மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்!

சுசிலா

Feb 22, 2020

siragu school lunch1
2014 ஆம் ஆண்டு பதவியேற்றத்திலிருந்து, பா.ச.க மதவாத அரசியலை அனைத்துத் தளங்களிலும் திணித்துக் கொண்டிருப்பதை நாம் அனைவரும் கவனித்து கொண்டுதானிருக்கிறோம். உணவு விசயத்திலும், மாட்டிறைச்சிக்கு தடை என்ற ஒரு ஆணையை பிறப்பித்து நாடெங்கிலும் கலவரத்தைத் தூண்டிவிட்டது. தென்னிந்தியாவில் பெரியளவிற்கு கலவரங்கள் ஏற்படவில்லை என்றாலும், வடமாநிலங்களில் அதிகளவில் பாதிப்புகள் ஏற்பட்டது என்பது மறுக்கமுடியாத உண்மை. இதில் 300க்கும் மேலானவர்கள் கொல்லப்பட்டதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தற்போது மத்திய அரசு நேரடியாக இறங்கவில்லை என்றாலும், என்ஜிஓ என்ற அமைப்பின் மூலம் தமிழகத்தில் கால்பதிக்க முயற்சி நடக்கிறது. இஸ்கான் என்ற மதப்பிரசார அமைப்பின் மூலம் தமிழகத்தின், சென்னை அரசுப்பள்ளிகளில் காலை உணவு வழங்குகிறோம் என்ற பெயரில் உள்ளே நுழைகிறார்கள். அதற்கு தமிழக அரசும் அனுமதியளிக்கிறது என்பது தான் தற்போது கடும் கண்டனத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது.

அமெரிக்காவின் இஸ்கான் (ISKCON) என்னும் ‘ஹரே ராமா, ஹரே கிருஷ்ணா’ என்ற அமைப்பின் துணை நிறுவனமான ‘அட்சய பாத்ரா’ என்கிற தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த அமைப்பு, இந்தியாவின் பல மாநிலங்களில், குழந்தைகளுக்கு உணவு இலவசமாக அளிக்கும் சேவையை செய்து வருகிறது. இது ஒரு இந்து மத பிரசார அமைப்பு என்பதாகும். அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இது தற்சமயம் தமிழகத்தில், அரசின் உதவியுடன், சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட அரசுப்பள்ளிகளுக்கு, அக்குழந்தைகளுக்கு காலை உணவுத்திட்டம் ஒன்றை முன்னுறுத்தி, அனுமதி கேட்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமி தலைமையிலான தமிழக அரசும் அதற்கு ஒப்புதல் அளித்து, அட்சய பாத்திரத்துக்காக க்ரீம்ஸ் சாலையில் 20 ஆயிரம் சதுர அடி இடம் ஒதுக்கித் தரப்பட்டுள்ளது. மேலும், பெரம்பூர் பேரக்ஸ் ரோடு பகுதியில் 35 ஆயிரம் சதுர அடி நிலத்தையும் முதலமைச்சர் ஒதுக்கியுள்ளார். தொடக்க விழாவில், ஆளுநர் தனது நிதியிலிருந்து 5 கோடி ரூபாய் வழங்கியிருக்கிறார். மேலும், இதில் எவ்வித வெளிப்படைத்தன்மையும் இல்லாத அளவிற்கு, அவசரகதியில் அனைத்தும் செய்து முடிக்கப்படுகின்றன என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
மிகச் சிறப்பாக இயங்கிக்கொண்டிருக்கும் மதிய உணவுத்திட்டத்தில், இப்போது எதற்கு இந்த தனியார்மயமாக்கல்?
இதன்முலம், நம் மதிய உணவுத்திட்டத்தையே சிதைக்கும் வேலையில் இறங்கியிருப்பதாக தான் நாம் கருதவேண்டியுள்ளது!

பள்ளிகளில் உணவு வழங்குவது என்பதில் தமிழ்நாடு, இந்தியாவிலேயே முன்னோடியான மாநிலமாகும். இந்திய விடுதலைக்கு முன்னரே, 1920ஆம் ஆண்டு நீதிக்கட்சி ஆட்சியில் இருந்தபோது, முதன் முதலாக வெள்ளுடை வேந்தர் சர் பி.டி. தியாகராயர் அவர்கள் சென்னை மாநகராட்சியின் மேயராக இருந்தபோது ,சென்னை மாநகராட்சிப் பள்ளிகளில் மட்டும் மதிய உணவு வழங்கப்பட்டது. அதன்பிறகு கல்வி வள்ளல் பெருந்தலைவர் காமராஜர் அவர்கள் தலைமையிலான காங்கிரசு ஆட்சியில் தமிழ்நாடு முழுவதும் அரசுப்பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மதிய உணவுத் திட்டம் கொண்டு வரப்பட்டது. அதன் பிறகு வந்த கலைஞர் தலைமையிலான திமுக அரசும் அதனையே தொடர்ந்தது.

அதன்பிறகு, மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். தலைமையிலான, அதிமுக ஆட்சிக்காலத்தில் அது சத்துணவுத் திட்டமாக மாற்றப்பட்டு, விரிவாக்கமும் செய்யப்பட்டது. அதன்படி, ஒரே இடத்தில் சமைக்காமல், அந்தந்த பகுதிகளில் சமையலறை அமைக்கப்பட்டு, குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. அடுத்து, மீண்டும் கலைஞர் தலைமையிலான தி.மு.க. ஆட்சிக்கு வந்தபோது, சத்துணவில் தினமும் முட்டை வழங்கப்பட்டு மாணவ,மாணவியரின் உடல்நலனுக்கு ஊட்டம் அளிக்கப்பட்டு, மேலும் வலுமிக்கதாக ஆக்கப்பட்டது.

அடுத்து வந்த ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் கலவை சோறு, வாழைப்பழம் மற்றும் கீரைப்பொடி கலந்த சாதம் அளிக்கும் திட்டமும் கொண்டு வரப்பட்டது. இப்படி ஒவ்வொரு ஆட்சிக்காலத்திலும் தமிழ்நாட்டின் உணவுப் பழக்கத்தை அடிப்படையாகக் கொண்டு தமிழக ஆட்சியாளர்கள், அரசின் பொறுப்பில் இத்திட்டத்தை மென்மேலும் சிறப்பாக செயல்படுத்தி, அதற்கான சமையல் கூடம், பாத்திரங்கள், அந்தந்த ஊரிலிருக்கும் பெண்களை பணியாளர்களாக நியமித்தல் எனும் வேலைவாய்ப்பையும் உருவாக்கியுள்ளனர் என்பது தமிழ்நாட்டின் மதிய உணவுத்திட்டத்தின் பெருமைமிக்க வரலாறு!

இப்போது, முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, அனுமதி அளித்திருக்கும், அட்சய பாத்திரம் என்ற அமைப்பு, நம் குழந்தைகளுக்கு அளிக்கப்போகும் காலை உணவில், வெங்காயம், பூண்டு தவிர்த்த சைவ உணவு வழங்கப் போவதாக அறிவித்திருக்கிறது. இது மிகவும் அதிர்ச்சியான ஒரு விசயமாக பார்க்கப்படுகிறது. அரசுப்பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் 95 விழுக்காட்டிற்கு மேல் அசைவம் உண்ணும் குழந்தைகளாகத்தான் இருப்பார்கள். காலை உணவில் அசைவம் தேவைப்படாது என்றே வைத்துக்கொண்டாலும், வெங்காயம், பூண்டு போன்றவற்றில் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கிறது. தமிழர்களின் உணவுப் பழக்கத்தில் பூண்டு, வெங்காயம் உள்ளிட்டவை தவிர்க்க முடியாதவையாக இருக்கின்றன. அவை உணவின் சுவையை கூட்டுவதுடன், மருத்துவ முறையிலும் நலன் விளைவிப்பவைகளாக இருக்கின்றன. அப்படியிருக்கையில், நம் உணவில் பெரும்பாலும் சேர்க்கும் உணவுப்பொருளை நீக்கிவிட்டு, இவர்களின் உணவுப் பழக்கத்தை நம் வருங்கால தலைமுறையினரிடம் திணிப்பது என்பது எப்படி சரியான ஒன்றாக இருக்க முடியும் என்ற கேள்வி எழத்தானே செய்கிறது. ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவ உணவுப் பழக்கத்தை, இங்கே கொண்டு வருவது என்பது, ஒரு பண்பாட்டு திணிப்பு என்று தானே பொருள் கொள்ள முடியும்!

இதற்கு என்ன அவசர அவசியம் தற்போது ஏற்பட்டு விட்டது?

குழந்தைகளுக்கு காலை உணவு அளிப்பது அவசியம், தேவை என்று வைத்துக்கொண்டாலும், அதனை அரசே ஏற்றுக்கொண்டு செய்யலாமே!

மத்திய உணவு கொடுக்கும் போது, காலை உணவு கொடுப்பதில் என்ன சிரமம் ஏற்பட்டுவிடப் போகிறது, இந்த அரசிற்கு!

ஏன் தனியார் வசம் ஒப்படைக்கப்பட வேண்டும்?

இதில், மற்றுமொரு முக்கிய செய்தியும் இருக்கிறது. இந்த நிறுவனம் அளிக்கும் உணவில் பல குறைகளும் எழுந்த வண்ணம் இருக்கின்றன. ஏற்கனவே, கர்நாடாவில், இந்த நிறுவனம் அளிக்கும் உணவு நன்றாக இல்லை, நம் சுவையில் இல்லையென குழந்தைகள் சாப்பிடுவதில்லை, கீழே கொட்டிவிட்டு, வகுப்பிற்கு சாப்பிடாமல் செல்வதால், வகுப்பறையில், மிகவும் சோர்வாக காணப்படுவதாகவும், சில குழந்தைகள் மயங்கி விழுவதாகவும் குற்றசாட்டுகள் எழுகின்றன. ஓடியாவில், முட்டையும் சேர்த்து கொடுங்கள் என்று அரசு வலியுறுத்தியும், முட்டை மட்டும் நீங்களே கொடுத்துவிடுங்கள் என்று கூறியிருக்கிறது இந்த அமைப்பு!

தற்சமயம், தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், உணவு சமைப்பதற்கான அத்தனை கட்டமைப்புகளும் இருக்கும் நிலையில், இதை, இப்போது தனியாரிடம் ஒப்படைக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? இதற்கென 55 ஆயிரம் சதுர அடி நிலம் வழங்கப்படுகிறது. சமைப்பதற்கான பாத்திரங்கள், நீர், மின்சாரம் முதலிவைகளும் இலவசமாக வழங்குகிறது. இதனால், வருங்காலத்தில், மதிய உணவுத்திட்டம் கூட, இவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுவிடும் ஆபத்து இருக்கிறது. இப்போதே, தொடக்கவிழாவில், ஆளுநர், மதிய உணவுத்திட்டத்தையும் இவர்களிடம் அளிப்பதற்கு பரிசீலிக்கலாம் என்ற தன்னுடைய எண்ணத்தை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்படி ஒரு நிலைமை வந்தால், மதிய உணவில் வழங்கப்படும் முட்டை நிறுத்தும் ஆபத்து இருக்கிறது. தனியார் வசம், இந்த திட்டம் போய்விட்டால் என்ன வேண்டுமென்றாலும் நடக்கலாம். இப்போதே, அவர்களின் உணவுமுறையை நம் மீது திணிக்கும் இந்த அமைப்பு, இந்த உணவுத்திட்டத்தையே கூட நிறுத்திவிடுவதற்கு வாய்ப்புகள் அதிகமிருக்கிறது. தற்போது ஆட்சியிலிருக்கும், எடப்பாடி பழனிசாமி அவர்களின் தலைமையிலான அதிமுக அரசு, மத்திய பா.ச.க அரசின் அனைத்து செயல்களுக்கும் அடிபணிந்து சேவகம் புரிகிறது என்பது நமக்கு நன்கு தெரிந்திருந்தாலும் கூட, ஏழை, எளிய குழந்தைகளின் கல்விக்காக, பசியுடன் படிக்க முடியாது என்ற நல்ல நோக்கத்தில் உருவாக்கிய மதிய உணவு விடயத்தில், இந்த அரசு செய்திருக்கும் இந்த ஏற்பாடு மிகவும் வருந்தத்தக்க ஒன்றாகவே இருக்கிறது.

ஒரு நுற்றாண்டுகாலம் வரலாற்று பெருமைக்குரியது, நம் மதிய உணவுத்திட்டம்!

இதனை தனியார்வசம் ஒப்படைத்து, தனியார் மயமாக்குகிறது என்பது மட்டுமல்ல… நம் உணவுப்பழக்கத்தையே மாற்றி, ஒரு பண்பாட்டு திணிப்பை உருவாக்குகிறது என்பது தான் நாம், இதில் முக்கியமாக கருத வேண்டிய ஒன்றாக இருக்கிறது!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில், அரசுப்பள்ளி குழந்தைகளின் உணவிலும் மதவாத அரசியல்!”

அதிகம் படித்தது