ஏப்ரல் 4, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 2

தேமொழி

Sep 26, 2015

சமூக சீர்திருத்தம் மட்டுமே பத்திரிக்கையின் குறிக்கோள்:

periyar2ஒவ்வொரு வாரமும் 10,000 ‘குடிஅரசு’ பத்திரிகைகளை அச்சேற்றினாலும், வருவாய் கிடைக்கக் கூடிய விளம்பரங்களை அதிகம் வெளியிட பெரியார் அதிக ஆர்வம் காட்டியதில்லை. விளம்பரங்களுக்கு அதிக பக்கங்களை ஒதுக்கினால் கருத்துகளை அதிகம் சொல்ல இயலாது போகிறது என்பது பெரியாரின் கருத்து. அதிக பக்கங்களை விளம்பரத்திற்கு ஒதுக்க இயலாது என்ற தனது நிலையை வாசகர்களுக்கும், விளம்பரதாரர்களுக்கும் வெளிப்படையாகவே பத்திரிக்கை வாயிலாகக் குறித்து கீழ்வருமாறு அறிவிப்புச் செய்தி அனுப்புகிறார். __________“கொஞ்சநாளைக்கு ‘குடிஅரசு’ 16 பக்கத்துடனே வெளிப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுவிட்டது. என்றாலும் இதனால் வாசகர்களுக்கு அதிகமான குறை ஏற்படாதிருக்கும் பொருட்டு இப்போது விளம்பரத்திற்காக உபயோகப்படுத்தி வரும் சுமார் 7, 8 பக்கங்களை இனி 3 அல்லது 4 பக்கங்களுக்கு அதிகப்படாமல் செய்துவிட்டு, சற்றேறக்குறைய 12 அல்லது 13 பக்கங்களுக்கு குறையாத விஷயங்கள் வெளியாக்க உத்தேசித்திருக்கின்றோம். இதனால் ஒரு சமயம் விளம்பர வியாபாரிகளுக்கு சற்று அதிருப்தி இருக்கலாம்” __________ (குடி அரசு -23.12.1928), என்று தன்நிலை விளக்கம் அளித்துள்ளார்.

“சமதர்ம அறிக்கை”(Communist Manifesto)யின் முதல்பாகம் மொழிபெயர்க்கப்பட்டு, 1931 ஆண்டு, அக்டோபர் 4 ஆம் நாள் குடிஅரசில் தொடங்கி, அந்த ஆண்டு நவம்பர் 1 ஆம் நாள்வரை தொடர்ந்து 5 இதழ்களில் வெளிவந்துள்ளது. இது போன்றே ‘ஜாதியொழிய வேண்டும்’ என்ற தலைப்பில் அறிஞர் அம்பேத்கர் கட்டுரை மொழிபெயர்க்கப்பட்டு வெளிவந்துள்ளது. ‘சமதர்ம அறிக்கை’, ‘ஜாதியொழிய வேண்டும்’ இவையிரண்டும் இந்தியமொழிகளில் தமிழிலும், ஏடுகளில் ‘குடிஅரசி’லும் தான் முதலில் வெளிவந்தன என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

‘ஒன்றே குலம்’ என்பதை வலியுறுத்த குடிஅரசு இதழைத் துவக்கிய பெரியாரிடம், நீதிக்கட்சி நடத்தி வந்த ‘திராவிடன்’ நாளேட்டை அவர்களால் நடத்த முடியாத நிலை ஏற்பட்ட பொழுது ‘திராவிடன்’ நாளேட்டை நடத்தும் பொறுப்பும் பெரியாரிடம் வந்து சேர்ந்தது.   கொள்கைகளின் படி ‘குடிஅரசு’ பத்திரிக்கை போலத்தான் அதே கொள்கையுடன் ‘திராவிடன்’ நாளேட்டையும் நடத்துவேன், ஒப்புக்கொள்ளாவிட்டால் ஒத்துழைக்காமல் விலகிவிடுவேன் என உறுதியாக அறிவித்துவிட்டுப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் பெரியார்.

நீதிக்கட்சி, தங்கள் கட்சியில் பார்ப்பனர்களையும் சேர்த்துக்கொள்ளும் முடிவை எடுத்த பொழுது அதை அவர்களது திராவிடன் நாளேட்டிலேயே கண்டித்து எழுதத் துவங்கினார் பெரியார். அதிர்ச்சி அடைந்த நீதிக்கட்சி, ‘திராவிடன்’ நாளேட்டை அவரிடம் இருந்து திரும்பப்பெற்றது. அலர்மேலுமங்கைத்தாயார் எனும் அம்மையாரை ஆசிரியராக அமர்த்தி, ‘திராவிடன்’ நாளேட்டை நீதிக்கட்சி தனது சார்பில் மீண்டும் வெளிக்கொண்டு வந்தபொழுது, “திராவிடன் மதவேறுபாடு, வகுப்புவேறுபாடு காட்டாமல் இனி வெளியிடப்படும்” என்ற அறிவிப்பை வெளியிட்டு, பெரியாரிடம் இருந்து திராவிடன் நாளேடு திரும்பப் பெறப்பட்டதன் நோக்கத்தை வெளிப்படுத்தியது. திராவிடன் நாளேட்டுடன் கொண்ட தொடர்பில் பெரியாருக்கு பொருளிழப்பு ஏற்பட்டும், தனது கொள்கைக்குப் புறம்பாக இருந்தால் விலகிவிடுவேன் என்று சொல்லியது போலவே, ‘திராவிடன்’ ஏட்டின் பொறுப்பிலிருந்து விலகினார் பெரியார்.

போராட்டங்களுக்குள்ளான பத்திரிக்கை எழுத்துப்பணி:

பெரியாரின் பத்திரிக்கைகள், பகுத்தறிவு பாசறைகள் மட்டுமல்ல, தமிழக வரலாற்றுப் போக்கையும், அக்கால இந்திய வரலாற்றுப் போக்கையும் படம் பிடித்துக் காட்டுவன. பெரியார் துவக்கிய சுயமரியாதை இயக்கம் என்னும் சமூகப்புரட்சியை, அதனோடு தொடர்புள்ள பெரியாரின் பொதுவாழ்வுப் பயணத்தை, அவர் தமிழகத்தில் கொண்டுவந்த சிந்தனை மாற்றத்தைச் சிறந்த முறையில் பதிவு செய்துள்ள ஆவணங்களாகவும் விளங்குகின்றன.

குடிஅரசு :-

குடிஅரசு தொடங்கிய எட்டு ஆண்டுகளில், “இன்றைய ஆட்சி ஏன் ஒழியவேண்டும்?” என்ற தலைப்பில் பெரியார் எழுதிய தலையங்கத்துக்காக பிரிட்டிஷ் அரசு பெரியார்மீது ‘அரசு துரோகக் குற்றச்சாட்டு’களின் கீழ் வழக்கு தொடர்ந்து, 1933 ஆம் ஆண்டில் ரூ.300 அபராதமும் விதித்து, 9 மாதங்கள் சிறையிலும் அடைத்தது. பெரியாரின் மனைவி நாகம்மாளின் மறைவிற்குப் பிறகு, குடிஅரசின் பதிப்பாளராகப் பொறுப்பேற்ற பெரியாரின் தங்கை கண்ணம்மாளுக்கும்   ரூ.100 அபராதமும், 6 மாத சிறைத் தண்டனைக்கு விதிக்கப்பட்டது. குடியரசு முடக்கப்படலாம் என எதிர்பார்த்த பெரியார் கவலை கொண்டதாகத் தெரியவில்லை. குடியரசு தடைப்பட்டால் அதேநாளில் வேறு பத்திரிக்கை வரும் என குடிஅரசில் அறிவிக்கிறார். அறிவித்ததுபோலவே, குடிஅரசு வரவேண்டிய அதேநாளில் ‘புரட்சி’ என்ற பத்திரிக்கையை தடைபடாது வெளியிட்டு விட்டு, அதில், “குடிஅரசை” ஒழிக்கச்செய்த முயற்சியால் “புரட்சி” தோன்ற வேண்டியதாயிற்று. கண்டிப்பாகப் புரட்சி தோன்றியேதான் ஆகவேண்டும்” என்று காரணமும் குறிப்பிடுகிறார்.

பெரியாரின் ‘குடியரசு’ இதழ் அரசின் அடக்குமுறைகளை எதிர்கொள்வதும் தொடர்கதையானது. பெரியார் சிறையிலிருந்த 1933 ஆம் ஆண்டு நவம்பர் 19 லிருந்து ‘குடிஅரசு’ தற்காலிகமாக நிறுத்தப்பட்டு மீண்டும் 1935 ஆம் ஆண்டு ஜனவரி 13 லிருந்து வெளிவரத்தொடங்கியது. பிறகு மீண்டும் 1940 ஆம் ஆண்டு டிசம்பர் 29 இல் நிறுத்தப்பட்டு, மீண்டும்   1943 ஆம் ஆண்டு அக்டோபர் 16 லிருந்து வெளிவரத்தொடங்கி, மீண்டும் 1949ஆம் ஆண்டில் அரசின் ஒடுக்கு முறைக்கு உள்ளானது. மேலும் அரசு ரூ.3000 ஜாமீன் தொகை கேட்கவே, குடி அரசு தொடராமல் போகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. ஆனாலும் 1925 ஆம் ஆண்டு துவங்கி 1949 ஆம் ஆண்டுவரை ‘குடி அரசு’ தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் தலைமுறைகள் கடந்து இன்னமும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.

periyaarபுரட்சி:-

குடியரசு ஏடு மட்டுமல்ல, தொடர்ந்து வந்த “புரட்சி”யும் அடக்கு முறைக்கு உள்ளானது, ஆசிரியர் பெயர் பத்திரிக்கையில் குறிப்பிடப்படவில்லை என்று கூறி மீண்டும் வெளியிட்டாளர் கண்ணம்மாள் மீது வழக்கு தொடரப்பட்டு ரூ 1,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. ஒரே ஆண்டில் அடுக்கடுக்காக மூன்று வழக்குகள், ஆயிரக்கணக்கில் அபராதங்களுக்கு மேல் அபராதங்கள் எனத் தொடர்ந்து தீட்டப்பட்டு, சுமார் ரூ. 5,000 க்கும் மேல் பொருளிழப்பில் “புரட்சி” இதழும் வெளிவரமுடியாத நிலையை எட்டியது.

பகுத்தறிவு :-

“புரட்சி’ ஏடு வெளிவரும்போதே ‘பகுத்தறிவு’ எனும் நாளிதழைத்தொடக்கிய பொழுது அதுவும் இரண்டு மாதங்கள் என்ற குறுகியகாலத்தில் முடங்கிப் போனது. ஆனால் அதே பகுத்தறிவை தொடர்ந்து வார ஏடாகவும், பிறகு மாத ஏடாகவும்   ஏறத்தாழ ஒரு நான்கு ஆண்டுகள் நடத்தியுள்ளார் பெரியார். பகுத்தறிவு வார இதழுக்கும், அதன் உண்மை விளக்கம் அச்சகத்துக்கும் இரண்டாயிரம் ரூபாய் பிணையத் தொகை கட்டவேண்டும் என்று 1935 ஆம் ஆண்டு ஜனவரி 29 இல் அரசு ஆணை பிறப்பித்தது. தடைபட்ட ‘பகுத்தறிவு’ இதழ் பிறகு மீண்டும் 1935 ஆம் ஆண்டு தொழிலாளர் தினமான மே முதல் நாளிலிருந்து பகுத்தறிவு நூற்பதிப்புக் கழகத்தின் சார்பில், பகுத்தறிவு மாத இதழாக வெளிவரத்தொடங்கியது.

விடுதலை :-

‘குடி அரசு’ம் வார இதழாக வெளிவந்து கொண்டிருந்த காலத்தில், நீதிக்கட்சியின் சார்பில் வெளிவந்து நின்று போயிருந்த ‘விடுதலை’ இதழும் ஜூன் 1, 1935 ஆம் ஆண்டு முதல் வாரம் இருமுறை இதழாக வெளிவரத் தொடங்கியது. பிறகு 1937 ஆண்டுமுதல் ‘விடுதலை’ வாரம் இருமுறை பதிப்பு என்பது நிறுத்தப்பட்டு, ‘விடுதலை’ நாளேடாக வெளிவருகிறது

ரிவோல்ட்:-

இவற்றோடு பெரியார் ஆங்கில இதழும் வெளியிட்டுள்ளார். சோவியத் புரட்சி நாளான நவம்பர் 7 ஆம் நாளைத் தேர்ந்தெடுத்து 1928 ஆம் ஆண்டில், ரிவோல்ட் (Revolt) என்ற ஆங்கில வார ஏட்டைத் தொடங்கி 55 இதழ்கள் வரையும் வெளியிட்டுள்ளார்.

‘குடிஅரசு’ இதழையும், சுயமரியாதை இயக்கத்தையும் 1925 ஆம் ஆண்டில் துவக்கி, அவற்றின் உதவியுடன் தனது ‘பகுத்தறிவு கொள்கை’ பரப்பும் இயக்கப் பயணத்தைத் தொடங்கிய பெரியாரின் எழுத்தும், பேச்சும் 1938 ஆம் ஆண்டு காலம் வரை முழுமையான வீச்சோடு தமிழகத்தில் மாறுதல்கள் பலவற்றைக் கொண்டு வந்தன.   அவற்றின் விளைவுகளால் அவரது கருத்துப் போர்க்களங்களான ‘குடிஅரசு’, ‘புரட்சி’, ‘பகுத்தறிவு’, ‘விடுதலை’ பத்திரிக்கைகள் தொடர்ந்து சந்தித்த அரசின் அடக்குமுறைகளும், இழப்பை ஏற்படுத்தி பத்திரிக்கையை முடக்கும் நோக்கில் ஆயிரக்கணக்கில் தீட்டப்பட்ட அபராதத் தொகைகளும், பிணைப் பணம் கட்டச் சொல்லி தடை செய்த அரசின் கெடுபிடிகளும் பெரியாரை அசைக்க முடியாமல், அவரது போராட்டத்தை தீவிரப்படுத்த மட்டுமே செய்தன.

அடக்குமுறைகள் பல எதிர்கொண்டாலும், பத்திரிக்கை நடத்துவதை ஒரு வருவாய் வரும் வாய்ப்பு என்றே கருதாமல், பகுத்தறிவு கருத்துக்களை மக்களுக்கு எடுத்துச் செல்லும் கருவியாகவும் கருதியவர் பெரியார். இதனால் அவர் என்றும் எழுத்துக்காகப் பெறும் சிறைத் தண்டனைகளையும், அபராதங்களையும் துச்சமாக மதித்திருந்தார். தனது கொள்கைகளில் இருந்து பிறழாமலும், விளம்பரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமலும் இதழ் நடத்திய பெரியார் பத்திரிக்கை துறையில் ஒரு முற்றிலும் மாறுபட்ட ஒரு வியத்தகு மனிதர்தான்.

பெரியார் சந்தேகமற உணர்ந்திருந்தது… எவ்வாறாயினும் தமிழக மக்களை சிந்திக்கத் தூண்டி, அவர்களைப் பகுத்தறிவு சிந்தனைப்பாதையில்   திருப்பிவிட்டால், அவர்கள் மீண்டும் தங்கள் தன்மதிப்புக்கு இழுக்கு தரும் பாதையில் திரும்பிச் செல்லவே வாய்ப்பிருக்காது என்ற எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் மட்டுமே. தமிழர் உரிமை மீட்பராகப் பெரியார் இதனை அவரது ‘பகுத்தறிவு’ இதழின் தலையங்கத்திலும் குறிப்பிடுகிறார்…

“முடிவாய்க் கூறுமிடத்து. பகுத்தறிவு மனித ஜீவாபிமானத்துக்கு மக்களை வழிநடத்திச் செல்லுமேயொழிய எக்காரணம் கொண்டும் மக்கள் பின் நடந்து செல்லும்படியான அடிமை வாழ்வில் உயிர் வாழாது என்பதேயாகும்” (பகுத்தறிவு-தலையங்கம்-26.8.1934)

வாழ்க பெரியாரின் சிந்தனையும் நல்முயற்சியும்.

____________________________________________________

கட்டுரைக்கு உதவிய நூல்:

குடிஅரசு 1925, பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 1 (இரண்டாம் பதிப்பு – 2008)


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 2”

அதிகம் படித்தது