மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள்

தேமொழி

Sep 1, 2018

siragu tamilagaththu1

நூலும் நூலாசிரியரும்:

வலங்கை இடங்கை சாதிகளுக்கு இடையே நிகழ்ந்த கலவரங்கள் வெறும் சாதி மோதல்கள் அல்ல, அவை வர்க்கப் போராட்டங்கள். உழைக்கும் இனத்தோர் தங்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழாதவாறு அரசர்களும், உயர் குலத்தவராகக் கருதப்பட்டோரும் உழைப்பை முதன்மையாகக் கொண்டு வாழ்ந்தோரைப் பிரித்தாண்டு அவர்களுக்குள் மோதவிட்டு தங்கள் நிலையைக் காப்பாற்றிக்கொள்ள எடுத்த நடவடிக்கைகள் என்று தனது “தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள்” என்ற நூலில் விளக்குகிறார் பேராசிரியர் நா. வானமாமலை. கலை, இலக்கியம், மதிப்பீடு, பண்பாடு, வரலாறு, தத்துவம், மானிடவியல், நாட்டுப் பண்பாட்டியல் எனப் பல துறைகளிலும் பண்பட்ட ஆய்வாளரும், தமிழர் நாட்டார் வழக்காற்றியல் முதன்மை ஆராய்ச்சியாளர்களில் ஒருவரான தமிழறிஞர் நா. வானமாமலை அவர்களின் இரு கட்டுரைகள் அடங்கிய மிகச் சிறு நூல் இது. நாட்டுடைமையாக்கப்பட்ட இவரது நூல்கள் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் வழியாக படிப்பதற்குக் கிடைக்கின்றன.

செல்வச் செழிப்புள்ள நிலவுடைமை வேளாளர் வர்க்கமும், வணிகர் வர்க்கமும் முறையே வலம் இடம் எனப் பிரிந்து கொண்டு, அவரவர் தொழில் சார்ந்த உழைக்கும் மக்கள் வர்க்கத்தினரைத் தத்தம் பிரிவில் இணைத்துக் கொண்டு, ஒருவரை ஒருவர் எதிர்த்து வந்தனர் என்கிறார் நூலாசிரியர். மேலோட்டமாக நாம் அறிந்திருக்கும் வலங்கை இடங்கை சாதிப் பிரிவினை என்ற வேறுபாட்டை ஊடுருவி ஆய்வு செய்துள்ளார். பொருள்முதல்வாத அடிப்படையில், உற்பத்தி உறவுகளின் அடிப்படையில், ‘தமிழ்நாட்டில் சாதி சமத்துவ போராட்ட கருத்துகள்’ மற்றும் ‘தமிழ்மன்னரும் சாதிப்பிரிவினைகளும்’ எனும் இரு கட்டுரைகளின் மூலம் இந்நூலில் விளக்குகிறார் நா. வானமாமலை. தமிழ்நாட்டில் சாதி சமத்துவ ஆய்வில், குறிப்பாக வலங்கை இடங்கை சாதிப் போராட்டங்களின் ஆணிவேர் குறித்து ஆய்வு செய்ய விரும்பும் எவரொருவருக்கும் நா. வானமாமலை குறிப்பிடும் தகவல்கள் விரிந்த ஒரு பார்வையை வழங்கும் என்பது திண்ணம். தி. நா. சுப்பிரமணியன் தொகுத்த தென்னிந்தியக் கோயில் சாசனங்கள் மூன்றாவது தொகுப்பு, பேராசிரியர் கே. கே. பிள்ளையின் தென்னிந்திய வரலாறு போன்ற நூல்களில் இருந்து வரலாறு தொல்லியல் சான்றுகளையும் தருகிறார் நூலாசிரியர்.

பண்டைய தமிழகத்தில் தொழிலடிப்படையில் இயல்பாக அமைந்திட்ட தொழிற்பிரிவினை என்ற நிலைமை, பரம்பரைத் தொழில் முறை என்ற பிற்கால வற்புறுத்தலால் சாதிகளாயின என்பதை நாம் அறிவோம். இவற்றை வடநாட்டில் வழங்கிவந்த வருணாசிரமப் பிரிவுகளுக்குள் அடக்கிட நினைத்த முயற்சி பலனளித்திட வில்லை என்பது சமூகவியல் ஆய்வாளர்கள் பொதுவாகக் கொண்டிருக்கும் ஒரு கருத்து. உடலுழைப்பைச் செய்யும் வழக்கமற்றிருந்தவர், அத்தகைய வாழ்வுமுறை உயர்குலத்தின் பண்பு என்ற எண்ணம் கொண்டு, உழைக்கும் வர்க்கத்தைக் கீழோர் எனக் குறிப்பிட்டு அடக்கியாண்டதன் விளைவு சமத்துவமற்ற சமுதாயம் உருவாகிட காரணமாக அமைந்தது. மக்களிடையே சாதி உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன.

மக்களிடம் தோற்றுவிக்கப்பட்ட பிரிவினை நீதி நூல்களாகவும் உயர்நிலையில் உள்ளவர்களால் எழுதிவைக்கப்பட்டு கீழ்நிலையில் உள்ளோர் ஒடுக்கப்பட்டிருந்தனர். வரலாறு நெடுக ஒடுக்கப்பட்டவர்களும் தங்கள் நிலையை மறுத்தும் போராடிய வண்ணமே இருந்தனர். தங்களது கீழான நிலையை ஏற்கவிரும்பாதவர்களும் தங்கள் பங்கிற்கு தங்களை உயர்ந்தோர் என அறிவுறுத்த அதே புராணம், வேதம் போன்றவற்றையே துணைக்கழைத்து தங்கள் குலம் உயர்வானது என்று ஆவணப்படுத்த முற்பட்டனர். இம்முயற்சியின் விளைவாகச் சென்ற நூற்றாண்டின் துவக்கத்திலும் சில நூல்கள் இக்குலப்பிரிவுகளின் செல்வந்தர்களின் ஆதரவில் உருவாக்கப்பட்டன என்று கூறும் நா. வானமாமலை அதற்கான சான்றுகளைக் காட்டி விளக்குகிறார்.

தங்கள் சமூக நிலையையுயர்த்த உருவாக்கப்பட்ட நூல்கள்:

உருவாக்கப்பட்டிருந்த சமூகச் சாதி அடுக்குகளில் பிராமணர்கள் அனைவரிலும் உயர்ந்தவர் என்ற வகையில் தொன்மங்களும் கதைகளும் மிகுந்திருந்தது, அது அவர்களே எழுதிவைத்துக் கொண்ட கட்டுக்கதைகள். பிற வகுப்பினரில், செல்வத்தின் அடிப்படையில் உயர்ந்துவிட்டவர்களுக்கு அல்லது மற்ற பிற தகுதியில் அனைவரும் மதிக்கத்தக்க நிலையில் உயர்ந்துவிட்டோருக்கு இது தொடர்ந்து உறுத்தலை அளித்தவண்ணமே இருந்துள்ளது. தாங்களும் அவர்களைப் போலவே உயர்ந்த நிலையில் உள்ளவர்களே என்று வலியுறுத்தும் நோக்கில் அவர்களும் தங்கள் பங்கிற்கு தாங்கள் எந்த வகையில் உயர்ந்தவர்கள் எனக் காட்ட பதிலுக்குக் கதைகள் புனைந்தனர். வேதம் காட்டும் மற்றொரு கோணத்தை எடுத்துக் கொண்டோ அல்லது அரச பரம்பரை என அறிவித்துக் கொண்டோ நூல்கள் எழுதி வெளியிடத் துவங்கினர். உண்மையற்ற, அறிவியல் அடிப்படையில் ஆட்டம் காணக்கூடிய புனைகதைகள் எழுதி தகுதியை உயர்த்திக் கொள்ள முயன்றனர்.

1. வேளாளர் உயர்வைக் கூறும் ‘வருண சிந்தாமணி’ என்ற தலைப்பில் கூடலூர் கனகசபைப் பிள்ளை எழுதிய நூலொன்று 1901 இல் வெளியாயிற்று. வேத சூக்தங்களில் பிராமணன், சத்திரியன், வைசியன், சூத்திரன் போன்ற வர்ணாசிரம உயர்வு தாழ்வு கூறப்படவில்லை. ஆரிய வேதங்களை (வேதம், உபநிஷத்துக்கள், புராணங்கள் ஆகியனவற்றைப்) பின்பற்றுவதாகக் கூறிக்கொள்ளும் பிராமணர்களுடன் ஒப்பிடுகையில் திராவிட வேதங்களை (திருக்குறள், சைவத் திருமுறைகள் முதலியவற்றைப்) பின்பற்றுவோர் சற்றும் குறைந்தார்கள் அல்லர். மாறாக, பிராமணர்களினும் மேலானவர் என்பது இந்த நூலின் மையக்கருத்து. முதன்மை ஆரிய வேதங்களிலும், திராவிட வேதங்களிலும் சாதிப் பிரிவினைகளுக்கும் உயர்வு தாழ்வுகளுக்கும் ஆதாரமில்லை என்பது இவர்கள் வாதம். இருப்பினும் இறுதியில் நான்கு வருணங்களை ஏற்றுக் கொண்டு வேளாளர் தாங்கள் செய்யும் தொழில் அடிப்படையில் நால்வருணம் குறிக்கும் வைசிய குலத்தோர் என்றும், வேளாளருக்குப் பணிபுரியும் வண்ணார், நாவிதர், குயவர், தச்சர், கொல்லர் என்ற இன்னபிற பற்பல உழைக்கும் குலத்தோர் சூத்திரர் என்றும் கூறி முடிக்கிறார் ‘வருண சிந்தாமணி’ நூலை எழுதியவர். இந்த நூல் வெளியீட்டிற்கு வேளாளர் குல செல்வந்தர் உதவி செய்ததாக முன்னுரை கூறுவதை நா. வானமாமலை சுட்டிக் காட்டுகிறார். ஆக நூலின் நோக்கம் தங்களை யாவரிலும் உயர்ந்தோர் என்று காட்டிக் கொள்ளுதலே என அறியலாம் என்கிறார் நூலாசிரியர்.

2. இவர்களைப்போன்றே பனையேறும் தொழில் செய்யும் குலத்தைச் சேர்ந்தோர், கள்ளுக்கடைகளைக் குத்தகை எடுப்பதன் மூலம் செல்வம் சேர்த்த கிராமணி குலத்தோர், தாங்கள் அரசகுலத்தினர் அல்லது சத்திரியர் குலத் தோன்றல்கள் என்பதாக ‘சத்திரியகுல விளக்கம்’ என்ற நூலை 1904 இல் டி. வி. துரைசாமி கிராமணி எழுதிட அதை வெளியிட்டனர். சத்திரியகுலத்தோர் பிராமணர்களுக்கு குருமுறையினர் என்று புராணத்தில் பிராமணர்களுக்குப் பிரம்மஞானம் பெற உதவிய சத்திரிய ஜனகரைக் காட்டியும், பழைய இலக்கியங்கள் காட்டும் கள்ளிறக்கும் குலத்தோர் தாமல்லவென்று மறுத்தும், தாங்கள் படைத்தலைமைத் தொழில் செய்தவர் என்றும் துரைசாமி கிராமணி தனது நூலில் கூறுவாராயினர்.

3. ‘நாடார் மன்னரும் நாயக்க மன்னரும்’ என்ற தலைப்பிட்டு 1931 இல் வெளிவந்த இராமலிங்கக் குருக்கள் மற்றும் குமரைய நாடார் எழுதிய நூலில், தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் ‘சான்றோர்’ என்போர் தாமே என்றும், தங்கள் தொழில் கள்ளிறக்குதல் இல்லையென்றும், அவர்கள் குலத்தில் சிறுபான்மை சிலர் ஈடுபட்டிருந்த பொதி மாட்டு வணிகமே தங்கள் குலத்தொழில் எனக் கூறியதோடல்லாமல், தாங்கள் பாண்டிய மன்னர் குலம் என்றும், நாயக்கர்கள் அவர்கள் நாட்டைக் கவர்ந்து கொண்டதாகவும் நாடார் குலத்தினர் இந்நூல் வழியாகக் கூறினர். நாடார் திருமண வாழ்த்துக்கள் என்னும் நாட்டுப்பாடல்களில் அரசகுல கூற்றுகள் இருப்பதைச் சான்றுகளாக வைக்கிறது இந்நூல் என்கிறார் நா. வானமாமலை.

4. ‘பரவர் புராணம்’ என்று 1909இல் பரதவர்களின் உயர்வைப் பாடும் நூலொன்று அருளப்ப முதலியார் எழுதி வெளியானது. இதை எழுதிய கத்தோலிக்கரான இந்த நூலின் ஆசிரியரும் வைதீக புராணப் புனைக்கதைகளை ஏற்றுக் கொண்டு சிற்சில புராணக் கதைகளை மேற்கோள் காட்டி உயர்குலப் பிறப்புகள் சாபம் பெற்று உழைப்பாளர் குலங்களில் பிறந்தார் என்றும் (உடலுழைப்பு என்பது சாபம் என்பது புராணப் கருத்தாக இருப்பது தெரிகிறது), அவ்வாறு சாபம் பெற்று பரதவ குலத்தில் பிறந்த வழித்தோன்றல் பரதன் என்பான் பாரதம் முழுமையையும் ஆண்டான் என்பது இந்த நூலாசிரியர் கூறும் கருத்தாக உள்ளதைக் காட்டுகிறார் நா. வானமாமலை.

5. இவ்வாறே கார்காத்தார் சாதி உயர்வு கூறும் “கிளைவளப்ப மாலை” என்ற நூலும் புதுப் புராணக்கதைகளை கூறுகிறது, பள்ளர்கள் தம்மை இந்திரகுல வேளாளர் என்று சொல்லி அவர்களும் அதற்குப் புராணக்கதை கூறுகிறார்கள் எனப் பட்டியலிடும் நா. வானமாமலை, இந்நூல்களின் கருத்துகளுக்கு இடையே ஊடிழையாகச் செல்லும் பொதுவான பண்பையும் தனது ஆய்வின் முடிவாக வெளிப்படுத்துகிறார்.

இவ்வாறு தங்கள் சாதி உயர்வு குறித்து கதைகள் கூறிய நூல்கள் யாவும் அந்தச் சாதிகளின் செல்வந்தர்கள் முயற்சியில் வெளிவந்தவை. அவர்கள் தங்களுக்குரிய மேன்மையை பண்டைய தொன்மக்கதைகளுக்குள் மறுவாசிப்பில் வேறு கோணத்தில் கண்டனர், அல்லது புது தொன்மங்களைப் பழைய புனைவுகளுடன் இணைத்துக் கொண்டனர். ஆரிய வேதம் திராவிட வேதம் என்று பிரிவு காட்டி தங்களை ஆரியபிராமண மேல்குடியாளர்களுக்கும் உயர்ந்தவர் என்று கூறினார். பிராமணர்கள் உயர்ந்த சாதியினர் என்பதை மறுப்பது இவர்களின் முதன்மை நோக்கம். அதனால் அதுகுறித்துக் கூறும் தொன்மக்கதைகளும் அவர்களால் மறுக்கப்படுகின்றன. வேதங்களை ஏற்போர் வேத காலத்தில் சமத்துவம் நிலவியது என்கின்றனர். வர்ணாசிரம பிரிவினையை முதலில் மறுப்பதும், பின்னர் அவற்றில் வைசியர், சத்திரியர் என்று ஏதோ ஒரு பிரிவில் தங்கள் குலம் அடங்கும் என்று காட்டிக்கொள்வதும், தங்களுக்குக் கீழே உழைப்பாளர்களின் குலங்கள் உள்ளன என வலியுறுத்துவது என்பதன் மூலம் மற்றொருவகையில் உயர்வு தாழ்வு கற்பித்தன இந்த நூல்கள்.

சாதி சமத்துவம் காட்டினால் தமக்காக உழைக்கும் குலம் இல்லாது போகும் என்பதால் சூத்திரர் என்ற வர்ணாசிரம பிரிவினரை தங்களுக்குச் சமமாகக் கருதவில்லை இவர்கள். நிலவுடைமை பரம்பரை, அரசுடைமை பரம்பரை என்பதன் வழியில் தங்களை மேலானவர் எனக் கருத முற்பட்டனர் என்கிறார் நா. வானமாமலை. இன்றைய நாளிலும் இந்த நிலைமை மாறவில்லைதான். இன்று அனைத்துச் சாதியினரும் தாங்கள் அரசபரம்பரை என்றுதான் கூறிக் கொள்கின்றனர். பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் தற்கால சாதிப்பெருமை கூறும் பதிவுகளே இந்த வகையில்தான் அமைந்துள்ளதைப் பார்க்கிறோம். ஆனால் தங்களை பிராமணருக்குத் தாழ்ந்தவரல்ல என்று தகுதியை உயர்த்திக் கொள்ளும் எவரும், மறந்தேனும் மனிதர் அனைவரும் சமம் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாது தங்களினும் கீழான நிலையில் பிறர் இருப்பதாகவே நம்பும் மனநிலையையும் கொண்டிருக்கிறார்கள். இன்றும் சாதி ஒழிய முடியாமல் இருப்பதற்கு இந்த மனநிலையே காரணம் எனலாம்.

வேதங்களை இவர்கள் ஏற்பதன் காரணம் அவை வர்ணாசிரம பிரிவுகளுக்கு முற்பட்டவை. ரிக்வேதத்தின் பின்னொட்டாக, பிற்காலத்தில் இடைச்செருகலாக நுழைந்த புருஷ சூக்தமே பின்னர் வருணாசிரமப் பிரிவுகளில் உயர்வு தாழ்வுகளைக் கற்பிப்பதற்கு மூல காரணம். கால்நடை வளர்ப்பு வாழ்க்கை வளர்ச்சியடைந்து, ஒரு கட்டத்தில் வேலைப் பிரினை தோன்றிவிட்ட நிலையில் உலகின் தோற்றத்தைக் குறித்து எழுதப்பட்ட கற்பனைக் கதையே புருஷ சூக்தம், ஆனால் அச்சமயத்தில் வகுக்கப்பட்ட பிரிவுகளுக்குள் உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டிராத துவக்கப் பிரிவு நிலை. பிற்கால புராணங்களும் மனுஸ்மிருதியும் வருணாசிரமம் உயர்வு தாழ்வு நிலை தோன்றிய பிற்பாடு, சாதிப் பிரிவுகளை நிலை நிறுத்த உயர்குலத்தோர் எனக் கூறிக்கொண்டவர் எழுதியவை. அவை இரண்டு நோக்கங்களுக்காக உருவானவை. 1) சாதி உயர்வு தாழ்வுகளுக்கு நியாயம் கூறுவது, இதற்காகப் புராணங்கள் உருவாக்கப்பட்டன. 2) வர்ணாசிரமப் பிரிவைச் சட்டப்பூர்வமாக்கும் விதிகளை வகுப்பது, இதற்காக மனுஸ்மிருதி எழுதப்பட்டது. இதன்பிறகு உடலுழைப்பு செய்வோர் பிறருக்காகப் படைக்கப்பட்டவர் என்ற தாழ்ந்த அடிமை நிலையும்; உழைப்பைத் தாழ்மையானதாக கருதுவதும் சிந்தனையை உயர்வாகக் கருதுவதுமான பிராமண சத்திரிய மனப்பான்மையும் தோன்றியது. இதன் காரணமாகவே இந்த நூல்கள் புராணங்களையும் மனுஸ்மிருதியையும் எதிர்க்கின்றன என்கிறார் நூலாசிரியர் நா. வானமாமலை.

நீதிமன்ற வழக்கும் தீர்ப்பும்:

‘சித்தூர் அதலாத்துக் கோர்ட்டுத் தீர்ப்பு’ என்ற தலைப்பில் ஒரு நீதிமன்ற வழக்கு குறித்த நூலும் (இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1924இல் வெளியிடப்பட்டது, முதற் பதிப்பு இதற்குப் பலகாலம் முன்னர் வெளிவந்ததாகத் தகவல்), அதில் காணப்படும் “பஞ்சாங்கம் குண்டையனுக்கும் மார்க்கசகாயம் ஆசாரிக்கும்” இடையில் நிகழ்ந்த வாதப்பிரதிவாதங்களையும் நீதிபதி அளித்த தீர்ப்பையும் நா. வானமாமலை தனது நூலில் சான்றாகக் கொடுத்துள்ளார். பன்னெடுங்காலமாக ஒடுக்கப்பட்டிருந்த ‘விசுவப் பிரம்மகுலம்’ என்று தம்மை அழைத்துக் கொள்ளும் ஆசாரிமார், பஞ்ச கருமார்கள் எனப்படுவர், இவர்கள் இடங்கைப் பிரிவினர். இவர்கள் கொல்லர், தச்சர், கல் தச்சர், கன்னார், தட்டார் என்று ஐந்து தொழில் புரியும் கைவினைஞர்கள். சோழர் காலக் கல்வெட்டு சாசனங்களும் இவர்கள் ஊரில் இருந்து தள்ளிவைக்கப் பட்டதைக் (ஊர்விலக்கு) கூறுகிறது. உழைப்பை இழிவாகக் கருதிய பிராமணரும் பிறருழைப்பில் வாழும் நிலக்கிழார்களும் இவர்களைத் தங்களுக்கு அடிமைகளாக, உழைப்பதற்காகவே பிறந்து வாழ்வதாகக் கருதினர். 1814இல் சித்தூர் அதலாத்துக் கோர்ட்டு வழக்கில் ஆசாரிகள் குலத்தின் திருமணத்தை நடத்தி வைக்கப் பிராமணர்களுக்கு உரிமையுண்டா அல்லது ஆசாரிகள் குலத்தைச் சேர்ந்த பெரியவர்களுக்குத்தான் அந்த உரிமையா என்ற பிரச்சினை பற்றிய விவாதம் நடந்து, அதில் விசுவப்பிரம்ம ஆசாரி குலத்தவர் அவர்களே திருமணச் சடங்கை நடத்திக் கொள்ளத் தடையில்லை என்று நான்கு ஆண்டுகள் கழித்து 1818 இல் தீர்ப்பு வழங்கப்படுகிறது. இதை ஏற்காத பஞ்சாங்க குண்டையனின் விப்பிராள் பிராமண அணியினர் ஆசாரியார் இல்லத் திருமணத்தில் இடையிட்டு அடிதடியில் இறங்கிவிட, இழப்பீடு கேட்டு மீண்டும் நீதிமன்றத்திற்குச் செல்கிறார்கள் ஆசாரிகள் பிரிவினர். நா. வானமாமலை மேற்கூறிய இந்த வழக்கின் பகுதியையும் நூலில் இணைத்துள்ளார். இந்த வழக்கு விவரங்களும் தீர்ப்பும், சாதி சமத்து வப் போராட்டத்தில் சமத்துவம் கோருவோரது கருத்துக்களையும், அந்தக் கோரிக்கையை மறுப்போரது கருத்துக்களையும் தெளிவாகக் கூறுகின்றன என்கிறார் நூலாசிரியர்.

இவ்வழக்கைப் படிக்கும் பொழுது, வேத புராண நூல்களின் அடிப்படையில் யார் தகுதியுள்ளவர் என்று நடக்கும் விவாதப் போக்கும், தானே உயர்ந்தவர் என்று புனைகதைகளைக் கொண்டு விவாதிக்கும் முறையும் நம் நாட்டின் கடந்த கால அவல நிலை குறித்து அதிர்ச்சியை ஏற்படுத்துவது மட்டுமில்லாமல், யார் வீட்டுத் திருமணத்தை யார் நடத்துவது என்பது போன்றவற்றில் அடாவடியான முறையில் ஆதிக்கம் செலுத்தி வந்திருக்கும் அடிப்படை மனித உரிமை மீறலுமே மிகவும் வியக்க வைக்கிறது. இவ்வழக்கில் உரிமையை ஆராயும் சான்றுகளாக வேதங்கள், புராணங்கள், உபநிஷத்துகள் முதல் கபிலர் அகவல் வரை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டதும் (வாதிகள் தஸ்தாவேசுகளாக தாக்கல் செய்திருக்கிற வேத சாஸ்திரங்கள்) மிக வேடிக்கையாகவும் உள்ளது. நூலின் இப்பகுதி அனைவரும் தவறாது படிக்க வேண்டிய ஒன்று (பக்கம்: 17 – 26). கபிலரகவல் பகுதியை ஆசிரியர் பின்னிணைப்பாகவும் கொடுத்துள்ளார். இன்றைக்குச் சரியாக 200 ஆண்டுகளுக்கு முன்வரை இத்தகைய அநீதிகள் யாவும் நீதி என்ற பெயரில் உலவிய மண் இந்தியா என்பது பெருமை கொள்ளத்தக்க நிலை அன்று. ஆனால் இன்றோ ஆரம்பப் பள்ளி மாணவர்கள் கூட, அவர்கள் வீட்டுத் திருமணத்தை எப்படி நடத்துவது என்பது அவர்களது உரிமை என்று எளிதாக கருத்துச் சொல்லிவிடுவார்கள்.

இந்த வழக்கின் தீர்ப்பில் குறிப்பிடப்படும் “முன்னாலே சில தேசங்களுக்குப் பாளையக்காரராக இருந்த அவிவேக துரைத்தனத்தாரையும் சில மூட ஜனங்களையும் எப்படியோ சூதடியினாலே மோசஞ் செய்து நாளது வரைக்கும் குரு ஆண்மை செலுத்திக் கொண்டு வருகிறார்கள். அப்படிப்பட்ட மோசடிகளைக் கண்டுபிடித்து வருணாச்சிரம தருமங்களையறிந்து பரிபாலனஞ் செய்வது கனம்பொருந்திய கவர்மென்டு துரைத்தனத்தைச் சார்ந்த நீதியாயிருக்கிறது” என்ற வரிகள் ஆங்கிலேயர் ஆட்சியில் நீதிமன்றம் எதிர்கொள்ள வேண்டிய நிலையையும், சாதிகள் குறித்து மோசடி என்று நீதிபதி கொண்ட கருத்தையும் அறியத் தருகிறது எனலாம். நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் ஆசாரிகள் வீட்டுத் திருமண நிகழ்விற்கு கும்பலாகச் சென்று தாக்கி திருமணத்தை நிறுத்தி ரூபாய் 550 பெறுமானமுள்ள அழிவுகளை ஏற்படுத்தியுள்ளார்கள் விப்பிராள் பிராமண அணியினர், அதற்கு (கலியாண சாமக்கிரியை நஷ்டம் ரூபாய் 550) இழப்பீடு கொடுக்கும்படி தீர்ப்பு எழுதப்பட்டுள்ளது. இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் ரூபாய் 550மதிப்பு என்பது மிக மிக மிகப் பெரிய தொகை. அந்த அளவுக்கு இழப்பீடு தரவேண்டிய நிலையில் என்ன விதமான அழிவுகளைச் செய்தார்கள் என்று வியக்காமல் இருக்க முடியவில்லை.

வலங்கை-இடங்கை கலகங்கள்:

சித்தூர் அதலாத்துக் கோர்ட்டில் நடந்த இந்த வழக்கில், நடந்த விவாதத்தில் விசுவப் பிரம்ம குலத்தவர் (அதாவது இடங்கை பிரிவினர்) பிராமண குலத்தை குற்றம் சாட்டும் பொழுது, அரசரைச் சார்ந்தவர்கள் வலங்கை பிரிவினர் என்றும், மற்றோரை இடங்கை என்றும் பிரித்து மோசடி செய்தவர் பிராமணர்கள் என்றும், ஒருபிரிவினர் வீட்டில் மற்றொரு பிரிவினர் சாப்பிடக்கூடாது என்பது போன்ற சட்ட திட்டங்களைச் செய்தோர் பிராமணர்களே என்றும் கூறுகிறார்கள் (பக்கம்: 34). இதன் தொடர்ச்சியாக வலங்கை இடங்கை பேதம் குறித்து விவரிக்கத் துவங்குகிறார் நூலாசிரியர். வலங்கை இடங்கை பிரிவுகள் குறித்த வரலாற்றை அறிய பிற்காலச் சோழர் காலத்துச் சாசனங்கள் பெரும் துணைபுரிபவை. திருச்சிராப்பள்ளி ஆடுதுறைக் கல்வெட்டு ஒன்று வன்னியர்கள், வேளாளர்கள், பிராமணர்கள் முதலிய நிலச் சொந்தக்காரர்கள் கூட்டு சேர்ந்து கொண்டு (இவர்கள் அரச ஆதரவு உள்ள வலங்கை பிரிவினர்) இடங்கைப் பிரிவில் அடங்கிய 96 வகைச் சாதியர்களுக்கும் இழைத்த அநீதியைக் கூறுகிறது. இடங்கைப் பிரிவினரான உழைக்கும் வர்க்கத்தின் மீது அதிக வரிச்சுமையும் திணிக்கப்பட்டதற்குத் தமிழகத்திற்கு வெளியே கர்நாடகா ஆந்திரா பகுதிகளிலும் கல்வெட்டுச் சான்றுகள் கிடைக்கின்றன.

முதற் குலோத்துங்க சோழ மன்னனின் ஆட்சியின் இரண்டாம் ஆண்டில் இராஜமகேந்திரச் சதுர்வேதி மங்கலத்தில் இடங்கை வலங்கை கலகமொன்று நடந்ததாகக் கூறும் சாசனம் ஒன்று அந்தக் கலகத்தில் கிராமம் முழுதும் சுட்டெரிக்கப்பட்டது என்றும், கோயில் பண்டாரமும்(கருவூலம்) கோயில் விக்கிரகங்களும் சூறையாடப்பட்டன வென்றும் கூறுகிறது. சாசனங்கள் வலங்கை-இடங்கை பிரிவுகளில் பட்டியலிடும் சாதிப்பிரிவுகளை ஆராயும்போது நிலவுடைமையாளர்களும் அவர்களைச் சார்ந்தோர் வலங்கை பிரிவிலும் (இவர்கள் நிலப்பிரபுக்கள் சாதியினர், பள்ளர், பறையர் போன்றோர்); வணிகம் அல்லது கைத்தொழில்களோடு தொடர்புடையோர் இடங்கை பிரிவிலும் (இவர்கள் செட்டி, சேணியன், கைக்கோளன், தச்சன் போன்றோர்) இருப்பது தெரிய வருகிறது என்கிறார் நா. வானமாமலை. நிலக்கிழார்கள் வலங்கை பிரிவின் தலைமையிடத்தில் இருந்து தங்கள் கீழ் உள்ளவர் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்தனர். அவ்வாறே இடங்கை பிரிவில் வணிக குலத்தினர் தங்கள் கீழ் உள்ள கைத்தொழிலாளர்களின் உழைப்பைச் சுரண்டி வாழ்ந்தனர். வேளாளர்களுக்கும் வணிகர்களுக்கும் இடையில் சமூக-அரசியல் போராட்டம் வெடிக்கும்பொழுது தத்தம் பிரிவின் கீழ் உள்ள உழைக்கும் சாதிகளை தங்களுடன் ஒருங்கிணைத்துக் கொண்டு எதிராளியைத் தாக்கினர். இதன் மூலம் இருபிரிவிலும் இருந்த சுரண்டப்பட்ட உழைக்கும் வர்க்கத்தினர் ஒன்று சேர்ந்து தங்கள் உழைப்பைச் சுரண்டும் வேளாளர்களையும் வணிகர்களையும் ஒற்றுமையாக எதிர்க்க வழியின்றி பிரித்தாளப் பட்டனர். சாசனங்கள் தரும் செய்திகள்படி இடங்கை பிரிவினர் அநீதியான வரிகளையும் சமூக அடக்குமுறைகளையும் தாளாது போராடி வந்துள்ளனர் என்பது தெரிகிறது. எனவே, ‘வலங்கை, இடங்கைப் பிரிவுகள் சமூக வளர்ச்சி வரலாற்றில் நிலவுடைமையாளர்களுக்கும் வணிகர்களுக்கும் தங்கள் நலன்களுக்குகந்த முறையில் மக்களைத் தங்கள் பக்கம் திரட்டிக் கொள்ள ஏற்படுத்திக்கொண்ட பிரிவுகளே’ என்பது இந்த நூல் வழி நாம் அறிய முடிகிறது.

இருபிரிவு உழைக்கும் வர்க்கம் ஒன்று சேரவிடாது உயர்வர்க்கத்தினர் சர்ச்சைகளைக் கிளப்பிவிட, அதற்குத் தேவையான கதைகளைப் பிராமணர்கள் புனைந்து கொடுக்க சாதிப் போராட்டங்கள் நிலைபெற்றன. இந்தப் பிரிவினையை தோற்றுவித்தவர்கள் பிராமணர்கள் அல்லர், ஆதிக்க வர்க்கத்தினர். ஆனால், பிராமணர்கள் தமது அறிவால் இவ்வர்க்கங்களின் போராட்டங்களுக்கான புராணங்களையும் நீதி நூல்களையும் எழுதினர். வேளாளர்களில் நிலக்கிழார்கள் நாட்டு அதிகாரிகளாக இருந்தனர், அரசியல் ஆதிக்கம் நிலக்கிழார்களுக்கு இருந்ததால் அவர்களுடைய ஆதிக்கத்தை வணிக செட்டியார்களான இடங்கை வகுப்பினர் எதிர்த்துப் போராடினர். மேலும், வணிகச் செட்டிகள், வியாபார உரிமைகள், வரிச் சலுகைகள், சுங்கவரி நீக்கம் முதலியவற்றிற்காகவும் போராடினர். வணிகர்களுக்கு எகவை, உகவை, ஒட்டச்சு, பாய், தறி, இறை, தட்டாரப் பாட்டம் என பல வரிகள் இருந்தது பற்றி கல்வெட்டுகள் கூறுகின்றன. அவர்களோடு சேர்ந்து நின்ற கைத்தொழிலாளரும் வரிக் குறைப்புக்காகவும் சமூக அந்தஸ்தைக் காட்டும் சில உரிமைகளுக்காகவும் போராடினர். சமூக அந்தஸ்து என்ற நோக்கில் திருமண விழாக்களிலும் இரட்டைச் சங்கும் கொட்டும் முழக்கலாமென்றும், செருப்புகள் அணியலாம் என்றும், அவரது வீட்டுச் சுவர்களில் வெண்சாந்து பூசலாம் போன்றவையெல்லாம் இடங்கையர் போராடி உரிமை பெற்ற சலுகைகள்(கே. கே. பிள்ளை, தென்னிந்திய வரலாறு). அதே சமயம் எதிரணியில் இருந்த வேளாள நிலக்கிழார்கள் தங்கள் நலனைப் பாதுகாத்துக் கொள்ளவும் தங்களுக்கு ஆதாயமான சமூக அமைப்பைக் கட்டுக்குலையாமல் காப்பாற்றவும் தங்கள் அதிகாரப் பதவிகளைப் பயன்படுத்தினர், இவையே சாசனங்களின் மூலம் அறிய முடிவது.

முதல் ராசராசன் காலத்தில் (10 ஆம் நூற்றாண்டில்) வலங்கை வேளைக்காரப் படைகள், வலங்கைப் பெரும் படைகள் போன்ற குறிப்புகள் உள்ளன. ராசராசன் காலத்திற்குப் பிற்பட்ட கல்வெட்டுகளில், இடங்கை தொண்ணூற்றாறு, இடங்கைத் தொண்ணூற்று சமயத் தொடகை என்ற பெயர்கள் காணப்படுகின்றன. முதற் குலோத்துங்கன் காலத்தில் அவன் வாணிகர்களின் கோரிக்கையை ஏற்றுக் கொண்டு சுங்க வரியை நீக்கியதால் ‘சுங்கம் தவிர்த்த சோழன்’ என வரலாற்றில் இடம் பெறுகிறான் என்று கூறுகிறார் நா. வானமாமலை. சாளுக்கியச் சோழனான முதற் குலோத்துங்கன், தமிழக சோழகுலவழியில் தொடர்ந்து வந்த அரசவுரிமை என்ற வழக்கத்திற்கு மாறான முறையில், தாய்வழி உரிமையில் சோழ ஆட்சியைக் கைப்பற்றினான். அவன் ஆட்சிக்கு வர வணிகர்கள் உதவியதால் அவன் வணிகர்களுக்குச் சுங்கம் நீக்கிச் சலுகை அளித்தான் எனவும், அதுவரை அரசர்களின் ஆதரவு பெற்றிருந்த வலங்கை பிரிவினர் அரச செல்வாக்கை அப்பொழுது இழக்க நேர்ந்ததால் அவன் காலத்தில் வலங்கை-இடங்கை போராட்டங்கள் அதிகமாயின என்று பிற வரலாற்று அறிஞர்கள் கூறும் செய்திகளையும் நாம் இங்கே கவனத்தில் கொள்ளலாம்.

வேளாளர் வலங்கைப் பிரிவின் தலைமையில் இருந்தும் அதை மறுப்பது வழக்கம், காரணம் அவ்வாறு ஏற்றுக் கொண்டால் வலங்கைப் பிரிவில் இருக்கும் உழைக்கும் வர்க்கத்துடன் சமமாக இருக்கும் நிலை ஏற்படும். பிராமணர்கள் வலங்கை-இடங்கைப் பிரிவில் அடங்குவதில்லை, அவர்களைப் போன்றோ அல்லது அவர்களைவிட மேலான குடி எனக் கூற விரும்பும் நோக்கத்தில் வலங்கை அடையாளத்தை ஏற்காது (பிராமணர்கள் செய்தது போலவே) வேளாளர்களும் வணிகர், பிற உழைக்கும் வர்க்கத்தினர் என அனைவரையும் தமக்குக் கீழ் நிலையில் வைக்க விரும்பி கதைகள் எழுதினர், இதற்குப் போட்டியாக க பிராமணர்களும் தங்கள் உயர்நிலை தகுதி குறித்து கதைகள் எழுதிக் கொண்டனர்(கே. கே. பிள்ளை, தென்னிந்திய வரலாறு). நிலக்கிழார்களுக்கு ஆதரவாகவும் தங்களுக்கு ஆதரவாகவும் பிராமணர்கள் புனைந்து எழுதிய புராணக் கருத்துக்களின் அடிப்படையில் அவர்கள் வலங்கை-இடங்கைப் பிரிவினையை ஏற்படுத்தியதாகக் காட்டவும் படுகிறார்கள்.

நூல்வாசிப்பு தந்த பிரதிபலிப்பு:

ஒருவரை இழிவாக நடத்தும்பொழுது, உளவியல் அடிப்படையில் தாக்குதலுக்கு உள்ளானவர் அதை மறுக்க எவ்வாறு நடவடிக்கை எடுப்பார் என்பது இந்நூலின் மூலம் அறியமுடிகிறது. முள்ளை முள்ளால் எடுப்பது போல, தொன்மக்கதைகள் புனைந்து அதனால் ஒடுக்கப்பட்டோர், தாங்கள் வளம் பெற்றவுடன் அவர்களும் தொன்மக் கதைகள் மூலமே தங்கள் சமூக நிலையை உயர்மட்டத்திற்குத் தள்ள முயன்றுள்ளார்கள் என்பது வரலாறு காட்டும் படிப்பினை.

திரிசிரபுரம் மகா வித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை அவர்கள் இரு லட்சக் கவிகளுக்குமேல் பாடியிருப்பதாகக் கூறப்படுகிறது. தல புராணங்கள் பல பாட அழைக்கப்பட்டார் என்பதும் தமிழிலக்கிய வரலாறு. இந்த நூலைப் படித்த பிறகு, அவ்வாறு பாடல்களை இயற்றச் சொல்லி வேண்டியோரின் மறைமுக நோக்கமும் இவ்வாறாக இருக்கலாமோ? அந்த இலக்கியங்களில் சாதிக் குறிப்புகள் ஏதேனும் உள்ளனவா என்றும், இக்கோணத்தில் மீளாய்வு செய்தால் ஏதேனும் தகவல் கிடைக்கலாமோ என்ற எண்ணம் தோன்றுவதைத் தவிர்க்க இயலவில்லை.

வலங்கை – இடங்கை கலகத்தில் ஒவ்வொரு பிரிவினரும் அடுத்தவரை மட்டம் தட்ட பிராமணர்களிடம் சென்று மாற்றி மாற்றி நேயர் விருப்பம் போல புராணம் புனைந்து சொல்ல வேண்டிக் கொண்டிருந்த நிலையும், அவர்களும் போட்டிக்கு தங்கள் நிலையை காப்பாற்றிக் கொள்ள தங்களை உயர்த்தி கதைகள் எழுதிக் கொண்ட முறையும், சிறுவயதில் கேட்ட குரங்கு ஆப்பம் பங்கிட்ட கதையையோ அல்லது மண்வாசனை திரைப்படத்தில் எசப்பாட்டு பாடுபவர்கள் எதிரெதிர் அணியினரிடம் காசு வாங்கிக்கொண்டு அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க “பாட்டுக்குப் பாட்டெடுப்பேன்… எதிர்ப்பாட்டு நான் படிப்பேன்… அட… துட்டக் கொஞ்சம் வெட்டப்பா… நான் கட்டப்போறேன் மெட்டப்பா” என்று பாட்டுப்பாடி கல்லா கட்டிய காட்சியையோ நினைவுக்குக் கொண்டுவருகிறது.

இன்று தமிழகத்தில் எந்த மூலையிலும் சிதைந்த கோயில்களோ, அவற்றின் உடைந்த சிற்பங்களோ செய்தித்தாள்களில் தொல்லியல் கண்டுபிடிப்பு என்று அறிவிக்கப்பட்டால் முதலில் அனைவரும் அதனை இஸ்லாமிய ஊடுருவல், மாலிக்காபூர் படையெடுப்பின் விளைவு என்று குறிப்பிடத் தவறுவதில்லை. மாலிக்காபூரின் தமிழகம் மீதான படையெடுப்பு நிகழ்ந்த 14 ஆம் நூற்றாண்டில் இடங்கை வலங்கை போராட்டங்களும் உச்சத்தில்தான் இருந்தன. இந்தப் போராட்டங்களில் எதிரணியினரின் கோயில்களைச் சிதைப்பதும் கொள்ளையடிப்பதும் இத்தகைய சாதிப் போராட்டங்களில் நிகழ்ந்தன என்பதற்கு தொல்லியல் சான்றுகள் உள்ளன. ஆம்! உண்மை, இந்துக் கோயில்களை அழித்தொழிக்கப் பிற சமயத்தினர் வரவேண்டியத் தேவையிருக்கவில்லை. அவர்களே தங்களது எதிரணியினர் உடைமைகளை, கோயில்களை, கிராமங்களைச் சூறையாடினர்; தங்கள் கடவுள்களின் கோயில்களை தாமே அழித்தனர் என்பதையும் வரலாற்றுப் பதிவுகளாக இந்த நூல் காட்டுகிறது. இனி அடுத்தொருமுறை மாலிக்காபூரை நாம் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் முன்னர் சற்றே நிதானித்து உண்மை என்ன என்று மேலும் ஆராய்வோம்.

இன்று ஒரே குலத்தின் கிளையினர் என்றோ அல்லது ஒரு சாதிப்பிரிவுகளுக்குள் அடங்குவோர் என்றோ கூறிக்கொள்ளும் சில பிரிவினர் உண்டு. சாதிப்பெயர்களும் பட்டப்பெயர்களும் கூட ஒத்தவாறே இருக்கலாம். ஆனால் கொள்வினை கொடுப்பினையாக மணவுறவு கொள்ளாதவர்களாக இருப்பார். இந்நூலைப் படித்த பிறகு தோன்றுவது, செய்த தொழிலின் அடிப்படையில் இக்குலங்களின் மூத்தோர் முற்காலத்தில் இவ்வாறு இடங்கை வலங்கை என்று பிரிந்து போயிருந்திருப்பார்களோ, ஒருவருக் கொருவர் கொண்டு கொடுத்து மணம் செய்யும் வழக்கு சண்டை சச்சரவினால் இல்லாமல் போயிருக்குமோ, முன்வரலாறு தெரியாமல் இக்காலச் சந்ததியினர் இன்றும் வழக்கத்தை மாற்றாது இருக்கிறார்களோ என்ற எண்ணமும் எழுகிறது.

ஆசிரியர் கூறும் கருத்தான; வர்க்கப் போராட்டத்தில் பிரிந்துபட்ட சாதிகளுக்கு இடையே வளர்த்துவிடப்பட்ட போராட்டமானது, மேல்குடியினர் உழைப்போரை தங்களது ஆதாயத்திற்காகப் பிரித்தாளும் சூழ்ச்சியால், அவர்கள் உணர்வுகளைத் தூண்டிவிட்டு ஒன்று சேரவிடாமல் வைத்திருந்ததன் விளைவு என்ற கருத்து மேலும் ஆராய வேண்டிய ஒரு கருத்து. பொதுவாக, 19, 20 ஆம் நூற்றாண்டுகளில் திடீரென வலங்கை இடங்கை போராட்டங்கள் மறைந்தன. இன்றுள்ளோருக்கு இவ்வாறு பிரிவினைகள் இருந்தது என்பதும் தெரியாது. இப்போராட்டங்கள் மறைந்த காரணமும் தெரியாது. வரலாற்று ஆய்வாளர்கள் மட்டுமே அறிந்தவை இப்பிரிவினைகளும் அதனால் விளைந்த போராட்டங்களும். நூலாசிரியரின் ஆய்வின் அடிப்படையில் மேலும் சிந்தித்தால், ஆங்கிலேயர் ஆட்சி முழுவீச்சில் இருந்த பொழுது அரசர்களும், அவர்கள் தங்கள் நலனுக்காக ஆதரித்தவர்களும் பொதுமக்கள் மீது கொண்டிருந்த அதிகாரத்தை இழந்தார்கள் என்பது வரலாற்று உண்மை. அதாவது சமுதாயத்தில் பொதுமக்கள் மீது சத்திரிய-பிராமண இணையின் ஆதிக்கம் ஒழிந்தது. அதனால் மறைமுகமாகச் சச்சரவு தூண்டப்படுவதும் நின்றிருக்கலாம். ஆங்கிலேய ஆட்சியின் நீதிமன்றங்கள், பொதுவான சட்டங்கள், பொதுவான வரி மற்றும் சலுகைகள் போன்றவை ஏற்பட்டு கலகத்தின் தேவையும் இல்லாமல் போயிருக்கலாம். எல்லோருக்கும் பொதுநீதி என்றால் மனக்குமைச்சலும் அதனால் வெடிக்கும் போராட்டங்களும் இல்லாது போகும் என கணிக்கலாம். எரிவதைப் பிடுங்கிய பிறகு கொதிப்பது நின்றிருக்கலாம். இது குறித்து சமூக ஆய்வாளர்கள்தான் தங்கள் ஆய்வின் வழி விளக்க முடியும்.

இந்த நூல், சாதி மேல் நிலையாக்க முயற்சிகளைச் சான்றுகளோடு விளக்குவதும், வலங்கை-இடங்கைக் கலகங்கள் வர்க்கப் போராட்ட அடிப்படையில் பொருள்முதல்வாத கோணத்தில் நா. வானமாமலை அவர்களால் விளக்கப்பட்டுள்ளதும் தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள் குறித்த ஆய்வாளர்களுக்கு மறுக்கமுடியாத ஒரு மாற்றுக் கோணத்தை முன்வைக்கிறது என்பதில் இந்நூலைப் படிப்போருக்கு மாற்றுக்கருத்திருக்க வாய்ப்பில்லை.

____________________________________________________________________

 அச்சுப்பதிப்பாக:

தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள், நா. வானமாமலை

https://www.panuval.com/saadhi-samathuva-poraatta-karuthugal-3680254

வெளியீடு: பாரதி புத்தகாலயம்; விலை: Rs. 25

ISBN: 9789381908365

 மின்னூலாக:

தமிழ்நாட்டில் சாதி சமத்துவப் போராட்டக் கருத்துகள், நா. வானமாமலை

http://www.tamilvu.org/library/nationalized/pdf/84-navanamamalai/tamilnattilsathisamathuvap.pdf

https://ta.wikisource.org/s/2ezr

நா. வானமாமலை அவர்களின் நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்கள் மேலும் சில:

http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-84.htm

____________________________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழகத்துச் சாதி சமத்துவப் போராட்டங்கள்”

அதிகம் படித்தது