தமிழக மீனவப் பெண்ணுக்கு அமெரிக்காவில் விருது
சா.சின்னதுரைOct 31, 2015
கடல் வள பாதுகாப்பிற்கும், மீனவப் பெண்கள் வாழ்வு உயர்வுக்கும் பாடுபட்ட, தமிழக மீனவப் பெண் லட்சுமிக்கு, அமெரிக்காவில் இயங்கிவரும் ‘சீகாலஜி’ சர்வதேசத் தொண்டு நிறுவனம் சிறந்த தனிநபருக்கான விருதை வழங்கி கவுரவித்துள்ளது. தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் ‘சீகாலஜி’ விருது பெறுவது இதுவே முதல்முறையாகும். அவருடன் ஒரு நேர்காணல்:
உங்களைப்பற்றி?
லெட்சுமி: ராமேசுவரத்திலிருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சின்னப்பாலம் மீனவக் கிராமம், சுனாமி குடியிருப்பில் வசித்து வருகிறேன். வங்கக்கடலில் உள்ள மன்னார் வளைகுடா மற்றும் பாக் நீரணைப் பகுதியில், ‘மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பு’ இயங்கி வருகிறது. இந்த கூட்டமைப்பின் தலைவராக நான் பொறுப்பு வகித்து வருகிறேன். பாம்பன் ஊராட்சி, 14-வது வார்டு கவுன்சிலராகவும் இருந்து வருகிறேன்.
கூட்டமைப்பு மூலம் தாங்கள் ஆற்றிய சேவைகள் என்னென்ன?
லெட்சுமி: நான் எனது குழந்தைப் பருவத்தில் இருந்தே மன்னார் வளைகுடா தீவுப் பகுதிகளில் கடற்பாசிகளை சேகரிப்பதையே தொழிலாகக் கொண்டுள்ளேன். எங்கள் பகுதி மீனவப் பெண்கள் பெரும்பாலானோருக்கு கடற்பாசி சேகரிப்பதே வாழ்வாதாரமாக உள்ளது. எங்களுக்கு எழுதப் படிக்கத் தெரியாது. கடலை விட்டால் வேறு தொழிலுக்கும் போக முடியாது. ஆனால், அரசு அதிகாரிகள் பாசி சேகரிக்க தடை விதித்தும், பாசி சேகரிக்கும் பெண்களுக்கு அபராதம் விதித்தும், மீனவப் பெண்களின் படகுகளை கைப்பற்றியும் எங்களது வாழ்வாதாரத்தை சுரண்டி வந்தனர். சில நேரங்களில் தகாத வார்த்தைகளில் திட்டுவார்கள். ஒருமுறை கடலுக்குள் நாங்கள் பாசி சேகரித்தபோது கரையில் வைத்திருந்த ஆடைகளை வனத் துறையினர் எடுத்துச் சென்றனர். சொல்ல முடியாத துயரங்களை அனுபவித்தோம்.
இது குறித்து மாவட்ட நிர்வாகம், அரசு அதிகாரிகள், கடல்சார் விஞ்ஞானிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, பாரம்பரிய முறையில் பாசி சேகரிப்பதால் கடலில் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படுவதில்லை என்பதை விஞ்ஞானப் பூர்வமாக விளக்கினேன். இதை ஏற்றுக்கொண்ட அரசு அதிகாரிகள் மாதத்தில் 12 நாட்கள் மட்டும் பாசி சேகரிக்க அனுமதி தந்தார்கள்.
இதனையடுத்து ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி முதல் ராமேசுவரம் வரை கடலோரத்தில் வசிக்கும் பாசி சேகரிக்கும் மீனவப் பெண்களை ஒருங்கிணைத்து, ‘மன்னார் வளைகுடா இயற்கை பாசி எடுக்கும் பெண்கள் கூட்டமைப்பு’ ஏற்படுத்தினேன். 28 கிராமங்களைச் சேர்ந்த சுமார் 2200 பெண்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்கள் கடல் வளம் மற்றும் சுற்றுச்சூழல் பாதிக்கப்படாமல், பாசி சேகரிப்பு தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் அவர்களின் பொருளாதாரம் உயர்வடைந்து வருகிறது. கூட்டமைப்பு மூலம் அனைத்து பாசி சேகரிக்கும் மீனவப் பெண்களுக்கு பயோ மெட்ரிக் கார்டுகள் வழங்கி வாழ்வாதாரத்தைத் தொடர வைத்துள்ளோம்.
கடற்பாசி சேகரிப்புப் பணி எளிதானதா?
லெட்சுமி: கடல் எங்களுக்கு புதிது அல்ல. கடல் அன்னையின் மடியில் வளர்ந்தவர்கள் நாங்கள். சின்னப்பாலத்துக்கு அருகில் மன்னார் வளைகுடா உயிர் கோளக் காப்பகத் தீவுகளான சிங்கில் தீவு, குருசடை தீவு, மணலி தீவு, மணலிபுட்டி தீவு ஆகியவை உள்ளன. இவை பவளத் திட்டுகளும் பாசிகளும் நிறைந்தவை.
அதிகாலை 4 மணிக்கு எழுந்து, வீட்டு வேலைகளை எல்லாம் முடித்துவிட்டு, கஞ்சி, கருவாட்டை தூக்குச் சட்டியில் எடுத்துக்கொண்டு, சூரிய உதயத்துக்கு போட்டியாக படகில் நாங்களே துடுப்பு போட்டுக்கொண்டு கடலுக்குள் போவோம். ஐந்து ஆள் உயரத்தில் மரிக்கொழுந்து, கட்டக் கோரை, கஞ்சிப் பாசி, பக்கடா பாசி வகைகள் வளர்ந்து இருக்கும். இரண்டு நிமிடங்களுக்கு மேல் மூச்சை தம் கட்டி கடலடியில் வளர்ந்திருக்கிற பாசிகளை கண்டுபிடித்து அவற்றை அறுவடை செய்து படகில் ஏற்றுவோம்.
மதியத்துக்குப் பிறகு படகைக் கரைக்கு கொண்டுவந்து பாசிகளைக் காயவைப்போம். மாதத்துக்கு 3 ஆயிரம் வருமானம் கிடைப்பதே பெரிய விடயம். மழைக் காலத்தில் பாசி சேகரிக்க முடியாது. நாங்கள் எடுக்கிற கடல்பாசியில் இருந்துதான் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கான உணவு, குளிர்பானங்கள், மாத்திரைகள் எல்லாம் தயாரிப்பதாக சொல்கிறார்கள்.
அமெரிக்க விருது எப்படி கிடைத்தது?
லெட்சுமி: அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா மாகாணத்தில் கடல்சார் ஆய்வு மையம் (சீகாலஜி) செயல்படுகிறது. இது சர்வதேச அளவில் கடல் பகுதியில் அரிய வகை தாவர இனங்கள், கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாப்பதற்காக செயல்பட்டு வருகிறது. மேலும் இந்த மையம் ஆண்டுதோறும் கடல் வாழ் உயரினங்களை பாதுகாக்கும் செயலில் ஈடுபடுபவர்களுக்கு விருது, பாராட்டுச் சான்றிதழ் வழங்கி கவுரவிக்கிறது. 1992ம் ஆண்டிலிருந்து இந்த விருது தொடர்ச்சியாக இதுபோன்று சேவையாற்றியவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. 2013ம் ஆண்டுக்கான விருது கென்யாவை சேர்ந்த அலி செய்பு சேக் என்பவருக்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்டது. 2014-ம் ஆண்டு விருதுக்காக பல்வேறு நாடுகளை சேர்ந்த 12 சேவை அமைப்புகள் மற்றும் தனி நபர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில் ராமேசுவரத்தைச் சேர்ந்த ‘பேட்’ எனும் தொண்டு நிறுவனம், என்னை பரிந்துரை செய்திருந்தது. இதனடிப்படையில் நான் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டேன்.
அக்டோபர் மாதம் கலிபோர்னியா மாகாணம் பெர்க்லின் நகரில் நடந்த விழாவில், சீகாலஜி நிறுவனம் விருது மற்றும் 10 ஆயிரம் டாலர் (ரூ.6 லட்சம்) பரிசு தொகைக்கான காசோலை வழங்கியது. இதன் ஒரு பகுதியை மீனவ குழந்தைகளின் கல்விக்கும், பாசி சேகரிக்கும் மீனவ மகளிர் கூட்டமைப்புக்கும் அளிக்க உள்ளேன்.
அடுத்தக்கட்ட இலக்கு?
லெட்சுமி: எனக்கு கிடைத்த விருது, மீனவப் பெண்களுக்கு கிடைத்த வெற்றி. இந்த விருது மீனவ பெண்கள் வாழ்க்கை தரம், குழந்தைகள் கல்வி, கடல் வளம் பாதுகாப்புக்கு என்னை மேலும் உழைக்கத் தூண்டியுள்ளது. கல்வியறிவு இல்லாத மீனவ கிராமத்தை மத்திய, மாநில அரசுகள் தத்தெடுத்து மீனவ குழந்தைக்கு கட்டாய கல்வியை புகுத்தினால், சமூகத்தில் உயர் பதவிக்கு வருவார்கள். இதுகுறித்து மத்திய, மாநில அரசை தொடர்ந்து வலியுறுத்துவோம். எங்களுக்கு அரசு தரப்பில் இருந்து கடலில் மூழ்கி நீச்சல் அடிக்கப் பயன்படும் ஸ்கூபா சாதனங்கள், பைபர் படகுகள் தர வேண்டும். அதோடு, நாங்கள் சேகரிக்கும் பாசிகளுக்கு அரசே விலை நிர்ணயம் செய்தால், எங்கள் மீனவப் பெண்களின் வாழ்க்கை உயரும். அதற்காக தொடர்ந்து பாடுபடுவேன்.
சா.சின்னதுரை
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழக மீனவப் பெண்ணுக்கு அமெரிக்காவில் விருது”