ஆகஸ்டு 8, 2020 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்த் திரையுலகத்தின் கலகக்குரல் எம்.ஆர். இராதா

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Aug 12, 2017

Siragu m-r-radha-11907 ஆம் ஆண்டு மதராஸ் ராசகோபாலன் மகனாக எம்.ஆர். இராதா பிறந்தார். இராணுவ வீரராகப் பணிபுரிந்த இராதாவின் தந்தை ரஷ்ய எல்லையில் பஸ்ஸோவிய எனுமிடத்தில் போரில் மரணமடைந்தார். சிறுவயதில் தந்தையை இழந்த இராதா பள்ளிக்குப் போகாமல் பொறுப்பற்றுச் சுற்றித் திரிந்து பின் தாயுடன் கோபித்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி ஆலந்தூர் பாய்ஸ் நாடகக் குழுவில் இணைந்தார். அப்போது முதல் நாடகங்களிலும், திரைப்படங்களிலும் தொடர்ந்து பகுத்தறிவு பரப்புரை செய்து வந்தார். தமிழ் நாடகத் துறைக்கு அளப்பரியப் பங்களிப்புச் செய்தவர் திரு. எம். ஆர். இராதா அவர்கள். தன் வசனங்கள் மூலம் பகுத்தறிவு சிந்தனையைத் தூண்டியவர், தன் நாடகங்களின் மூலம் கலகக் குரல் கொடுத்து சிந்திக்கும் தீப்பொறியைக் கொளுத்திப் போட்டவர் எம். ஆர். இராதா எனின் அது மிகையல்ல.

நாடகம் தொடங்கும் முன் பூசை செய்து தொடங்குவது வழக்கமாக இருந்த காலக்கட்டத்தில், தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் பாடி நாடகத்தைத் தொடங்கினார். அதே போன்று இனவுணர்ச்சிப் பாடல்கள், பெரியார் தொண்டு பற்றிய நிழற்படங்கள் இடம்பெறும். உலகப் பாட்டாளிகள் ஒன்று படுங்கள் என்ற வாசகத்துடன் ஒரு ஆணும் பெண்ணும் கையில் சுத்தியல் அரிவாள் பிடித்தபடி இருக்கும் படம் திரையில் எப்போதும் இருக்கும்.

நாவாப் ராஜமாணிக்கம் பிள்ளை நடத்திய கம்பராமாயண நாடகம் அன்று மூடநம்பிக்கையை மக்கள் மத்தியில் விதைத்து, வருகையில் சென்னையில் 28-8-1954 அன்று உண்மையான ராமாயண நாடகம் நடத்த இராதா முன்வந்தார். அவருடைய ராமாயணம் நாடகத்திற்கு ஆட்சியாளர்கள் தடை விதித்தபோது, குடிகாரன் கடவுளாக ஆக்கப்பட்டிருக்கின்றான் என்றால் மது விலக்கு அமலில் இருக்கும் இடத்தில் அதை அனுமதிக்க முடியாது என வாதிட்டு வால்மீகி ராமாயணத்தையும், ராமனையும் நீதிமன்றத்தில் நிறுத்தினார் எம். ஆர். இராதா. இந்தப் பிரச்சினையில் தந்தை பெரியார் தன் சுற்றுப்பயணத்தை பாதியில் முடித்துக் கொண்டு சென்னை திரும்பி இராதாவிற்கு ஆதரவாகப் பேசினார். சட்டத்தை மீறி நாடகம் நடத்தி சிறை செல்லவும் தயார் என அறிவித்தவுடன் அரசு பணிந்தது.

15-9-1954 இல் இராதாவின் ராமாயண நாடகம் பெரியார் தலைமையில் அன்று சென்னை ஒற்றைவாடைத் திரையரங்கில் நடந்தது.

Siragu m-r-radha-2

“என் இராமாயண நாடகம் இந்துக்களின் மனதை புண்படுத்துகிறது என நினைக்கின்றவர்கள் என் நாடகத்திற்கு வர வேண்டாம். அவர்கள் காசும் வேண்டாம், மீறி வந்துப் பார்த்து அவர்கள் மனம் புண்பட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என்றார். கும்பகோணத்தில் இராமாயண நாடகம் நடத்தியபோது ராமன் வேடத்தில் கைதானார். இராமன் வேடத்தை கலையுங்கள் எனக் கூறிய காவல்துறையினரிடம் வேடம் கலையாது வில் கீழே விழாது, கலசம் கீழே வராது எனக் கூறி ஒரு கையில் கள்ளுக் கலயமும் மறுகையில் சிகரெட்டுடன் காவல் நிலையம் நோக்கி நடந்தார். அவரின் இராமாயண நாடகம் ஏற்படுத்திய அதிர்வலைகள் காரணமாக சென்னை மாகாண சட்டசபை ஒரு புதிய நாடகத் தடைச் சட்டத்தையே கொண்டு வந்தது.

தன் சொந்த வாழ்விலும் சமத்துவத்தைக் கடைபிடித்தவர் இராதா. அன்றைய காலக்கட்டத்தில் ஒரு இம்பாலா மகிழுந்தை தன்னிடம் வேலை செய்பவர் ஒருவர் தொட்டுவிட்டார் என சக நடிகர் ஒருவர் கடிந்து கொண்டார், என்பதை அறிந்த இராதா தன் இம்பாலா மகிழுந்தில் மாட்டுப்பண்ணைக்கு வைக்கோலை ஏற்றி பண்ணையில் வேலை செய்யும் ஆட்களையும் ஏற்றி அனுப்பியவர் இராதா. தங்களின் பண மதிப்பைக் காட்ட மகிழுந்து வைத்திருந்தார் இதைக் கண்டுப் புழுங்கினர்.

“எங்களால் பழைய இராமாயணத்தை பல நூற்றாண்டுகளாகத் தாங்கிக் கொள்ள முடிந்தது. அவர்களால் புதிய இராமாயணத்தை ஐந்து ஆண்டுகள் கூடாது தாங்க முடியவில்லை என சனாதனவாதிகளைக் கேலி செய்தார் அறிஞர் அண்ணா.

அதே போன்று இராதாவின் நடிப்பில் வெளிவந்த ரத்தக்கண்ணீர் தமிழ்த்திரைப்பட உலகில் மைல் கல், அப்படத்தில் ஒரு வசனம் “தொழிலாளர் கட்சி, முதலாளி கட்சி, சாமியார் கட்சி, இதே வேல… இந்தியால கிரோரஸ் கணக்கா வச்சிட்டு இருக்கான் கட்சியை !!…எல்லா கட்சியும் பிஸினெஸ்ல பூந்துட்டன், பேக்கர்ஸ் வேற ஒண்ணுக்கும் லாயக்கு இல்ல” இன்றைய காலகட்டத்திற்கும் பொருந்தும்.

அந்தத் திரைப்படத்தில் தன் மனைவிக்கு தன் தோழனையே திருமணம் செய்து வைக்கும் காட்சி அன்றைய காலகட்டத்தில் கண்டிப்பாக புரட்சி. அது வரை தாசி வீட்டிற்குச் சென்றாலும் கணவனே கண்கண்ட தெய்வம் என கண்ணகிகளை மட்டுமே கண்டு வந்த தமிழ்க்கலையுலகத்தில் இந்தக் காட்சி அமைப்பு பெரும் மாற்றத்தை தமிழ்த் திரைப்படங்களில் கொண்டு வந்தது எனில் அது மிகையன்று.

கலை கலைக்காகவே எனச் சிலர் கரடி விடுவார்கள் அதை நீங்க நம்பாதீர்கள், அப்படியிருந்தா கலை எப்பவோ செத்துப்போயிருக்கும். கலை வாழ்க்கைக்காகத்தான். வாழ்க்கையும், கலையும் சேரும் போது தான் அதற்கு உயிரே வருகின்றது, என்று தனது நாடகத்தில் சேர்க்கப்படும் அன்றாட நிகழ்வுகள் பற்றிய விமர்சனங்களுக்குப் பதில் அளித்தார் இராதா.

“கூத்தாடிக்கு மன்றம் வைக்காதே என இறுதி வரை உறுதியாக இருந்தார்” தந்தை பெரியாரின் சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கையில் இறுதிவரை உறுதியாக இருந்த நிலையில், இப்படிக் கூறினார். “என்னைப் பொறுத்தவரையில் நான் ஏற்றுக்கொண்ட சுயமரியாதைப் பகுத்தறிவுக் கொள்கைகளுக்காக என்றுமே, இதைவிட அதிகத் தொல்லைகளை, ஏற்க வேண்டி இருந்தாலும் சரி, அதற்கு நான் எப்போதுமே தயார்” என்று 1964 ஆம் ஆண்டு வெளியான பகுத்தறிவு ஆண்டு மலரில் எழுதினர் இராதா.

அதனால் தான் தந்தை பெரியார் அவர்கள் 1963-லேயே, பெரியார் திடலில் இராதா மன்றம் என்ற அரங்கத்தைத் திறந்து வைத்து பெரியார் உரையாற்றிய போது, “மற்ற நடிகர்களுக்குப் புத்தி வரட்டும் என்பதற்காகத்தான் இம்மன்றத்தைத் திறந்து வைக்கிறேன்” என்றார்.

இறுதிவரை தந்தை பெரியாரின் போர் வாளாகவே தந்தை பெரியார் அவர்கள் சுழன்றார் என்பது தனிச்சிறப்பு.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்த் திரையுலகத்தின் கலகக்குரல் எம்.ஆர். இராதா”

அதிகம் படித்தது