மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழிசைக் கலைஞர் மம்மது கூறும் தமிழிசையும்,அழிந்துவரும் தமிழர் கலாச்சாரமும். (கட்டுரை)

ஆச்சாரி

Aug 1, 2013

நம்முடைய தமிழ் இசை என்பது இன்று நேற்று ஏற்பட்டதல்ல, எந்த ஒரு  தனிப்பட்ட சில மனிதர்கள் கண்டுபிடித்ததல்ல. இந்த இசையை  முத்துத்தாண்டவரோ, தியாகராஜரோ, பாபநாசம் சிவனோ  கண்டுபிடித்ததல்ல. இதை இவர்களும் நாங்கள் தான் தமிழிசையைக் கண்டுபிடித்தோம் என்று கூறவும் இல்லை. இடையில் இருக்கிறவர்களே இதைப்பற்றி சொல்லிக்கொண்டிருந்தார்கள். நம்முடைய இசை என்பது தொடர்ந்து நம்முடனே வருவது. மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தொடர்ந்து வரக்கூடியது. இதை எனது இசை சார்ந்த நூல்களில் தக்க ஆதாரத்தோடு எழுதியிருக்கிறேன். அடுத்து நம்முடைய இசையுடைய அடிப்படைக் கூறுகளையும் கவனிக்க வேண்டும். இசை என்று என்றாலே அது  பண், தாளம் ஆகும். பண் என்பது அதனுடைய ஸ்வரங்களைக் குறிக்கும். இசை  எடுத்துக்கொண்டோமானால் இயக்கம் என்பது ஸ்தாய் எனப் பொருள்படும். தமிழர்களுக்கு அதைப் பற்றி என்ன அறிவு இருக்கிறது? அதைப் பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள்? அப்படி நுட்பமான பழைய விடயங்களை, மக்களிடம் போய்ச் சேராத விடயங்களை எடுத்துக் கொண்டு என்னுடைய நூலில் எழுதுகிறேன்.

அந்தப் பழைய விடயங்களில் இன்றளவும் “இசை நிகழ்த்துதல்” எப்படி இருக்கிறது? என்பதையும் நான் சொல்லி இருக்கிறேன். இது ஒரு ஆவணப் படுத்த வேண்டிய விடயம் ஆகும். இந்த ஆவணம் எதிர்காலத்தில் ஒரு ஆய்வுக்காகவும், மக்களுக்கு ஒரு புரிதல் ஏற்படுத்துவதற்காகவும் மிகவும் முக்கியமானது. வெளி நாடுகளில் மிகச் சிறந்த ஆய்வுகள் எல்லாம் நடக்கிறது. என்ன காரணம் என்றால் ஆய்வுக்கு வெண்டிய நூல்கள், கருவி நூல்கள் என்று சொல்வார்கள், தரவுகளைத் தரக்கூடிய நூல்கள், அடிப்படைக் கூறுகளை தெரிந்து கொள்ளவேண்டிய நூல்கள் என அவர்கள் முதலில் எழுதினார்கள். இதில் கலைக் களஞ்சியங்கள், அகராதி, லெக்சிகன் ஆகியனவும் அடங்கும். நம் தமிழ் நாட்டில் அவ்வாறு எதுவும் கிடையாது. எடுத்துக்காட்டாக கூத்துப் பற்றி தெரிய வேண்டுமென்றால், அதற்க்கான அகராதி நம்மிடம் கிடையாது, நாட்டியத்தைப் பற்றிய அகராதியும் நம்மிடையே கிடையாது. நாட்டியத்தைப் பற்றி ஒரு சொல் வந்தால், அதாவது “அலாரிப்பு” என்ற சொல்லுக்கு விளக்கம் எங்கே தேடுவது? எனவே அதற்கான அகராதி நம்மிடையே இருக்க வேண்டும், கலைக் களஞ்சியம் இருக்கவேண்டும். கலை சார்ந்து ஆய்வு செய்பவர்களுக்கு இந்த மாதிரியான ஆய்வு நூல்கள் இருந்தால் தான் ஆய்வு நுட்பத்தை வெளியே கொண்டு வர முடியும். அப்படியான மூல நூல்களை உருவாக்கும் பணியில் தான் நான் தொடர்ச்சியாக ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன். இது தொடர்பாகத் தற்போது  6 நூல்கள் எழுதியிருக்கிறேன். இந்த இசைக்குப் பங்களிப்பு செய்த பெரியோர்கள் அதிகம் இருக்கிறார்கள்.

ஒரு கால கட்டத்தில் மக்கள் என்ன சொல்ல ஆரம்பித்தார்கள் என்றால், தமிழர்களுக்கு இசை கிடையாது, இசை பற்றி எதுவும் தெரியாது என்று சொல்லும்பொழுது ஆப்ராம் பண்டிதர் என்று ஒருவர் வருகிறார். தமிழிசை பற்றி அண்மைக்காலத்தில் மிகச்சிறந்த நூல் எழுதியவர். கர்ணாமிர்த சாகரம் என்ற 1346 பக்கம் கொண்ட தமிழிசை பற்றிய நூலை எழுதியவர்.இது தமிழிசைக்கு ஒரு கடல் மாதிரியான நூல் ஆகும். இவர்தான் முதன் முதலில் தொல்காப்பியம், சிலப்பதிகாரம், சங்க இலக்கியங்களில் இசை பற்றி சொன்ன விடயங்கள் எல்லாமே வெளியே கொண்டு வந்து முயற்சி செய்து பொருள் சொன்னவர் அவர்தான். ஆப்ரகாம் பண்டிதர் என்பவர் யார்? என்ன செய்துள்ளார்? என்று இங்கு அனேக நபர்களுக்குத் தெரியவில்லை அண்மையில் சாகித்ய அகாடமிக்கு ஆப்ரகாம் பண்டிதரைப் பற்றி நான் ஒரு நூல் எழுதிக் கொடுத்திருக்கிறேன். இந்த நூல் அடுத்த மாதம் வெளிவரும். அதில் தமிழிசை என்றால் என்ன? அதன் தொன்மை என்ன? தமிழிசை பற்றி எந்தெந்த நூல்களில்  எல்லாம் கூறியிருக்கிறார்கள்? என்று இந்நூலில் சொல்லியிருக்கிறேன். அந்த இசைக்கான பங்களிப்பு செய்த பெரியோர்கள் பற்றி நாம் நூல் எழுத வேண்டும். காரணம் வருங்கால சந்ததியினருக்கு மிகச்சிறந்த மூல நூலாக இவை  இருக்கும், நல்ல படிப்பினை தரக்கூடியதாகவும் இருக்கும், எதிர்காலத்தில் நம்மையும் அவ்வாறு உருவாக்கிக் கொள்ளவேண்டும் என்பதற்கு ஒரு முன்னுதாரணமாக சமூகப் பெரியோர்கள், மொழிக்கு, கலைகளுக்கு, தொண்டு செய்த பெரியோர்கள் பற்றிய நூல்களை நாம் கொண்டு வர வேண்டும், மிக விரைவில், இந்தக் கால கட்டத்தில் கொண்டுவரவேண்டும், ஏனென்றால் இவைகள் அனைத்தும் வேகமாக அழியக்கூடிய ஒன்றாக இருக்கிறது.

ஒரு முறை எனது பேத்தி என்னிடம் கேட்டாள் “தாத்தா அரிசி எங்கிருந்து வருகிறது? நெல்லில் இருந்து வருகிறது என்றேன். நெல்லு எப்படி இருக்கும்? என்று கேட்டாள் ஆச்சரியமாக இருந்தது. காரணம் இன்றைய தலை முறையினருக்கு, அதிலும் சென்னை போன்ற மாநகரங்களில் வாழ்கின்ற மக்கள் நெல்லைப் பார்த்திருக்கக் கூட முடியாது. தினசரி மூன்று வேலையும் சாப்பிடக்கூடிய நெல்லே எப்படி வந்தது என்று தெரியவில்லை என்றால் இவர்கள் சாமையைப் பற்றியும் ,கேழ்வரகைப் பற்றியும் எப்படி தெரிந்திருக்க முடியும்? இப்போது நமது உணவுப்பழக்கங்களில் இருந்து நிறைய விடயங்களை நாம் இழந்திருக்கிறோம். இன்று வரும் விதவிதமான நோய்களுக்கு என்ன காரணம் என்றால், இந்த மாதிரி நமது பாரம்பரிய உணவுகளான புன்செய்த் தாவரங்களை நாம் இழந்ததுதான் காரணம். இதனால் இன்று இயற்கை உணவு, மாற்று உணவு என்று நாம் பேச ஆரம்பித்திருக்கிறோம். இதெல்லாம் மீட்டுருவாக்கம் செய்யும் பொது நமது உணவு, உடைகள் மீண்டும் வரும். இன்று பெண்கள் பாவாடை தாவணி அணிவது கிடையாது. முக்கிய விழாக்களுக்கு மட்டுமே இந்த மாதிரி நமது பாரம்பரிய உடைகளை அணிகின்றனர். இன்று வயதான பெண்கள் கூட நைட்டியும், சுடிதாரும் அணிய ஆரம்பித்திருக்கிறார்கள். இதனால் நாம் நமது உணவுமுறை, உடைகள், இருப்பிடம் இது போன்ற கடந்த கால நம்முடைய அடையாளங்களை இழந்து கொண்டுவருகிறோம்.

இன்று கட்டுகின்ற கான்கிரீட் கட்டிடம் நாம் வாழ்கின்ற இந்தச் சூழலுக்கு ஏற்ற இருப்பிடமே கிடையாது. இது குளிர் பிரதேசத்திற்கு ஏற்ற ஒரு கட்டிடம். ஆனால் இன்று தமிழ் நாட்டில் சுண்ணாம்பு என்றால் என்னவென்று தெரியாது, காரை என்றால் என்னவென்று தெரியாது. செம்மண் என்றால் என்னவென்று தெரியாது. இன்று நமக்கு தெரிந்ததெல்லாம் சிமெண்ட், கம்பி, ஜல்லி, ஆலோபிளாக் என்றளவிற்கு நாம் வந்துவிட்டோம். இன்று புவி வெப்பமயாகிறது என்று கூறினால் அதற்குக் காரணம் இந்த கான்கிரீட் கட்டிடங்கள் தான். இன்று கொடைக்கானல், கொடைக்கானல் மாதிரியே இல்லை என்கிறார்கள். காரணம் இந்தக் கான்கிரீட் கட்டிடங்களே ஆக்கிரமிப்பே. முற்றம் என்பதை எல்லாம் வருங்காலங்களில் கிராமத்திற்கு அழைத்துச் சென்று தான் காட்டவேண்டும் போலும். முற்றம் இருக்கும்  அளவு இன்று இடம் இருந்தால் அதில் வீடு கட்டி வாடகைக்கு விடும் மனநிலையே இன்று மக்களுக்கு இருக்கிறது. ஆக உணவுமுறை, உடைகள், இருப்பிடம் இது போன்ற கடந்த கால நம்முடைய அடையாளங்கள் குறைந்து கொண்டே வருகிறது. இந்த மீட்டுருவாக்கம் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு, எங்களால் முடிந்ததைச்  செய்து கொண்டு வருகிறோம்.

தமிழிசையில் “செம்பாலே” எனக் கூறுவது முல்லையாழ் ஆகும். முல்லை எனக் கூறுவது, இன்றைக்கு அறிகாம்போதி என்று சொல்லக்கூடிய ராகம் ஆகும். நம் முன்னோர்கள் ஐந்து நிலத்திற்கும் பெரும் பண் வைத்திருக்கிறார்கள். இன்று மோகனம் என்று பாடுகிறோமே அதற்கு அந்த காலத்தில் முல்லைப் பாணி என்று பெயர். இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் அதைப்பற்றிக் கூறுகிறார். குறிஞ்சி நிலத்திற்குரியது சிறுபண் எனப்படும் மத்தியமாவதி. அதாவது செந்திரம் என்ற பெயரில் முன்பு இருந்த மத்தியமாவதி ராகத்தை இன்றும் பாடிக்கொண்டிருக்கிறோம். நெய்தல் நிலத்திற்கு இருந்த இந்தலம் என்ற ராகத்தை இன்று இந்தோளம் என்ற பெயர் வைத்து பாடிக்கொண்டிருக்கிறோம். இந்த ராகத்திற்கு பழைய பெயர்களான  மருள், தடவு, என இருந்த இந்த சொல்லாட்சிகள் எல்லாம் சங்க இலக்கியங்களில் வருகிறது. இதை இந்துஸ்தானில் மால்கவுன்ஸ் என்ற பெயரில் பாடுவார்கள்.

மோகன ராகம் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, வடநாடுகளிலும்  இருக்கிறது இதற்கு பூப் அல்லது போப்பாளி என்று கூறுவார்கள். இந்த ராகம்  சீனா, இந்தோனேசியா, ஜாவா போன்ற அனைத்து நாடுகளிலும் இந்த மோகன ராகம் இருக்கிறது. சீனாவின் தேசியகீதமே இந்த மோகன ராகத்தில்தான் இருக்கிறது. ஏழாம் அறிவு திரைப்படத்தில் சூர்யா போதி தர்மராக சீனாவிற்குச் சென்று, அங்கு நோய் வந்த ஒரு குழந்தையைக் காப்பாற்றி, அக்குழந்தையை அதன் தாயிடம் ஒப்படைக்கும் காட்சியின்  பின்புலத்தில் ஒரு சீனப் பாடல் ஒலிக்கும், அதும் மோகன ராகத்தில் அமைந்த பாடலே.

அதே போல் கொன்றைக்குழல் என்ற ராகம் பாலை நிலத்திற்குரியது, இன்று சுத்தசாவேரி என்று கூறுகிறோம். மருத நிலத்திற்குரிய சிறுபண் சுத்ததன்யாசி, இது ஆம்பல் குழல் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த ஆம்பல் குழல் என்ற வார்த்தையை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் “ஆம்பலன் தீங்குழல் கேளாமோ தோழி” என்று கூறுகிறார். ஆம்பல் குழல் என்பது இன்று சுத்த தன்யாசி ராகமாக இருக்கிறது. தமிழர்களுக்கான நிறைய பண்கள் இரண்டாயிரம், மூன்றாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் பாடிக்கொண்டிருந்த பண்கள் இன்னமும் நம்மிடையே இருக்கிறது, காரணம் எழுத்தால் ஓரளவிற்கு அவ்விசைகளைப் பேணிப் பாதுகாத்திருக்கிறோம். ஆனால் நம்முடைய நிகழ்த்துக் கலைஞர்கள் வழிவழியாக அதை விடாமல் அவர்களால் இப்பழங்கலைகளை அழியாமல் கொண்டுவந்திருக்கிறார்கள். ஆனாலும் தமிழிசை பற்றிய நிறைய விடயங்கள் அழிந்து விட்டது. ஒரு சமூகத்தில் மக்கள் சிரமப்படும் பொழுதும், மக்களை ஏழைகளாகவும், இழி குலத்தோராகவும் வைக்கும் பொழுதும் , அவர்களிடமிருந்து கலைகள் சிறிது சிறிதாக அழியத்தான் ஆரம்பிக்கும். அப்படிப் பார்த்தீர்களேயானால் இசையில் சில விடயங்களைப் பாதுகாத்துத் தொடர்ச்சியாக கொண்டுவந்திருக்கிறார்கள்.

முந்தைய தலைமுறையைப்  பார்த்தீர்களேயானால் இசை வேளாளர், தேவதாசி மரபு வரையிலும் இசையைப் பாதுகாத்துக் கொண்டுவந்திருக்கிறார்கள். நாலாயிர திவ்ய பிரபந்தம், தேவாரம் பாடியவர்கள் ஓதுவார்கள் மற்றும் அறையர்கள்  எனப்படும் இவர்கள் இசையைப் பாதுகாத்துக் கொண்டு வந்திருக்கிறார்கள். அதுமட்டுமல்லாமல் நம் முந்தைய தலைமுறையினரான தாத்தா, பாட்டி போன்றோர்களால் நாட்டார் பாடலிசை பாதுகாத்துக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறு நம் முன்னோர்கள் இந்த இசை அழிந்து போகாமல் அவர்களால் முடிந்த அளவு பாடி நம்மிடையே கொண்டு வந்து சேர்த்திருக்கிறார்கள். அவ்வாறு சேர்த்ததே இவ்வளவு வளமையாக இருந்தது என்றால் இதிலிருந்து அழிந்து போனது எவ்வளவு வளமையாக இருந்திருக்கும்? அதற்கு முன்னால் ஒரு முழு அளவில் எந்த அளவுக்கு இசை இருந்திருக்கும்? கூத்து மரபு இருந்திருக்கும்? ஆடல் மரபு இருந்திருக்கும்? இதை எல்லாம் சிறிது சிறிதாக நாம் அழியவிட்டிருக்கிறோம். ஆனால் இப்போது இருப்பதை ஆவணப்படுத்துவதே நமது முக்கியமான செயல்களில் ஒன்றாகும்.  காரணம் இந்தக் காலகட்டத்தில் மிக வேகமாக நமது பாரம்பரிய அடையாளங்கள் அழிந்து வருகிறது.

ஒரு முறை என் நண்பர் வீட்டிற்கு சென்றிருக்கும் பொழுது அம்மி உரலையும், ஆட்டு உரலையும் அவர் வீட்டிற்கு வெளியே போட்டிருந்தார். எதற்காக இப்படி வெளியில் இவற்றைப் போட்டிருக்கிறீர்கள்? எவரும் தூக்கிக் கொண்டு சென்று விடமாட்டார்களா? என்று எனது நண்பரிடம் கேட்டதற்கு, அதற்குத்தான் போட்டிருக்கிறேன் என்றார் என் நண்பர். இது எங்களுக்கு இடைஞ்சலாக இருக்கிறது என்றார். இப்போது நமக்கு, நம் அடையாளத்தைக் கூறும் இந்த அம்மியும், ஆட்டு உரலும் தேவையில்லை. இது போல் நிறைய பழமை சார்ந்த விடயங்கள் எல்லாம் சுமையாக இன்று மாறிவிட்டது.

எந்த விடயங்கள் எல்லாம் நம்மை அடையாளம் காட்டக் கூடிய மரபுகள், நிறைந்த விடயங்கள் என்றோமோ, அந்த விடயங்கள் எல்லாம் இன்று சுமையாக இருப்பதாக உணர்கிறோம். இந்தக் காலத்தில் தமிழ் படிப்பு என்பது ஒரு சுமை மாதிரி ஆக்கிவிட்டோம். தமிழ் படிப்பு எதற்குமே தேவையில்லை. இப்போது M.B.B.S படிப்பதற்கும்,  B.E. படிப்பதற்கும் நாம்  தமிழில் எடுத்த மதிப்பெண்கள் எந்தக் காலத்திலேயுமே கணக்கில் வராது. அப்புறம் அவன் எப்படித் தமிழ் படிப்பான்? பிற்கால வாழ்க்கைக்குத் தேவையில்லாத ஒரு கல்வி, தமிழ் கல்வி என்று ஆகிவிட்டது. அப்படியென்றால் அது ஒரு  சுமையாக நினைக்க ஆரம்பித்துவிட்டோம். அப்படி ஒரு சமூகத்தை நாம் உருவாக்கி விட்டோம். இதில் மொழி அழிவு, கலை அழிவு, இலக்கிய அழிவு என்பது நம்மால் தடுக்க முடியாத அளவிற்கு எங்கேயோ கொண்டு செல்லப்பட்டு விட்டது. இன்றைக்கு தமிழ் மொழி என்ற ஒரு மொழியை  அழிக்கும் வேலையில் சமூகம் இறங்கிவிட்டது என்றால், அதன் இனம் அழியும், வரலாறு அழியும், கலை அழியும், இலக்கியம் அழியும். ஆக மொழி அழிவு என்பது எல்லாவற்றுக்குமான அழிவு என்பதை நாம் புரிந்து செயல்பட வேண்டும். இன்றைக்கு எடுத்துக்கொண்டோமானால் ஒரு ஏழை, நீதிமன்றத்தில் ஒரு வழக்கை எடுத்துத் தான் பேசும் மொழியில் கூற முடியுமா? வழக்கறிஞர் தமிழில் வாதாடாததால் என்ன நடக்கிறது என்று குற்றவாளிகளுக்கோ, குற்றம் சுமத்தப்பட்டவருக்கோ தெரியவில்லை. முடிவில் அவனுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை என்று கூறுகிறார்கள். எதற்கு? என்ன? என்பதே அவனுக்கு தெரியாது. என்ன வாதாடினார்கள்? நீதிமன்றத்தில் நீதிபதி என்ன சொல்கிறார்? என்பதே தெரியாது. நீதிமன்ற மொழியாக நம் தமிழ் மொழி இல்லை. ஆலயத்திற்குச் சென்றோமானால் “இங்கு தமிழிலும் அர்ச்சனை செய்யப்படும்” என்று குறிப்பிட்டிருப்பார்கள். அந்த விளம்பரம்பலகை அப்படியா இருக்க வேண்டும்? “வட மொழியிலும் அர்ச்சனை செய்யப்படும்” என்றல்லவா இருக்க வேண்டும். இங்கு எல்லாமே தலைகீழாக இருக்கிறது.

 “தலை கீழ் பிரபஞ்சம்” என்று மார்க்ஸ் சொன்னது போல் அல்லவா இன்று நம் நிலை இருக்கிறது. ஆலயத்தில் வழிபாட்டு மொழியாகத் தமிழ் இல்லை. இசை மொழியாகத் தமிழ் இல்லை. இன்று செவ்வியல் இசை என்று கேட்கக்கூடியது வடமொழியில் பாடுகிறார்கள், இந்துஸ்தானியில் பாடுகிறார்கள், தெலுங்கில் பாடுகிறார்கள், தமிழில் மட்டும்  இல்லை. இதற்கு எல்லாம் மிக மோசமான சூழல் என்ன என்றால் கல்வி மொழியாகத் தமிழ் இல்லை. வேறு எந்த நாட்டிலேயுமே இந்த நிலை போல் இல்லை, இந்தத் தமிழ் நாட்டில் இன்றைக்கு  தமிழ் படிக்காமலேயே (பி.ஏ) இளங்கலை பட்டம் வாங்கலாம், தமிழ் படிக்காமல் (எம்.ஏ) முதுகலை பட்டம் வாங்கலாம், தமிழ் படிக்காமல் முனைவர் (P.hd) பட்டமும் கூட வாங்கலாம். மொத்தத்தில் தமிழ் படிக்காமலே தமிழ்நாட்டில் எந்த படிப்பும் படிக்கலாம் இந்தச்  சூழல் உலகத்தில் எங்கேயுமே கிடையாது. இது ஒன்று போதும் நம்முடைய மொழி அழிவதற்கு, மொழி அழிந்தால் எல்லாம் அழிந்து விடும். நம்முடைய வரலாறு, கலை, இலக்கியம், பண்பாடு என எல்லாமே அழிந்து விடும், இன்றைக்கு எந்தக் கால கட்டத்தில் நாம் இருக்கிறோம்?

இப்போது நாங்கள் எழுதுகிறோம், பதிவு செய்கிறோம், சிலர் வலைத் தளத்தில் எழுதுகிறார்கள்,  இச்சூழலில் ஒரு கேள்வி கேட்டுப்பார்க்க வேண்டும். இவை அனைத்தும் யாருக்காக? தமிழே தெரியாத ஒரு தமிழ்ச்  சமூகத்தை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். தமிழ்க் கலைகளைப் பற்றியோ, இலக்கியத்தைப் பற்றியோ எந்தவிதமான அறிவும் நாம், அவர்களுக்கு வழங்காத ஒரு நிலையில், எதிர்காலத்திற்கு வேண்டிய ஒரு மாணவர் சமூகத்தை நாம் உருவாக்கிக் கொண்டு இருக்கிறோம். இது மிகப் பெரிய அதிர்ச்சியான ஒன்று. இதன் பாரதூரமான விளைவுகளை எதிர்காலத்தில் நாம் சந்திக்கத்தான் போகிறோம்.


ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழிசைக் கலைஞர் மம்மது கூறும் தமிழிசையும்,அழிந்துவரும் தமிழர் கலாச்சாரமும். (கட்டுரை)”

அதிகம் படித்தது