தமிழக சிறு வியாபாரிகள் வீழ்ச்சியும், அந்நிய நாட்டு வியாபாரிகள் வளர்ச்சியும்
ஆச்சாரிMay 24, 2014
மதுரையில் பிரபலமான ஒரு உணவகத்திற்குள் சாப்பிடச் சென்றேன். அங்கே எனக்கு சைவ சாப்பாடு வேண்டும் என்றேன். கொண்டு வந்து வைத்தனர். ஒரு கிண்ணத்தில் வைத்த அளவுச் சாப்பாட்டில் சாம்பார், காரக்குழம்பு, ரசம் என ஊற்றி சாப்பிட்டப்பிறகு, இறுதியில் மீதமிருந்த சோற்றை தயிரில் பிசைந்து சாப்பிடலாம் என நினைந்து பரிமாறுபவரைப் பார்த்தேன். பரிமாறுபவர் என்னிடம் வந்து “உங்களுக்கு தயிர் வேணுமா? பெப்சி வேணுமா?” என்றார். இவர் கேட்ட கேள்வி என்னை அதிர வைத்தது. நான் குழம்பிய நிலையில் பெப்சிக்கும் தயிருக்கும் என்ன தொடர்பு? நீங்கள் கேட்பதே புரியவில்லையே, பெப்சியை எப்படி சோற்றில் ஊற்றிச் சாப்பிட முடியும்? என்று கேட்டேன்.
அதற்கு அவர் “வேறு ஒன்றுமில்லை, பெப்சி நிறுவனத்தார் எங்கள் உணவகத்தோடு ஒரு ஒப்பந்தம் போட்டிருக்கிறார்கள். அதன்படி, சாப்பாடு சாப்பிட வருபவர்களிடம் தயிருக்குப் பதிலாக நாங்கள் பெப்சியை சிபாரிசு பண்ண வேண்டும். அதனால்தான் நான் அவ்வாறு கேட்டேன் என்றார். இவரின் பதில் அதிர்ச்சியைத் தந்தது, கடைசியாக தயிரை வாங்கி சோற்றோடு பிசைந்து சாப்பிட்டபடி சுற்றிலும் சாப்பிடுபவர்களைக் கவனித்தேன். தயிரின் இடத்தை பெப்சி ஆக்கிரமித்ததையும், தயிர் அடியோடு நிராகரிக்கப்பட்டிருப்பதையும் என்னால் உணரமுடிந்தது.
நம் தமிழர்களுக்கு, தமிழ்நாட்டின் தட்பவெப்ப நிலைக்கு ஏற்ற பானம் பெப்சி,கொக்கோ கோலாவா? இல்லை தயிர், மோர், இளநீரா? இந்தக் கேள்விகளை எல்லாம் கடந்து அடிப்படை உணவான பாலோடு, பன்னாட்டுக் குளிர்பான சந்தை போட்டியிடுவது அபாயகரமானது. நம்நாட்டு ஏழைக்கூலிகளும், விவசாயிகளும் ஓரிரண்டு பசுமாடுகளை வைத்துக்கொண்டு கறந்த பாலை கூட்டுறவு பண்ணைகளில் விற்று பிழைக்கும் நம்மவர்கள் சமீபகாலமாக ஒரு மனக்குமுறலை வெளிப்படுத்துகின்றனர். “வாரத்தின் சில நாட்களில் கூட்டுறவுப் பண்ணைகளில் பாலை வாங்க மறுக்கிறார்கள். இதனால் எங்களுக்கு வருமானம் பாதிக்கிறது என்பதே அந்தக் குமுறல். ஏழை விவசாயிகள் உற்பத்தி செய்யும் பால் அரசுப் பண்ணைகளில் புறக்கணிக்கப்படுகிற அதே வேளையில், தனியார் பால் நிறுவனங்கள் விளம்பரங்களில் கொடிகட்டிப் பறக்கத் தொடங்கி விட்டன. (மினரல்) தண்ணீருக்கே விளம்பரம் வந்துவிட்ட பிறகு, பால் எம்மாத்திரம்?
சித்தி ராதிகாவையும், பிரபாவதி யுவராணியையும், கோலங்கள் தேவயானியையும் காட்டி ஏழை விவசாயிகள் பாலுக்கு விளம்பரம் செய்ய முடியுமா? தனியார் நிறுவனத் தயாரிப்பான விளம்பரப் பாலில் நறுமணம் வீசுகிறதாம், இங்கே தனியார் நிறுவன பாலோடு போட்டி போடுவதே இயலாது என்கிற போது, பன்னாட்டுக் குளிர்பான சந்தையை இவர்களால் எதிர்கொள்ள முடியமா?
இந்தியக் குளிர்பான சந்தையில் 93 விழுக்காட்டை அமெரிக்காவின் பெப்சியும், கொக்கோகோலாவும் ஆக்கிரமித்திருக்கின்றன. சிறுதொழில்கள் என்ற அடிப்படையில் உற்பத்தி செய்யப்பட்ட உள்நாட்டு குளிர்பானங்கள், முகவரியை இழந்து ஆண்டுகள் பல ஆகிவிட்டன. இந்தப் போக்கினால் அமெரிக்க முதலாளிகள் வளர்வதற்குத்தான் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது. உலகமயமாக்கல், தாராளமயமாக்கல், புதிய பொருளாதாரக்கொள்கை தந்திருக்கும் பரிசே இது. ஆனால் நமது நாட்டின் பொருளாதாரக் கொள்கை சுதேசிக் கொள்கையின் அடிப்படையில் தான் அமைந்திருக்கிறது என்று வாய் கூசாமல் அறிக்கை விட்டார் நம் நாட்டு உள்துறை அமைச்சர்.
நம் நாட்டில் இருக்கும் சிறுதொழில் உற்பத்தியாளர்கள் தங்கள் விளம்பரத்திற்காக நடிகர் அமிதாப் பச்சனையும், விஜயையும் பல கோடிகள் தந்து விலைக்கு வாங்க முடியுமா? மேலும் இந்தக் குளிர்பான விளம்பரத்திற்கு நமது கலைச் செல்வங்கள் பலிகடாவாக்கப்படுகின்றன. சென்னை நகரில் உழைக்கும் வர்கத்தினரின் தேசிய கீதமான கானா பாடல்கள் கடற்கரை காற்றை விட சுகம் தருபவை. இப்பாடலின் மெட்டுக்கள் திரைப்படங்களில் இடம்பெற்ற பின்பே சென்னை நகரைக் கடந்து புகழ்பெற்றன. ஆனால் இப்போது பன்னாட்டு வியாபார நிறுவனங்களும் தமது விளம்பரச் சுரண்டலுக்கு இப்பாடல்களில் ஈர்ப்பைப் பயன்படுத்தத் துவங்கிவிட்டன.
ராப் வுடுடா
கானாவிலே கலாய்க்கலாம்” – என்று சில கோடி வாங்கிக் கொண்டு நடிகர் விஜய் நடனமாடும் கொக்கோகோலா விளம்பரத்தில் கானாப் பாடலின் சாயல் மூலம் காட்டுகிறது.
நம்மைக் காட்டிலும் பன்னாட்டு நிறுவனங்கள் நமது கலைச் செல்வங்களை நன்கு ஆராய்ச்சி செய்து தெரிந்து வைத்திருக்கின்றன. அந்நியப் பொருட்களை நம்மிடம் விற்பதற்கான சுதேசி முறைகளை அவை நன்கு கற்று வைத்திருக்கின்றன. இன்னும் சில நாட்கள் போனால் நம் மண்ணின் தாலாட்டுப் பாடல்களில் பெப்சியும், தெம்மாங்குப் பாடல்களில் கொக்கோ கோலாவும் புகுந்து விளையாடும்.
அமெரிக்காவின் பெப்சிக்கும் கொக்கோகோலாவிற்கும் இங்குள்ள அடித்தட்டு மக்கள் கலாச்சாரத்தில் என்ன வேலை என்ற கேள்வியை யாரும் பொதுவாக எழுப்புவதில்லை. ஒரு முறை முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டன் இந்தியா வந்தபோது, ஒரு முறை தோளில் துண்டுடன் காட்சியளித்தார். அதைப் பார்த்ததும் “அப்படியே அவர் நம் நாட்டுக்காரர் போலவே இருக்கிறார் என்று நமது பத்திரிக்கைகளும், தொலைக்காட்சிகளும் சிறுபிள்ளைத்தனமாக வர்ணித்தன. இந்த மனநிலைதான் பெரும்பாலான நுகர்வோர்களிடம் உண்டு. பன்னாட்டு முதலாளிகள் வியாபாரத்திற்காக நமது கலைச்செல்வங்களையும், காசையும் பறிகொடுக்க வேண்டும் என்பது நமது விதியா என்ன?
ஆதலால் புதிய பொருளாதாரக் கொள்கை, உலகமயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற வார்த்தைகள் படித்தவர்களுக்குப் புரிகிறதோ இல்லையோ, படிக்காத சிறுதொழில் செய்து பிழைக்கும் நம் நாட்டு ஏழை விவசாயிகள் அதன் பலனை அனுபவிக்கத் துவங்கிவிட்டனர். ஆனால் தற்போது தமிழ்நாட்டு வியாபாரிகள் சங்கத்தினர்கள் சில்லரை வணிகத்தில் அந்நிய முதலீடு கூடாது என்று ஆர்ப்பாட்டம் செய்து வரும் செயல்பாடு தமிழக சிறு வியாபாரிகளுக்கும், பொது மக்களுக்கும் ஆறுதல் அளிக்கும் செய்தியாக இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக சிறு வியாபாரிகள் வீழ்ச்சியும், அந்நிய நாட்டு வியாபாரிகள் வளர்ச்சியும்”