தமிழில் கிரந்த எழுத்துக்கள்
ஆச்சாரிJul 1, 2011
ஈராயிரமாண்டுகளாக தமிழின் மீது வடமொழியைக் கலக்கும் முயற்சி நடைபெற்று வருவது நாம் அறிந்ததுதான். அவ்வப்பொழுது தமிழைக் காக்க பெரியவர்கள் தோன்றி தமிழைத் தூய்மையாக வைத்திருக்க உதவினர். ஆனால் கணியுகமான 21 ஆம் நூற்றாண்டில் தமிழில் வடமொழியைக் கலக்கும் முயற்சியில் தொடர்கின்றனர் என்பது அதிர்ச்சிக்குரியச் செய்தி. சில தமிழர்களே இம்முயற்சிகளை செய்து வருகின்றனர் என்பது போன்ற அதிர்ச்சியான நடப்புகளை மொத்தத் தமிழினமும் கடந்த 3 ஆண்டுகளாகக் கண்டு குமுறிப்போய்க் கிடக்கின்றது.
கிரந்தம் என்றால் என்ன?
சமசுகிருத எழுத்துகளைத் தமிழ் முதலான மொழிகளில் எழுதுவதற்கு உருவாக்கப்பட்ட எழுத்துவகைதான் கிரந்தம். தமிழுக்கு இலக்கணம் வகுத்த தொல்காப்பியர் அயல் மொழி எழுத்துகளை நீக்கி எழுத வேண்டும் என்று வரையறுத்துள்ளார். ஆனால், நாம் கிரந்தத்தைப் பயன்படுத்தியதால் எண்ணற்ற சமசுகிருதச் சொற்களும், பின்னர் அரபு, ஆங்கிலம் போன்ற பிறமொழிச் சொற்களும் தமிழில் கலந்து தமிழைச் சிதைத்தன.
தமிழில், யுனிக்கோடு என்று சொல்லப்படுகிற ஒருங்குறியில், இப்பொழுது இருக்கும் கிரந்தங்கள் பற்றாது என்று பெருங்குவியலாக மேலும் கிரந்தங்களைப் புகுத்த இரு-வழி-திணிப்புக் கிளர்ந்தது. மேலும் நெடுநாள் நோக்கில் உருவாக்கப்பட்ட தேசு (TACE) என்ற தரப்பாட்டைத் தட்டிவிடவும் கடுமையான முயற்சிகள் நடந்தேறின.
தமிழகக் கல்வியுலகமும் மொழியுலகமும் (1984ல்) HA, SA, JA, SSHA என்ற ஓசையுடைய நான்கு கிரந்த எழுத்துகளையும் தமிழ் நெடுங்கணக்கில் தமிழக அரசாணை வழியாக அதிகாரமாக ஏற்றிக் கொண்டது. தமிழக அரசு செய்த இந்தத் தவறைத் தவறாமல் பற்றிக்கொண்ட, கணித்தமிழ் வளர்ச்சிக்கு என்று பன்னாட்டுத் தமிழ் ஆர்வலர்களால் ஏற்படுத்தப் பட்ட உத்தமம் என்ற அமைப்பு, தன் பங்குக்கு ஒரு புதிய கிரந்த எழுத்தை தமிழ்-ஒருங்குறியில் ஏற்றிக் கொண்டது.
கணித்தமிழ் வளர்ச்சி, அறிவியல் என்ற பெயரில் யார் வேண்டுமானாலும் எளிதில் தமிழகக் கல்வியுலகையும் மொழி உலகையும் பசப்பிவிடலாம் என்ற சூழல் நிலாவுவதாலும், அந்தக் கல்வி, மொழியுலகம் தமிழக அரசியல் அதிகாரத்திற்கு முன்னால் ஒடுங்கிக் கிடப்பதாலும் விளைகின்ற தமிழ்க்கேடுகளின் தொடர்ச்சியாக, தமிழ்-ஒருங்குறிக்கு ஒரு நீட்சி வேண்டும் என்றும், அந்த நீட்சியில், இதுவரை தமிழர்கள் யாரும் பார்த்தேயிராத 26 கிரந்தக் குறிகளைச் சேர்க்க வேண்டும் என்றும் ஒரு விண்ணப்பம் ஒருங்குறிச் சேர்த்தியத்திற்குச் சென்றது. அந்தக் கிரந்தக் குறியீடுகளை நீட்டித்த தமிழ் அல்லது தமிழ் நீட்சி (Extended Tamil) என்று ஆக்க முயற்சிகள் நடந்தன. தமிழகத்தின் கடும் எதிர்ப்பினாலும் தமிழக அரசின் வேண்டுகோளினாலும் ஒருங்குறிச் சேர்த்தியம் கைவிட்டு விட்டது.
மறுவழியாக, “புதிதாக கிரந்தக் குறியீடு ஒன்று தனியே ஏற்படுத்த வேண்டும் என்றும் அப்படி ஏற்படுத்தப்படுகின்ற கிரந்தக் குறியீட்டுக்குள் தமிழின் “எ”, “ஒ”, “ழ”, “ற”, “ன” என்ற ஐந்து குறிகளையும், தமிழ் உயிர்மெய்க் குறிகளான “எகர உயிர்மெய்க் குறி”, “ஒகர உயிர்மெய்க் குறி” என்ற இரண்டனையும் சேர்த்து 7 தமிழ்க் குறிகளை நுழைக்க வேண்டும் என்றும்” ஒரு விண்ணப்பம் போனது ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு. கிரந்தத்திற்கு என்று இதுவரை ஒருங்குறியில் குறியீடுகள் கிடையாது. ஆகவே, 68 குறிகளைக் கொண்ட கிரந்தக் குறியீடு உருவாக்கவேண்டும் என்றும் அப்படி உருவாக்குகிற போது தமிழின் இந்த 7 குறிகளையும் சேர்த்து 75 குறிகளைக் கொண்ட கிரந்த-ஒருங்குறி உருவாக்க வேண்டும் என்றும் முயற்சிகள் தீவிரமடைந்தன. இதிலே, உலகத்தில் உள்ள பல ஆயிரக்கணக்கான குறிகளையும் சின்னங்களையும் கொண்ட ஒருங்குறிக்குள் கிரந்தத்திற்கென 68 குறிகள் கொண்ட தனித் தொகுப்பு ஏற்படுத்தப் படுவதில் யாரும் கவலை கொள்ளவில்லை. ஆனால், அதிற்கொண்டு போய் 7 தமிழ்க் குறிகளைக் கலப்பதுதான் சரவல். ஏனென்றால், 68 குறிகளைக் கொண்ட கிரந்தத்தை மட்டும் வைத்துக் கொண்டு தமிழை முழுவதுமாக எழுத முடியாது.
ஆனால் அதில் 7ஐ க் கொண்டு போய் சேர்த்தால் அது ஒரு கிரந்த-தமிழ் பெருங்கொத்து (Super set ) ஆகி தமிழ், சமசுகிருதம் ஆகிய இரண்டு மொழிகளுக்கும் பொதுவான குறியீடாக ஆகி, தற்போது தமிழுக்கென்று உள்ள ஒருங்குறியே தேவையில்லாமல் போய்விடும். அதோடு, நீட்டித்த தமிழில் கூறப்பட்ட தீமையும், இன்னும் எண்ணமுடிகிற அத்துணைத் தீமைகளும் மொத்தமாக வந்து சேரும். இந்த முயற்சியை ஒரு சிலரின் பின்புலத்தோடு இந்தியாவின் நடுவணரசே முன்நின்று செய்யவே, ஏற்பட்ட அச்சமும் நடுக்கமும் அளவிலாதன.
ஒரு புறம் தமிழில் கொண்டு வந்து கிரந்தக் குறிகளைக் கலந்து விடவும், மறுபுறம் கிரந்தக் குறியீட்டுக்குள் தமிழ்க் குறிகளைக் கொண்டு போய் சேர்க்கவும் செய்யப் பட்ட முயற்சியாற்றான் இரு-வழி-கிரந்தத் திணிப்பு என்று கூறப்படுகிறது.
தமிழ் நீட்சி, கிரந்த-தமிழ் கூட்டுக் குறியீடு என்ற இந்த இரண்டு கிரந்தக் கலப்பு முறைகளையும் கண்டு மருண்டு, வெகுண்டு எழுந்த தமிழ்க் கணிஞர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ் ஆர்வலர்கள் பல்வேறு அணிகளாகக் கிளர்ந்து, பல மாதங்கள் முயன்று, தமிழக அரசுக்கு எடுத்துச் சொல்லி, அவர்கள் வழியே நடுவணரசுக்கு எடுத்துச் சொல்லி, நடுவணரசின் வழியே ஒருங்குறிச் சேர்த்தியத்திற்கு எடுத்துச் சொல்லி தமிழ் மொழிப் படுகொலையைத் தடுக்க ஒரு பெரும் போராட்டமே பலரின் உழைப்பால் நடந்தேறியது. அதோடு முன்களத்தில் நின்று பணியாற்றிய பல்வேறு அமைப்புகள், தனி ஆர்வலர்களின் பணிகள் பலவும் தனியே எழுதி வைக்கப் படவேண்டியவையாகும்
மே-2009க்குப் பின் இரண்டு ஆண்டுகளுக்கும் குறைந்த கால இடைவெளியில், எழுத்து வடிவச் சிதைப்பு, தேசு குறியேற்றச்சரவல், தமிழ் நீட்சி, கிரந்த-தமிழ்க் கூட்டுக் குறியீடு என்று அடுக்கடுக்காகத் தமிழ் மொழி இன்னல்களைச் சந்தித்துத் தடுமாறியிருக்கிறது. இது போன்று சோதனைகள் மேலும் வரவே வாய்ப்பிருக்கிறது – நாம் மட்டும் விழிப்பாக இல்லாவிடில். ஏனென்றால் “தமிழனுக்குப் பகை தமிழனே” என்ற நிலையே நிறைந்திருக்கிறது.
ஆச்சாரி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
உண்மை. இது போன்ற முயற்சியை பாரதியார் தன் காலத்தில் தமிழில் வட மொழி உச்சரிபிற்கு போதிய சொற்கள் இல்லாததால் வட மொழி சொற்களுக்காண புதிய குறியிடுகளை வெளியிட வேண்டும் என்று குமரன் இதழில் அறிவித்தார். அவரது உற்ற தோழரான வ.உ.சிதம்பரனாருக்கும் பாரதியாருக்கும் தொடர் கட்டுரைப்போர் ஒன்றே நடந்தது. இருவரும் பண்பாட்டுடன் விவாதித்து ப்கருத்துகளை பரிமாறிக்கொண்டனர். சிதம்பரனார் கடுமையாக பாரதியாரின் முயற்சியை எதிர்த்தார். இப்போதும் இது போன்றவை ந் அடப்பது வருத்தமான ஒன்று. விழிப்புடன் தவிர்ப்பது தமிழுக்கும் நம் வழித்தோன்றல்களுக்கும் நன்மை.