தன்னம்பிக்கை தாய்
நிகில்Mar 19, 2016
19 வயதான ராம்நாத் down syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர் என்றாலும், பத்தாம் வகுப்பு தேர்வில் 93 சதவிகிதம் மதிப்பெண்களும், பிளஸ் 2 தேர்வில் 72 சதவிகிதம் மதிப்பெண்களும் பெற்று தன்னம்பிக்கையின் அடையாளமாக தற்போது சென்னை பல்கலைக்கழகத்தில் பி.பி.ஏ படித்து வருகிறார். அவரை சந்திப்பதற்காக ராம்நாத் வசிக்கும் சென்னை மந்தவெளி இல்லம் சென்ற போது ஆங்கிலத்தில் நம்மை வரவேற்று நலம் விசாரிக்கிறார். முதலில் ராம்நாத்தின் அம்மா உஷா சுப்ரமணியத்திடம் பேசினோம்.
“1996ஆம் ஆண்டு ராம்நாத் பிறந்தவுடன் அவனிடம் உள்ள குறைபாட்டை அறிந்து அதிர்ச்சிக்குள்ளானோம். என் கணவரின் மன உறுதியாலும், இரு வீட்டாரின் அன்பினாலும், பிரார்த்தனையினாலும், ஆதரவினாலும் அதிர்ச்சியிலிருந்து மீண்டு படிப்படியாக பல்வேறு கடின முயற்சி அதாவது பிசியோதரபி மற்றும் குரல் வளை பயிற்சியின் காரணமாக இன்று அவனுடைய இந்தக் கல்வி வளர்ச்சி என்பது சாத்தியமாகி இருக்கிறது.
கேள்வி: எப்போது பள்ளியில் சேர்த்தீர்கள்?
பதில்: “8 வயதில் பள்ளியில் சேர்த்தோம். அவன் படித்த S.I.E.T Dyslexia Center-ல் உள்ள ஆசிரியர்களின் அன்பும் விடாமுயற்சியும் அவனுக்கு வாழ்க்கையில் மிக முக்கியமாகும். குறிப்பாக வீட்டில் வந்து பாடம் சொல்லித்தரும் லலிதாராமசாமியின் பங்கு இன்றியமையாதது.
கேள்வி: இவர்களுக்கான தேர்வு முறையில் சலுகைகள் உண்டா?
பதில்: ராம்நாத்படிப்பதற்கும், தேர்வு எழுதுவதற்கும் தமிழ்நாடு அரசு கல்வித்துறை தகுந்தமருத்துவ சான்றிதழின் அடிப்படையில் சலுகைகளை வழங்கியது. நானும் எனது கணவரும் வங்கியில் பணி செய்து கொண்டிருந்தாலும், மகனின் தேர்வு காலத்தில் விடுமுறை எடுத்து அவனுக்கு முடிந்த உதவிகளை செய்து கொடுப்போம்.
“down syndrome-ஆல் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குழந்தைக்கும் ஏதாவது ஒரு திறமை இருக்கும். அவற்றைக் கண்டு அவரவருக்கு ஏற்ப ஊக்குவித்தால் அவர்களும் சாதனை மனிதர்கள் தான். எங்களைப்போன்ற பாதிக்கப்பட்ட பெற்றோர்களுக்கு, எங்களால் ஆன ஆலோசனைகளை வழங்குவதோடு, உதவிகளையும் எப்போதும் செய்து வருகிறோம். ராம்நாத்தைப் பொறுத்தவரை அபார ஞாபக சக்தி இருப்பதை சிறுவயதிலேயே நாங்கள் கண்டுபிடித்து விட்டோம். அதற்கு ஏற்ப தொடர்ந்து அவனுக்கு பயிற்சி அளித்து தேர்வில் சிறந்த மதிப்பெண்களைப் பெற வைத்தோம். இது போன்று அனைத்துப் பெற்றோர்களும் சற்று முயற்சி செய்தால் குறைபாடுள்ள எந்தக் குழந்தைகளையும் சரியாக வளர்த்து ஆளாக்கலாம்.
அம்மா அருகே இருந்த ராம்நாத்திடம் பேசினோம்.
“அப்பாரொம்ப செல்லம். அம்மா எப்போதும் கண்டிப்பாக இருப்பார். இருவருக்கும் என்மேல் பாசம் அதிகம். நானும் அவர்கள் மேல் பாசமாக இருப்பேன். எனக்கு போர்அடித்தால் பெரியப்பா, சித்தப்பா, தாத்தா, பாட்டி, மாமா என ஒவ்வொருவர் வீட்டுக்கும் விடாமல் சென்றுவிடுவேன். அஜித், விஜய் சினிமா பார்ப்பது, பாடல்கள் கேட்பது, சைக்கிள் ஒட்டுவது, இணைய தளங்கள் மூலமாக அறிவுப்பூர்வமான விடயங்களைக் கற்றுக்கொள்வது போன்றவை என்னுடைய பொழுதுபோக்கு” என்று சந்தோஷமாக பதில் சொல்கிறார்.
“எல்லாவற்றையும் விட இந்தக் குழந்தைகளுக்கு உரிய அங்கீகாரமும் அன்பும் இருந்தாலே போதும். இதனை அறிந்து இவனைச் சுற்றி எப்பொழுதும் எங்கள் இரு வீட்டாரின் குடும்பத்தினரும் இவனுக்கு நல்லவிடயங்களைக் கற்றுக் கொடுத்தும், விளையாடியும் ராம்நாத்தின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருக்கிறார்கள்”. என்கிறார் ராம்நாத்தின் தந்தை சுப்ரமணியம்.
நிகில்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தன்னம்பிக்கை தாய்”