தமிழரின் உணவுமுறை
பேரா. ந. பிரியாNov 12, 2022
உயிரினங்கள் கூடிவாழும் உயிர்த்தொகுதி சமுதாயம் என்ற பெயரால் சுட்டப்பெறுகின்றது. சமுதாயத்தில் வாழும் எவ்வுயிராயினும் அவ்வுயிர், தன்னை நிலை நிறுத்திக்கொள்ளும் உரிமையை இயற்கை வழங்கி இருக்கிறது. உயிரினங்களுக்கான நிலைநிறுத்தக்காரணிகள் பலவாறுயிருப்பினும் அவற்றுள் நிலம், உணவு என்ற இருகாரணிகளே மானுட வாழ்வில் பெரும்பங்காற்றுகின்றது. உணவு உற்பத்திக்கு நிலம் உதவுகின்றது. உயிர் வாழ உணவு தேவைப்படுகின்றது. இந்த அடிப்படையில் நிலத்துடன் இயைந்த தமிழரின் உணவுமுறையின் கூறுகளை ஆராய்வதாக இக்கட்டுரை அமைகின்றது.
உணவும் வாழ்வும்
ஆரம்ப காலத்தில் இனக்குழுச்சமூகமாக இருந்த மனித சமூகம் இயற்கையாகக் கிடைத்தவற்றை உண்டு வாழ்த்தல், அடுத்த நிலையில் தன் வயிற்றுப்பிழைப்பிற்காக வேட்டையாடுதல் என்றிரு வேறு நிலைகளில் உணவு சேகரிப்பு நடந்தது. உணவு சேகரிப்பு என்ற செயல்பாட்டிலிருந்து தான் மனித சமூக வரலாறு எழுதப்படுகின்றது.
பொதுவாக உண்ணும் உணவின் வகை, எடுத்துக்கொள்ளப்படும் உணவின் அளவு, உணவின் தன்மை என்னும் காரணிகளால் மாறுபாடுகள் நிகழலாம். ஆனால் உண்பதற்கு உணவுத்தேவை என்பதில் எவ்வித மாற்றமும் இருக்க வாய்ப்பில்லை. சுருங்கக்கூறின் ‘உணவின்றி உலகமில்லை’ என்பது நடப்பியல் உண்மை. மனித குலத்திற்கு உணவு பங்காற்றும் திறனை கருத்திற்கொண்டு ‘உணவுஉடை உறையுள்’ என வரிசைப்படுத்தும் போதும் உணவே முன்மொழியப்படுகின்றது.
நிலஞ்சார் உணவுப்பகுப்பு
இயற்கைப்பின்புல அடிப்படையிலும், நிலப்(திணை) பின்புல அடிப்படையிலும் நம் சான்றோர்கள் நிலத்தினைப் பகுத்தறிந்ததை,
“மாயோன் மேய காடுறைஉலகமும்
சேயோன் மேய மைவரை உலகமும்
வேந்தன் மேய தீம்புனல் உலகமும்
வருணன் மேய பெருமணல் உலகமும்
முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச்
சொல்லிய முறை சொல்லவும் படுமே”
என்று தொல்காப்பிய நூற்பா உணர்த்துகின்றது. காடு – முல்லை, வரை(யால்) – குறிஞ்சி, புனல் (நீர்) – மருதம், மணல் – நெய்தல் என்றறியப்படுகின்றது. இந்நிலப்பகுதிகளில் மனித சமூகம் குழுவாக வாழ்ந்து இயற்கைக்கு ஊறு விளைவிக்காத திறன் போற்றுதற்குரியது. இவ்வாறு தான் வாழும் நிலத்தின் இயல்பிற்கேற்ப வாழ்க்கை முறையை அமைத்துக்கொண்டது தமிழரின் உயிர்நெறியாக கருதப்பட்டது.
மைவரை உலகம் – குறிஞ்சி
ஆதியில் இயற்கைச்சீற்றங்களைக்கண்டு அஞ்சிய மனிதன் அதிலிருந்து தன்னைக்காத்துக்கொள்ள அவன் மலைகளிலும் குன்றுகளிலும் அதனைச் சார்ந்த பகுதிகளிலும் தஞ்சமடைந்தான் குறிஞ்சி நிலமக்கள். சிலம்பன், குறவன், வெற்பன், வேட்டுவன், குன்றவன், இறவுளன், இருளன் என்ற பெயர்களால் அறியப்பட்டு வில், அம்பு, கோல், வேல் இவற்றின் துணையுடன் உணவுத்தேவைக்காக விலங்குகளை வேட்டையாடி உண்டதாகத் தெரிகின்றது. இம்மக்கள் உடும்பு, முயல் போன்ற விலங்கினங்களை உணவாகப் பயன்படுத்திய செய்தியை,
“வேட்டைச்சிறாஅர் சேட்புலம் படராது
படுமடைக் கொண்ட குறுந்தாள் உடும்பின்
விழுக்கு நிணம் பெய்த
——————- தயிர்க்கண் மிதவை
யாணர் நல்லவை பாணரொடு ஓராங்கு
வருவிருந்து அயரும் விருப்பினள்”(புறம் – 326)
என்ற புறப்பாடல்வழி அறியலாம். வீட்டின் அருகில் உள்ள மடுக்களில் பிடித்த உடும்பினை சமைத்து தான் மட்டும் உண்ண நினையாமல் வருவோர்க்கும் பகிர்ந்தளித்த பண்பாட்டினையும் இப்பாடல் முன்வைக்கின்றது. மேலும் உடும்பின் தசையை உண்டால் அத்தசை உடல் முழுவதும் பரவி நன்மை பயக்கும் என்ற நம்பிக்கை குறிஞ்சி நிலத்தில் வாழ்ந்த வேட்டுவர்களிடம் இருந்ததை அறியமுடிகின்றது.
மலைப்பகுதிகளில் வாழ்ந்த குறவர்கள் நிலங்களிலிருந்து அகழ்ந்தெடுத்த வள்ளிக்கிழங்குகள், மலைத்தேன் ஐவனநெல், மலைநெல் இவற்றையும் உணவாகக் கொண்டிருந்தனர்.
காடுறை உலகம் – முல்லை
மலையில் வாழ்ந்த குழுவினருள் சிலர் தங்களின் உணவுத்தேவையை நிறைவடையாத நிலையில் புலம் பெயர்ந்து வாழ முற்பட்டனர். அவ்வாறு புலம்பெயர்ந்தவர்கள் இடையர்கள் என்றழைக்கப்பட்டனர். இடையர்கள் இடையர்களின் வசிப்பிடம் காடுசூழ்ந்த முல்லை என்ற பெயரில் அழைக்கப்படுகின்றது. ஆடு மாடுகளை மேய்த்தும், அப்பகுதிகளில் விளைந்த வரகு, சாமை, அவரை, துவரை போன்ற தானியங்களை உணவாக உண்டும் இவ்விடையர்கள் வாழ்ந்து வந்தனர். பால், தயிர், நெய் போன்ற பால் சார்ந்த பொருட்களும் இடையர்களின் உணவில் பெரிதளவு பயன்பாட்டில் இருந்ததை அறியமுடிகின்றது.. குறிஞ்சி நிலம் போன்றே இங்கும் ஐவன வெண்ணெல் பயன்பாட்டில் இருந்ததை,
“கொடிச்சி ஐவனவெண்ணெல் குறூஉம்”குறுந்- 373.
என்ற வரி உணர்த்திச்செல்கின்றது. புன்செய் நிலத்தில் விளையும் இந்த ஐவனவெண்ணெலை சமைத்து அத்துடன் துவரை, அவரை போன்ற தானியங்களைக் கலந்து உணவாக முல்லைநில மக்கள் உண்டனர்.
முல்லை நிலமக்கள் புளித்த தயிரில் சமைத்த சோற்றுடன் நெய்யையும், செம்மறியாட்டுக்கறியையும் கலந்து உண்டனர். (அக 394: 2-7) இறைச்சி உட்கொள்வது இவர்களிடம் பெரிதாக காணப்படவில்லை. (அக394 -5). இந்த மாற்றத்திற்கும் ஆயர்களிடையே வைதீகசமயம் பரவியதற்கும் ஏதேனும் சம்பந்தம் இருக்கலாம்” என்று குறிப்பிடுகின்றார் ராஜ்கௌதமன்.
முல்லைநில இடையர்கள் தன்னிடத்து உள்ள பாலை கொடுத்து பண்டமாற்று முறையில் அதற்கு ஈடான தானியம் பெற்றதை, முதுகூத்தனார் என்ற புலவர், குறுந்தொகைப்பாடலொன்றில்,
“பாலொடு வந்து கூழொடு பெயரும்
யாருடை இடையன்”– (குறுந் – 221:3:4)
என்று குறிக்கின்றார். இடையர்கள் நண்டுகுஞ்சுபோல காணப்படும் தினைச்சோற்றினைத் தாமும் உண்டு விருந்தினர்க்குக் கொடுத்த பண்பாட்டினை
“மடிவாய் கோவலர் குடிவயின் சேப்பின்
இருங்கிளைலெண்டின் சிறுபார்ப்பன்ன
பசுந்தினை மூரல் பாலொடும் பெறுகுவீர்” (பெரு -166-168)
என்று பெருபாணாற்றுப்படை உணர்த்தி நிற்கும்.
முல்லை நிலத்தார் சிவந்த அவரை விதைகளையும் மூங்கிலரிசியையும் மேட்டு நிலத்தில் விளைந்த நெல்லின் அரிசியையும் புளி கரைத்த உலையிற்பெய்து குழைந்த புளியங்கோலாக்கி உட்கொண்டனர். பொன்னை நறுக்கினாற்போன்ற நுண்ணிய அரிசியை வெள்ளாட்டு இறைச்சியுடன் கூட்டி ஆக்கிய மூன்றையும், திணைமாவையும் உண்டு வாழ்ந்ததாக பெரும்பாணாற்றுப்படை சுட்டும்.
தீம்புனல் உலகம் – மருதம்
மலைகள் – காடுகள் இவைகளில் சுற்றித்திரிந்த மனிதன் பரிணாம வளர்ச்சி பெற்று ஆற்றங்கரையோரங்களில் நிலையாக வாழத்திட்டமிட்டதன் வெளிப்பாடு தான் மருதநிலமாக உருபெற்றது. ஆற்றுநீர்த்தேக்கி, உணவுத்தானியங்களைப் பயிரிடும் வேளாண்மைத்தொழில் கண்டுபிடித்ததன் அடிப்படையில் இங்கு வாழ்ந்த மக்கள் மன்னர், உழவர், பன்னர் என்று அழைக்கப்படலாயினர்.
பள்ளமானப்பகுதியிலுள்ள மிகுநீரினைப்பயன்படுத்தி செந்நெல் வெண்நெல் கரும்பு இவற்றை விளைவித்து அதனையே உணவாக உண்டனர். மருதநிலமக்கள் கரும்பு சாற்றினைக்காய்ச்சி வெல்லம் தயாரித்துத் தேவையான நேரங்களில் உணவாக உண்டனர்.
அரிசிசோற்றை மிகுதியாக உண்ட நிலையிலும் அவ்வரிசியும் கைக்குத்தல் அரிசியாக மாற்றி உணவு சமைத்து, அச்சோற்றுக்குத்தொடுகறியாக வயல்நண்டுடன் பீர்க்கங்காய் சேர்ந்து செய்த கலவை பயன்பட்டது. இதனை,
“இருங்காழ் உலக்கை இரும்பு முகம் தேய்த்த
அவைப்பு மாண் அரிசி அமலை வெண்சோறு
கவைத்தாள் அலவன் கலவையொடு” (சிறு -193 – 195)
என்ற சிறுபாணாற்றுப்படை வரிகள் வழி உணரலாம்.
பெருமணல் உலகம் – நெய்தல்
வயல் நிலப்பகுதிகளை அடுத்து இருப்பது கடலும் கடல்சார்ந்த பகுதிகளும் ஆகும். கடல் சூழ்ந்த நிலப்பகுதிக்கு ‘நெய்தல்’ என்று பெயர். அரிசிச்சோறு, மீன்சூட்டு, கள் என இவைகளை பரதவர்கள் உணவாக ஏற்றுக்கொண்டனர். மீனுக்கு மாற்றாகப்பெற்ற நெல்லை சோறு சமைத்துத் தயிருடன் உட்கொண்ட பரதவர்களின் செயலை
‘பசு மீன் நொடுத்த வெண்நெல் மாசுத்
தயிர் மிதி மிதவை ஆர்த்துவம் நினக்கே’ (அகம் -340(14-15)
“கொழுமீன் சுடுபுகை மறுசினுள் மயங்கி
சிறுவீ ஞாழல் துறையுமார் இனிதே” நற் 311(6-7)
என்ற இருபாடல்கள் உணர்த்துகின்றன. உப்பு விற்று வந்த நெல்லரிசியில் சமைத்த சோற்றை புளியிட்டு சமைத்த மீனுடன் தானும் உண்டு தன் தந்தைக்கும் பரதவப்பெண்கள் வழங்கியதை
“நெடுந் திமில் தொழிலோடு வைகிய தந்தைக்கு
உப்பு நொடை நெல்லின் மூரல் வெண்சோறு
அமிலை துழந்த அமம்புளிச்சொரிந்து
கொடுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்” (அகம் – 60(3-6)
என்ற பாடல் வழி உணரலாம். பரதவர்கள் களைப்புத்தீரகள் பருகியுள்ளனர். இது நீர்ம ஆகாரமாகக் கருத இடமுள்ளதாக அறியமுடிகின்றது.
‘திண்திமில் வன்பரதவர்
வெய்பு உடைய மட்டு உண்டு’ புறம் (4-5)24
இப்பாடலில் வரும் மட்டு என்பது கள்ளை குறிக்கும். நெல்லை இடித்து மாவாகிய உணவை ஆண் பன்றிக்கு இட்டுக் கொழுக்க வைத்தனர். அங்ஙனம் கொழுத்த ஆண் பன்றியைக் கொன்று அதன் இறைச்சியை சமைத்து உண்டனர். காவிரி பூம்பட்டினத்து மீனவர் கடல் இறா, வயல் ஆமை இவற்றைப்பக்குவப்படுத்தி சமைத்து உண்ட செய்தியைப்பட்டினபாலை வழி அறிய முடிகின்றது.
நாள் முழுவதும் இடைவிடாமல் உழைக்கும் பரதவர் கள் குடிப்பதையும் பழக்கமாகக் கொண்டிருந்நதனர். சுற்றத்தாருடன் அதனைப்பருகி, அளவற்ற மகிழ்வில் இருந்தனர். என்பதை,
“ஞான்ற ஞாயிறு குடமலை மறைய
மான்ற மாலை மகிழ்ந்த பரதவர்”(நற் -239.)
என்பதன் வழி அறியலாம்.
“நெல்லின் நேரே வெண்கல் உப்பெனச்
சேரி விலைமாறு கூறரின் மனைய
விளியறி ஞமலி குரைப்ப வெரிஇய”– (அகம்-140)
இவ்வாறு பண்டமாற்றாகப் பெற்ற நெல்லை, வீட்டிற்குக் கொண்டுவந்து, வெண்சோறு ஆக்குவர். அச்சோற்றில், அயிலை மீனை இட்டு ஆக்கிய அழகிய புளிக்கறியினைக் சொரிவர். அதனுடன் கொழுமீன் கருவாட்டையும் உண்பர். இதனை,
“உப்புநொடை நெல்லின் மூரல் வெண்சோறு
ஆயிலை துழந்த அம்புளிச்சொரிந்து
கொழுமீன் தடியொடு குறுமகள் கொடுக்கும்”–(அகம்-60)
என்ற அகப்பாடல் வழி அறியலாம்.
முடிவுரை
இயற்கையை சுவாசித்தும் நேசித்தும் வாழ்ந்த நம் முன்னோர்கள் காலச்சூழலுக்கேற்ப மாற்றம் கொண்ட வாழ்வினை முன்னிலைப்படுத்தினர். அம்மாற்றம் உணவு, உடை, உறையுள் என எல்லா நிலைகளிலும் பரவியது. நம் நாட்டை விட்டு புலம்பெயர்ந்துச் சென்றோர், புலம் பெயர்ந்து சென்ற இடத்தில் கற்றுக்கொண்ட உணவுமுறையும், உணவியல் சார்ந்த நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் என நம்நாட்டில் விதைத்தவை ஒருபுறம் இருக்க, மேலைநாட்டவர், தம் உணவியல் நெறிகளை நம் நாட்டில் விட்டுச்சென்றது என்ற இருவேறு நிலைகள் பெரிதளவில் தாக்கத்தை ஏற்படுத்தாவண்ணம் நம் இயல்பான உணவுமுறை அமைய வேண்டும். இவ்வளையத்துள் உணவு உள்ளிட்ட அனைத்து பண்பாட்டுக் கூறுகளும் அடங்கும்.
பேரா. ந. பிரியா
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழரின் உணவுமுறை”