செப்டம்பர் 18, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இன்றைய நிலை என்ன?

பா. வேல்குமார்

Aug 27, 2016

Siragu-assembly1

தமிழக சட்டபேரவை கூட்டம், நடக்க ஆரம்பம் ஆனதில் இருந்தே வெளிநடப்பு என்ற ஒன்றும் நடந்து கொண்டிருக்கின்றது.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் நடந்த சட்டப் பேரவை கூட்ட விவாதத்தின்போது, ஆளுங்கட்சியின் நடவடிக்கைகளும் சரி, எதிர் கட்சிகளின் நடவடிக்கைகளும் சரி திருப்திகரமாக இல்லை என்பதே உண்மை.

ஒவ்வொரு துறை ரீதியான விவாதத்தின் போதும், இது எங்களுடைய ஆட்சிக் காலத்தில் நடந்தது, உங்களுடைய ஆட்சிக் காலத்தில் என்ன செய்தீர்கள் என்னும் குழாயடிச் சண்டைதான் நடந்து கொண்டிருக்கின்றது.

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளாகிய நாம், நம்முடைய தொகுதியின் தேவை என்ன, அடுத்து மக்களுக்கு என்ன நலத்திட்ட உதவிகளை செய்யலாம், அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மக்களுக்கும் கிடைத்துள்ளதா என்று பார்க்காமல், ஒருவரை ஒருவரை சரமாரியாக குற்றம் சுமத்திக் கொண்டு, சட்டப் பேரவையின் பொன்னான நேரத்தை வீணடிப்பதுதான் தங்கள் நிலைப்பாடாகக் கொண்டுள்ளனர் என்பதை அழுத்தம், திருத்தமாக நிமிடத்திற்கு ஒருமுறை நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர்.

என்ன திட்டம், யார் கொண்டு வந்தால் என்ன, மக்களுக்கு அதனால் நன்மை ஏற்படுகிறதா என்பதை ஏன் இரு கட்சிகளும் உணர மறுக்கின்றனர்.

படித்து முடித்து விட்டு பல லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலை இல்லாமல் உள்ளனர், அவர்களது வேலை வாய்ப்பிற்கு என்ன செய்யலாம் என்பதை ஆட்சியாளர்கள் எப்போது சிந்திக்க போகின்றார்கள்.

ஒருபுறம் வேலை வாய்ப்பின்மையும், மறுபுறம் அரசு துறையில் ஏராளமான காலிப் பணியிடங்களும் எண்ணற்ற பல பணிகள், கடமைகள் இருக்கும் போது, அதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு, எந்நேரமும் சண்டை போடுவதை தயவு செய்து அனைத்து கட்சிகளும் நிறுத்திக் கொள்ள வேண்டும்.

Siragu-assembly3

ஜனநாயகத்தில் மக்கள் தான் எஜமானர்கள், அம்மக்களுக்கு பணி செய்யும் சேவகனாக தான் நம்மை மக்கள் பிரதிநிதிகளாக தேர்ந்தெடுத்து உள்ளார்கள் என்பதை அனுதினமும் சிந்தித்து செயல்படுங்கள்.

ஓட்டு போடுவதோடு அவர்கள் கடமை முடிந்து விட்டு யாரும் நம்மை கேள்வி கேட்க முடியாது, என்னும் அலட்சியப் போக்கோடு செயல்படுவதை தயவு செய்து நிறுத்திக் கொள்ளுங்கள்.

சபாநாயகராக இருக்கும் ஒருவர் நடுநிலைமையோடு, அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் பேச வாய்ப்பு அளிக்க வேண்டும், அதனை விடுத்து ஆளுங்கட்சி என்றால் பேச அதிக நேரம் கொடுப்பதும், எதிர்க்கட்சி உறுப்பினர் என்றால் பேசுவதற்கு குறைவான நேரம் கொடுப்பதும், தவறு.

ஒவ்வொரு துறை ரீதியான விவாதத்தின் போதும், மானியக் கோரிக்கையின் போதும் சட்டமன்ற உறுப்பினர் ஒவ்வொருவரும் பேசும் போது, ஒருவர் பேசி முடித்தபின்பு, பொறுமை காத்து அதன்பின்பு பேச வேண்டும். சபாநாயகர் என்பவர் அனைவருக்கும் பேசுவதற்கு சரிசமமாக வாய்ப்பு அளிக்க வேண்டும்.

தமிழகத்தின் நிதிச் சுமையின் நிலைமையும், பொருளாதார மந்த நிலையும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் தமிழகத்தின் வளர்ச்சி நிலை எவ்வாறு இருக்கப்போகின்றது என்பது பற்றியும் கலந்துரையாடுவதை விட்டு விட்டு, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு அளிக்காமல், அவர்களை இடைநீக்கம் செய்து உத்தரவிட்டது எந்த வகையில் நியாயம்.

சபாநாயகரின் எதிர் கட்சி உறுப்பினர்களை நீக்கும் இந்த நடவடிக்கை தமிழக சட்டமன்றத்தில் மக்களாட்சி என்ற ஒன்று உள்ளதா என்பது கேள்விக்குறியாக உள்ளது. உறுப்பினர்களை நீக்கும் இந்த நடவடிக்கை அவரது முடிவு என்றாலும், எதிர்க் கட்சி உறுப்பினர்கள் அவை நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் இருப்பது அவரை தேர்ந்தெடுத்த மக்களுக்கு கொடுக்கப்படும் தண்டனையாகத்தான் நாம் பார்க்க வேண்டி இருக்கிறது.

மேலும் அவை நிகழ்வுகள் அனைத்தையும் மக்கள் பார்க்க வேண்டும், நாம் என்ன பணி செய்கின்றோம், எப்படிப்பட்ட திட்டங்கள் எல்லாம் மக்களுடைய வளர்ச்சிக்குப் பயன்படும் என்பதை சட்டமன்றத்தில் எவ்வாறு விவாதம் செய்கின்றோம் என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த சட்டமன்ற கூட்டத் தொடரை நேரலை ஒளிபரப்பு செய்வதில் அரசுக்கு என்ன தயக்கம்.

நேர்மை உள்ளவர் எதற்கும் பயப்படமாட்டார், சட்டப்பேரவை நிகழ்வுகள் அனைத்தையும் நேரலை செய்வதற்கு அரசிடம் நிதி இல்லை என்று பொறுப்பற்ற முறையில் பேசுவது, உங்களை சட்ட மன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்த சாமானியராக எங்கள் காதில் பூ சுற்றுவது போல் உள்ளது.

மக்களாட்சியின் நான்காவது தூணான ஊடகத் துறை கேள்வி கேட்பதைப்போன்று, எங்களை ஆள்வதற்கு, மக்கள் பிரதிநிதிகளான உங்களை தேர்ந்தெடுக்கும் உரிமை மட்டுமல்ல, கேள்வி கேட்கும் உரிமையும் சாமானியரான எங்களுக்கு உள்ளது.

எதிர்க்கட்சிகள் என்றாலே ஆளுங்கட்சியைக் குறை சொல்வதுதான் வாடிக்கையாக வைத்துள்ளனர் என்ற எண்ணத்தை ஆளுங்கட்சிகள் தயவு செய்து மாற்றிக் கொள்ள வேண்டும். தவறு செய்யாமல் மனிதன் இல்லை, அவ்வாறு தவறு செய்யும்போது அடுத்த முறை நம் தவறை சரி செய்துகொள்ளும் மனப்பக்குவம் ஆளும் கட்சிக்கும், எதிர் கட்சிக்கும் வர வேண்டும்.

தவறை எதிர்க் கட்சிகள் சுட்டிக் காட்டும்போது அதனை ஏற்றுக் கொள்ளும் மனப் பக்குவம் வேண்டும், ஆளும் ஆட்சியாளர்கள் மனதில் வர வேண்டும்.

தமிழகத்தின் அடுத்த வளர்ச்சி நிலையை ஒவ்வொருவரும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கின்றனர். அறிவுப்பூர்வமாக சிந்தித்து, ஆக்கப்பூர்வமாக மக்களுக்கு நன்மை பயக்கும் திட்டங்களை, செயல்பாடுகளை செய்யுங்கள்.

மக்கள் ஒவ்வொருவரும் பார்த்துக் கொண்டு இருக்கின்றார்கள்….


பா. வேல்குமார்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக சட்டப் பேரவை கூட்டத் தொடரின் இன்றைய நிலை என்ன?”

அதிகம் படித்தது