மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர்களின் கட்டுமான கலையும் அது தொடர்பான வழிபாடுகளும் (பகுதி – 18)

முனைவர். ந. அரவிந்த்

Aug 7, 2021

தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி முடிவுகள் இன்றி நடைபெற்று வருவதை நாம் அறிவோம். அதற்கு மதுரை அருகே உள்ள கீழடி, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கொற்கை, ஆதிச்ச நல்லூர் மற்றும் சிவகளை போன்ற பகுதிகளில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் அகழ்வாராய்ச்சிகளே சாட்சி. அத்தனை அகழ்வாராய்ச்சி அறிக்கைகளும், இந்த ஊர்கள் அனைத்தும் கி.மு. 600 க்கும் முற்பட்ட சங்க காலத்தில் தமிழ் மக்கள் வாழ்ந்த நாகரிகங்கள் என்று தெரிவிக்கின்றன. இந்த அகழ்வாராய்ச்சிகள் தமிழர்கள் சங்க காலத்திலேயே எழுத்தறிவு பெற்றிருந்ததையும் கழிவறையைப் பயன்படுத்தி மிகவும் சுகாதாரமாக வாழ்ந்ததையும் எடுத்துக் கூறுன்றன.

இந்த அறிக்கைகள், மேலே கூறப்பட்டுள்ள அனைத்து ஊர்களிலும் சுட்ட செங்கற்களை வைத்து மக்கள் வீடுகள் கட்டி வாழ்ந்தனர் என்று கூறுகின்றன. இந்த இயற்கை கட்டுமான பொருளான சுட்ட செங்கற்கள், வெயில் காலத்தில் வீட்டிற்குள் குளிர்ச்சியாகவும், குளிர் காலத்தில் வெதுவெதுப்பாகவும் இருக்க உதவுகின்றன.

siragu kattumaanam1

கொற்கை அகழாய்வில் 10 அடுக்கு செங்கல் கட்டுமானம்

இவை மட்டுமின்றி, சுடுமண் கொண்டு மண்பானைகளையும் செய்து பயன்படுத்தி வந்தனர் என்றும் கூறுகிறது. சுடுமண் பொருட்கள் என்பவை களிமண்ணால் பானைகள் மற்றும் சட்டிகள் செய்து அவை காய்ந்த பின்னர் அவற்றை பக்குவமாக சூளையில் வைத்து குறிப்பிட்ட வெப்பநிலையில் சுட்டெடுத்து செய்யப்படும் உறுதியான பொருட்களாகும்.

நம் முன்னோர்கள் வீட்டிற்கு முன் திண்ணை வைத்து கட்டினார்கள். இன்றும் கிராமங்களில் திண்ணை வைத்த வீடுகளைக் காணலாம். அந்தி சாயும் நேரத்தில், வீட்டிற்கு வெளியே குழந்தைகள் விளையாடும்போது திண்ணையில் பெரியவர்கள் அமர்ந்து கதை, ஊர் மற்றும் நாட்டு நிலவரங்களை பேசுவார்கள். உறவினர்களிடமும் நண்பர்களிடமும் உறவை வளர்க்க திண்ணை பயன்பட்டது.

siragu thinnai ulla veedu1

திண்ணை உள்ள வீடு

வீட்டுக்குள் சமையல் செய்யும் பெண்களும், நடக்க முடியாத வயோதிகர்களும் முற்றம் மூலம் சூரிய வெளிச்சத்தை வீட்டிற்குள் வரவைத்தனர். மனிதனின் உடலுக்கு உயிர்ச்சத்து ‘டி’ மிகவும் அவசியமானது. சூரிய ஒளியில் இந்த உயிர்ச்சத்து ‘டி’ அதிகம் நிறைந்துள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் தெளிவான கண்பார்வை பெற, எலும்புகள் உறுதி பெற, புற்றுநோய்கள் மற்றும் தொற்று நோய்களை தடுக்க, இந்த ஊட்டச்சத்து அத்தியாவசிய தேவையாகும். இனப்பெருக்கக் குறைபாடுகள் நீங்க உயிர்ச்சத்து ‘டி’ மிக அவசியம். போதுமான சூரிய ஒளி உடலுக்கு கிடைக்குமானால், கொழுப்பில் இருந்து உயிர்ச்சத்து ‘டி’ யை உடல் எடுத்துக்கொள்ளும். இதனாலேயே, இந்த ஊட்டச்சத்து ‘சூரிய ஒளி உயிர்ச்சத்து’ என்றும் குறிப்பிடப்படுகிறது.

அது மட்டுமின்றி, இந்த நடுமுற்றம் மழை நீரை சேகரிக்கவும் பயன்பட்டது. மழை நீர் குடிப்பதற்கும் உகந்தது. மழை நீர் சேகரிப்பை ‘வீட்டின் முற்றம்’ மற்றும் ‘கோயிலின் தெப்பம்’ மூலம் அன்றே உலகிற்கு அறிமுகப்படுத்தியவன் தமிழன்.

siragu nadu mutram1

நடு முற்றம் உள்ள வீடு

வீட்டினை அழகாகவும், நேர்த்தியாகவும் வடிவமைப்பது ஒரு செயல் என்றாலும், அச்செயல் மூலம் உடலிற்கும், உள்ளத்திற்கும் ஆரோக்கியம் தரக்கூடிய மற்றொரு செயலையும் செய்து முடிக்க வேண்டும்.இதனையேவள்ளுவர்பெருமான்குறள்எண்678மூலம்விளக்கியுள்ளார்.

“வினையான் வினையாக்கிக் கோடல் நனைகவுள்
யானையால் யானையாத் தற்று” – குறள்678

இதன்விளக்கம்யாதெனில், ஒரு செயலைச் செய்யும் போது அச்செயலால் மற்றொரு செயலையும் செய்து முடிப்பது, ஒரு யானையால் மற்றொரு யானையைப் பிடித்தலைப் போன்றதாகும்.

வளைகுடா நாடுகளின் கட்டுமானத்தைப் பற்றி திருவிவிலியம் கூறுவதை காண்போம். ஆதியில் நாடோடிகளாக அலைந்து திரிந்த மக்கள் நதி ஓடும் சமவெளி ஒன்றைக் கண்டு, அங்கே குடியேறினர் என்று திருவிவிலியம் கூறுகிறது. அவ்வாறு ஒரே இடத்தில் குடியேறிய மக்கள், செங்கற்கள் அறுத்து அவற்றை நன்றாகச் சுட்டு, கல்லுக்குப் பதிலாகச் செங்கல்லும், சாந்துக்குப் பதிலாக நிலக்கீலும் பயன்படுத்தி வானளாவிய கோபுரம் கொண்ட நகர் ஒன்றை கட்டினர். மனிதர்கள் கட்டிக்கொண்டிருந்த நகரையும் கோபுரத்தையும் காண்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் கீழே இறங்கி வந்தார் என்றும் கூறுகிறது.

மற்றொரு பகுதியில், எருசலேமின் தெருக்களில் கிழவரும் கிழவியரும் அமர்ந்திருப்பார்கள்; வயது முதிர்ந்தவர்களானதால் ஒவ்வொருவரும் தம் கையில் கோல் வைத்திருப்பார்கள்; நகரின் தெருக்களில் சிறுவரும் சிறுமியரும் நிறைந்திருப்பார்கள்; அவர்கள் அதன் தெருக்களில் விளையாடிக்கொண்டிருப்பார்கள் என்று இறைவன் கூறியதாக எழுதப்பட்டுள்ளது. இதிலிருந்து வளைகுடா நாடுகளிலும் செங்கற்களை வைத்து வீடு கட்டும் வழக்கமும், வீட்டிற்கு முன்னால் திண்ணை கட்டி அதில் முதியவர்கள் உட்கார்ந்திருக்கும் பழக்கமும் இருந்தது தெரிகிறது.

தமிழில் ‘நான்மறை’ என்பன அறம், பொருள், இன்பம், வீடு என்பவைகளாகும். அறத்துடன் ஈட்டிய பொருளால் கட்டிய வீடு என்றும் மங்காத இன்பம் தரும்.  வீடு கட்டுதல் என்பது ஒரு சில நாட்களில் முடியும் வேலை அல்ல. அது நீண்ட கால திட்டமாக இருந்த பிறகுதான் பலருக்கும் அது செயல் வடிவம் பெறுகிறது. இப்படிப்பட்ட வீட்டினை கட்டி முடித்த பின்னர், ‘புது வீடு/ மனை புகுவிழா’ நாளில் இறைவனை வணங்கி வீட்டிற்குள் குடியேற வேண்டும். இதனையே, ‘புது வீடு புகுவிழா’ அல்லது ‘வீடு பால் காய்த்தல்’(House warming function)என்றும் அழைக்கிறோம். இது சமஸ்கிருதத்தில் ‘கிரகப்பிரவேசம்’ என்றும் அழைக்கப்படுகிறது. இவ்வாறு வீடு, பாலங்கள், சாலைகள் மற்றும் கட்டிடங்கள் கட்டி முடித்த பின்னர் திறப்பு விழா கொண்டாடுவது உலகம் முழுவதும் நடைபெறும் பொதுவான செயல். ஆனால், அதையும் தாண்டி வீடு கட்ட ஆரம்பிக்கும்போதும் மற்றும் வீடு கட்டிக்கொண்டிருக்கும்போதும் இரு இறை வழிபாடுகள் செய்தவன் தமிழன்.

அதில் முதல் வழிபாட்டினை, ‘பூமி பூசை’ என்ற பெயரில் கொண்டாடுகிறோம். வீடு கட்ட முதன் முதலாக அஸ்திவாரம் தோண்டும்போது செய்யப்படுவதுதான் இந்த ‘பூமி பூசை’. இந்த பூமி பூசை செய்வதன் முதல் காரணம், அந்த இடத்தை நாம் பணம் கொடுத்து வாங்கினாலும் அதற்கு அடியில் கிடைக்கும் புதையல்கள் நமக்கு சொந்தமல்ல. அது அரசாங்கத்திற்கு சொந்தம். இதன் அர்த்தம், பூமிக்கு மேலே நாம் உயிருடன் உள்ளவரை வாழ்ந்து கொள்ளலாம். ஆனால், பூமி நமக்கு சொந்தமில்லை. அதை தோண்டக்கூட உரிமையில்லை. அது இறைவனின் படைப்பு. எனவே, இறைவன் படைத்த பூமியை வீடுகட்ட அஸ்திவாரம்போட தோண்டும்போது பூமியின் உரிமையாளரான இறைவனிடம் அனுமதி கேட்பதற்காக செய்யும் விழாதான் இந்த  ‘பூமி பூசை’. இதற்கு இன்னொரு காரணம், வீடு அல்லது கட்டிடம் கட்ட ஆரம்பிக்கும் நாளில் இருந்து கட்டி முடிக்கும்வரை எந்தஒரு தடங்கலும் வராமல் இறைவன் காத்தருள வேண்டும் என்பதற்காகவாகும்.

வீடு கட்டும்போது இரண்டாவது வழிபாடு என்பது ‘நிலைக்கால் வைக்கும்போது’ செய்வதாகும். இதனை சிலர் சுவர் கட்டுமானத்தின்போது செய்வார்கள். பெரும்பாலானோர், வீட்டிற்கு நிலைக்கால் வைப்பதை மேல் தளத்திற்கான கற்காரையும் (RC Roof Slab)சுவர் கட்டுமானமும் முடிந்த பின்னர் செய்வார்கள். வீட்டிற்குத் தேவையான கதவுகள் மற்றும் ஜன்னல்கள் அனைத்தையும் தயார் செய்த பின்னர், முக்கியமாக தலைவாசல் நிலை வைக்கும்போது இந்த வழிபாடு செய்வது வழக்கம். நம் வீட்டில் உள்ள தலைவாசல் முக்கியமான பகுதிகளில் ஒன்றாகும். இந்த வழிபாடானது பல காரணங்களுக்காக செய்யப்படுகிறது. அவையாவன, நல்ல சக்திகள் மட்டும் வாசல் வழியே வீட்டிற்கு உள்ளே நுழைய வேண்டும் எனவும், காட்டில் இருந்து மரங்களை வெட்டி நிலைகள், கதவுகள் மற்றும் ஜன்னல்கள் செய்வதால், அந்த மரங்கள் மூலமாக எந்த ஒரு தீய சக்தியும் வீட்டிற்குள் நுழையக்கூடாது என்பதற்காகவாகும். மேல்தளம் கற்காரை வேலை முடிந்த பின்னர் நிலைக்கால் வைக்கும்போது உத்தேசமாக பாதி வேலைகளுக்கும் மேல் முடிந்துவிடும். இந்த சமயத்தில் பணம், வேலை ஆட்கள், வானிலை அல்லது வேறு ஏதாவது காரணத்தினால் தடங்கல் வர வாய்ப்புள்ளது. எனவே,  மீதி வேலையும் தடங்கல் இல்லாமல் முடிக்க வேண்டுமென இறைவனை வணங்க இந்த வழிபாடு செய்யப்படுகிறது.

திருவிவிலியத்தின்படி, மோசே இறந்த பின்னர் யோசுவா, மக்களை கானான் தேசம் நோக்கி அழைத்து வந்தார். அவர்கள் தங்கள் தேசத்தை சென்றடைவதற்கு எரிகோ நகரும் அதனை சுற்றி உள்ள மதிலும் தடையாக இருந்தது. இறைவன் உதவியால் அந்த சுவர் இடிந்து விழுந்தது. மக்கள் நகரினுள் நுழைந்து நகரில் இருந்த அனைத்தையும் அழித்தனர். அச்சமயம் யோசுவா, ‘எரிகோ என்னும் இந்நகரை மீண்டும் கட்டும் மனிதன் சபிக்கப்பட்டவன். அவன் அஸ்திவாரமாகிய கடைக்கால் போடும்போது தன் முதல் மகனையும், அதன் வாயிற்கால்களை வைக்கும்போது தன் கடைசி மகனையும் இழப்பான்’ என்றார். இந்த சம்பவம் நடந்து பல நூற்றாண்டுகள் சென்ற பின்னர் பெத்தேலைச் சார்ந்த ஈயேல் என்பவன் எரிகோவைக் கட்டினான். யோசுவா மூலம் இறைவன் உரைத்த வாக்கின்படி, ஈயேல் அதற்கு அஸ்திவாரம் போட்டபோது தன் தலைமகன் அபிராமையும், அதன் வாயிற்கால்களை வைத்தபோது தன் கடைசி மகன் செகுபையும் சாகக் கொடுத்தான் என்று கூறப்பட்டுள்ளது.

இந்த உண்மை சம்பவத்திற்கும் தமிழர்கள் வீடுகட்டும்போது அஸ்திவாரம் தோண்டும்போதும், நிலைக்கால் வைக்கும்போதும் இறை வழிபாடு செய்வதற்கும் சம்பந்தம் இருக்குமா என்று உறுதியாக கூறமுடியாது. இந்த  உண்மை சம்பவத்தினை படிக்கும்போது, தமிழர்களின் வழிபாட்டு முறைகள் ஞாபகம் வந்ததால் இந்த கட்டுரையில் தரப்பட்டுள்ளது. ஆனால், நாம் வாங்கும் இடத்தில் முன்னோர்கள் வழியாக ஏதாவது சாபம் இருந்தாலும், வீடு கட்டும்போது இந்த இரு இறை வழிபாடுகளை செய்தால், சாபத்தில் இருந்து நிச்சயம் நம்மை காக்கும் என்பதில் ஐயமில்லை. சாபத்தினை முறியடிக்கும் சக்தி இறைவனுக்கு மட்டுமே உண்டு.

இன்றைய காலகட்டத்தில், வீட்டின் அளவை, மிகையாக்கல் (Space Optimization)செய்கிறோம் என்ற பெயரில் திண்ணைகளையும், முற்றத்தையும் அவசியம் இல்லாத இடங்களாக எண்ணி கட்டாமல் தவிர்த்து விடுகிறோம். தொலைக்காட்சி பெட்டிகள் திண்ணைகளில் உட்கார்ந்தவர்களை வீட்டிற்குள் முடக்கின. தொலைக்காட்சி பெட்டிகளால் திண்ணைகளை தொலைத்தோம். மீதமுள்ள திண்ணைகளையும், அதனால் வந்த உறவுகளையும் அலைபேசிகள் அழித்து விட்டன. மண்ணிலிருந்து படைக்கப்பட்டவன் மண்ணிற்கே திரும்புவதைப்போல் மின்னணு சாதனங்களை உருவாக்கிய மனிதன் மின்னணு சாதனங்களுக்கே அடிமையாகிறான். திண்ணை மனதை இதமாகவும், முற்றம் உடலை ஆரோக்கியமாகவும் வைத்தன என்பதில் சந்தேகமில்லை. மீண்டும் பாரம்பரிய முறையில் வீடு கட்டி இழந்த உறவுகளையும் ஆரோக்கியத்தையும் மீட்போம்.

தொடரும்


முனைவர். ந. அரவிந்த்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர்களின் கட்டுமான கலையும் அது தொடர்பான வழிபாடுகளும் (பகுதி – 18)”

அதிகம் படித்தது