தமிழிலக்கிய அறிமுகம்
பேராசிரியர். க.பூரணச்சந்திரன்Sep 27, 2014
தமிழில் தலையாய இலக்கியம் சங்க இலக்கியம். அது தனிப்பாடல்களால் ஆனது. சங்க காலத்திற்குப் பிறகு தோன்றிய நூல்களில் முதன்மையானவை காப்பியங்கள். இவற்றைத் தவிர சிற்றிலக்கியங்கள் என்னும் நூல்களும் இடைக் காலத்தில் அவ்வப்போது எழுந்தன. காலப்போக்கில் நூல்வகையில் ஏற்படும் மாற்றங்களை விருந்து என ஏற்றுக் கொள்கிறது சங்ககால இலக்கண நூலாகிய தொல்காப்பியம்.
குறைந்த பாடல் எண்ணிக்கையைக் கொண்டவற்றைப் பிரபந்தங்கள் அல்லது சிற்றிலக்கியங்கள் என்று பிற்காலத்தினர் வழங்கத் தொடங்கினர் ஆகலாம். காப்பியங்கள் பேரிலக்கியங்கள் ஆதலின் இவற்றிலிருந்து வேறுபடுத்தச் சிறிய அளவில் எழுந்த நூல்களைச் சிற்றிலக்கியங்கள் என்றனர் போலும். அல்லது காப்பியங்கள் ஒரு தலைவனின் முழு வாழ்க்கையைச் சொல்லுவது போல் அன்றி இவற்றின் நோக்கெல்லை (Scope) குறுகியது என்பதால் ஒருவேளை சிற்றிலக்கியங்கள் என்றனரோ?
96 வகைப் பிரபந்தங்கள் என்று இவற்றைப் பகுப்பது மரபு. பிரபந்தம் என்றால் நன்கு யாப்பினால் கட்டப்பட்ட வடிவம் என்று பொருள். சிற்றிலக்கியம், பிரபந்தம் இவற்றின் பொருள் வெவ்வேறு என்றாலும், ஒரேவித இலக்கியத் தொகுதியைக் குறிக்க இவை பயன்பட்டு வருகின்றன. கலம்பகம், உலா, தூது, பிள்ளைத் தமிழ் போன்ற பலவகையான நூல்கள் சிற்றிலக்கியங்களில் அடங்கும்.
பாட்டியல் நூல்களை ஆராய்ந்து அவற்றில் குறிப்பிடப்பட்ட சிற்றிலக்கிய நூல்கள் மொத்தம் 244 என ஆய்வாளர்கள் கணக்கிட்டுள்ளனர். ஆனால் இவற்றில் பெயர்மட்டிலுமே தெரிந்தவை, மூல இலக்கியங்கள் கிடைக்காதவை பல. மேலும் பாட்டியல் நூல்கள் சுட்டிக்காட்டாத எத்தனையோ இலக்கிய வகைகள் இன்று நம் வழக்கில் உள்ளன. எனவே இன்று சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கையை வரையறுப் பது எளிதன்று.
பலவேறு கலம்பகங்கள் தமிழில் இயற்றப்பட்டுள்ளன. முதன்முதலில் இயற்றப்பட்ட கலம்பகம், நந்திக்கலம்பகம். பின்னர் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த நம்பியாண்டார் நம்பி, திருஞான சம்பந்தர் மீது ஆளுடைய பிள்ளையார் கலம்பகம் இயற்றினார். பின்னர் சில நூற்றாண்டுகள் கழித்துப் புகழேந்திப் புலவர் கொற்றந்தைக் கலம்பகம் என ஒன்று இயற்றியுள்ளார். அதன் பின் மணவாள மாமுனிகள் திருவரங்கப் பெருமான்மீது கோயிற்கலம்பகம் இயற்றியுள்ளார். பின்னர் திரு எவ்வுட் கலம்பகம், திருப்பாதிரிப்புலியூர்க் கலம்பகம் என்றெல்லாம் தோன்றின. ‘கண்பாய கலம்பகத்திற் கிரட்டையர்கள்’-அதாவது இரட்டைப் புலவர்கள் கலம்பகம் பாடுவதில் வல்லவர்கள் என்பது பழங்காலக் கருத்து. அவர்கள், திருவாமாத்தூர்க் கலம்பகம், தில்லைக் கலம்பகம் ஆகிய நூல்களை இயற்றியுள்ளனர்.
இதற்குப்பின் கலம்பகம் இயற்றிப் புகழ்பெற்றவர் குமரகுருபரர். காசிக் கலம்பகம், கயிலைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம் ஆகியவற்றை இவர் இயற்றியிருக்கிறார். இங்கிலாந்திலிருந்து தமிழகத்துக்கு வந்த டாக்டர் ஜி.யு. போப் அவர்களும் கலம்பகத்தின் சுவையினால் கவரப்பட்டு, தமிழ்ச்செய்யுட் கலம்பகம் என ஒன்று இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இருபதாம் நூற்றாண்டிலும் பல கலம்பகங்கள் இயற்றப்பட்டுள்ளன. சிறப்பாக, மறையரசன் என்பார் இயற்றிய திரு.வி.க. கலம்பகத்தைக் குறிப்பிடலாம். முஸ்லீம் புலவர்களும் கலம்பகம் இயற்றியுள்ளனர். சான்றாக, சையத் மீரான் லெப்பை அண்ணாவியார் இயற்றிய மதீனாக் கலம்பகத்தைச் சான்றாகக் கூறலாம்.
பாட்டுடைத் தலைவன் பெயரில் கலம்பகம் இயற்றப்படுவது மரபு என்றாலும் பின்னால் ஊர்ப் பெயர்களை வைத்தே கலம்பகங்கள் இயற்றப்படலாயின. சான்றாகப், புதுவைக் கலம்பகம் என்ற பெயரில் இருபெயர்கள் உள்ளன.
பல்வேறு யாப்புகள், பல்வேறு பாடற்பொருள்கள் இவற்றால் பல்வேறு பாடற் சுவைகள் விளங்கப் பாடப்படுவது கலம்பகம். கலம் என்றால் பன்னிரண்டு, பகம் என்றால் ஆறு, ஆக பதினெட்டு உறுப்புகள் பெற்று வருவதால் கலம்பகம் என்ற பெயர் உண்டாயிற்று என்று சிலர் உரைப்பர். இவ் விளக்கம் பொருத்தமாக இல்லை. மாறாக, கலப்பு+அகம், அதாவது கலப்பகம் என்ற சொல்லே இடையிலுள்ள பகர ஒற்று மென்மைப்பட, கலம்பகம் என ஆயிற்று என்பது பொருத்தமாக இருக்கும். இப்போது கதம்பம் என வழங்கும் சொல்லே பழங்காலத்தில் கதம்பகம், கலம்பகம் என வழங்கிவந்தது என்று கூறுவோர் உண்டு.
கலம்பக நூல்களின் பாடல் எண்ணிக்கை நூதனமானது. வடமொழியாளரின் வருணப் பாகுபாட்டிற்கு ஏற்பப் பாடல் எண்ணிக்கை வகுக்கப்பெற்றுள்ளது. சான்றாகப், பன்னிரு பாட்டியல், தேவர்க்கு (இறைவனுக்கு) நூறும், முனிவர்க்குத் தொண்ணூற்றைந்தும், அரசர்க்குத் தொண்ணூறும் ஆகப் பாடல்கள் பாடப்படுதல் வேண்டும், அமைச்சர்களுக்கு எழுபது, வணிகர்க்கு ஐம்பது, வேளாளர்களுக்கு முப்பது என்று வரையறை அளிக்கிறது. இதனை இன்னும் வெளிப்படையாகவே பிரபந்த மரபியல்,
“நூறு தேவர், தொண்ணூற்றைந்து பார்ப்பார்க்கு,
அரசர் தொண்ணூறு, அமைச்சர்க்கு எழுபஃது,
ஐம்பான் வைசியர்க்கு, ஆறைந்து சூத்திரர்க்கு
என்ப இதன் இயல்புணர்ந்தோரே”
என்கிறது. ஆனால் கவிஞர்கள் இந்த எண்ணிக்கை அளவைச் சற்றும் பின்பற்றவில்லை. முதற்கலம்பகமான நந்திக் கலம்பகத்திலேயே நூற்றுக்கும் அதிகமான பாடல்கள் காணப்படுகின்றன.
கலம்பக நூல்களில் காலத்தால் மூத்தது மட்டுமல்ல, சுவையில் முதன்மையானதும் நந்திக்கலம்பகமே ஆகும். தெள்ளாறு எறிந்த மூன்றாம் நந்திவர்மன்மேல் பாடப்பட்ட நூல் இது. இதைப் பாடிய ஆசிரியர் பெயர் தெரியவில்லை. இதுபற்றி ஒரு கதையும் வழங்கிவருகிறது.
மூன்றாம் நந்திவர்மன்மேல் பொறாமை கொண்ட அவனுடைய தம்பியே ஒரு கவிஞனாக வந்து அவன் மீது கலம்பகம் பாடினானாம். அந்நூலில் ஆங்காங்கு நச்சுச் சொற்களையும் தொடர்களையும் வைத்துத் தன்னைக் கொல்லப் பாடியிருக்கிறான் என்று நந்திவர்மனுக்குத் தெரிந்தும் தமிழ்ச் சுவையில் ஈடுபட்ட அவனால் அந்நூலைக் கேட்காமல் இருக்க இயலவில்லை. எனவே நூறு பந்தல்கள் இட்டு ஒவ்வொன்றிலும் அமர்ந்து ஒவ்வொரு பாட்டாக அவன் கேட்டுக் கொண்டு வர ஒவ்வொரு பந்தலாகத் தீப்பற்றி எரிந்ததாம். கடைசிப் பாட்டை நந்திவர்மன் கேட்கும் போது பந்தலோடு சேர்ந்து அவனும் மாண்டான் என்று இக்கதை செல்கிறது. இது நந்திவர்மனுடைய அளவற்ற தமிழ்ப் பற்றினைக் காட்ட எழுந்த கதையாக இருக்கலாம்.
வேறு எந்தக் கலம்பகத்திலும் இல்லாத சில கூறுகள் இக்கதைக்குக் காரணமாக இருந்திருக்கலாம். சான்றாக, நந்திவர்மன் இறந்த பிறகு கவிஞன் பாடியதாக நந்திக் கலம்பகத்தில் ஒரு பாட்டு உள்ளது.
வானுறுமதியைஅடைந்ததுன் வதனம் மறிகடல் புகுந்ததுன் கீர்த்தி
கானுறுபுலியை அடைந்ததுன் வீரம் கற்பகம் அடைந்ததுன் கரங்கள்
தேனுறு மலராள் அரியிடம் புகுந்தாள் செந்தழல் அடைந்ததுன் தேகம்
யானும் என்கலியும் எவ்விடம் புகுவோம் நந்தியே நந்தயாபரனே.
என்பது அப்பாட்டு. ஒருவேளை நந்திவர்வன் இறந்தபிறகே நந்திக் கலம்பகம் இயற்றப் பட்டிருக்கலாம் என்பதற்கு இப்பாட்டு சான்றாக உள்ளது.
இப்பாட்டின் பொருள்: “உன் முகஅழகினை, நிலவு பெற்றுக்கொண்டது, உன் புகழின் பெருக்கம் கடலுக்குச் சென்றுவிட்டது, உன் வீரம் காட்டில் வாழும் புலியிடம் சென்றுவிட்டது, உன் கரங்கள் கற்பகமரத்திடம் சென்றுவிட்டன, உன்னிடமிருந்த திருமகள், திருமாலிடம் சென்று விட்டாள், நானும் என் வறுமையும் எங்கேசெல்வோம் இனி?” என்று கவிஞன் புலம்புகிறான். பாட்டுடைத் தலைவனே இறந்துவிட்டதாகக் கூறும் இப்பாட்டைக் கேட்டோர், இந்த நூல் நந்திவர்மன்மீது அறம் வைத்துப் பாடப்பட்டது என்ற கதையை உருவாக்கி யிருக்கலாம்.
இதற்கேற்பச் சில தொடரமைப்புகளும் நூல்முழுவதும் உள்ளன. கடவுள் வாழ்த்துப்பாட்டு, நந்தி விடையுடன் ‘மங்கல விசயம் நடப்ப அருளுக’ என முடிவடைகிறது. ‘மங்கலவிசயம் நடப்ப’ என்பதற்கு “இறந்து போவதாக” என்ற பொருள் உண்டு. மூன்றாவது பாட்டில் ‘நந்தி முதல்வனுக்குப் பழுது கண்டாய்’ என்ற தொடர் இடம் பெற்றுள்ளது. இன்னொரு பாட்டில் ‘இவளுக்கு அருளாது ஒழிகின்றது தொண்டை கொலோ’ என்ற தொடர் வருகின்றது. இன்னொன்றில் ‘நந்தி மதியிலி’ என வருகிறது. இன்னொரு பாட்டில் ‘பூவலயம் தன்னில் கரியாய் நின்ற மன்னா’ என்ற தொடர் இடம்பெறுகிறது. இவ்வாறு நூல்முழுவதும் ஆங்காங்கு சிலேடையாக இடம்பெறும் தொடர்கள் நந்திவர்மனை அழித்தன என்று சொல்வார் உண்டு. எனவே மேற்கண்ட கதைக்கு முற்றிலும் ஆதாரம் இல்லாமல் இல்லை. ஆனால் சொற்கள் ஒரு நல்ல மன்னனை அழித்துவிடுமா?
‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை நாடறியும்’ என்ற பழமொழி நெடுங்கால மாக வழக்கிலிருக்கிறது. இப்பழமொழி உருவாக்கிவிட்ட சம்பவமாகவும் மேற்கண்ட கதை இருக்கலாம். ‘மாண்ட’ என்ற சொல்லுக்கு ‘மாட்சிமிக்க’ ‘உயர்வு மிக்க’, ‘சிறப்புப் பெற்ற’ என்ற அர்த்தமும், ‘இறந்துபோன’ என்ற அர்த்தமும் உண்டு. ‘மாண்ட என் மனைவியடு மக்களும் நிரம்பினர்’ என்பது புறநானூற்றில் பிசிராந்தையார் வாக்கு. அதாவது என் மனைவி மிகச் சிறப்புடையவள். மக்களும் அறிவுடையவர் என்பது பொருள். அதுபோல ‘நந்தி கலம்பகத்தால் மாண்ட கதை’ என்றால் நந்திவர்மன் கலம்பகம் என்ற நூலினால் சிறப்புப் பெற்ற கதை என்று பொருள். ஆனால் மாண்ட என்பதற்கு இறந்துபோன என்ற ஒற்றைப்பொருள்கொண்டு நந்திவர்மன் கலம் பகத்தால் இறந்துபோனதாகக் கதைகட்டிவிட்டனர் பிற்காலத்தார்.
நந்திக்கலம்பகத்தின் பின்னர் பல கலம்பகங்கள் தோன்றினும் இந்த முதற் கலம்பகத்தின் சிறப்பும் பொருள்நயமும் அழகும் இனிமையும் வேறெந்த நூலிலும் இல்லை. இந்நூலில் பல உறுப்புகள் உள்ளன. அவை பெரும்பாலும் காமச்சுவையை அடிப்படையாகக் கொண்டவை. மீதியுள்ள உறுப்புகள் நந்திவர்மன் வீரத்தைப் பாராட்டுபவை. இப்பாக்கள் யாவுமே மிகச் சிறப்பாக அமைந்து விட்டன. அதன் பின்னர் எழுதப்பட்ட பிற கலம்பகங்களில் அந்தந்த உறுப்பில் சொல்லப்பட்ட விஷயங்கள் யாவும் நந்திக்கலம்பகத்தில் சொல்லப்பட்டவற்றின் மாற்று உருவங்களாகவே அமைந்து விட்டதால் அவை எடுபடாமல் போய்விட்டன என்பது முக்கியக் காரணம்.
கலம்பகத்தில் அமைய வேண்டிய உறுப்புகளை முதல் உறுப்புகள், துணை உறுப்புகள் என்று இருவகைப்படுத்துவர். கலம்பக உறுப்புகளைக் கூறும் பன்னிரு பாட்டியல் நூற்பாவை இங்கே காணலாம்.
சொல்லிய கலம்பகம் சொல்லில் ஒருபோகு
முதற்கண் வெண்பா கலித்துறை புயமே
அம்மனை ஊசல் யமகம் களிமறம்
சித்து காலம் மதங்கி வண்டே
கொண்டல் மருள் சம்பிரதம் வெண்துறை
தவசு வஞ்சித் துறையே இன்னிசை
புறமேய் அகவல் விருத்தம் எனவரும்
செய்யுட் கலந்துடன் எய்திய அந்தம்
ஆதியாக வரும் என மொழிப.
நூலின் முதலில் ஒருபோகு என்னும் யாப்பும், அதனை அடுத்து வெண்பா ஒன்றும், அதன் பின்னர் கலித்துறை ஒன்றும் அமையவேண்டும். இவைதான் முதல் உறுப்புகள் அல்லது யாப்புறுப்புகள் எனப்படுபவை.
பிறகு துணை உறுப்புகள் அமைகின்றன. புயம், அம்மானை, ஊசல், யமகம் அல்லது மடக்கு, களி, மறம், சித்து, காலம், மதங்கி, வண்டு, கொண்டல் அல்லது மேகம், மருள், சம்பிரதம், வெண்துறை, தவம் வஞ்சித்துறை என இவை அமைய வேண்டும்.
பிறகு இன்னிசை அகவல், பல்வேறு விருத்தங்கள் எனப் பலவேறு வகையான யாப்புகளும் அமையுமாறு பாடவேண்டும். துணை உறுப்புகளைப் பார்க்கும்போது அவை பெரும்பாலும் செய்யுட் பொருள் குறித்தனவாக அமைகின்றன. இவற்றிற்கிடையில் வெண்துறை, வஞ்சித்துறை ஆகிய யாப்பு உறுப்புகள் வந்த காரணம் தெரியவில்லை. இவை அந்தாதியாகப் பலவேறு யாப்புகளில் பாடப்படும் என்பதே கலம்பகத்தின் இலக்கணம் என அறியலாம்.
பன்னிருபாட்டியல் துணை உறுப்புகளாகக் காட்டியுள்ளவை பதினான்கு. இவற்றுடன் தூது, கைக்கிளை, பாண், தழை, இரங்கல், குறம், சித்து, தென்றல், ஊர், அலர் போன்ற உறுப்புகளும் பல்வேறு பாட்டியல் நூல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. பிற்காலத்தில் ஆற்றுப்படை, இடைச்சியார், கீரையார், வலைச்சியார், கொற்றியார், பிச்சியார், யோகினியார், சிலேடை, பள்ளு, பாத வகுப்பு, கேசாதிபாதம், வெறிவிலக்கல், மடல் ஆகிய உறுப்புகளும் பல்வேறு கலம்பக நூல்களில் இடம்பெற்றுள்ளன.
புயம் (புஜம்) என்பது பாட்டுடைத் தலைவனின் வீரம் மிக்க தோளின் ஆற்றலைப் பாடுகின்ற உறுப்பாகும்.
புயம் நான்கு உடையானைப் பொன்அரங்கத்தானை
அயனாம் திருவுந்தியானை-வியனாம்
பரகதிக்குக் காதலாய்ப் பாடினேன் கண்டீர்
நரகதிக்குக் காணாமல் நான்.
திருவரங்கக் கலம்பகத்தில் அரங்கநாதனின் புயத்தைப் பாடும் பாடல் இது.
அம்மானை என்பது மகளிர் விளையாட்டுகளில் ஒன்று. இதில் இருவர் பாடுவர். முதலில் ஒருத்தி ஒரு செய்தியைக் கூற, அடுத்தவள் அதில் ஒரு சந்தேகத்தைக் கிளப்ப, முதல் பெண் அந்த ஐயத்தைப் போக்குவதுபோல இந்த உறுப்பு அமையும்.
தேனமரும் சோலைத் திருவரங்கர் எப்பொருளும்
ஆனவர்தாம் ஆண் பெண் அலி அலர்காண் அம்மானை
என்று பாடுகிறாள் ஒருத்தி. அதாவது திருவரங்கர், ஆணும் அல்ல, பெண்ணும் அல்ல, அலியும் அல்ல என்கிறாள். அப்படியானால் அவர் ஜனகன் மகளை எவ்விதம் மணந்துகொண்டார் என்று கேட்கிறாள் இரண்டாவது பெண்.
ஆனவர்தாம் ஆண்பெண் அலியலரே ஆமாகில்
சானகியைக் கொள்வாரோ தாரமாய் அம்மானை
என்று சந்தேகம் எழுப்புகிறாள். ஒரு சாபத்தினால்தான் அவ்வாறு நேர்ந்தது என்று விடையிறுக்கிறாள் முதல் பெண். அதாவது,
தாரமாய்க் கொண்டதும் ஓர் சாபத்தால் அம்மானை
என்கிறாள். இங்கு சாபம் என்பதற்கு வில் என்ற பொருளும் இருப்பது சுவையைக் கூட்டுகிறது. இராமன் வில்லை முறித்து ஜானகியை மணந்தான் என்பதை நினைவூட்டுகிறது.
ஊசல் என்பது இக்காலத்தில் ஊஞ்சல் என வழங்கும் சொல். ஊஞ்சலாடும்போது பெண்கள் பாட்டுடைத் தலைவனைப் புகழ்வதாக அமைகிறது இந்த உறுப்பு.
மடக்கு என்பது சொல்லணிகளில் ஒன்று. ஒரு சொல் அல்லது தொடர் பல்வேறு அர்த்தங்களில் மீண்டும் மீண்டும் வருவது. சான்றாக,
அரும்புன் னாகத் தடங் காவே-அவாவென் ஆகத் தடங்காவே
அம்போருகக் கண் பொருந்தேனே-அழுநீர் உகக் கண் பொருந்தேனே
என்பது திருவரங்கக் கலம்பகத்தின் நீண்ட மடக்குப் பாடலின் முதலடி. இதில் முதற்பகுதியின் தடங்-காவே என்பது புன்னாகத்தின் குளிர்ந்த சோலையே என்று பொருள்படும். அதன் இரண்டாவது பகுதித் தொடரை, அவா என் ஆகத்து அடங்காவே எனப் பிரிக்கவேண்டும். அதாவது ஆசை என் இதயத்தில் அடங்கவில்லை என்கிறாள்.
மூன்றாவது பகுதியில் அம்போருகக் கண் பொரும் தேனே-அதாவது தாமரைமலரின் மையத்தில் தேனுக்குப் போராடும் வண்டே என்று பொருள் கொள்ளவேண்டும். நான்காவது பகுதியில் அழுகின்ற கண்ணீர் உகக்கண் பொருந்த (மூட) முடியவில்லை என்று சொல்கிறாள் தலைவி.
நந்திக்கலம்பகத்தில் மடக்குறுப்பு மிகச் சிறப்பாக அமைந்துள்ளது.
ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்
தேரும் உடைத்தென்பர் சீறாத நாள் நந்தி சீறியபின்
ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும்
தேரும் உடைத்தென்பரே தெவ்வர் வாழும் செழும்பதியே.
நந்திவர்மன் படையெடுக்காமலிருந்த நாளிலும் பகைவரது நாட்டில் ஊரும் அரவமும் (மக்கள் ஆரவாரமும்) தாமரைக்காடும் உயர்வனமும் தேரும் இருந்தன. அதாவது வளமிக்க ஊர்களும், எங்கும் விழா ஒலியும், தாமரைக்காடு நிரம்பிய தடாகங்களும், உயர்ந்த வனங்களும், தேர்களும் இருந்தன.
நந்திவர்மன் சீறிப் படையெடுத்துப் பகைவர் நாட்டை அழித்தபின்பும் ஊரும் அரவமும் தாமரைக் காடும் உயர்வனமும் தேரும் இருக்கின்றன. ஆனால் இப்போது இருப்பவை, ஊரும் அரவங்கள்-வளைந்து செல்லும் பாம்புகள், தா மரைக் காடுகள்-தாவுகின்ற மான்கள் செல்லும் வளமற்ற பகுதிகள், உயர் வனங்கள்-நீர்நிலையற்ற வனப்பிரதேசங்கள், தேர்கள்-பேய்த்தேர் அல்லது கானல்நீர் சுழலும் பகுதிகள். சிலேடையை மிகச் சிறப்பாகக் கையாண்டுள்ளார் கவிஞர்.
இதனைத் தவிர சிலேடை என்ற அணி வருகின்ற உறுப்பும் ஒன்று உள்ளது.
இந்தப் புரவியில் இரவலர் உண்டென்பதெல்லாம்
அந்தக் குமுதமே அல்லவோ – நந்தி
தடங்கைப் பூபாலன் மேல் தண்கோவைபாடி
அடங்கப் பூபாலரானார்.
இங்கு இரவலர் என்ற சொல் மட்டும் சிலேடையாக அமைகிறது. இதனை ஒருசொல் லாக எடுத்துக்கொண்டால் யாசிப்பவர்கள் என்று பொருள்படும். இரவு+அலர் என்று பிரித்துக் கொண்டால் இரவில் மலருகின்ற அல்லி மலர் என்று பொருள்படும். நந்தி வர்மனின் நாட்டில் இரவில் மலரும் குமுதமலர்கள் அன்றி வேறு இரவலர்களே இல்லையாம்!
களி என்ற உறுப்பு குடிகாரர்கள் கள்ளின் சிறப்பினைப் புகழ்ந்துரைப்பது.
அடுத்ததாக, மறம். அரசன் ஒருவன் மறக்குடியைச் சார்ந்த பெண் ஒருத்தியை மணம்புரிய வேண்டித் தூது அனுப்புவான். அம்மகளின் தந்தை அரசனை இகழ்ந்தும் தன் குடியை உயர்த்தியும் கூறி, பெண்கொடுக்க மறுப்பான். இது மறம் என்னும் உறுப்பாகும்.
அம்பொன்று வில்லொடிதல் நாண்அறுதல் நான் கிழவன் அசைந்தேன் என்றோ
வம்பொன்று குழலாளை மணம்பேசி வரவிடுத்தார் மன்னர் தூதா
செம்பொன்செய் மணிமாடத் தெள்ளாற்றில் நந்திபதம் சேரார் ஆனைக்
கொம்பன்றோ நம்குடிலில் குறுங்காலும் நெடுவளையும் குனிந்துபாரே.
“என்னை வலிமையற்றவன் என்று நினைத்து மணம்பேசிவர அனுப்பினாரா உங்கள் அரசர்? என் வீட்டின் கால்கள், நெடுவளை ஆகியவற்றைப் பார். இவை தெள்ளாற் றில் நந்திமன்னனுடன் போரிட்டபோது நான் கொன்ற எதிரிகளின் யானைத் தந்தங் கள்” என்கிறான் பெண்ணின் தந்தை. புறநானூற்றில் மகண்மறுத்தல் எனக் காணப் படும் துறை இது.
அட்டமா சித்திகள் வல்ல சித்தர்கள் தங்கள் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பதாக வருவது சித்து என்ற உறுப்பு.
காலம் என்பதும் ஓர் உறுப்பு. இங்கு கார்காலத்தைக் குறிக்கும். தலைவன் தலைவியிடம் கார்காலத் தொடக்கத்தில் வருவதாகக் கூறிப் பிரிவான். அவன் குறித்த காலத்தில் வராததால் தலைவி படும் துன்பத்தை எடுத்துரைப்பது இது. நந்திக்கலம் பகத்தில் காலத்தின் துன்பத்தை எடுத்துரைக்கும் பாக்கள் மிகச் சிறப்பானவை. ஒரு தலைவி சொல்கிறாள்-
மங்கையர்கண் புனல்பொழிய மழைபொழியும் காலம்
மாரவேள் சிலைகுனிக்க மயில்குனிக்கும் காலம்
கொங்கைகளும் கொன்றைகளும் பொன்சொரியும் காலம்
கோகனக நகைமுல்லை முகை நகைக்கும் காலம்
செங்கைமுகில் அனையகொடைச் செம்பொன்பெய் மேகத்
தியாகியெனும் நந்தியருள் சேராத காலம்
அங்குயிரும் இங்குடலும் ஆனமழைக் காலம்
அவரொருவர் நாமொருவர் ஆன கொடுங்காலம்.
கார்காலத்தின் கவினைச் சொல்லிக் கொண்டே வந்தபின் தலைவி கூறும் இறுதியடிகள் நம் உள்ளத்தை எங்கோ கொண்டு செலுத்திவிடுகின்றன.
இசையிலும் நாட்டியத்திலும் திறனுள்ள பெண் மதங்கி எனப்படுவாள். இவள் சுழன்றாடும்போது ஒருவன் அவள் அழகைப் பாராட்டி மொழிவதாக வரும் உறுப்பு மதங்கி எனப்படும்.
வண்டு என்ற உறுப்பு, வண்டுவிடுதூது. தலைவனிடம் தலைவி வண்டினைத் தூதாக அனுப்புவாள்.
மேகம் என்பது மேகம்விடுதூது. தலைவனிடம் தலைவி மேகத்தைத் தூது விடுவது. தலைவியிடம் தலைவன் மேகத்தைத் தூதுவிடுவதாகவும் அமையலாம்.
ஓடுகின்ற மேகங்காள் ஓடாத தேரில் வெறுங்
கூடுவருகுதென்று கூறுங்கோள் – நாடியே
நந்திச் சீராமனுடை நல்நகரில் நன்னுதலைச்
சந்திச் சீராமாகில் தான்.
இது தலைவியிடம் தலைவன் தூது விடுவது.
தலைவி ஒருத்தியைக் கண்டவன், அவள் அணங்கோ மானிடப் பெண்ணோ என ஐயுறுவதும், பிறகு மானிடப் பெண்ணே என்று முடிவுசெய்வதும், பிறகு அவளும் தன்னிடம் காதல் கொண்டதை அறிவதும் கைக்கிளை ஆகும். சில சமயங்களில் தன்னிடம் காதல்கொள்ளாத பெண்ணின் அழகைச் சொல்லி இன்புறுவதும் கைக்கிளையில் அமையும்.
இந்திரசாலம் புரிவோர் தங்கள் ஆற்றலைப் புகழ்ந்துரைப்பதாக வருவது சம்பிரதம் என்னும் உறுப்பு. திருவரங்கக் கலம்பகத்தில் சம்பிரத உறுப்பைச் சேர்ந்த இப்பாட்டு அழகாக அமைந்துள்ளது. அதன் தொடக்க அடிகள் இவை.
காணாத புதுமைபல காட்டுவன் கட்செவிகள் எட்டையும் எடுத்தாட்டுவன்
கடல்பருகுவன் பெரிய கனகவரையைச் சிறிய கடுகினில் அடைத்துவைப்பன்
வீணாரவாரம் மூதண்டமுற விளைவிப்பன் இரவுபகல் மாறாடுவன்
விண்ணையும் மறைப்பன் எழுமண்ணையும் எடுப்பனிவை விளையாடும் வித்தையன்றால்
நீங்கள் தவம் செய்து நொந்துபோகவேண்டாம், எங்கள் தலைவனை அடைந்தால் இதனினும் சிறப்பான பொருளை அடையலாம் என்று தவம் செய்வோர்க்குக் கூறுவதாக அமைவது தவம் என்னும் உறுப்பு.
தலைவனிடமிருந்து தூது வரும் பாணனைத் தலைவி இழித்துரைப்பதாக வருவது பாண் என்னும் உறுப்பு. நந்திக் கலம்பகத்தில் பாணனைத் தலைவி பழிப்பது நல்ல நகைச்சுவை.
ஈட்டுபுகழ்நந்தி பாணநீ எங்கையர்தம்
வீட்டிருந்து பாட விடிவளவும் – காட்டிலழும்
பேய் என்றாள் அன்னை பிறர் நரி என்றார் தோழி
நாய் என்றாள் நீ என்றேன் நான்.
“பாணனே, நீ என் தங்கைகளாகிய பரத்தையர் வீட்டிலிருந்து நேற்றிரவு பாடினாய், அதைக் கேட்ட என் தாய் பேய் அழுகிறது என்றாள். வீட்டிலுள்ள பிறரோ நரி ஊளையிடுகிறது என்றார்கள். தோழி நாய் குரைக்கிறது என்றாள். நீதான் பாடுகிறாய் என்று நான்தான் சரியாகக் கண்டுபிடித்தேன்” என்கிறாள் தலைவி.
கையுறையாகத் தலைவன் தழையாடை கொண்டுவந்து தோழியிடம் தலைவியைக் காண வேண்டுவதும், தோழி அவனுக்காகத் தலைவியிடம் பரிந்து பேசுவதும் தழை என்னும் உறுப்பில் அமையும். சில சமயங்களில் தோழி கையுறை மறுப்பதாகவும் அமையும்.
பிரிவுத் துயர் ஆற்றாத தலைவி கடல், கழி, கானல், நிலவு முதலியவற்றை நோக்கி இரங்குவதாக அமைவது இரங்கல் என்னும் உறுப்பு. சான்றாக, நந்திக்கலம் பகத்தில் இரங்கும் தலைவி ஒருத்தி நிலவைப் பார்த்து எப்படி வேதனை உறுகிறாள் பாருங்கள்-
மண்ணெலாம் உய்ய மழைபோல் வழங்குகரத்
தண்ணுலாமாலைத் தமிழ் நந்தி நன்னாட்டில்
பெண்ணிலா ஊரில் பிறந்தாரைப் போலவரும்
வெண்ணிலாவே இந்த வேகம் உனக்காகாதே.
இந்தக் கவியின் ஈற்றடிகளில் தலைவியுடன் சேர்ந்து நாமும் நிலவின் கொடுமையை- அதன் வேகத்தை அனுபவிக்கிறோம். என்ன அற்புதமான சொற்கள்-”நீ பிறந்த ஊரில் பெண்களே இல்லையா? ஏன் உனக்கு இந்த வேகம்” என்று பழிக்கிறாள் தலைவி.
பாட்டுடைத் தலைவனின் ஊரைப் புகழ்ந்துரைப்பது ஊர் என்னும் உறுப்பு.
காதலினால் வாடும் தலைவி ஒருத்திக்குக் குறத்தி வந்து குறிகூறுவதாக அமைவது குறம்.
தலைவி ஒருத்தி தலைவனுக்கு அஃறிணைப் பொருள்களைத் தூதாக விடுப்பது தூது ஆகும்.
பொழுதுகண்டாய் அதிர்கின்றது போகநம் பொய்யற்கென்றும்
தொழுதுகொண்டேன் என்று சொல்லுகண்டாய் தொல்லை நூல்வரம்பு
முழுதுகண்டான் நந்தி மல்லையங்கானல் முதல்வனுக்குப்
பழுதுகண்டாய் இதைப் போய்ப் பகர்வாய் நிறைப் பைங்குருகே.
இப்பாட்டில் ஒரு பெண் குருகினைத் தூதாக விடுகின்றாள். (முதல்வனுக்குப் பழுது கண்டாய் என்ற நச்சுத் தொடர் இதில் இடம்பெறுகிறது.)
காதலினால் வாடும் பெண், தென்றல் தன்னைத் தீயாகச் சுடுவதாகக் கூறுவதும் அதனை இழித்துரைப்பதும் ஆக வரும் உறுப்பு தென்றல் என்பதாகும்.
இற்செறிக்கப்பட்ட (வீட்டில் சிறைவைக்கப்பட்ட) தலைவி ஊராரைப் பழிப்பது அலர் என்னும் உறுப்பாகும்.
புரவலன் ஒருவனிடம் பொருள்பெற்றுத் திரும்பும் இரவலன், இன்னொரு இரவலனுக்கு அவனிடம் வழிகாட்டி அனுப்புவதாகப் பாடுவது ஆற்றுப்படை.
இடைச்சியார் என்பது இடைக்குலப் பெண்ணொருத்தியின் பேரெழிலை ஒருவன் புகழ்ந்துரைப்பது. இவ்வாறே, கீரையார், வலைச்சியார், கொற்றியார், பிச்சியார், யோகினியார் என வரும் துறைகளும் அந்தந்தப் பெண்மீது காதல்கொண்ட ஒருவன் அவள்அவள் எழிலைப் புகழ்ந்துரைப்பதாக வருவதே ஆகும். கீரையார் என்பவள் கீரை விற்கும் பெண். வலைச்சியார் என்பவள் மீன்விற்கும் பெண். கொற்றியார் என்பவள் வைணவப் பெண்துறவி. பிச்சியார் என்பவள் சைவப் பெண்துறவி. யோகினி என்பவள் சூலப்பொறியை உடம்பில் தரித்துக் கையில் கபாலத்துடன் தவம் செய்யும் பெண்.
உழவர்கள் வாழ்க்கையைக் கூறும் உறுப்பு பள்ளு ஆகும்.
பாட்டுடைத் தலைவனின் திருவடிச் சிறப்பைப் பாடுவது பாதவகுப்பு என்னும் உறுப்பு.
தலைமகனின் பேரெழிலைக் கேசம் தொடங்கிப் பாதம் வரை பாடுவது பாதாதிகேசம்.
தலைவி வாடியிருப்பதைக் கண்டு வெறியாட்டிற்கு ஏற்பாடு செய்யும் தாயின் அறியாமையையும், வேலனின் மடமையையும் நகையாடித் தோழி கூறுவது வெறி விலக்குதல் என்னும் துறை ஆகும்.
தலைவிக்கெனத் தான் மடலேறப்போவதாகத் தலைவன் சொல்லுவது மடல் எனப்படும்.
இவ்வுறுப்புகள் அனைத்தும் ஒவ்வொரு கலம்பக இலக்கியத்திலும் வரவேண்டும் என்ற அவசியமில்லை. இவற்றிற்கு யாப்பு வரையறையும் இல்லை. யாப்பு வரையறை இன்றி எந்த உறுப்பும் எந்தக் கலம்பக நூலிலும் வரலாம்.
கலம்பகநூல்களில் காணப்படும் உறுப்புகளை நாம் அகவுறுப்புகள், புறவுறுப்புகள் என வேறுவகையில் பார்க்க இயலும். ஒரு தலைவனோ அல்லது தலைவியோ காதல்கொண்டது போல அமைந்துள்ள பாக்கள் அகவுறுப்புகள் எனலாம். சான்றாக,
செந்தழலின் சாற்றைப் பிழிந்து செழுஞ்சீதச்
சந்தனமென்றாரோ தடவினார் – பைந்தமிழை
ஆய்கின்ற கோன் நந்தி ஆகம் தழுவாமல்
வேகின்ற பாவியேன் மெய்.
இது தலைவியின் இரங்கலைக் காட்டும் அகப்பாட்டு. யாரோ தலைவியின் உடலில், செந்தழலின் (தீயின்) சாற்றைச் சந்தனம் என்று பொய்யாகக் கூறித் தடவி விட்டார்களாம்!
திறையிடுமின் அன்றி மதில்விடுமின் உங்கள் செருவொழிய வெங்கண் முரசம்
அறைவிடுமின் இந்த அவனிதனில் எங்கும் அவனுடைய தொண்டையரசே
நிறைவிடுமின் நந்தி கழல்புகுமின் உங்கள் நெடுமுடிகள் வந்து நிகளத்
துறைவிடுமின் அன்றி உறைபதி அகன்று தொழுமின் அலதுய்தல் அரிதே.
இது நந்திவர்மனின் படைவீரன் ஒருவன் பகைவீரர்களைப் பார்த்துச் சொல்வதாக நாடகத்தன்மையுடன் அமைந்த புறப்பாடல். “திறைகொடுத்துவிடுங்கள், இல்லையென்றால் போரையாவது நிறுத்தி மதிலை விட்டுவிடுங்கள். முரசறைவதை விட்டுவிடுங்கள். ஏனென்றால் இந்த உலகமுழுவதும் நிகழ்வது நந்திவர்மனின் ஆட்சிதான். உங்கள் கர்வத்தைவிட்டு நந்திவர்மனைத் தொழுது உயிரைக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்” என்று சொல்கிறான் வீரன். இதில் கற்பனைச் சிறப்பு இல்லை எனினும் ஓசை நெஞ்சத்தை அள்ளுகிறது.
நந்திக் கலம்பகத்தின் பாட்டுடைத் தலைவன் நந்திவர்மன். அதில் இடம் பெறும் தலைவியரும் நந்திவர்மனையே காதலிப்பதாகப் பாட முடிகிறது. எனினும் சில பாக்களில் பாடப்படும் அரசனையே (பாட்டுடைத் தலைவனையே) அந்த நூலில் காணப்படும் அகப்பாடல்களின் தலைவன் ஆக்க இயலுவதில்லை. எனவே கிளவித் தலைவன் என இன்னொரு தலைவனையும் அவனைக் காதலிக்கும் தலைவியையும் உருவாக்க நேர்கிறது. புறவுறுப்புகளில் நந்திவர்மனின் கொடை வீரம் பண்பு போன்றவற்றைக் கவிஞனே நேராகவோ பிறர் வாயிலான நாடகக் கூற்றாகவோ புகழவும் முடிகிறது.
திருவரங்கக் கலம்பகம் போன்ற பிற்காலக் கலம்பகங்களில், இறைவன் பாட்டுடைத் தலைவன் ஆகிவிடுகிறான். ஆளுடைய பிள்ளையார் கலம்பகத்தில் திருஞான சம்பந்தர் பாட்டுடைத் தலைவன் ஆகிறார். இங்கெல்லாம் பாட்டுடைத் தலைவனையும் புகழ்ந்தாக வேண்டும், கிளவித் தலைவனை நினைத்துத் தலைவி வருந்துவ தாகவும் பாடலியற்ற வேண்டும். திறமை அற்ற கவிஞர்கள் இருவேறு தலைவர்கள் இடம் பெறும்போது சரிவரப் பாடல் இயற்ற முடிவதில்லை.
பிற சிற்றிலக்கியங்களைவிடக் கலம்பகம் இணையற்ற பல்சுவையும் நெகிழ்ச் சியும் கொண்டது. ஏனெனில் இதில் எந்த ஓர் உறுப்பு வரவும் தடையில்லை. எனவே தங்கள் கற்பனை வளத்திற்கேற்பக் கவிஞர்கள் பலவித உறுப்புகளையும் பலவித யாப்புகளில் சேர்த்துக்கொள்கின்றனர். இதனால் நூலின் சுவை கூடுகிறது. நந்திக் கலம்பகப் பாக்களின் சுவைக்கு ஈடு இணையில்லை. பின்வந்த கவிஞர்கள் பலர் நந்திக்கலம்பகத்தையே ஒரு முன்மாதிரியாக வைத்துக் கொண்டு போலி செய்பவர்கள் ஆகிவிட்டனர்.
இறுதியாக, இவை அனைத்தும் தங்கள் யாசகத்திற்காக-தாங்கள் பொருள் பெறுவதற்காக வேண்டிக்-கவிஞர்கள் அரசர்களைப் புகழும் நிலையில் பாடியனவே என்பதையும் நாம் மறக்க இயலவில்லை. தமிழின் கதி எக்காலத்திலும் இவ்வாறாகத் தான் இருக்கிறது. அன்றும் இன்றும் கவிஞர்களும் தமிழ்ப் படைப்பாளர்களும் ஆளுவோரைப் புகழ்ந்து பாடிப் பொருள் சேர்க்கும் அவல நிலையிலேயே உள்ளனர். ஒரு நிலவுடைமை (மன்னர் ஆட்சிக்கால)ச் சமூகத்தில் இவ்வாறுதான் இருக்கும்-இருப்பது இயல்பு. மக்களாட்சி நிகழும் சமூகத்திலும் இவ்வாறு இருப்பது நன்றல்ல. கலம்பகத்தின் சுவையை அனுபவிக்கும் நாம் மனத்தில் இவ்விதக் குறைகளையும் ஏற்றுக்கொண்டுதான் படிக்க வேண்டும். ஆனால் எங்களைப் போன்று நாட்டின் நிலை அறிந்த ‘இக்காலப் புலவர்’களும் வெளிப்படையாக, கண்ணுக்கு நேராகக் காணும் அரசியலையும் நாட்டுநிலையையும் பேச பயந்துகொண்டு, இம்மாதிரிப் பழைய இலக்கியங்களைப் பற்றியோ புதிய இலக்கியங்களைப் பற்றியோ பேசித்திரிய வேண்டியிருப்பது நம் நாட்டின் அவலநிலை. பேச்சுரிமை கொண்ட இக்காலத்திலேயே இப்படியிருக்கும்போது, அக்காலக் கவிஞர்களைப் பற்றிச் சொல்ல என்ன அருகதை இருக்கிறது?
பேராசிரியர். க.பூரணச்சந்திரன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழிலக்கிய அறிமுகம்”