மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ்நாட்டில் என்று வரும் இந்தி?

ஆச்சாரி

Jun 28, 2014

பாரதிய ஜனதா கட்சி பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்த உடன் புது உத்திகளுடன் இந்தி பரப்புரையை தொடங்கி இருக்கின்றது. நடுவண் அரசு அதிகாரிகள் சமூக வலைத்தளங்களில் இந்தியில் கருத்துகளை பதிவிட வேண்டும் என்று அறிவுறுத்தப் பட்டிருக்கின்றார்கள். தனக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தாலும் மோடி அயல் நாட்டு தலைவர்கள் சந்திப்புகளில் கூட இந்தியில் தான் பேசுகின்றார். ஆங்கிலத்தில் புலமை உடைய சுஸ்மா சுவராஜ் கூட சீன வெளியுறவுத்துறை அமைச்சர் சந்திப்பில் இந்தியில் தான் பேசினார். அரசியல் சந்திப்புகளில் இந்தியை முன்னிறுத்துவது என்பது பாரதிய ஜனதா கட்சி தலைவர்களின் சொந்த உரிமை. அது அவர்களுக்கும் அவர்கள் சந்திக்கும் தலைவர்களுக்கும் இடையே ஆன தொடர்பு சிக்கல் மட்டுமே.

hindi1ஆனால் இந்தியா முழுவதற்கும் பொதுவான நடுவண் அரசு அதிகாரிகள் மக்களுடன் இந்தியில் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற அறிவிப்பிற்கு நாட்டின் பல பகுதிகளில் கண்டனம் எழுந்திருக்கின்றது. இந்தி பேசும் மாநிலத்தின் கட்சி தலைவர் மாயாவதி அவர்களும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருப்பது வியப்பான உண்மை. வழக்கம் போன்று தமிழகத்தில் இருந்து இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்திருக்கின்றது. பலமான எதிர்ப்புகளை சமாளிக்க நடுவண் அரசு இவ்வறிவிப்பு இந்தி பேசாத மாநிலங்களுக்கு செல்லாது என்று பின்வாங்கி இருக்கின்றது.

hindi21960களில் இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்கள் தமிழ் நாட்டில் நடந்தது எல்லாம் வரலாறு, ஆனால் இன்றும் ஏன் தமிழ்நாட்டில் இந்தியை எதிர்க்கிறார்கள் என்பது பலருக்கும் இருக்கும் கேள்வி. தமிழ் நாட்டிலே கூட சிலர் இன்னும் ஏன் நாம் இந்தியை ஏற்றுக் கொள்ள மறுக்கிறோம் என்று ஆதங்கப்படுகின்றார்கள். இந்தி கற்பதால் உண்டாகும் நன்மைகளைத் தேடி பட்டியலிடுகின்றார்கள். அரசியல்வாதிகள் தங்கள் பிள்ளைகளை இந்தி படிக்க வைத்து விட்டு மக்களை இந்தி படிக்க வேண்டாம் என்று ஏமாற்றுவதாக பதறுகின்றார்கள்.

இந்தியை கூடுதல் பாடமாகத் தான் படிக்க சொல்கின்றனரே, ஒழிய தமிழைக் கற்பிக்கக் கூடாது என்று கூறவில்லை. மேலும்  அயல் மொழி ஆங்கிலத்தை விரும்பி கற்கும் தமிழர்கள் ஏன் இந்தியாவின் அதிக மக்கள் பேசும் இந்தியை கற்க மறுக்கின்றனர் என்றும் கேள்வி எழுப்புகின்றனர்.

இந்தி ஆதரவாளர்கள் கூறுவது பெரும்பாலும் உண்மை தான். இவர்களின் கேள்விகளும் மிகவும் நியாயமானவைகளே. இதில் இருக்கும் ஒரே சிக்கல், இவர்கள் மேலோட்டமாக இப்பிரச்சினையை அணுகுகின்றனர்.

தமிழ்நாட்டில் யாரும் கருணாநிதி அல்லது ஜெயலலிதா அவர்களை பின்பற்றி இந்தி திணிப்பை எதிர்ப்பதில்லை. மக்களைப் பின்பற்றி தான் அரசியல்வாதிகள் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். இந்தி திணிப்பை ஆதரித்தால் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலை தமது கட்சிக்கும் ஏற்படும் என்ற அச்சத்தில் தான் இந்தி திணிப்பை எதிர்க்கின்றனர். மக்கள் இந்தியை ஏற்கத் தயாராகிவிட்டால் இந்த அரசியல்வாதிகள் தான் முதலில் இந்தி பாடத்தை தொடங்கி வைப்பார்கள்.

மக்கள் இந்தியை புறக்கணிப்பதற்கான காரணத்தை முழுவதும் புரிந்து கொள்ளாமல் தமிழ் நாட்டில் இந்தியை திணிப்பது எக்காலத்திற்கும் நடக்காத காரியமே. ஆங்கிலத்தை கற்கும் மக்கள் ஏன் இந்தி கற்பதை தவிர்க்கிறார்கள் என்பது விடை கண்டறிய முடியாத கடினமான கேள்வி அல்ல.

hindi4இன்றும் தமிழகத்தில் பெரும்பாலான மாணவர்கள் அரசு பள்ளிகளில் படிப்பவர்கள் தான். நம் மாணவர்கள் ஆங்கிலத்தை கற்றுக்கொள்வதற்கு படும்பாடு சொல்லி மாளாதது. உதாரணத்திற்கு என்னையே எடுத்துக் கொள்ளலாம். நான் மதுரை நகரின் மைய பகுதியில் தமிழ் வழியில் படித்தவன். ஆங்கிலம் தவிர அனைத்து பாடத்திலும் வகுப்பில் முதல் மாணவன், ஆங்கில பாடத்தில் மட்டும் தேர்ச்சி அடைவதே அரிது. நன்றாக படிக்கும் மாணவனை இறுதி தேர்வில் தோல்வி அடையச் செய்து ஆண்டுகளை இழந்துவிடக் கூடாது என்ற கருணையிலே எனக்கு ஆங்கில பாடத்தில் தேர்ச்சி மதிப்பெண்கள் கொடுப்பார்கள் நல்லாசிரியர்கள். வார்த்தைகளாக வாசிக்க தெரியாமல் எழுத்துக்களாக மனனம் செய்து நீண்ட வாக்கியங்களில் எழுத்துக்களை மனனம் செய்த வரிசை மாற்றி எழுதி வகுப்பறையில் அவமானங்களை சகித்து தான் பள்ளியை கடந்து வந்திருக்கிறேன்.

தொழில்நுட்ப கல்லூரியிலும் முதலாண்டில் இயற்பியல் வேதியியல் பாடங்களை தமிழில் எழுத வாய்ப்பு கொடுத்ததாலேயே தான் நான் விரும்பிய துறை கிடைப்பதற்கு தேவையான மொத்த மதிப்பெண்களை எட்ட இயன்றது. ஆங்கிலத்தால் நான் அடைந்த மனஉளைச்சல் மிக அதிகம். நகரங்கள் மற்றும் கிராமங்களில் வசிக்கும் பெரும்பாலான மாணவர்கள் இதை போன்று தான் துன்புறுத்தப் படுகின்றனர்.

இவ்வளவு சிரமத்துடனும் ஆங்கிலத்தை கற்றதாலே தான் கணினித்துறையில் பட்டம் பெற இயன்றது. இன்று அமெரிக்காவில் நல்ல பணியிலும் செயல்பட முடிகின்றது. ஆங்கிலம் படித்தால் மட்டுமே இவைகள் கிடைத்துவிட்டன என்று கூற இயலாது. ஆனால் ஆங்கிலம் படிக்காவிட்டால் இவைகள் கிடைக்காமல் போய் இருக்கும் என்பதைக் கூற முடியும்.

இந்தி ஆதரவாளர்களின் கூற்றுப்படி கூடுதல் மொழியாக இந்தியை கற்க வேண்டும் என்றால் மாணவர் பருவம் இன்னும் எவ்வளவு சிரமமானதாகி இருக்கும்? குடும்பத்திலோ, அண்டை வீட்டார்கள் மற்றும் நண்பர்களுடன் பேசியோ ஒரு மொழியை கற்கிறோம் என்றால் எளிதாக ஆர்வமாக இருக்கும். ஆண்டு தேர்வில் தேர்ச்சி அடைய வேண்டும் என்ற கட்டாயத்தில் ஒரு மொழியை படிப்பது எளிதாக இருப்பதில்லை. ஆங்கிலத்தையும் இந்தியையும் பாடமாக்கினால் மாணவர்களின் கவனங்கள் அனைத்தும் மொழிபாடங்களிலே தேங்கி சமூகம் மற்றும் அறிவியல் சிந்தனையற்ற மாணவர்கள் தான் உருவாகுவார்கள். மாணவர்களின் தேர்ச்சி சதவிகதமும் குறைந்து பள்ளி படிப்பை உதறும் மாணவர்கள் தான் அதிகரிப்பார்கள்.

ஆங்கிலத்தை எடுத்து விட்டு அதற்கு மாற்றாக வேண்டுமானால் இந்தியை முன் வைக்கலாம். ஆனால் அதற்கு இந்தி தகுதியான மொழியா என்பதை பார்க்க வேண்டும். ஆங்கிலம் அறிந்தால் இன்று உயர்கல்வியை படிப்பது எளிதாக இருக்கின்றது. இந்தி கற்றால் உயர் கல்விக்கு உதவுமா? எங்கேனும் பொறியியல், மருத்துவம் சட்டம் போன்ற உயர் கல்விகளை இந்தியில் படிக்க முடியுமா? அப்படி கற்றாலும் உலகத்துடன் அத்துறைகளில் இந்தியில் தொடர்பு கொள்ள முடியுமா?

இந்தி கற்றால் வட மாநிலங்களில் பணிக்கு செல்லலாம் என்ற வாதம் உண்மையானது தான். டில்லியில் சுமார் ஒரு இலட்சம் தமிழர்கள் (http://en.wikipedia.org/wiki/States_of_India_by_Tamil_speakers) வசிக்கின்றனர். இவர்கள் இந்தி கற்றதால் தான் அங்கு பணி செய்ய முடிகின்றது. அமெரிக்காவில் மூன்று இலட்சம் தமிழர்கள் வசிக்கின்றனர் (http://en.wikipedia.org/wiki/Tamil_population_by_nation). இவர்கள் ஆங்கிலம் கற்றதால் தான் அங்கு பணி செய்ய முடிகின்றது. இந்தி பேசும் மற்ற மாநிலங்களில் உத்திர பிரதேசத்தில் 16 ஆயிரம் தமிழர்களும், மத்திய பிரதேசத்தில் 24 ஆயிரம் தமிழர்களும் வசிக்கின்றனர். ஆங்கிலம் பேசும் பல நாடுகளில் இதை விட பலமடங்கு அதிகமாக தமிழர்கள் வாழுகின்றனர்.

இந்தி தெரிந்தவர்களுக்கு அனைவருக்கும் டில்லியில் வேலை கிடைத்துவிடுவதுமில்லை, ஆங்கிலம் தெரிந்தவர்கள் அனைவருக்கும் அமெரிக்காவில் வேலை கிடைத்துவிடுவதுமில்லை. ஆனால் தற்போது உலகமயமாக்கலில் அனைத்தும் எளிதாக மாறிவருகின்றன. திருநெல்வேலியில் இருந்து கடவுசீட்டு (பாஸ்போர்ட்) கூட எடுக்காத தொழில்நுட்ப வல்லுனர்கள் சுய தொழிலாக ஆஸ்திரேலிய நிறுவனங்களுக்கு மென்பொருள் வடிவமைத்து கொடுக்கின்றனர். வெளிநாடு செல்வதற்கு மட்டும் ஆங்கிலம் பயன்படுவதில்லை உள்ளூரில் இருந்தே வெளிநாட்டுடன் ஆங்கிலத்தின் மூலம் தொடர்பு கொண்டு தொழில்கள் செய்ய முடிகின்றன.

இன்று வாழ்க்கையில் பொருள் ஈட்டுவதற்கும், உடல் நலத்திற்கும், ஆராய்ச்சிக்கும் பயன்படும் அனைத்து தகவல்களும் இனைய தளத்தில் கொட்டிக்கிடக்கின்றன. உலகில் இருக்கும் இணைய தளங்களில் 55 விழுக்காடு இணையதளங்கள் (http://w3techs.com/technologies/overview/content_language/all) ஆங்கிலத்தில் தான் இருக்கின்றன. இந்தியில் 0.1 விழுக்காட்டிற்கும் குறைவான இணைய தளங்கள் தான் இருக்கின்றன. எட்டு கோடி மக்கள் பேசும் ஜெர்மன் மொழியில் கூட 6 விழுக்காடு இணையதளங்கள் இருக்கின்றன. இணைய உலகில் ஆங்கிலத்தின் ஆயிரத்தில் ஒரு பகுதி கூட இல்லாத இந்தியை பின்தொடர்ந்தால் இணைய மழையின் ஒரு துளியைத் தான் அருந்த முடியும்.

இந்நிலையில் யார் தான் ஆங்கிலத்தை கைவிட்டு இந்தியை கற்றுக் கொள்ள விரும்புவார்கள். ஆங்கிலத்திற்கு பதிலாக இந்தியை தேர்ந்தெடுப்பது பொருளாதார தற்கொலைக்கு சமமானது. ஆங்கிலத்துடன் இந்தியையும் சேர்த்து கற்பது கல்லைக் கட்டிக் கொண்டு நீச்சல் பழகுவதற்கு சமமானது.

indhiyaavin kolgai4இந்த எளிய உண்மையை தமிழர்கள் உணர்ந்திருப்பதாலே தான் தமிழ் நாட்டிற்குள் இந்தி இதுவரை நுழைய முடியவில்லை. தமிழர்களை பொறுத்த வரை இந்தி திணிப்பை எதிர்ப்பதற்கு 1960ற்குப் பிறகு மேலும் பல காரணங்கள் உருவாகி இருக்கின்றன. இன்னும் நூறு ஆண்டுகளுக்கு பின்னர் இந்தியை திணித்தாலும் மேலும் நூறு காரணங்கள் கொண்டு தமிழர்கள் இந்தியை புறக்கணிப்பார்கள். தற்போது இந்தியை கற்றிருக்கும் மிக குறைந்த விழுக்காடு தமிழர்கள் வேண்டுமானால் தனது அடுத்த தலைமுறைக்கும் இந்தியை கற்றுக்கொடுப்பார்கள். பெரும்பான்மை தமிழகம் ஒரு போதும் இந்தியை ஏற்காது. புலித்தோல் போர்த்திய பசுக்கள் வேண்டுமானால் புல்லை திங்கலாம், ஆனால் புலிகள் எப்படி புல்லைத் திங்கும்?

There are no writemyessay4me.org concepts supporting the students information

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்நாட்டில் என்று வரும் இந்தி?”

அதிகம் படித்தது