தனியார் பள்ளிகள் தமிழரைப் படுத்தும் பாடு
ஆச்சாரிJun 14, 2014
பல நாட்களாய் பல இடங்களில் திருடி பிழைப்பு நடத்திய மாபெரும் திருடன் ஒருவன் ஒரு முறை காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டானாம். அவனை நீதிமன்றத்தில் நிறுத்திய போது பழிக்கப்பட்ட வழக்கறிஞர் அந்தத் திருடனிடம் இப்படிக் கேட்டார் “என்னையா திடீர்னு பள்ளிக்கூடம் கட்டி நடத்த ஆரம்பிச்சுட்ட திருட்டுத் தொழிலை விட்டுட்டு திருந்திட்டியா”என்றதும் அதற்கு அந்தத் திருடன் கூறினான்“இல்ல சார் கொஞ்சம் கொஞ்சமா திருடுனா நான் என்னைக்கு பணக்காரனாகுறதுன்னு நெனச்சுத்தான் நானே பள்ளிக்கூடம் கட்டி நடத்துறேன். இப்போ லட்சம் லட்சமா கொள்ளையடிச்சு சொகுசா வாழ்றேன் சார்” என்றான் பெருமிதமாக.
இந்தக் கதைதான் தமிழகத்தில் பெருமளவில் நடக்கிறது. படிக்காதவன் எல்லாம் பள்ளிக்கூடம் நடத்துகிறான் படித்தவன் எல்லாம் அவனிடம் வேலை பார்க்கிறான். இதுதான் தமிழ்நாட்டில் படித்தவனின் நிலை. இப்படிப்பட்ட பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் நிலை இதை விட மோசமாக உள்ளது. இன்னும் நடக்கும் தனியார் பள்ளிகளுக்கு நீதிபதி ரவிராஜ பாண்டியன் தலைமையிலான “தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக் குழு”அறிவித்துள்ள புதிய கட்டணங்கள் பெரும்பாலான பெற்றோருக்கு ஏற்புடையதாக அமைந்திருக்கவில்லை. இதில் இருக்கப்பட்டவனுக்கே நல்ல கல்வி கிடைக்கிறது. இல்லாதவன் பிள்ளைகள் எல்லாம் ஏதோ வந்ததை படித்துக்கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்னும் சொல்லப்போனால் இந்த உலகமே இருக்கப்பட்டவனுக்குத் தகுந்தாற்போல் மாறிக்கொண்டுதான் வருகிறது.
தனியார் பள்ளிகளில் இவ்வளவு தான் கட்டணம் வாங்க வேண்டும் என்ற வரைமுறையை தமிழ்நாடு அரசு நிர்ணயித்தும் பல தனியார் பள்ளிகள் நன்கொடை என்ற பெயரில் ஆயிரத்திலிருந்து லட்சம் வரை வசூலிக்கின்றனர். எனக்குத் தெரிந்து ஒருவர் தன் 3 ½வயது குழந்தையை தனியார் பள்ளியில் சேர்க்க நன்கொடையாக 95 ஆயிரம் ரூபாய் செலுத்தியிருக்கிறார் என்றால் இது பகல் கொள்ளையே அன்றி வேறென்ன சொல்ல.
தற்போது சென்னையில் உள்ள சில குறிப்பிட்ட பெரிய பள்ளிகளில் இப்போது அறிவிக்கப்பட்டுள்ள கட்டணமானது,ஏற்கனவே நீதிபதி கோவிந்தராஜன் தலைமையிலான குழு அறிவித்த கட்டணத்தைக் காட்டிலும் ரூபாய் எழுபதாயிரம் அதிகமாக இருப்பதாகச் செய்திகள் வெளியாகின்றன. சென்னையில் பிரபலமான நான்கெழுத்து மெட்ரிக் பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கு கோவிந்தராசன் கமிட்டியால் பரிந்துரைக்கப்பட்ட 11000 ரூபாய்க்கு இப்போது ரூ25000 வசூலிக்கப்படுகிறது.
இதில் ஒவ்வொரு தனியார் பள்ளிகளும் தங்கள் பள்ளியின் வசதிக்குத் தகுந்தாற்போல் பணத்தை வசூல் செய்கின்றன. இதில் சிறப்புக் கட்டணமாக பாடத்தைத் தவிர்த்து எங்கள் பள்ளியில் இசை, நீச்சல், ஓவியம், கராத்தே, தியானம், சிலம்பம், நடனம் போன்ற திறன் வளர்க்கும் வகுப்புகள் நடத்தப்படுகிறது. அதற்கும் சேர்த்தே தொகையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
கல்வி என்பது நிலத்தடி நீர் போல அனைவருக்கும் பொதுப்படையானது. அதுபோலத்தான் கல்வியும் என்பதை மனதில் கொண்டே படிக்காத மேதை காமராசர் அனைவருக்கும் இலவசக்கல்வியை கொண்டு வந்தார். ஆனால் இதையே ஒரு சாக்காக எடுத்துக் கொண்ட பணப்பறிப்பு கும்பலானது, தனியார் பள்ளிகள் என்ற பெயரில் பணம் பறிக்கிறது. இதில் ஒரு வேடிக்கை என்னவென்றால் அனைவரும் நல்ல தரமான வசதிகள் கொண்ட தனியார் பள்ளியில் மட்டுமே தம் பிள்ளைகள் படிக்க வேண்டும். ஆனால் அவர்கள் படித்து முடித்ததும் இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என எண்ணி செயல்படுகின்றனர். அரசுப் பள்ளியில் படித்தவருக்கு மட்டுமே அரசுப் பணி என அரசு அறிவித்தால் இந்த தனியார் மோகம் கொஞ்சம் குறைந்து அனைவரும் சமமென்ற நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.
இந்த நேரத்தில் நான் எனது அனுபவத்தை உங்களோடு பகிர்ந்து கொள்ள பிரியப்படுகிறேன். காரணம் இன்றைய தனியார் பள்ளிகளின் லட்சணத்தை எனது இந்த அனுபவமே தோலுரித்துக் காட்டும் என நம்புகிறேன்.
பி.ஏ,பி.எட் படித்த தமிழாசிரியன் நான். கொடைக்கானலில் அப்சர் வேட்டரி என்ற இடத்திற்கு அருகே அமைந்திருக்கிறது அந்த பிரம்மாண்டமான தனியார் பள்ளி. பள்ளிக் கட்டணத்தை எப்படி வசூலிக்க வேண்டும் என்ற வித்தையை இங்குதான் கற்றுக்கொள்ள வேண்டும். கூலித் தொழிலாளி முதல் கோடீசுவரர் பிள்ளைகள் வரை படிக்கின்ற பள்ளி இது. ஒரு முக்கியமான தேர்வின் போது பள்ளிக்கட்டணம் கட்டாத மாணவர்கள் அனைவரையும் அலுவலகத்திற்கு அழைத்து அவரவர் பெற்றோர்களுக்கு மீதிக் கட்டணத்தைக் கட்டச் சொல்லி தொலைபேசியில் பேச விடுவார்கள். அதில் பேசும் குழந்தைகளின் மனநிலை மோசமாக இருக்கக் கண்டிருக்கிறேன். எடுத்துக்காட்டாக ஒரு குழந்தை பேசியது “அப்பா… (அழுதுகொண்டே) பரீட்சைக்கு இன்னும் கால் மணிநேரம்தான் இருக்குப்பா,பீசு கட்டலண்ணு என்ன பரீட்சை எழுதவிட மாட்டேன்றாங்க,வந்து பீசு கட்டுப்பா நான் பரீட்சை எழுதணும்,இல்லனா நான் பெயிலாகிடுவேம்பா”என பிள்ளைகள் கதறும்போது இந்த அலுவலகத்தில் இருப்பவர்கள் பேசிய குழந்தையிடம் தொலைபேசியைப் பிடுங்கி “கேட்டீங்களா வந்து உடனே மீதிப்பணத்தைக் கட்டுங்கள்”எனக்கூறி அழைப்பைத் துண்டித்து விடுவர். பின்பு வரிசையில் அழுது கொண்டு நிற்கும் அடுத்த குழந்தையை அழைப்பர்.
இவ்வாறு கட்டணம் வசூலிப்பதையே கட்டப்பஞ்சாயத்துபோல நிகழ்த்துவர். இதில் பணம் கட்டாத குழந்தைகளை கடைசிவரை தேர்வறைக்குள் அனுமதிக்காமல் வெளியே நிற்க வைக்கும் கொடுமையும் நடக்கும். இதெல்லாம் விட பெருங்கொடுமையை அங்குதான் கண்டேன். 10ஆம் வகுப்பு, 12 ஆம் வகுப்பு தேர்வு அந்தப் பள்ளியில் தான் நடந்தது. 3 பள்ளிகளுக்கு இங்குதான் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தது. முழுத்தேர்வன்று,இங்கு தேர்வு எழுதும் பள்ளி ஆசிரியர்களும்,இப்பள்ளி ஆசிரியர்களும் கூட்டு சேர்ந்து தேர்வறையைக் கவனிக்க வந்த ஆசிரியர்களுக்கும்,வந்த பறக்கும் படையினருக்கும் ஒரு பெரும் தொகையை அளித்தனர். அதன் விளைவால் தேர்வு தொடங்கியதும் கேள்வித்தாளை இந்தப் பள்ளி நிர்வாகம் பெற்றுக் கொண்டு அதற்கான விடையை உடனே வெளியில் நிற்கும் ஆசிரியர்கள் குறித்து ஒவ்வொரு தேர்வு அறைக்கும் அனுப்பினர். இதை எல்லா மாணவர்களும் இந்த ஒரு மதிப்பெண் விடையை எழுதினர். சிறிது நேரத்தில் 2,5,10,15 மதிப்பெண்ணுக்கான விடையை மைக்ரோ நகல் எடுத்து ஒவ்வொரு தேர்வு அறைக்கும் அனுப்பி அனைத்து மாணவர்களையும் பார்த்து எழுத வைத்தனர். இந்த விடையை ஆசிரியர்களும்,தேநீர் கொண்டுபோய் கொடுப்பவர் மூலம் விநியோகம் செய்தனர். இதைக் கண்ட நான் பெரும் அதிர்ச்சிக்குள்ளானேன்.
நான் அரசுப் பள்ளியில் படித்து இந்தத் தேர்வு எழுதியபோது எவ்வளவு நேர்மையாக எழுதியிருந்தேன் என்பதை நினைவு கூர்ந்தேன். அப்பொழுது என்னை நினைத்தும்,அரசுப் பள்ளிகளில் படிக்கும் அத்தனை மாணவர்களையும் நினைத்துப் பெருமைப்பட்டேன். தனியார் பள்ளிகள் தங்கள் பள்ளி 100% தேர்ச்சி என தம்பட்டம் அடித்துக்கொண்டு மாணவர் சேர்க்கைக்கு அடித்தளமிடுவது இப்படித்தானா என்ற உண்மை விளங்கியது. தவிர அரசுப் பள்ளியில் 500க்கு 300 மதிப்பெண் பெறும் மாணவனும்,தனியார் பள்ளியில் 500க்கு 497 மதிப்பெண் பெறும் மாணவனும் ஒன்றேதான் என்று நினைத்துப் பெருமைப் பட்டுக்கொண்டேன்.
இத்தனை பணத்தை தனியார் பள்ளியில் கொட்டித் தீர்ப்பது எதற்காக? என்று பெரும்பாலான பெற்றோர்களிடம் கேட்கும்போது அவர்கள் கூறிய ஒரே வார்த்தை “ஆங்கில அறிவு”என்பது மட்டுமே. ஒரு மொழிக்காக நம் தமிழர்கள் கொடுக்கும் விலை மிக அதிகம்தான் என்றாலும் வெள்ளைக்காரன் 1947ல் நம்மை விட்டுச் சென்றாலும் அவன் மொழி இன்று தமிழ்நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருப்பது கொடுமையிலும் பெரும் கொடுமை. “என்று தணியும் இந்த சுதந்திர தாகம்”என பாரதி கேட்டதைப் போல “இன்று என்று ஒழியும் இந்த ஆங்கில மோகம்”எனக்கூறி பெருமூச்சு விடுவதை விட வேறென்ன செய்துவிட முடியும்.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தனியார் பள்ளிகள் தமிழரைப் படுத்தும் பாடு”