டிசம்பர் 3, 2022 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்

தேமொழி

Apr 30, 2022

siragu bharadhidasan1

“தமிழுண்டு தமிழ் மக்களுண்டு — இன்பத்

தமிழுக்கு நாளும் செய்வோம் நல்ல தொண்டு

தமிழ் என்று தோள் தட்டி ஆடு — நல்ல

தமிழ் வெல்க வெல்க என்றே தினம் பாடு!”

 

என இன்பத் தமிழுக்குத் தொண்டு செய்ய உறுதி பூண்டு முழங்கியவர் தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன். ஆண்டுதோறும் அவர் பிறந்த நாளான ஏப்ரல் 29 ஆம் நாள் ‘தமிழ்க் கவிஞர் நாள்’ என்ற பெயரில் ஓர் அரசு விழாவாகக் கொண்டாடப்படுகிறது.

பாரதிதாசன் எழுதிய, அவருக்கு எழுதப்பட்ட கடிதங்களைத் தொகுத்து, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள “பாரதிதாசன் கடிதங்கள்” என்ற நூலில் இடம் பெற்றுள்ள கடிதங்களின் மூலமும் பாவேந்தரின் கவிதைகளின் சிறப்பு குறித்து நாம் அறியலாம் (பாரதிதாசன் கடிதங்கள், இளவரசு இரா, 2009, திருச்சிராப்பள்ளி பாரதிதாசன் பல்கலைக்கழகம்). வாழும் காலத்திலேயே அவர் கவிதையின் சிறப்பை மெச்சியவர்களில் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்களும் இருந்தனர், தமிழ்மொழி அறிந்த அயல்நாட்டு மொழியியல் அறிஞர்களும் ஆய்வாளர்களும் இருந்தனர். இதை இந்நூலில் இடம்பெற்றுள்ள பாரதிதாசனுக்கு எழுதப்பட்ட கடிதங்கள் வாயிலாகவும், பாரதிதாசன் குறித்து அவரது கவிதை ஆர்வலர்களால் மற்றவருக்கு எழுதப்பட்ட கடிதங்கள் வாயிலாகவும் அறிய முடிகிறது.

தமிழறிஞர்கள்:

டாக்டர் கமில் சுவெலபில் —

தமிழுக்குச் சிறந்த தொண்டாற்றிய மொழியியல் வல்லுநர்களில் ஒருவரான செக்கோசிலோவாக்கியா நாட்டைச் சேர்ந்த டாக்டர் கமில் சுவெலபில் அவர்கள் மார்ச் 1962 இல் பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார் (பக்கம் – 296). “Thiru Bharathi Dasan Avargal” என்று முகவரியில் எழுதி அடுத்து பாரதிதாசன் வாழ்ந்த புதுச்சேரி பெருமாள் கோயில் தெரு முகவரியை எழுதியுள்ளார். பிறகு “Dear Mahakavi” என்று தொடங்கும் இக்கடிதத்தில் செக் மொழியின் திங்கள் இதழ் (Novy ‘New Orient Monthly) ஒன்றின் படியைக் கடிதத்துடன் இணைத்துள்ளதாகக் குறிப்பிடுகிறார். டாக்டர் கமில் சுவெலபில் அவர்கள் செக் மொழிக்கு மொழிபெயர்த்த பாரதிதாசன் கவிதைகளும், அத்துடன் அவர் வழங்கிய பாவேந்தரின் வாழ்க்கை மற்றும் பணி குறித்த குறிப்புக்களும் அந்த இதழில் இடம்பெற்றிருந்திருக்கிறது. அத்துடன் மேலும் கவிதைகளை அனுப்பித் தருமாறு பாரதிதாசனைக் கேட்டுக் கொண்டு, அவை அவருக்கும் அவருடைய தமிழ் மாணவர்களுக்கும் தேவை என்றும் குறிப்பிட்டுள்ளார். பாரதிதாசனின் கவிதைகள் ஐயத்திற்கு இடமின்றி சென்ற நூற்றாண்டின் முற்பகுதி தமிழ் இலக்கிய வரலாற்றில் உச்சம் தொட்டவை என்பது டாக்டர் கமில் சுவெலபில் அவர்களின் கருத்தாக இருப்பதை ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யப்பட்டிருக்கும் இக்கடிதத்தின் மூலம் அறிய முடிகிறது. அக்கடிதத்தின் உள்ளடக்கம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

Dear Mahakavi,

I send enclosed herewith an issue of our Novy ‘New Orient Monthly / Wherein you will find a few of my CZECH translations of your splendid poems together with a short note on your life and work.

May I ask you to kindly arrange for the despatch of your collected work to me? For me and my students of Tamil it is a “must” – your work is undoubtedly the peak of Tamil lyrical poetry in the first half of our century.

Yours very sincerely,

Dr. Kamil Zvejebil,

தமிழ் ஊழியன்

நாவலர் சோமசுந்தர பாரதியார் —

பசுமலையில் இருந்து பேராசிரியர் நாவலர் ச. சோமசுந்தர பாரதியார் பிப்ரவரி 1946-இல், முல்லைப் பதிப்பகம் தமிழ்வாணன் திரு. முத்தையா அவர்களுக்கு பாரதிதாசன் நூல்களைப் படித்து புத்துவகைப் பெற்றதாகக் கடிதம் எழுதியுள்ளார் (பாரதிதாசன் தொடர்புடைய கடிதங்கள் என்ற வரிசையில்: பக்கம் – 365). பாவேந்தரின் “‘அழகின் சிரிப்பு’ என்னை அவருக்கு ஆளாக்கி விட்டது” என்று எழுதுகிறார் சோமசுந்தர பாரதியார்,

   “மாடப் புறாவும் மடக்கிளியும் மானும் வானும்

   ஏடவிழ்பூ யாறோ டிருமலையும் – ஆடலையும்

   பாரதிரத் தம் கதையைப் பண் கனியப் பாடவிடும்

   பாரதிதாசன் புலமைப் பண்பு.”

என்ற இப் பாராட்டுப் பாடலுடன், “இதுவரை இவர் கவிகளைப் படித்து மகிழாமைக்கு மிகவும் வருந்துகிறேன்” என்றும் எழுதியுள்ளார். மேலும், ‘குடும்ப விளக்கு’ நூலை அனுப்புமாறு கேட்டுக் கொள்கிறார்.

வாழ்ந்த காலத்திலேயே படைப்பாளர் ஒருவரின் படைப்புகள் பாட நூல்களுக்காகத் தேர்வு செய்யப்படுவது ஆகச் சிறந்த மிகப் பெரிய பாராட்டு. பாரதிதாசன் பாடல்களை தாங்கள் எழுதும் பாடநூல்களில் பதிப்பிக்க அனுமதி தருமாறு ஒரு சில ஆசிரியர்களும் பாட நூலாசிரியர்களும் பாரதிதாசனுக்குக் கடிதம் அனுப்பி வேண்டுகோள் வைத்துள்ளனர்.

அவர்களில் குறிப்பிடத்தக்கவர் சென்ற நூற்றாண்டின் தமிழ் ஆளுமையாகத் திகழ்ந்து ஆய்வு நூல்கள் பல எழுதிய டாக்டர் மா. இராசமாணிக்கனார் அவர்கள் (பக்கம் -271). 1948 இல் விவேகானந்தர் கல்லூரியில் அவர் பணியாற்றியபொழுது எழுதிய கடிதத்தில் பாரதிதாசனை ‘அண்ணா’ என்று அழைத்து எழுதியுள்ளார். “தாமரை வாசகம்” என்று முதல் பாரம், இரண்டாம் பாரம், மூன்றாம் பாரம் வகுப்பு (அதாவது 6, 7, 8 ஆம் வகுப்புகள் அக்காலத்தில் அவ்வாறு குறிப்பிடப்பட்டது) மாணவர்களுக்காக அவர் எழுதும் மூன்று பாட நூல்களிலும் கீழே கொடுக்கப்பட்ட பாடல்களை எடுத்தாள இசைவு தருக என்று கேட்டுக் கொள்கிறார் (ஆனால் கடிதம் முழுமையாகக் கிடைக்கப் பெறாததால் பாடல்கள் என்னவென்று அறிய முடியவில்லை). சென்னை நீதிமன்றத்தின் முன் பாவேந்தரிடம் இது குறித்துப் பேசியதாகவும், அப்பொழுது பாவேந்தர் வேண்டிய பாடல்களை எடுத்துக் கொள்ளுங்கள், அவைகுறித்து கடிதம் எழுதுங்கள் அனுமதி தருகிறேன் என்று கூறியதையும் கடிதத்தில் நினைவூட்டுகிறார். தங்கள் நல்வாழ்வை விரும்பும் தமிழன் மா. இராசமாணிக்கம் பிள்ளை என்று கையொப்பம் இட்டுள்ளார்.

அதே ஆண்டில், கோவை மாவட்டம் பீளமேடு சர்வஜன உயர்நிலைப்பள்ளியில் பணிபுரிந்த இசையாசிரியர் திரு. ஆர். ரத்தினவேலு அவர்களும் 6, 7, 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்காக எழுதும் அவருடைய “இசைக்கதிர்” என்ற மூன்று நூல்களிலும் பாரதிதாசனின் 4 பாடல்களை இணைக்க இசைவு தர வேண்டியுள்ளார் (பக்கம் – 275, 278).

“தமிழுக்கும் அமுதென்று பேர்” பாடலை 6 ஆம் வகுப்பிற்கான நூலிலும்,

“தேனோடும் தமிழ் மாநாடே”, “தமிழே தமிழரின் செல்வம்” ஆகிய பாடல்களை 7 ஆம் வகுப்பிற்கான நூலிலும்,

“வெண்ணிலாவும் வானும் போல” என்ற பாடலை 8 ஆம் வகுப்பிற்கான பாடநூலிலும் இணக்க விரும்பியுள்ளார் திரு. ஆர். ரத்தினவேலு. அவரிடம் நூல்களில் இடம்பெறும் மற்ற பாடல்களின் அட்டவணையை அனுப்புமாறு பாரதிதாசன் கேட்டுள்ளார் என்பதும் தெரிகிறது.

அவ்வாறே, அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முதுநிலைத் தமிழாசிரியர் பண்டித வித்துவான் லெ.ப.கரு.இராமநாதன் (எல்.பி.கே.ஆர்.இராமநாதன் செட்டியார்) அவர்களும், நான்கு மற்றும் ஐந்தாம் பாரம் படிக்கும் மாணவர்களுக்காக அவர் எழுதும் “தமிழிலக்கிய மாலை” என்ற நூலில் பாரதிதாசனின் 3 பாடல்களை இணைக்க இசைவு தர வேண்டியுள்ளார் (பக்கம் – 278). பாடல்கள் எவை என்று தெரியவில்லை. இவரிடமும் நூலில் தம் பாடல்களுக்கு அளிக்கப்படும் இடம் குறித்து பாரதிதாசன் அறிய விரும்பியுள்ளார். இராமநாதன் அவர்களும் தமிழிலக்கியங்கள் அவை எழுதப்பெற்ற காலவரிசை முறையில் நூலில் அமைவதால் பாரதிதாசன் அவர்களின் பாடல்கள் தற்கால இலக்கியம் என்ற வகையில் நூலின் பிற்பகுதியில் இடம் பெறுகின்றன என்று தெரிவித்துள்ளார் (பக்கம் – 279-280).

இதற்கும் 10 ஆண்டுகளுக்குப் பின்னர், 1958 இல் திருச்சி பழனியப்பா பிரதர்ஸ் பப்ளிஷர்ஸ், தாங்கள் வெளியிட இருக்கும் 8 ஆம் வகுப்பிற்கான தமிழ்ப் பாட நூலில் பாவேந்தரின் “சோலை” என்ற பாடலை எடுத்தாள இசைவு தர வேண்டியுள்ளார்கள்( பக்கம் – 295).

புரட்சிக் கவிஞர்:

செட்டிநாட்டரசர் டாக்டர் ராஜா சர் அண்ணாமலை செட்டியாரின் பேரனான திரு.அள.லட்சுமணன் 1944 ஆம் ஆண்டில் பாரதிதாசனுக்கு ஒரு கடிதம் எழுதுகிறார். தான் உள்நாட்டிலும் அயல்நாட்டிலும் வாழும் அறிஞர்களுடைய கையொப்பங்களைப் பெற்று சேமித்து வருவதாகவும், பாவேந்தரின் கையொப்பம் ஒன்றைப் பெற ஆவலாக உள்ளதாகவும், அவர் போன்ற இளைஞர்களுக்குத் தேவைப்படும் “குறிக்கோள் வாசகம்” ஒன்றை எழுதிக் கையொப்பமிட்டு அனுப்ப வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார். தவறாமல் கவிஞரின் மறுமொழி பெற்றுவிட வேண்டும் என்ற முனைப்பில் அஞ்சல்தலை ஒட்டிய உறை ஒன்றிணையும் இணைத்து அனுப்புகிறார் அவர் (பக்கம் – 100, 255).

அள.லட்சுமணன் விரும்பியவாறே கீழ்க்காணும் குறிக்கோள் வாசகம் ஒன்றை எழுதி அனுப்புகிறார் பாவேந்தர்.

“சாதி, மதம், சடங்குகள், கடவுள் நம்பிக்கை, சாதிகள் இல்லை. மதம் மக்கட்கு அபின். கடவுள் நம்பிக்கை, தன்னம்பிக்கை எதிர்ப்பு. சாதிப்பற்று, சமயப்பற்று, கடவுள் நம்பிக்கை இவை ஒழிதல் வேண்டும். ஒழியாதவரை, மக்கள் முன்னேற்றமில்லை. நீ புரட்சியைத் தூண்டு; புரட்சிசெய்.”

புரட்சிக் கவிஞரின் கொள்கைப் பற்றைத் தெளிவாக விளக்கும் வரிகள் இவை. அவர் யார் என்பதையும் உணர்த்தும் வரிகள் இவை. காலத்திற்கேற்ற கருப்பொருளையும், தம் எழுத்துக்கள் மக்களுக்குப் பயன்தரும் வகையில் அமைந்திட வேண்டும் என்ற எண்ணத்துடன் எழுதுகோலைக் கையிலெடுத்த பாரதிதாசனின் எழுத்துக்கள் யாவும் தமிழ், தமிழ் என்று முழங்கி மனிதநேயத்திற்கான குறிக்கோளுடன் எழுதப்பட்டன என்பதால் அவர் பிறந்தநாள் “தமிழ்க் கவிஞர்” நாளாகக் கொண்டாடப்படுவது சிறப்பே.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்க் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன்”

அதிகம் படித்தது