மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக காவல்துறையின் மெத்தனமும், சாதீய வன்முறைகளும்.!

சுசிலா

Mar 3, 2018

Siragu pirappokkum1

சமீபகாலமாக நம் மாநிலத்தில், சாதி ரீதியான கொடுமைகள் பெருகி வருகின்றன என்பது மிகவும் வேதனையான ஒன்று. சாதி ஒழிப்பிற்கு மிகப்பெரிய அளவில் துணையாக இருப்பது, இந்த சாதி மறுப்புத் திருமணங்கள் தான். நம் சமூகம் சாதி என்ற புற்றுநோயில் புரையோடி இருந்த காலம் எல்லாம் கடந்து, தற்போது ஆரோக்கியமான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று நாம் என்னும் சமயம் தான் இது போன்ற செய்திகள் வருகின்றன. சில நாட்களுக்கு முன்பு, நாம் எல்லோரும் அறிந்த ஒரு செய்தி தான். தூத்துக்குடி மாவட்டம் புன்னைக்காயல் என்ற ஊரில், “கிராம பஞ்சாயத்து” என்ற பெயரில், அவ்வூர் மக்களில் சிலர், ஒன்றுகூடி, சாதி மறுப்புத் திருமணங்கள் செய்துகொண்ட 12 குடும்பத்தவர்கள் ஊருக்குள் நுழையக் கூடாது என்றும், ஊரில் வசிக்க தகுதியற்றவர்கள் என்றும், மணமக்களுக்குரிய அடிப்படை வசதிகளை, உரிமைகளை பறிக்கும் விதமாக சில முடிவுகளை எடுத்து, கிராம பஞ்சாயத்து என்ற போர்வையில், கட்டப் பஞ்சாயத்து செய்து, தண்டோரா போட்டு அறிவிப்பு செய்திருக்கிறார்கள்.

siragu saatheeiya vanmurai

எந்த அளவிற்கு கடுமையான ஒரு சாதிய வன்முறை இது. வளர்ந்து, முன்னேறி வரும் நம் சமூகம் நாகரீகம் என்ற ஒருவளர்ச்சிப் பாதையில் சென்றுகொண்டிருக்கும்போது, இதுபோன்ற, காட்டுமிராண்டித்த தனமான செய்கைகள் நம்மை அதால பாதாளத்திற்குள் தள்ளிவிட்டு விடாதா… மிகவும் கண்டனத்திற்குரிய செய்கை அல்லவா இது. இவ்வளவு தூரம் செல்வதற்கு, அந்த ஊரின் காவல்துறை எப்படி அனுமதித்தது. இம்மாதிரி ஒரு நிகழ்வு, அந்த மாவட்ட ஆட்சியரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா என்ற கேள்வி நம் எல்லோரின் மனதிலும் வருகிறதல்லவா. தண்டோரா போடுமளவுக்கு சென்றிருக்கும்போது, இதனைப்பற்றிய செய்தி, மேலதிகாரிகளுக்குத் தெரியாமல் இருந்திருக்குமா. தெரியாமல் நடக்க வாய்ப்பில்லை. தெரிந்திருந்தது நடந்திருந்தால், இதன் பின்னல் உள்ளவர்கள் அனைவருமே உடந்தை என்பது தானே உண்மையாகயிருக்க முடியும்.

சில நாட்களுக்கு முன்பு, இதே மாவட்டத்தில் தான், அமைதியான முறையில், நடந்துகொண்டிருந்த மார்க்சிய கம்யூனிஸ்ட் மாநாட்டில், தேவையில்லாமல், வேண்டுமென்றே, காவல்துறை தாக்குதல் நடத்தி அவப்பெயர் வாங்கிக்கொண்டது. தேவையான இடத்தில், தங்களின் சேவையை சரியான முறையில் செய்ய வேண்டும் என்ற ஒரு புரிந்துணர்வு கூட இல்லாமல், காவல்துறையினர் இருக்கலாமா? மேலும் திராவிடக் கொள்கைகள் சார்ந்த அமைப்பைச் சேர்ந்தவர்களின் பொதுக் கூட்டங்களுக்கு அனுமதி மறுப்பு என்று அவர்களை அலைக்கழிப்பது போன்ற செயல்களெல்லாம் வன்மையாக கண்டிக்கக்கூடியவை.

சென்றவாரத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு கொடுமையை நம்மால் சீரணிக்க முடியவில்லையே. ஆராயி என்ற அந்தப் பெண்ணிற்கும், அவருடைய குடும்பத்திற்கும் நேர்ந்த கொடுமையை சொல்லிமாளாது. தலித் குடும்பம் என்பதாலே இந்தக் கொடுமை நடக்கிறது என்றால், நம் சமூகம் வெட்கப்பட வேண்டாமா..? எட்டு வயது சிறுவனை வெட்டிக்கொன்று, தாயையும், பன்னிரெண்டு வயது மகளையும் பாலியல் வன்புணர்வு செய்யுமளவிற்கு மனிதநேயமில்லாமல் போயிருக்கிறது… இப்போதும் பாதிக்கப்பட்ட தாயும், மகளும் சுயநினைவின்றி இருக்கிறார்கள் என்ற செய்தி நம் இதயத்தை குத்திக் கிழிக்கிறதல்லவா… அதிலும் சாதி மையமாக வைத்து, இந்தக் கொடுமை அரங்கேறியிருக்கிறது என்றால், நாம் சுதந்திரமான, நாகரீகமான நாட்டில் தான் வாழ்ந்துகொண்டிருக்கிறோமா என்ற சந்தேகம் தான் வலுக்கிறது. இதில் உச்சபட்ச கொடுமை என்னவென்றால், இன்னமும் குற்றவாளிகளை காவல்துறை கண்டுபிடிக்கவில்லை என்பது தான்.!

siragu saatheeiya vanmurai2

ஏற்கனவே, ஆணவக்கொலைகள் என்ற பெயரில், சாதிவெறி தலைவிரித்து ஆடிகொண்டிருக்கிறது. இன்னமும், பல ஆணவக்கொலைகளுக்கு பின்னணியில் இருப்பவர்களைக் கண்டும், காணாதது போலத்தான் ஆதரித்துக் கொண்டிருக்கிறது காவல்துறை. பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க வழியில்லாமல் செய்வது என்பது, அரசாங்கத்திற்கு ஏற்படும் ஒரு கெட்டபெயர். சமூகத்திற்கு ஏற்படும் ஒரு இழிவு. நீதியில்லாத சமூகம் சீரழிந்து விடுமல்லவா. சாதியின் பெயரால், நடக்கும் வன்முறை, கொலைகள், பாலியல் வன்கொடுமைகள் மிகவும் கண்டனத்துக்குரியது. இதில், அரசாங்கம் உடனடியாக தலையிட்டு, காவல்துறையினரை முடுக்கிவிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

தென் மாவட்டங்களிலுள்ள இந்த சாதிவெறி, ஒழிய தமிழக அரசு போர்க்கால நடவடிக்கையில், சீரமைக்க ஆவண செய்யவேண்டும். காவல்துறை தங்களுடைய கடமைகளை செவ்வனே செய்வதற்கு வலியுறுத்தப்பட்ட வேண்டும். சாதி ஒழிப்பிற்காக தந்தை பெரியார் அவர்களின், பல போராட்டங்களும், நீதிக்கட்சியின் செயற்கரிய திட்டங்களும், கல்வி வள்ளல் திரு. காமராசர் அவர்களின் சிலமுன்னேற்பாடுகளும், அதன் பிறகு வந்த திராவிடக்கட்சிகளின் இடஒதுக்கீடு முறைகளும் நம்மை இந்த அளவிற்கு முன்னேற்றி உலகளவில், நமக்கென்று ஒரு முக்கிய இடத்தை பெற்றுத் தந்திருக்கிறது என்று கூறினால் மிகையில்லை. போராடிப் பெற்ற இந்த உரிமைகளை, பாதுகாக்க வேண்டிய ஒரு அரசாங்கமே, காவல்துறையே தடுக்காமல், பேராபத்திற்குத் துணை போனால், மக்கள் என்ன செய்வார்கள் என்பதை அரசு சிந்தித்து செயல்படட்டும்.

மீண்டும் இது போன்ற சாதிய கொடுமைகளும், வன்முறைகளும், பாலியல் வன்கொடுமைகளும் நடவாமல் தடுப்பதற்கான வழிமுறைகளைக் கையாளட்டும். விரைவில், குற்றவாளிகளைக் கண்டுபிடித்து, தக்க தண்டனைகளை அளிக்க தயங்காமல் முன்வரட்டும்.

இந்த சாதிவெறி என்பது, ஒரு சமூகத்தை முன்னேறவிடாமல், புதைகுழிக்குள் அமிழ்த்தக்கூடிய ஒன்று என்பதை அரசு உணர வேண்டும். எந்த வகையில் சாதிவெறி நுழைந்தாலும், அதனை உடனே இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கப்பட்ட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. காவல்துறை மக்களை பாதுகாக்கத் தானே ஒழிய, குற்றவாளிகளை காப்பாற்ற அல்ல என்பதை உணர்ந்து செயல்படட்டும்.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக காவல்துறையின் மெத்தனமும், சாதீய வன்முறைகளும்.!”

அதிகம் படித்தது