மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 1

தேமொழி

Sep 19, 2015

இக்கால இந்தியாவின் அரசியலிலும், சமூக அமைப்பிலும் எண்ணற்ற மாற்றங்கள் எத்தனையோ ஏற்பட்டிருந்தாலும், வரலாற்றிற்கு முற்பட்ட காலத்திலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் துவக்க காலம் வரையில், ஒரு மாறுதலற்ற தேக்க நிலையில் இந்தியாவின் சமூக வாழ்வு அமைந்திருந்தது என்பதாக கார்ல் மார்க்ஸ் (The British Rule in India – Karl Marx) கருதினார். அதுபோன்றே, இந்தியாவின் நிலையில், பொருளாதார அடிப்படையில் படிப்படியாக புராதனப் பொதுவுடைமை, அடிமையுடமை, நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், சோஷலிசம் எனப் பல நிலைகளைச் சந்தித்ததற்கான வரலாற்றுச் சான்றுகளைக் காட்ட இயலாது என்று மார்க்சிய வரலாற்று ஆசிரியர் டி. டி. கோசாம்பி கருதினர்.

periyar1இக்கருத்தைப் பெரியார் தனது கோணத்தில், நமது நாட்டில் இந்தச் சாதீய அடிப்படையிலான அடிமைத்தனம் ஒவ்வொரு அரசகுலத்தின் ஆட்சியிலும், பேரரசுகளிலும்மாறாது, காலம் காலமாக ஊறிப்போயிருப்பதாகக் குறிப்பார். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் வெளியிடப்பட்ட இந்திய மக்கள் கணக்கெடுப்பு அறிக்கை ஒன்று (1901), சென்னை மாகாணத்தில் நிலவிய சாதீயமானது மனிதர் ஒருவரின் வாழ்வை, வேலையை, இருப்பிடத்தை, சமூக அந்தஸ்தை, உணவை,பெயரை, உடையைத் தீர்மானிக்கிறது என்றே குறித்திருந்தது. இவ்வாறு வாழ்வில் பிறந்ததிலிருந்து, இறப்பதுவரை பிரிக்கவழியின்றி வாழ்வோடு கலந்து ஒருவரது வாழ்வின் போக்கையே தீர்மானிக்கும் நிலையில் புரையோடிப் போயிருந்த பாகுபாட்டையும், சமத்துவமற்ற பேத நிலையையும் அசைத்துப் பார்க்க முற்பட்டவர் தந்தை பெரியார். வரலாற்றுப் போக்கில் பெரியார் புரட்சி செய்த காலம் ஒரு மிக முக்கியமான காலகட்டம் என்பதை யாராலும் மறுக்க இயலாது. ஒரு எழுத்தாளராக … இதழியலாளராக … தனது எழுத்து, உரை ஆகியவற்றால் தமிழக வரலாற்றைப் புரட்டிப்போட்ட பெரியாரை, அறிஞர் அண்ணா, “பெரியார் ஒரு சகாப்தம்; ஒருகாலகட்டம்; ஒரு திருப்புமுனை” என்று புகழ்ந்துரைத்தார். அத்தகைய பெரியாரது கருத்துப் பரப்பல் முயற்சியை மீண்டும் திரும்பிப் பார்க்கும் பொழுது மலைக்க வைக்கிறது.

ஒரு எழுத்தாளராக, இதழியலாளராக போராட்டங்கள் பல சந்தித்து தனது கருத்துகளை, உரைகளை மக்களிடம் தனது பத்திரிக்கைகள் மூலம் கொண்டு சேர்த்த பெரியாரின் பணி வியக்கவைப்பது. தமிழகத்தில் வெறும் 7% மக்களே எழுதப் படிக்கத் தெரிந்திருந்த ஒரு காலகட்டத்தில், அவர்களிலும் 5% பிராமண குல மக்களாகவும் இருந்த காலத்தில், இந்துமதத்தின் ஆணிவேரை அசைக்கும் நோக்கில், சனாதன தர்ம அமைப்பையும், வர்ண முறையையும் தீவிரமாக எதிர்க்கும் கருத்துகள் நிரம்பிய ஏடுகளை, வசதியற்ற ஒடுக்கப்பட்ட மக்கள் கூட்டத்தினர் ஓரணா, ஈரணா என்ற விலையையும் கூடப் பொருட்படுத்தாமல் ஆர்வத்துடன் வாங்கிப் படிக்கும் நிலையை உருவாக்கிய பெரியாரை, அதனால் மக்களின் சிந்தனையில் தெளிவை வளர்க்க விரும்பிய பெரியாரை எழுத்தாளராக, இதழியலாளராக பாராட்டுவது என்பதை அவர் வாழ்ந்த காலத்தில் வாழ்ந்தவராலும் கூட சிறப்பாகச் செய்ய இயலாது.

கொள்கை பரப்பவே பத்திரிக்கை:

தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவோ அல்லது செயலாளராகவோ காங்கிரசுடன் பெரியார் இணைந்திருந்த மிகக்குறுகிய ஐந்தாண்டு காலகட்டத்தில், 1922 ஆம் ஆண்டு அவர் கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டதால், கோவை சிறையில் பெரியார் அடைக்கப்பட்டார். பெரியாருடன் அவரது தோழரான ஈரோடு கருங்கல்பாளையம் வழக்கறிஞர் தங்கபெருமாள் பிள்ளையும் சிறையில் அடைபட்டிருந்தார்.சிறைவாழ்க்கையில் இருவரது சிந்தனையில் உதித்தது “குடிஅரசு” என்ற இதழைத் துவக்கும் எண்ணம்.

periyar3சிறை வாழ்க்கை முடிந்தவுடன் 1923 ஆம் ஆண்டு ஜனவரி 19 இல் ‘குடிஅரசு’ மற்றும் ‘கொங்குநாடு’ என்ற பெயர்களில் பத்திரிக்கைக்கான பதிவைத் துவக்குகிறார் பெரியார். சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு, 1925 ஆம் மே மாதம் இரண்டாம் நாள், சனிக்கிழமையன்று ஈரோட்டில் திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் அடிகள் தலைமையில் முதல் இதழ் வெளியிடப்பட்டு, ஒவ்வொரு ஞாயிறு அன்றும் ‘குடிஅரசு’ வார இதழாக, பெரியார் காங்கிரசில் இருக்கும்பொழுதே குடியரசு அவர் எழுத்தில் வரத்துவங்குகிறது. அதன்பிறகே, சற்றொப்ப ஆறு மாதங்கள் கழித்து காங்கிரசின் காஞ்சிபுரம் மாநில மாநாட்டில், தேவையான உறுப்பினர் எண்ணிக்கைக்கும் அதிக அளவில் ஒப்புதல் பெற்று அவர் முன்வைத்த “வகுப்புரிமை தீர்மானம்” விவாதத்திற்கு ஏற்காமல் நிராகரிக்கப்பட்டு, கட்சி விதிகளுக்கு புறம்பாகப் புறக்கணிக்கப்பட்டதால், கட்சி மேலிடத்தின் மீது சினம் கொண்டு தனது நண்பர்களுடன் வெளியேறி சுயமரியாதை இயக்கத்தைத் துவக்குகிறார். ஆகவே, காங்கிரசில் உறுப்பினராக இருந்த காலத்திலேயே தனது கொள்கை பரப்பும் கருவியாக ‘குடிஅரசு’ வார ஏட்டை வெளியிடும் எழுத்தாளராக, இதழியலாளராக பெரியார் இருந்தார். அப்பொழுதே, “ஒவ்வொரு வகுப்பும் முன்னேறவேண்டும். இதை அறவே விடுத்து தேசம், தேசம் என்று கூக்குரலிடுவது எமது பத்திரிகையின் நோக்கமன்று. மக்களுக்குள் தன்மதிப்பும், சமத்துவமும், சகோதரத்துவமும் ஓங்கி வளர வேண்டும்” என்று காங்கிரசில் இருக்கும்போதே முதல் குடிஅரசு இதழில் தனது நோக்கத்தையும் பெரியார் தெளிவாகக் குறிப்பிடுகிறார்.

அனைத்துயிர் ஒன்றென் றெண்ணி

அரும்பசி யெவர்க்கு மாற்றி

மனத்துள்ளே பேதா பேதம்

வஞ்சகம் பொய் களவு சூது

சினத்தையும் தவிர்ப்பாயாகில்

செய்தவம் வேறொன் றுண்டோ?

உனக்கிது உறுதியான

உபதேசம் ஆகுந்தானே!

என்று திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ‘குடி அரசை’ ஆரம்பித்து வைத்த போது ஆற்றிய உரைமொழிகள் தொடர்ந்து (தமிழர் தலைவர் தந்தை பெரியார் வாழ்க்கை வரலாற்றுத் தொடர் – சாமி.சிதம்பரனார்), பெரியாரின் கோணத்தை சாற்றும் விதமாக குடிஅரசு இதழில் வெளிவந்தது.

முதல் இதழின் அட்டையை பாரதியாரின் “சாதிகள் இல்லையடி பாப்பா” மற்றும் “எல்லோரும் ஓர் குலம், எல்லோரும் ஓர் இனம்” ஆகிய வரிகள் அலங்கரித்தன. பின்னாளில் மேலும் பல திருக்குறள்களும், பெரியார் காங்கிரசை விட்டு வெளியேறினாலும் ” மகாத்மா காந்தி வாழ்க”, “கதர் வாழ்க” போன்ற வரிகளும் மாறி மாறி இடம் பிடித்தன. சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமும், குடிஅரசு இதழின் துவக்கமும் ஒரே ஆண்டிலேயே அமைந்து பெரியாரின் கொள்கை மக்களிடம் சேர்வது என்பது சரியான பாதையில் பயணிக்கத் துவங்குகிறது. பெரியாரின் புரட்சிகர எழுத்தும் பேச்சும் சமுதாய மாற்றத்துக்கான போர்க்கருவிகளாக அமைந்தன.

ஆரம்ப நாட்களிலேயே தங்கபெருமாள் பிள்ளை உடல்நலக் குறைவு காரணமாக ஆசிரியர் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறார். 1925 ஆம் ஆண்டு மே மாதம் முதல் 1949 நவம்பர் முடிய வெளிவந்த குடி அரசு வார ஏட்டின் ஆரம்ப நாட்களில், வார இதழின் 12 பக்கங்களையும் பெரியாரே எழுதி வந்ததாய் பெரியார் குறிப்பிட்டுள்ளார். பின்னர் பகுத்தறிவுப் பாதையில் அவருடன் பயணித்த திராவிடக் கழக உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் ம.சிங்கார வேலர், சாமி.சிதம்பரனார், கைவல்யசாமியார், மயிலை.சீனி.வேங்கடசாமி, பாரதிதாசன், ஜீவானந்தம் எனப் பலரும் எழுதியுள்ளனர்.

பெரியார் வரலாற்றைத் தமிழர்களுக்கு படைத்தளித்த சாமி. சிதம்பரனார் பெரியார் பற்றிக் கூறும்போது …

periyar4“இவர் எதைப்பற்றியும் அஞ்சாமல் எழுதுவார். இவருக்கு இலக்கணம் தெரியாது. எழுதுவதில் எழுத்துப் பிழைகளும் மலிந்திருக்கும். சொற் பிழைகள் நிறைந்திருக்கும். ஒருவாக்கியம் எப்படி இருக்கவேண்டும் என்பதே இவருக்குத் தெரியாது. இவர் எழுதுவதில் காற்புள்ளி, அரைப்புள்ளி, முற்றுப்புள்ளிக்கு வேலையில்லை. ‘கிணர்’ ‘வயிர்’ ‘சுவற்றில்’ ‘ஆஷி’ ‘சூஷி’ ‘ஆருதல்’ ‘பொருமை’ போன்ற பிழைகள் தாராளமாகக் காணப்படும். சாதாரணமாகப் பேசுந் தமிழில்தான் எழுதுவார். அதிலும் எழுவாயெங்கேயிருக்கிறது, பயனிலை எங்கேயிருக்கிறது என்று தேடினாலும் சில சொற்றொடர்களில் அகப்படா. ஒரு வாக்கியம் நான்கு முழம் ஐந்து முழம் நீண்டிருக்கும். இவ்வளவுபிழைகள் மலிந்திருந்தாலும் படிப்போரை தன்வசமாக்கும் சக்தி இவர் எழுத்துக்கு மட்டும் தனியாக அமைந்துள்ளது. அது என்ன சக்தி என்று நம்மாற் சொல்லமுடியாது.” (‘தமிழர் தலைவர்’ .ப.169) என்கிறார்.

இதனைப் பெரியாரும் ஒருநாளும் மறுத்ததில்லை. அவர் சிலவேளை ஒரே பத்தியில் அனுகூலம் – அநுகூலம், அன்னியர் – அந்நியர், கட்சி – கஷி, சூழ்ச்சி – சூஷி, முஸ்லீம் – முஸ்லிம், தேசீய – தேசிய என்று மாற்றி மாற்றித் தொடர்ந்து எழுதியும், பேச்சுத் தமிழிலும் எழுதியதை அவரே அறிந்திருந்தாலும், இதற்காக இலக்கணம் கற்கப்போவதில்லை என்று கூறி தான் சொல்ல நினைத்த கருத்துக்கு மட்டுமே முக்கியத்துவம் அளித்தார்.

பெரியார் பல்வேறு புனைப் பெயர்களில் கட்டுரைகளை எழுதியுள்ளார். இவற்றில், “சித்திரபுத்திரன்’, ‘பழைய கருப்பன்’ என்பவை நன்கு அறியப்பட்ட புனைப்பெயர்களாகும். இதைத் தவிர தேசீயத்துரோகி, ஒரு தொழிலாளி, சுமைதாங்கி, யார் எழுதினாலென்ன, எவர் எழுதினாலென்ன, ஒருநிருபர், நமதுஅரசியல் நிருபர், பொதுநலப்பிரியன், குறும்பன், உண்மை காண்போன், நம்பிக்கையிழந்தவன், பார்ப்பனரல்லாதான், உண்மை விளம்பி, வம்பளப்போன், பழைய காங்கிரஸ்காரன், வம்பன் என்ற புனைப் பெயர்களிலும் இவர் எழுதியிருக்கலாம் என்ற பெரியாரியலில் ஆர்வம் கொண்டோர், அவர் எழுதும் முறையை நன்கறிந்த வாசகர்கள் கருதுவதுண்டு.

periyar5ஆண்டு, மாதம்,தேதி ஆகியவற்றைக் குறிக்க முறையே ௵, ௴, ௳ என்ற குறியீடுகளும், மேற்படி என்பதைக் குறிக்க ௸ என்ற குறியீடும் , ரூபாய், அணா, பைசா எனும் அன்றைய நாணயமுறைக் கணக்குகளையும் அப்படியே பயன்படுத்தினார். பெரியார் முதல் முதலாக எழுத்துச் சீர்திருத்தத்தை குடி அரசில் அறிமுகப்படுத்த எண்ணி இருந்தாலும், எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தியது 1935 ஆண்டு ஜனவரி 6 ஆம் நாள் வெளிவந்த அவரது மற்றொரு பத்திரிக்கையான “பகுத்தறிவு” வார இதழில்தான். எழுத்துச் சீர்திருத்தத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்தை, இதற்கு முதல் வார (30.12.1934) “பகுத்தறிவு” இதழின் துணைத் தலையங்கத்தில் கீழ்வருமாறு குறிப்பிடுகிறார்…

__________ “இன்னமும் தமிழ் பாஷை எழுத்துகளில் அனேக மாறுதல்கள் செய்யவேண்டி இருந்தாலும் இப்போதைக்கு இந்த சிறுமாறுதலை அனுபவத்திற்குக் கொண்டு வரலாம் என்று கருதி அந்தப்படியே எழுத்துக்களை உபயோகித்து அடுத்தாப்போல் பிரசுரிக்கப்போகும் ‘குடிஅரசு’ பத்திரிகையைப்பிரசுரிக்கலாம் என்று இருக்கிறோம்” __________ (பகுத்தறிவு 30.12.1934, ப.12)

[தொடரும்]

____________________________________________________

கட்டுரைக்கு உதவிய நூல்:

குடிஅரசு 1925, பெரியாரின் எழுத்தும் பேச்சும், தொகுதி 1 (இரண்டாம் பதிப்பு – 2008)


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழர் உரிமை மீட்பரின் எழுத்துப் பயணம் – 1”

அதிகம் படித்தது