ஆகஸ்டு 1, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழனின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்!

சா.சின்னதுரை

Mar 26, 2016

tamilanin1வெள்ளஅபாயத்தை முன்னரே உணர்ந்து அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டிடடத்தை வடிவமைத்துள்ளனர் தாமிரபரணி கரையோர பகுதி மக்கள்!

2015 டிசம்பர். சென்னை, கடலூர் மாவட்டங்களில் கனமழை பயமுறுத்திவிட்டு கடைசியில் நெல்லையில் மையம் கொண்டிருந்தது. அடுத்தடுத்து உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் அங்கு கனமழை தொடர்ந்து கொட்டித்தீர்த்தது. மாவட்டத்தில் உள்ள அனைத்து அணைகளும் நிரம்பி உபரி நீர் வெளியேற்றப்பட்டன. தாமிரபரணி நதி பெருக்கெடுத்து ஓடியது. தொடர்மழை இருந்ததால், வினாடிக்கு 10 ஆயிரம் முதல் 40 ஆயிரம் கனஅடிவரை தண்ணீர் கரைபுரண்டு ஓடிய போதும் அது எங்கும் கரையை உடைக்கவில்லை. நதியோர குடியிருப்புகளை மூழ்கடிக்கவில்லை. மக்களின் இயல்பு வாழ்க்கையை பாதிக்கவில்லை. இத்தனைக்கும் சென்னையில் பொங்கிய அடையாற்றை விடவும் பலமடங்கு பெரியது தாமிரபரணி. ஓடும் தண்ணீரின் அளவும் மிகஅதிகம். கடந்த 1992-ம் ஆண்டு கடைசியாக தாமிரபரணியில் பெருவெள்ளம் வந்தபோது கூட, இன்றைய சென்னை அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஏன்?

தாமிரபரணி நதிக்கரை மக்களின் வெள்ளநீர் மேலாண்மை மற்றும் கட்டிட அறிவியல் பாரம்பரியம் மிக்கது. இன்றளவும் அவர்கள் ஆற்றை சிறப்பாக மேலாண்மை செய்கிறார்கள். தாமிரபரணி ஆற்றில் 18-ம் நூற்றாண்டில் ஒன்பது முறை பெருவெள்ளம் வந்து ஊர்களை அழித்திருக்கிறது.   வீடுகள் அடித்துச்செல்லப்பட்டன. ஏராளமான மக்கள் உயிரிழந்தனர். ஆனால், தாமிரபரணி நதிக்கரை மக்கள் அந்த வெள்ளத்தில் இருந்து பாடம் கற்றுக்கொண்டார்கள்.

tamilanin3குறிப்பாக நெல்லை மாநகரப்பகுதியில் தாமிரபரணி ஆற்றங்கரைக்கு அருகில் உள்ள குடியிருப்புகளை கட்டும்போது, ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் அதை எதிர்கொள்ளும் வகையில் கட்டடத்தை வடிவமைத்துள்ளனர். இங்குள்ள வீடுகள் அனைத்துமே 2 அல்லது 3 ஆள்மட்டம் உயரத்தில் தரைத்தளம் கொண்டதாகக் கட்டப்பட்டுள்ளன. இந்த வீடுகளுக்குள் நுழைய குறைந்தது 10 முதல் 15 படிக்கட்டுகளை ஏறிச்செல்ல வேண்டும். இப்போது, சாலைமட்டத்தின் உயரம் கூடியதால் இந்தஅளவு குறைந்திருக்கலாம். ஆனால், வெள்ளம் வந்தால் தண்ணீர் வீட்டுக்குள் புகாது. கொக்கிரகுளம், சிந்து பூந்துறை பகுதிகளில் உள்ள நூற்றாண்டுகளைக் கடந்த பலவீடுகளும் இதற்குச்சான்றாக இன்றும் காட்சியளிக்கின்றன. குறிப்பாக, கரையோரப் பகுதிகளில் மட்டும்தான் இத்தகைய வீடுகள் உள்ளன. கடைசியாக தாமிரபரணி ஆற்றில் கடந்த 1992 ஆம்ஆண்டு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் கரையோர பகுதிகள் தண்ணீரில் தத்தளித்தன. தாழ்வான பகுதிகளில் இருந்த வீடுகள் மூழ்கினாலும், உயரமாகக் கட்டப்பட்டிருந்த வீடுகளில் வெள்ளப்பாதிப்பு இல்லை. சேதாரமும் இல்லை.

”எனது தாத்தா காலத்தில் கட்டப்பட்டள்ள இந்த வீடுகள் ஆற்றின் இயல்புக்கு ஏற்ப அமைக்கப்பட்டுள்ளன. ஆற்றங்கரைக்கு மிக அருகில் இருந்ததால் வெள்ளநீர் உள்ளே புகக்கூடாது என்பதற்காக, அதிக படிக்கட்டுகளை அமைத்து வீடுகளையும் உயர்த்திக் கட்டியுள்ளனர். 1992 ஆம் ஆண்டு வெள்ளம் சூழ்ந்த போது இந்தப் பகுதியில் உள்ள வீடுகளை பெருமளவு பாதிக்கவில்லை.

tamilanin2படிக்கட்டுகளை தொட்டபடிதான் தண்ணீர்சென்றது. வரும் ஆபத்தை முன்னரே உணர்ந்து, மூதாதையர்கள் இந்த வகையில் வீடுகளைக் கட்டியுள்ளனர்” என்கிறார் நெல்லையை சேர்ந்த வெங்கடேஷ்.

”மூன்று தலைமுறைகளாக இந்தப் பகுதியில் வசித்து வருகிறோம். இங்குள்ள வீடுகள் அனைத்துமே 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை. வீடுகட்டும்போது அப்போதைய நிலவரத்தை மட்டும் கவனத்தில் கொள்ளாமல், வெள்ள அபாயம் மற்றும் பிற்காலத்தில் ஏற்படும் சாலை மட்டஉயர்வு ஆகியவற்றை கருத்தில் கொண்டு வீட்டின் உயரத்தை அதிகப்படுத்தி கட்டியுள்ளனர். ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டாலும் இங்குள்ள வீடுகளுக்குள் தண்ணீர் புகாது” என்கிறார் சாமுவேல்.

வெள்ளஅபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்குகல் மண்டபம்!

இன்றைக்கு செயற்கைகோள்கள் இருக்கின்றன. ரமணன் இருக்கிறார், வானிலை எச்சரிக்கையை சொல்ல. அன்றைக்கு இரண்டுமே இல்லை. ஆனால், தாமிரபரணியில் நமது முன்னோர்கள் அந்தக்காலத்திலேயே வெள்ள அபாயங்களை அறிவியல் பூர்வமாக அறிந்துக் கொண்டார்கள். அதுதான் வெள்ளஅபாயத்தை முன்னரே அறிவிக்கும் சங்குகல்மண்டபம்.

தாமிரபரணி ஆற்றின் மையத்தில் கல்மண்டபத்தை அமைத்திருப்பார்கள். அதனை சங்குமண்டபம் என்று அழைக்கிறார்கள். மூன்று பக்கம் திறந்த வெளியுடன் பின்பக்கம் மட்டும் கல்சுவரால் அடைக்கப்பட்ட மண்டபம் அது.

பின்பக்க கல்சுவரின் வெளிப்புற உச்சியில் சங்கு போன்ற அமைப்பு உள்ளது. ஆற்றில் வெள்ளம் வரும்போது அந்த மண்டபத்துக்குள் குறிப்பிட்ட அளவுக்கு மேல் நீர்மட்டம் உயர்ந்தால், வெள்ளத்தின் இரைச்சலால் காற்று உந்தப்பட்டு அந்த சங்கு மிக சத்தமாக ஊதப்படும். நதிநீரின் வேகமும் உயரமும் கூடும்போது அது ஒருவிதமான காற்றழுத்தத்தை ஏற்படுத்தும்.

அந்த காற்று வேகமாக வெளியேற ஒரு துவாரம் அமைத்திருப்பார்கள். அந்த துவாரத்தில்தான் சங்கை கச்சிதமாக பொருத்தியிருப்பார்கள். அந்த காற்றழுத்தம் கூடக்கூட சங்கின் ஒலியும் கூடிக்கொண்டே வரும். இதுதான் வெள்ளம் வரப்போகிறது என்பதற்கான அபாய அறிவிப்பு. இதன் மூலம் மக்கள் வெள்ள அபாயத்தை உணர்ந்து பாதுகாப்பாக இடம் பெயர்ந்தார்கள்.

சங்கு இருக்கும் உயரத்துக்கு நீர்மட்டம் உயரஉயர சங்கின் சத்தமும் அதிகமாகிக் கொண்டேபோகும். ஒரு கட்டத்தில் சங்கின் ஒலி திடீரென்று நின்றுவிடும். அப்படி நின்றுவிட்டால் சங்கு மட்டத்திற்கு நீர் வந்துவிட்டது என்று அர்த்தம்.

ஆற்றின் கரையைக் கடந்து ஊருக்குள் வெள்ளம் நுழைந்து விட்டது என்று பொருள். பாதுகாப்பாக மண்டபத்தில் தங்கியிருக்கும் மக்கள் இதை அறிந்து கொள்வார்கள்.

நீர்மட்டம் குறையும்போது மீண்டும் சங்கு ஒலிக்கத் துவங்கும். அப்போது மக்கள் அபாயக்கட்டத்தில் இருந்து மீண்டுவிட்டோம். வெள்ளம் வடியத்தொடங்குகிறது என்று தெரிந்து கொள்வார்கள். நீர்வடியும்போது உக்கிரமமாக ஒலிக்கும் சங்கின்ஒலி கொஞ்சம்கொஞ்சமாக குறைந்து அடங்கிவிடும். இது வெள்ளஅபாயம் நீங்கியது என்பதற்கான அறிகுறி. மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புவார்கள்.

கடந்த ஒரு நூற்றாண்டாக அந்த அளவுக்கு ஆற்றில் வெள்ளம் வராததால் இப்போது அந்த மண்டபத்தின் தொழில்நுட்பகட்டமைப்பு எந்த நிலையில் இருக்கிறது என்று தெரியவில்லை. பல கிராமங்களை வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய சங்குகல்மண்டபங்கள் இன்று அழிந்து போய்விட்டன. தாமிரபரணி போன்ற ஒருசில நதிகளில் வெகு அபூர்வமாக இந்த சங்குகல்மண்டபங்கள் இன்றும் இருக்கின்றன. ஆனால், ஆற்றில் வெள்ளம்வரும்போது அபாய ஒலி எழுப்பும் அளவிற்கு வேலைசெய்கிறதா என்று தெரியவில்லை. சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து தொன்மையான அந்த மண்டபத்தைப் பாதுகாக்கவேண்டும்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழனின் வெள்ள அபாய முன்னெச்சரிக்கை தொழில்நுட்பம்!”

அதிகம் படித்தது