ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் ஏமாறும் தலைசிறந்த மோசடிகள்

சௌமியன் தர்மலிங்கம்

Jun 20, 2015

kalappadam4

  1. தமிழகத்தில் தங்கநகை மோகம் எந்த அளவிற்கு உள்ளது என்பது அனைவருக்கும் தெரியும். அட்சய திரிதியை நாளன்று 2000 கிலோ நகையை வாங்கி குவித்தவர்கள் தமிழர்கள். ஆனால் லாபவெறி கொண்ட நகைக்கடை நகை விற்பனையாளர்கள் சேதாரம் என்ற பெயரில் பதினாறு சதவிகிதம் வரை நகை மதிப்பில் வசூலிக்கின்றனர். வெளிநாடுகளில் உள்ளது போல சேதாரமான தங்கத்தை திருப்பித் தருவதும் இல்லை. அதுமட்டுமின்றி கல் பதித்த நகைகளில் அந்த கற்களின் எடைக்குமே தங்கத்தின் விலைதான் போடப்படுகிறது. இது போன்ற மோசடிகளை கேட்பாரற்ற தமிழ்நாடு தங்களது, உழைத்து சம்பாதித்த பணத்தை இவ்வாறு தொலைக்கிறது.
  2.  நகைக்கடைகளுக்கு அடுத்தபடியாக துணிக்கடைகளில் தள்ளுபடி என்ற பெயரில் விற்காத பழைய துணிமணிகள், தரம் குறைவாக தயாரிக்கப்பட்ட துணிமணிகள் அளவுகள் சரியில்லாத ஆயத்த ஆடைகள் போன்றவை தள்ளிவிடப்படுகின்றன. குறைந்த தொகையில் கிடைக்கிறது என்று எண்ணி மக்கள் இவற்றை வாங்குகின்றனர். தள்ளுபடி விலையிலே கொள்ளை லாபம் அடிப்பது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது.
  3. தொலைத்தொடர்பு மிகவும் மலிவாகி விட்ட இந்த நாளில்,அலைபேசி தொடர்பு வழங்கும் நிறுவனங்கள் இணையசேவை மற்றும் அலைபேசி சேவை போன்றவற்றுக்கு அதிகப்படியான கட்டணத்தையும் நூதனமான முறையில் பிறசேவைகள் வழங்குகின்றோம் என்று தேவையற்ற கட்டணத்தை சுமத்துவதும், சர்வசாதாரணமாக நடந்துவருகிறது. மேலும் சில சேவைகளுக்கு வெறும் 28 நாட்கள் வரைதான் செல்லுபடி என்றும் கொள்ளையடிக்கப்படுகிறது.
  4. தமிழகத்தில் தொன்றுதொட்டு புலால் உணவு விரும்பி உண்ணப்படுகிறது. ஆனால் கோழிக்கறி, ஆட்டுக்கறி, மீன் விற்பனைக் கடைகள் அனைத்திலும் இந்தியாவின் பிற பகுதிகளை விட, தமிழகத்தில் விலை மிகவும் அதிகமாக உள்ளது. கோழிக்கறியில் முற்றிய நார்நாராக இறைச்சி இருக்கக்கூடிய கோழிகளும், ஆட்டுக்கறியில் செம்மறி மற்றும் கிழட்டு ஆட்டு இறைச்சியும், பெட்டை ஆட்டுக்கறியும், நொந்துபோன பழைய மீன்களையும் கலப்படம் செய்து அனைத்துப் பகுதிகளிலும் விற்கப்படுகிறது.
  5. தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் அடுக்குமாடி கட்டிடங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள், அரசு விதிகளை ஆற்றில் பறக்கவிட்டு ஏமாற்றுகின்றன. குறிப்பாக பிரிக்கப்படாத அடிமனையின் அளவைக் குறைப்பது, மழை நீர் வடிகால், கால்வாய், வாகன நிறுத்த வசதி, காற்றோட்ட வசதி போன்ற பல வசதிகளைக் குறைப்பது அல்லது குறைவாகக் கொடுப்பது என்று பெரிய அளவில் மோசடி செய்து வருகின்றன. கட்டிடங்களின் விலையும் அர்த்தமற்ற வகையில் மிகவும் அதிகமாக வைக்கப்படுகிறது.
  6. தமிழகம் முழுக்க குடிநீர் பஞ்சம் தலைவிரித்தாடுகிறது. குடிநீர் குப்பிகளிலும், குடுவைகளிலும் வாங்கி பயன்படுத்தப்படுகிறது, பெரும்பாலான தண்ணீர் விற்பனை செய்யும் நிறுவனங்கள் சரியான முறையில் சுத்திகரித்து அரசு விதிகளின்படி நீரை பாதுகாப்பாக வழங்குவதில்லை. குடிநீர் என்னும் அத்தியாவசியப் பொருளில் மக்களுக்கு ஏற்படும் இழப்பு அளவிடமுடியாததாகும். இதன் விலையும் உற்பத்தி விலையைக் காட்டிலும் மிக அதிகமாக வைக்கப்படுகிறது.
  7. அத்தியாவசிய பொருளான பால் இப்போது பெரும்பாலும் பைகளில் விற்கப்படுகிறது. பையில் அடைத்து விற்பனை செய்யப்படும் பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக ரசாயனப் பொருட்கள் சேர்க்கப்பட்டு விற்கப்படுகிறது. மேலும் தண்ணீர் கலக்காத பாலே தமிழ்நாட்டில் இல்லை எனலாம், நேரடியாக பெறப்படும் பாலில் நூற்றுக்கு நூறு சதவிகிதம் நீர் கலந்தே விற்கப்படுகிறது.
  8. சென்னையில் தானி(Auto) ஓட்டுனர்களின் நேர்மையைப் பற்றி சொல்லித் தெரியவேண்டியதில்லை. தமிழகம் முழுக்க மானியைப் பயன்படுத்தி கட்டணம் வசூலிப்பது என்பது அறவே கிடையாது. மேலும் தானி வாகனங்கள் புகைப் பரிசோதனை, பழுது நீக்குதல் போன்றவற்றை செய்து கொள்ளாமல் மாசு படுத்துவதும் மிக அதிகம்.
  9. தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் பெட்ரோல் விற்பனை செய்யும் கூடங்கள், வாகனங்களுக்கு பெட்ரோலின் அளவைக் குறைத்தே நிரப்புகின்றனர். ஒரு சில இடங்களில் கலப்படம் செய்தும் மிகப்பெரிய கொள்ளையை அடிக்கின்றனர். இதனால் தினசரி மக்களுக்கு ஏற்படும் இழப்பு பேரிழப்பாகும். மேலும் வாகனங்கள் பழுதுபடுவது இதனால் அதிகரிக்கிறது.
  10. தமிழ்நாட்டில் உணவகங்களில் தமது உணவை எடுத்துக்கொள்ளும் மக்கள் மிக அதிகம். அத்தகைய உணவகங்களில், உணவின் அளவை மிகவும் குறைவாகக் கொடுப்பது, உணவுக் கலப்படம், பழைய உணவு விலையை அதிகமாக நிர்ணயம் செய்வது, உணவுக்கான கட்டணம் போக சேவைக் கட்டணம் என்று ஒன்றை தனியாக வசூலித்து லாபம் பார்ப்பது என்று நடந்து வருகிறது. உணவகங்களில் உணவின் விலை இந்தியாவின் பிற மாநிலங்களைக் காட்டிலும் அதிகமாக இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது.


சௌமியன் தர்மலிங்கம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்தில் தினந்தோறும் மக்கள் ஏமாறும் தலைசிறந்த மோசடிகள்”

அதிகம் படித்தது