தமிழ்ப் பாவை (கவிதை)
இல. பிரகாசம்Jan 20, 2018
சங்க காலமுதல் தமிழர்கள் தைத்திரு நாளினை சீர்ப்பொருளோடு சிறப்பித்து வருகின்றனர். தமிழர்கள் கொண்டாடி வருகின்ற பெருவிழாக்களில் ஒன்று தைத்திருநாள். அத்தகைய தைத்திரு நாளினை பல நூல்கள் போற்றிப் புகழ்ந்து பாடிய போதும் பாவை இலக்கியங்களாக நாம் பாடியதில்லை. ஏறக்குறைய அரைநூற்றாண்டுக்கு முன்பு கவியரசு கண்ணதாசன் தைப்பாவையை பாடியுள்ளார். பாவை இலக்கியங்களான திருப்பாவையும், திருவெம்பாவையும் சமயம் சார்ந்து பாடப்பட்டனவாக உள்ளன. அவற்றை மார்கழித் திங்களன்று பாடிப் பரவித் தொழுகின்றனர்.
தமிழர்கள் வாழ்வில் வளமான செல்வத்தை அளிக்கின்ற தைத்திங்களை மாதம் முழுதும் வாழ்த்திப் பாடவும், தை மாதத்தை முழுவதுமாக நங்கையர் ஆடவர் கூடிக் கொண்டாடவும் பாடிய “தமிழ்ப் பாவை’’யை தாய்த்தமிழ் நாட்டினர்க்கும் மற்றும் உலகம் முழுவதும் பரந்து விரிந்து வாழ்கின்ற பெருங்குடிகளான அயலகத் தமிழர்களுக்கும் மற்றும் தமிழ் ஆர்வலர்களுக்கும் எளியவனினும் எளியவனாகியவன் உரிதாக்குகிறேன்.
தமிழ்ப் பாவை
- காய்கதி ரொளிபாயும் நற்காலைப் பொழுது
ஆய்தொடி நல்லாய் செம்மலர் திறவாய்!
மாய்ந்த அல்லிருள் வேளை காண்மினே!
தோய்ந்த வெண்டயிர்க் கடையிடை யாளே!
மையல் விழிமொழி யுடையாய் மாதே
தையலே தைத்திரு நாளின்று காண்மினே!
சாய்ந்த கருங்குழ லாளேசெம் பாவாய்
பொய்கையில் தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
- குன்றாப் புகழ்குமரிக் கடலாடி நின்றவள்
பஃறுளி யாறோடு புனல்விளை யாடிவள்!
அன்றோர் திருநாளில் நாவலனை ஈன்றத்
தனக்கு வமையில்லா ஒப்பற்றத் தாயவள்!
மன்னுலகில் திருந்திய மக்களைப் படைத்து
முலைப்பா லூட்டிச் சீராட்டி வளர்த்தவள்
அன்னமே! பெரும்புகழ் கொண்டமாத் தமிழுக்குப்
பொன்னாள்! தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
- திருந்திய நிலம்போல் வாழ்வு நெறியினை
திருத்த வல்லாண்மை யுடைய மொழியாம்
பிறர்குற்றம் களைந்து அகம்முழுதும் ஒளிசெய்யும்
தற்குற்றம் இல்லாச் சிறப்புடைய மொழியாம்
திருவள்ளு வனைப்படைத்து என்றும் குன்றாப்
பெருமை யுடையதீந் தமிழ்பெற்ற குறளோதி
நமக்கே தான்திரு வருள்தந் தருளிய
தமிழ்த்தாய் அருளினைப் பாடேலோ ரெம்பாவாய்!
- தேர்ந்த சொல்நா கீரனென் பானுக்கு
சீரணித் தமிழோ தியசொல் லுடையாள்!
தேர்ந்து நெடுந்த மிழ்நாடு புகழ்பாட
ஆர்ந்த கிழவன் பழமை யுடையான்
திருமார் பினன்அவன் மனங்கனிந் திரங்கி
கூர்ந்த நெடுவேல் அருள்செய்ய தென்தமிழ்
சீர்பாடும் வாயால் வாழ்த்திய பழந்தமிழ்
கார்குழலே! புனல்நீ ராடேலோ ரெம்பாவாய்!
- மதுரையம் பதிநகர் கூடி ஆய்ந்த
கோதில் சொல்வல்லார் புகழும் மொழியாம்
அறம்பொரு ளின்பம் எனும்முப் பாலொடு
மறவீரம் அளிக்க வல்லஉர மொழியாம்
போற்றும் புகழனைத் தினுக்கும் ஒப்பான
மற்றெல்லா முடையன ஒன்றென புகழ்வார்
முக்காலத் தையுடைய நெடும்புகழ் தோற்றமவள்
முன்னை யவள்தாள் தொழுதிலோ ரெம்பாவாய்!
- செந்தமி ழோதிடும் நாவினில் இனிக்கும்
தீதிலா சொல்லெடுத்து யாழோடு மீட்தும்!
எந்தை தாய்தான் ஓதி வளர்த்த
ஆதித் தமிழ்மொழி நமக்குத் தாய்மொழி!
சிந்தை செயல்யாவும் நல்லினம் அறத்தோடு
நிற்க! திருந்துமொழி யாம்நம் தமிழே!
ஏந்தும் வீணைதனை மீட்டிப் பண்ணேழ்
முத்துப் புனல்நீ ராடேலோ ரெம்பாவாய்!
- திகழணி யாராம் பூண்ட பாவாய்
பிறைநெற்றி யுடைய பைங்கிளி நங்காய்!
முகமதி யுடையாளே சீர்முலை மாதே;!
தெளிந்த காவிரிப் புனலாடச் செல்வோம்!
மிகுகளிப் பருளுந் தெள்ளு தமிழ்ப்பாடி
அம்மானை யாடத் தோழியர் கூடினோம்!
திகழ்கொடி இடையாளே தோழியர் குழலாட
பூம்புனலில் தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
- மாதர்க் குலக்கொடி யாளேபூம் பாவாய்
மதிநிறைந்த நன்னா ளின்று காண்மினே!
தீதிலா குணமுடை யாளேசெம் பாவாய்
வையம் உறங்குதென உன்னி கிடத்தியோ!
கோதிலா சொல்லுடை யாய்உன் திருக்கடைமுன்
வந்தோம்! தோழியர் குரல்தான் கேட்டிலையோ!
முத்தமிழ் இசைகூட்டிப் பண்ணேழும் சீராக
இசைத்துப் பாடிட வந்தேலோ ரெம்பாவாய்!
- தேம்களி வார்க்கும் செம்மலர் போந்து
தேனிசை வார்க்கும் தும்பியின் காலைதான்!
கமழ்நறு பூக்களைத் தொடுத்து சூடும்
கருங்குழல் மாதே! எம்தோழீ விழிதிறவாய்!
செம்மை சேர்புகழ் கற்புக் கினியாளே
பைந்தொடி நல்லாய் விரைந்துன் கடைதிறவாய்
செம்பிறை நெற்றி திகழசெவ் விதழ்திறந்து
நங்கையர் கற்பினைப் பாடேலோ ரெம்பாவாய்!
10. நறுமணம் வீசுங் கார்குழல் மாதே
ஏழ்பருவ நங்கையர் உன்கடை வந்தோம்!
அறுகுணம் கொண்ட நங்கை யேம்தோழீ!
அல்லி மலர்விழி திறந்தே பாராயோ!
சிறுமீர் பேதை பெதும்பை மங்ககை
மடந்தை அரிவை தெரிவை யரொடும்
அறுவகை மலர்சூடிப் பேரிளம் பெண்கள்
வந்தோம்! உன்கடை நீக்கேலோ ரெம்பாவாய்!
11. வாழைக் கமுகுடன் வாயில் தோரணமாய்
கன்னலும் இனிக்க நெய்யை உண்பாய்!
தோழீ! தைநீராட தென்தமிழ் நந்தமிழின்
திருவிழா நன்னா ளின்று காண்மினே!
விழாவெ டுத்துத் தொழுதிடநாம் செல்வோம்
தையலே ஒல்லைநீ துயில்களைந் தெழுவாய்!
கழலாடச் சந்தம் செழித்தோங்க தையலேநாம்
பையசென்று தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
12. ஆவின் காம்பினில் கறந்த பாலொடு
மாமுதல் முக்கனி மூன்றுதமிழ் இனிக்கும்!
பாவின் நாற்பொரு ளோடும் விளங்கும்
தேமொழி தான்நம் தென்தமிழ் மொழியாம்!
கோவை மொழியுடை அன்னமே தோழீ!
இன்னும் உறக்கம் கொள்ளுதியோ நங்காய்!
செவ்வை இதழ்கள் திறந்தே தீந்தமிழ்ப்
பண்பாடக் கேட்கயாம் வந்தேலோ ரெம்பாவாய்
13. காந்தள் குறிஞ்சி அணிச்சம் இவற்றொடு
வண்ண மலர்மாலை தொடுக்கும் தொடிவைள
மாந்தளிர் மாதே! நின்கடை வந்தோம்
கொண்டை அழகுடை யாளே நங்காய்!
தீந்தமிழ் பாடும்உன் வாயால் நற்றிருநாள்
தைத்திரு நாளினை வாழ்த்திப் பாடுவாய்!
பூந்தளிர்க் கொங்கை மாதே! கதிரொளி
பாயும் தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
14. ஆழ்கடல் சூழ்ந்த மாநில மெங்கும்
ஏழிசை புணர்வதை தோழீ கேட்டிலையோ!
பழவினை யால்நம் பிறப்பு இத்தமிழ்
நிலத்தில் நடந்ததை எண்ணி மகிழ்வோம்!
தோழீ! நம்பாவை தைதான் திருவோடு
வந்து மட்டில்லா இன்பம் அருள்வாள்!
விழாதொ டுக்கும்நாள்! தைத்திரு நாளின்று
அவள்புகழ் பாடித் தொழுதிலோ ரெம்பாவாய்!
15. தோன்றிய நிலம்முதல் மாநிலம் மெங்கும்
விரிந்த புகழினை யுடையவள் தமிழாம்!
என்றும் நிறைந்த பொருளுடை யவளாம்
மெய்த்திறம் அறமுடை யவளாம்! அவள்புகழை
குன்றாத் தமிழ்மொழி யால்பாடிப் பரவிட
இத்தைத் திங்கள் வந்தது காண்மினே!
பொன்திரு மேனிதனை யுடையாளே நங்காய்
விரைந்தே நீராட வந்தேலோ ரெம்பாவாய்!
16. தீதிலா வாய்ச்சொல் தேர்ந்த வல்லார்
பலபேர் வாழ்த்திப் பாடக் கேட்டிலையோ!
கோதில் சொல்தேர்ந்து பாடிய நாவலர்
புகழ்ந்த நந்தமிழின் திருநாள் இன்று!
பேதை மஞ்சம் துய்த்த நல்லிரவு
நீங்கி கதிர்பொழியும் வேளைதான் காண்மின்!
தத்தை மொழியாளே! ஆயர்நாம் கூடி
தைநீ ராட வந்தேலா ரெம்பாவாய்!
17. தொண்மை விளங்கி நிற்கும் பழமை
யுடையாள்! சூழ்கடல் கொள்ள மீண்டவள்!
பண்டைத் தென்தமிழ் பரவு புகழார்
கூடிநின் றாய்ந்த தீந்தமி ழன்றோ!
பாண்டியர் வளர்த்த சங்கப் பலகை
வீற்றி ருந்தாளும் வண்டமிழ் மொழியாம்!
தண்டை அணிந்து நடக்கும் பாவையே
வைகையில் தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
18. வஞ்சியர் வளையோசை கொட்டக் கொட்ட
அங்கை சிவக்கும் பாராடித் தோழீ!
கொஞ்சி நிற்கும் கிள்ளைகள் அமர
பாடிடும் பாடலைக் கேட்டிலையோ தோழீ!
துஞ்சு மன்னர்தோள் நீங்கி எம்மோடுநீ
ஊசலாட உன்கடை வந்தோம் யாமென
அஞ்சு கமே!நீ செம்மலர் திறந்தேதான்
தைநீ ராட வந்தேலோ ரெம்பாவாய்!
19. மதிமுக வடிவுடை யாளே நங்காய்!
பனிமலர் விரிந்த காலைப் பொழுது
மதுர மொழியாளே! இன்னிச பாடும்
தும்பிகள் ஆர்க்கும் இன்னிசை கேட்டிலையோ
தைத்திரு நாளின்று கொங்கை மாதர்தம்
கைத்தளம் கொட்டத் தெள்ளேனம் ஆடாமோ
மைதீட்டும் விழியாளே உன்கடை திற்தேதான்
எம்மோடு தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
20. செல்வத் திருநாள் தைமுதல் நாளென்று
வாயில் திருநெல் குவித்தே வரவேற்போம்!
செல்வச் சிறுவர்கள் கூடிப் பறைகொட்டத்
திருநாள் விளங்க வாழ்துவம்! தோழீ!
எல்லா வளமும் அள்ளித் தந்திட
தைப்பாவை மனமகிழ்ந் திருக்கவே நாம்சென்று
மல்லல் வளமிக்க புதுப்புனல் நீராடி
குலம்விளங்க விளக்கேற்ற வந்தேலோ ரெம்பாவாய்!
21. திருப்பாதம் உந்தி யுந்தி அழுதிடக்
கொஞ்சும் குழவி மொழிதான் கேட்டிலையோ!
அருங்கலை கற்றத் தேர்ந்த கலைச்செல்வ
மனைத்;தும் அவள்தந்த திருவன்றோ! தோழீ
மருள்விழி யசைய நடம்புரி வாய்மாதே!
கூத்தும் பண்ணும் விளங்க நாம்கூடி
திருவான தென்தமிழ் பாவையைத் தொழுதிட
நிறைந்த நன்னாள் வந்தேலோ ரெம்பாவாய்!
22. குறுநகை புரியும் பொற்கொடி யாளே
குழைச் சந்தனம் பூசி வந்தோம்!
சிற்றெழிற் மாதே! சிலைபோல் நெற்றி
யுடையாய்! செம்மலர் திறவாய் தோழீ!
சொற்பொரு ளின்பம் விளைத்து இலக்கணம்
அளித்த வாழ்வின் திருநாளின்று! காண்மினே!
அறத்தொடு மறத்தை வளர்த்த வீரமொழி
தையலே தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
23. முத்துப் பவளம் கோமேத முதற்கொண்டு
பொன்னார மணிந்த கோதைத் தையலே!
கத்துங் கடலலை தான்கரை தாண்டி
நுரைத்து நின்று சிரிக்கும்! தோழீ!
தைத்திரு நாளின்று வண்ணமலர்த் தூவி
பொய்யாக் குலக்கொடி நதியினைத் தொழுவோம்!
மைத்தடங் கொள்பாவை நம்தைப் பாவையை
தைநீ ராடித் தொழுதிலோ ரெம்பாவாய்!
24. கொவ்வைச் செவ்விதழ் மாதே! தோழீ!
நேரிழையர் உன்கடை வந்தோம் காண்மினே!
செவ்வரி இதழுடை யாளே நங்காய்!
முக்கனி யோடும் இனிக்கும் கன்னல்
கோவை யிதழால்அமுதுண்ண வருவாய்!
பாலொடு பசுநெய் யுமிட்டோம் உனக்கே!
வாழைக் குமரியாங்கள் உன்கடை வந்தோம்
தைநீ ராட வந்தேலோ ரெம்பாவாய்!
25. சங்கம் வைத்துப் புகழ்நிலை பெற்ற
தென்கடல் மதுரை நகர்நின்று வளர்ந்தாள்!
மங்காத புகழ்பெற்ற தமிழ்நில மாந்தர்
கொண்டாடும் பெருவிழா இதுவன்றோ தோழீ!
பொங்கு தமிழ்வளம் செழித்து நிற்க
திருவணக்கம் செலுத்தும் நற்றிரு நாளாம்!
தங்கநெல் வயல்கண்டு பேரானந்தம் கொள்ளும்
தைத்திரு நாளின்று வாழ்த்தேலோ ரெம்பாவாய்!
26. அஞ்சனம் பூசு மங்கையர் கூடிக்
கைத்தளம் கொட்ட பேரொலி கேட்டிலையோ
கொஞ்சும் குமரிகள் கழல்கள் சிந்த
வண்ணத் தமிழிசைச் சந்தமடித் தோழீ!
மஞ்சள் முகமலர்ந்து பூவிதழ் திறவாய்!
உன்கடை வந்தோம் செம்மலர்ப்; பாவாய்!
செஞ்சுட ரொளிப் பந்தல் விரிந்தது
அம்மானை விளையாட வந்தேலோ ரெம்பாவாய்!
27. வையத்து வாழ்வில் திருவான செல்வம்
கிடைத்து நாமுய்யும் தைத்திரு நாளின்று!
மையல் விழியுடை யாளே மாதே
நீயின்றி நாமும் யாழினை மீட்டோம்!
கயல்விழி யுடையால் நகைசெய் வாய்மாதே!
பண்ணேழ் கூட்டித் தமிழிசை யால்பாட
சேயிழை சிறுமீர்கள் நடம்புரிவர்! நாமும்
விரைந்தே தைநீ ராடேலோ ரெம்பாவாய்!
28. காற்சிலம் பார்க்கும் மென்நடை யுடையாளே
மாதே! அன்னமோ நீயென நோக்கும்!
பொற்சிலை பட்டாடை யுடுத்தி ஒளிநெற்றி
திலகமு மிட்டே உன்கடை திறவாய்!
நெற்றித் திலகமும் இலங்க நாங்கள்
உன்கடை வந்தோம் தோழீ! இன்றுநம்
பொற்றெழிர் தைத்திரு நன்னாள் காவிரியில்
புனிததை நீராட வந்தேலோ ரெம்பாவாய்
29. பொன்னும் அணியும் மணியும் மின்ன
வருந்தும் மெல்லிடை யுடையாளே நங்காய்
மின்னும் விழிக்கடை திறந்தே விரைந்துன்
திருக்கடை திறவாய்! தோழியர் கூட்டமாய்
நின்று வருகவென வாழ்த்தொலி செய்ய
தைத்திரு நாளின்று வந்தது காண்மினே!
நன்று மிகுபால் தைத்திரு நாளை
வாழ்த்திப் பாட வந்தேலோ ரெம்பாவாய்!
30. சீரணித் தமிழ்கொண்டு வாழும் மாத்தமிழ்
மாந்தர் நாற்சீரும் பெற்று வாழ்வரே!
சீர்தரு தைத்திரு நாளின்று எங்கும்
பொங்குக! உள்ளம் பொங்குக! களித்தே!
ஏர்நிலை பெற்ற சீர்மிகு வையம்
வான்மழை வாழ்த்த வந்ததே நன்னாள்
சீரார்ந்த தமிழ்மண் ணோடு வாழ்கவென
தைதான் கனிந்துவந்து வாழ்த்தேலோ ரெம்பாவாய்!
இல. பிரகாசம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ்ப் பாவை (கவிதை)”