாடுகளில் ஆண் பெண் சமன்மை குறித்து பேசுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன் கூறி இருக்கின்றார். இதே கருத்தை தான் பாலியல் வன்புணர்வு குற்றங்களுக்கும் பொருத்தி பார்க்க வேண்டி உள்ளது. பாலியல் குற்றங்களில் ஆண் செய்யும் குற்றம் வெகு சுலபமாக கடந்து விடுவதாக இந்தச் சமூகம் பார்க்கின்றது. தன் தவறே இல்லை என்றாலும் பெண் மட்டுமே இங்கு வசைப் பாடப்படுகிறாள்.

இந்தக் கற்பை வலியுறுத்தும் நம்முடைய இலக்கியங்கள் மக்கள் நடுவில் உலா வருகின்ற காரணத்தினால் தான் திருக்குறளில் உள்ள பெண்ணடிமை கருத்துக்களை பெரியார் சாடினார். சிலப்பதிகாரத்தில் கண்ணகி எனும் பாத்திரம் கற்பு என்ற காரணத்திற்காக தன்னைவிட்டு சென்றபோதும், மீண்டும் வரும் கணவனை ஏற்றுக்கொண்டு தவறான முன்னுதாரணமாக திகழ்கின்ற காரணத்தினால் எதிர்த்தார். ஏனெனில் இலக்கியங்கள் மக்களை செழுமைப்படுத்த பயன்படவேண்டும், அடுத்த நிலைக்கு மக்கள் முன்னேற்றம் அடைய உதவி புரிய வேண்டுமே தவிர்த்து கற்காலத்திற்கு, மீண்டும் பெண்ணடிமை தன்மைக்கு நம்மை அழைத்துச் செல்வதாக இருக்க கூடாது.

பெரியாரின் கற்பு குறித்த கட்டுரைகளை மேலும் படித்தல் மட்டுமே 90 ஆண்டுகளுக்கு முன் ஒருவர் இவ்வளவு சுதந்திர சிந்தனையோடு சிந்தித்திருக்கிறார், ஆனால் 21 ஆம் நூற்றாண்டில் நாம் எவ்வளவு பிற்போக்கு சிந்தனையை பின்பற்றிக்கொண்டு வருகிறோம் என்பது விளங்கும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தந்தை பெரியார் பார்வையில் கற்பு !!”

அதிகம் படித்தது