தமிழின் வசன கவிதை
இல. பிரகாசம்Jul 1, 2017
19-ம் நூற்றாண்டின் இறுதிக்காலம் மற்றும் 20-ம் நூற்றாண்டின் முதல் காலகட்டம், தமிழ் இலக்கிய உலகில் புதிய அத்தியாயத்தை ஏற்படுத்திய காலமாக வரையரை செய்யலாம். சங்ககாலத்தின் மரபுசார்ந்த கவிதைகளை புனையும் போக்கு பிற்காலத்திலும் தொடர்ந்தன. குறிப்பாக தமிழ்ப் பகுதிகளில் 19-ம் நூற்றாண்டு காலத்தில் வாழ்ந்த பெரும் நிலக்கிழார்களின் கைகளில் கவிதையின் மரபு சிக்கிக் கொண்டு சல்லாபத்திற்காக மட்டுமே பயன்படக்கூடியதாக பார்க்கப்பட்ட காலமும் இதுவே.
இப்போக்குகளை மாற்றியவர் மகாகவி எனப் புகழப்பட்ட பாரதியார். மேலும் அக்காலகட்டமும் இந்திய சுதந்திர வேட்கைக்கான களம். வீச்சுடன் செயல்பட்ட காலம். அவர் கவிதையை மக்களை நோக்கி படைத்தார். அதன் விளைவு மேலைநாட்டு கவிகளின் அறிமுகம் பாரதியாருக்குக் கிட்டியது. அவ்வாறு அமெரிக்கக் கவி ஷெல்லியின் “புல்லின் இதழ்கள்” எனும் தொகுப்பு பாரதிக்கு அறிமுகம் ஆனது.
கவி ஷெல்லியின் படைப்புகளில் பெரிதும் மக்கள் மத்தியல் பேசுவதாக அமைந்திருந்தது. இம்முறையை தமிழ் மொழியில் பாரதி சோதனை செய்யத் திட்டமிட்டு படைக்கப்பட்ட படைப்பு வசன கவிதை எனும் தலைப்பிலமைந்த “காட்சி”, “சக்தி”, “காற்று” ஆகிய கவிதைகள் புதிய வகையில் அமைந்திருந்தது. ஆயினும், அவை புதுமைக்கான சோதனை களம் மட்டுமே என்று பார்க்கப்பட்டது.
புதுக்கவிதையின் தோற்றம்:
பாரதியின் புதுமைக் கவிதைப் பகுதிகளில் ஈர்க்கப்பட்டு அத்தகைய கவிதையை புதுக்கவிதை என்ற பெயருடன் ந.பிச்ச மூர்த்தி சோதித்தும் அதில் வெற்றியைப் பெற்றும் புதிய பாதையை தமிழுக்குக் காட்டினார்.
எனினும், “புதுக்கவிதை” எனும் புதிய வகையிலமைந்த கவிதைகளை அக்காலப் பண்டிதர்களால் ஏற்றுக் கொள்ளப்படவே இல்லாமல் போனது. என்றாலும் பிற்காலத்தில் 1959-ம் ஆண்டு சி.சு.செல்லப்பா தொடங்கிய ‘எழுத்து’ இதழ் புதுக்கவிதையை வளர்தெடுத்தது. இக்காலக் கட்டத்தில் தோன்றிய கவிஞர்கள் க.நா.சுப்ரமண்யம், வேணுகோபால், தருமு சிவராமு ஆகியோர்கள் குறிப்பிடத்தக்கவர்கள்.
வசன கவிதை என்பது என்ன?
தற்காலத்திய புதுக்கவிதை மரபானது பல கவிஞர்களை உருவாக்கியது என்றால் அது மிகையல்ல. ஆயினும், புதுமையான சோதனைக் களத்திற்கு தங்களை தயார் செய்து கொண்டவர்கள் மிக சொற்பமே.
இவ்வகையில் வசன கவிதைக்கான வித்து எங்கேயிருந்து தோன்றியது?. முன்னர் கூறியது போல சோதனைக் களத்திற்கு வித்திட்ட பாரதியின் பிற்காலக் கவிதையான “காட்சி” உள்ளிட்ட சில கவிதைகளே அவற்றுக்கு உதாரணம். காட்சி தலைப்பிலமைந்த புதுமைக் கவிதையின் சில வரிகளை இங்கே தருகிறேன்.
“ இவ்வுலகம் இனியது. இதிலுள்ள வான் இனிமை யுடைத்து
காற்று இனிது.
தீ இனிது நீர் இனிது நிலம் இனிது
ஞாயிறு நன்று திங்களும் நன்று
வானத்துச் சுடர்களெல்லாம் மிக இனியன”
இவை மரபு சார்ந்த கவிதைத் தன்மையிலிருந்து முற்றும் மாறுபட்டு நிற்பதைக் காணலாம். எனினும் அவைகள் கவிதைக்கான எளிமை, உணர்ச்சித் தன்மை, அழகியல் ஆகிய கூறுபாடுகளை மிகு இலகுவாகவே பெற்றுள்ளன. இவைகள் அக்காலப் பண்டிதர்களால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. எள்ளி நகையாடவே செய்யப்பட்டதாகக் கருதப்பட்டன.
எனினும் இவைகள் உரைநடைகளுக்கு உரிய அம்சங்களையும் பெற்று வந்துள்ளது. “இவ்வுலகம் இனியது, இதிலுள்ள வான் இனிமையுடைத்து. காற்று இனிது.” என பாரதியின் முதல் வரிகள் எளிமையையும் இயற்கையின் அழகை உணர்ச்சி ததும்ப அனுபவம் கொள்ளவும் தூண்டுகிறது.
அதே கவிதையின் மற்றொரு பகுதியில்,
“உணர்வே நீ வாழ்க
நீ ஒன்று, நீ ஒளி
நீ ஒன்று, நீ பல
நீ நட்பு, நீ பகை
உள்ளதும், இல்லாததும் நீ
அறிவதும், அறியாததும் நீ
நன்றும், தீதும் நீ
நீ அமுதம்; நீ சுவை
நீ நன்று, நீ இன்பம் “
என்று பாரதியின் வரிகள் நீண்டு செல்கின்றன. இடையில் இப்பகுதிக்கு கவிதைக்குரிய அத்தனை அழகியல் தன்மைகளும் பொருந்தி கவிநயத்தைக் கூட்டுகின்றன.
வசன கவிதையின் தன்மை யாது?
தற்காலத்து கவிதைகளைப் படைத்து வருபவர்களில் பெரும்பாலும் புதுக்கவிதை வகையையே படைத்தும் படித்தும் வருகின்றனர். அவற்றின் வெற்றியானது திரைப்படத்தில் பதிவு செய்யப்பட்டன. தாமும் புதுக்கவிதையைப் படைக்க வருபவர்கள் சிலர் மரபுக்கவிதை, புதுக்கவிதை, வசன கவிதை யாது? எனத் தெளிவு பெறுதல் அவசியம்.
மரபுசார்ந்த கவிதைக்கும் புதுக்கவிதைக்கும் இடையேயான வேறுபாடுகளை எளிதில் கண்டறிந்து கொள்வது அவ்வளது கடினம் அல்ல. இருப்பினும் புதுக்கவிதையின் தன்மையில் உரைநடையின் தன்மைகளைக் கொண்டு செய்யப்பட்ட கவிதைகளை இனங்காண்பது என்பது மிக முக்கியம்.
வசன கவிதை என்பது யாது? எனக் கேள்விகள் எழுவது, கவிதை பற்றிய குழப்பத்திற்கு வித்திடுவதும் இயல்பே. அதில் யாவருக்கும் யாதொரு மாற்றுக் கருத்தும் இருக்கவியலா. வசன கவிதை என்ற பதத்திற்கு எவ்வளவு அளவிற்கு அதன் சொல்லாடலுக்கு பொருந்தும்? என்பன கேள்விகள் எழுவதும் இயல்பு.
வசன கவிதை
மேற்கண்ட தன்மையில் இருந்தும் முற்றிலும் நழுவிவிடாமல் கவிதைக்குரிய அழகு என்னும் தன்மையைக் கொண்டும் உரைநடையைப் போற்றிய தன்மையோடும் இயங்குவது. அவற்றுக்கு உரிய உதாரணமாக நா.காமராசனின் வசன கவிதை வரிகளை அடியின் அமைப்பின் தன்மை மாறாது கீழே தந்துவிடுகிறேன்.
“தமிழ்க் காதலனாக அரும்பி ஒரு சோசலிஸ்டாக மலர்ந்தவன் நான். உழைக்கும் மக்களின்
வசந்தருதுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சின்னக் குயில்”.
இவ்வரிகள் ஓர் உரைநடைக்கே உரிய அத்தனை தன்மைகளை எளிய சொற்களால் கொண்டு வந்துள்ளன. வசனநடையில் அமைந்த கவிதைக்கு மரபு கவிதையில் அதிகம் கையாளப்படக் கூடிய எதுகை மோனைகள் பயின்று வரவில்லை. அவைகள் சிலவிடத்து வருவதிலும் தவறும் இல்லை.
மேற்கண்ட வரியின் இறுதிப்பகுதியில் “உழைக்கும் மக்களின் வசந்தருதுவை அவர்களுக்கு அறிமுகப்படுத்தும் ஒரு சின்னக் குயில்”. படிப்பவர்களுக்கு முதலில் புதுவித அனுபவத்தைத் தரக்கூடிய அம்சமாக இருக்கின்றன. ஆனால் அதுவே முதல் பகுதியில் எத்தகைய தாக்கமும் ஏற்படுவதாக தனியே அமையவில்லை. அதனுடைய தன்மைக்கு கவிதைப் பண்பை இறுதி வரிகள் சேர்க்கிற பொழுது ஏற்படுகின்றன.
வசன கவிதையில் கவிதைப் பகுதி?
கவியரசு நா.காமராசன் அவர்களது வசன கவிதையில் “அவர்கள் நீதிமன்றத்தை விசாரணை செய்கிறார்கள்” எனும் தலைப்பில் அமைந்த கவிதைப் பகுதியில் அதன் வடிவம்
“பேசப்பட்ட வார்த்தைகள் உரைநடையாகின்றன. மௌனம் தன் நிலையிலே அது ஒரு ஊமைக் கவிதை” இவ்வரிகள் கவிதைப் பண்புகளைப் பெற்றிருப்பினும் வடிவமைப்பில் ஒரு உரைநடையாகவே காட்சி தருகிறது. மேலும் உரைநடைப் பகுதி கவிதைக்கு உறவுப் பாலமாக அமைந்து ஒரு விந்தையை ஆழ்மனத்தில் ஏற்படுத்துகிறது.
மற்றொரு கவிதையான “பன்னீர் மரங்கள்” வசனகவிதையில் சற்றே வோறொரு உருவத்தைக் கொண்டுள்ளது.
“பன்னீர் மரங்களே!
மண்ணில் முளைத்த நட்சத்திர மேடைகளே!
மௌனக் கவிதைகளே!
சொர்க்கம் தந்த உங்களின் சிறிய நாதஸ்வரப்
பூக்களை அங்கே ஊதியவள் ஊர்வசியோ?
பூச்சுமையில் மேனகைபோல் அழகு காட்டும் நீங்கள்
மறு நிமிடமே மலர்களைப் பூமிக்குச் சமர்ப்பித்து விட்டு
விசுவாமித்ர வேசம் போடுவது ஏன்?
வானத்திலிருந்து உதிரும் நட்சத்திர விதைகள்
உருவம் பெற்று மண்ணில் மலர்ந்த பிறகு
மறுபடியும் உதிருவது ஏன்?”
என இவ்வாறாக நீண்டு செல்கிறது அந்தக் கவிதை. இவற்றில் பெரும்பான்மையான சொற்கள் கவிதைத் திறனை உள்ளீடு கொண்டு செய்யப்பட்டுள்ளன. இதனைப் படிக்கும் முறை கவிதையாகவும் உரைநடையாகவும் இயங்கும் தன்மையை பெற்றுவிடக் கூடியது.
புதுக்கவிதையின் வடிவம் அதன் போக்கிற்கு அமைவது என்று சிலர் கூறுகின்றனர். வசனகவிதையும் ஏன் அத்தகைய இயல்பைப் பெற்று கவிதையாக அமையாது?. “பன்னீர் மரங்கள்” பகுதியல் அமைந்த வரிகள் அத்தகைய வாதத்திற்கு இட்டுச் செல்வனவாக இருக்கின்றன.
கவிஞர் கண்ணதாசன் அவர்கள் கூறியது போல “புதுமையின் தோற்றம் முதலில் குழப்பத்தைத் தரும். படிக்கப் படிக்க மயக்கத்தைத் தரும்” என்ற வரிகள் வசனகவிதைக்கு ஊக்கத்தை அளிக்கின்றன.
பிற்காலத்தில் வசனகவிதையை பலர் முயன்று தோற்றுப் போனது என்பது உண்மை என்றாலும், நா.காமராசன், பிரமிள் போன்றோர் அத்தகைய முயற்சியில் வெற்றியும் கண்டனர். அவர்களில் குறிப்பிடத்தகுந்த வெற்றியைப் பதிவு செய்யும் வகையில் “சகாராவை தாண்டாத ஒட்டகங்கள்” கறுப்பு மலர்கள்” போன்ற கவிதைத் தொகுதிகள் இங்கே உதாரணம்.
வசனகவிதைக்கு இன்றும் பெரிதாக வரவேற்பு இல்லை. அதன் காரணமாகவே சிலர் அதனை முயன்று பார்க்கும் நிலையை விட்டுவிட்டனரோ? என்றும் கருத நேரிடுகிறது.
இல. பிரகாசம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழின் வசன கவிதை”