மார்ச் 17, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

தமிழ் ஸ்டுடியோ – குறும்படத் தொகுப்பு இணையதளம் – நேர்காணல்

ஆச்சாரி

Oct 15, 2012

http://www.thamizhstudio.com/

தமிழ் ஸ்டுடியோ.காம் என்ற இணைய தளத்தை குறும்படங்களின் வளர்ச்சிக்காகவும், அவற்றை மக்களிடையே பரப்பி மாற்று ஊடகமாக பரிமளிக்க வைக்கவும் திரு அருண் அவரது நண்பருடன் இணைந்து நடத்தி வருகிறார். அவருடன் சிறகு சார்பாக நடத்தப்பட்ட நேர்காணல்.

1.  உங்களுடைய இந்த முயற்சி பற்றி அறிமுகம் கொடுங்கள்?

2008 இல் நாங்கள் ஒரு குறும்படம் எடுக்க முற்பட்டோம். அதற்காக ஒரு சிலரின் உதவியை நாடி சென்றோம். ஆனால் மென்பொருள் துறையில் வேலை செய்கிறோம் என்பதை புரிந்துக் கொண்ட அவர்கள் எங்களை ஏமாற்ற ஆரம்பித்தார்கள். பத்தாயிரம் ரூபாயில் முடிக்க வேண்டிய குறும்படத்திற்கு அவர்கள் சொன்ன தொகை ஐம்பது ஆயிரம். எங்களிடம் அந்த அளவிற்கு பணம் இல்லாத காரணத்தினால் எங்கள் குறும்படம் எடுக்கும் ஆசை கனவானது. பின்னொரு நாளில் நானும் நண்பன் குணாவும் பேசிக்கொண்டிருக்கையில் நம்மை போன்றுதானே பலரும் இந்தத் துறைப் பற்றிய புரிதல் இல்லாமல் இங்கே வந்து ஏமாந்து கொண்டிருப்பார்கள். குறிப்பாக இங்கே குறும்படங்கள் எங்கே கிடைக்கும் என்கிற விபரங்கள் கூட யாருக்கும் தெரியாது. எனவே பொதுமக்கள் மத்தியில் குறும்படங்களை பரவலாக கொண்டு சேர்க்க வேண்டும். குறும்படங்கள் என்றால் என்ன என்று அவர்களுக்கு விளக்க வேண்டும். குறும்படங்கள் எடுக்க தேவைப்படும் தொழில்நுட்ப உதவிகள் அவர்களுக்கு எவ்வித தடையும் இன்றி கிடைக்க வேண்டும். அவர்கள் எடுத்த குறும்படத்தை வணிக ரீதியில் கொண்டு செல்ல வேண்டும். உலகம் முழுதும் நடைபெறும் குறும்படப் போட்டிகள், விழாக்களை அவர்களுக்கு தெரிவிக்க வேண்டும். எனவே அது சார்ந்தக் கலைஞர்களை முதலில் ஒருங்கிணைக்க வேண்டும். அந்தக் குழுவில் ஒளிப்பதிவாளர், படத்தொகுப்பாளர், நடிகர்கள், உள்ளிட்ட அனைத்து கலைஞர்களும் இருக்க வேண்டும். மேலும் தமிழ்நாட்டில் அழிந்து வரும் தமிழர்களின் கலாச்சாரம், வரலாறு போன்றவற்றையும், இந்த சமூகம் பரவலாக அறியாத மக்களின் பிரச்சினைகளையும், தமிழில் புகழ்பெற்ற சிறுகதைகள், நாவல்களை ஆவணப்படம் மற்றும் குறும்படங்களாக எடுக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் நவம்பர் 23 ஆம் தேதி 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதே தமிழ் ஸ்டுடியோ.காம் என்கிற இணைய அமைப்பு.

2. உங்கள் இணைய தளத்திற்கு எந்த அளவு வரவேற்பு கிடைத்தது?

நாங்கள் இருவரும் மென்பொருள் துறையில் பணிப்புரிந்துக் கொண்டிருப்பதால் இந்த அமைப்பை சந்தைப்படுத்துவதில் எங்களுக்கு பெரும் பிரச்சினைகள் இருந்தன. “கடை விரித்தேன்.. கொள்வாரில்லை” என்கிற வள்ளலாரின் மொழிக்கேற்ப நாங்கள் செய்து வரும் இந்தப் பணி பெரும்பாலான மக்களை சென்றடையவில்லை. எங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரம் மிகவும் குறைவு என்பதனால் எங்களால் வெளியில் சென்று பலரையும் சந்தித்து இந்த அமைப்பின் நோக்கங்களை எடுத்துக்கூறுவது என்பது சாத்தியமற்றுப் போனது. எனவே நாங்கள் பணி புரியும் சூழலையே இதற்கு சாதகமாக்கிக் கொண்டோம். கணினி வழியாகவே பல நண்பர்களை சந்தித்து எங்களின் இந்த அமைப்புப் பற்றி எடுத்துக் கூறினோம். அவர்களும் தங்களுக்கு தெரிந்தவர்கள் எல்லோரிடமும் இதை பற்றி எடுத்துரைத்தார்கள். மேலும், ஒரு சில சிறு பத்திரிகைகளும் எங்களை பரவலாக குறும்பட ஆர்வலர்களிடையே கொண்டு சென்றது. இது மட்டுமின்றி, இணையம் பற்றி அறிமுகம் செய்து வைக்கும் பத்திரிகைகள் எங்கள் இணையத்தையும் அறிமுகம் செய்து வைத்தது. மேலும், குறும்பட ஆர்வலர்கள் மூலமாகவே நாங்கள் பரவலாக மக்களை சென்றடைந்தோம். எங்களை பற்றி ஒரு குறும்பட ஆர்வலர் மற்றவரிடம் கூற, அவர் தனது நண்பர்களிடம் கூற என்று இப்படியே ஒரு சங்கிலித் தொடராக அனைவரிடமும் அறிமுகமானோம். நல்ல செயல்களுக்கு விளம்பரம் தேவை இல்லை என்பார்கள். அது எங்கள் விஷயத்தில் பலித்தது. அதன் பின்னர் எங்களுக்கான வரவேற்பு மிக நல்ல முறையில் அமைந்தது. புகழ் பெற்ற எழுத்தாளர்கள் எஸ். ராமகிருஷ்ணன், சாரு நிவேதிதா, ஜெயமோகன் போன்றோர் தமிழ் ஸ்டுடியோ.காம் பற்றி தங்கள் இணையத்தளங்களிலேயே செய்தி வெளியிட்டு எங்களை ஊக்கப்படுத்தினர். அதுமட்டுமின்றி, ஒருசிலப் பத்திரிகைகள், மற்றும் மக்கள் தொலைகாட்சி போன்ற ஊடகங்களும் எங்களுக்கு தொடர்ந்து ஊக்கமளித்து வருகின்றன. திரைப்படத் துறையில் இருந்தும் எங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. எல்லாவற்றிற்கும் மேலாக யாருக்காக நாங்கள் இந்த அமைப்பை தொடங்கினோமோ அவர்களிடம் இருந்து எங்களுக்கு அமோக வரவேற்பு கிடைத்தது. ஒவ்வொரு நாளும் கிராமங்களில் இருந்து பல குறும்பட ஆர்வலர்கள் எங்களைத் தொடர்பு கொண்டு, தங்கள் குறும்படக் கனவை எங்களிடம் கூறி அதற்கான நல்ல ஆலோசனைகளை பெற்று செல்கின்றனர்.

3. கிராமத்தில் இருந்து வரும் இயக்குனர்களுக்கு குறும்படம் குறித்து என்னென்ன உதவி செய்கிறீர்கள்?

இந்தக் குறுகியக் காலக்கட்டத்தில், தமிழ் நாட்டில் பல பகுதிகளில் இருந்தும் குறிப்பாக கிராமங்களில் இருந்து எங்களைத் தொடர்பு கொள்ளும் அனைத்து ஆர்வலர்களுக்கும் நாங்கள் நல்ல முறையில் வழிகாட்டி வருகிறோம். முன்னரே சொன்னது போல் ஒவ்வொரு நாளும், தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தை பார்த்துவிட்டு கிராமப்புறத்தில் வாழும் ஆர்வலர்கள் எங்களைத் தொடர்புக் கொண்டு தங்கள் குறும்படக் கனவை கூறி நல்ல ஆலோசனைகளைப் பெற்று செல்கின்றனர். உதாரணமாக திருச்செங்கோட்டில் ஒரு கிராமத்தில் உள்ள நண்பர் திரு. சரவணன் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தை பார்த்துவிட்டு தான் எடுத்துள்ள ஒரு குறும்படத்திற்கு post production என்று சொல்லப்படும், படத்தொகுப்பு, இசைக்கோர்வைகளை சேர்ப்பது உள்ளிட்ட பணிகளை மிகக் குறைந்த செலவில் செய்து தரும் நிறுவனங்கள் பற்றிய தகவல்களை கேட்டார். சென்னையில் உள்ள ஒரு நிறுவனத்தின் தொலைபேசி எண் கொடுத்து அவர்களிடம் பேசச் சொன்னோம். திருச்செங்கோட்டில் இருந்து அடுத்த நாள் சரவணன் எங்களிடம் தொலைபேசியில் பேசினார். மிகச் சரியான ஒரு நிறுவனத்தை எனக்கு அறிமுகப்படுத்தியதற்காக நன்றி என்று மிகவும் நெகிழ்வாக கூறினார். தருமபுரியில் இருந்து நண்பர் செல்வேந்திரன் ஒருமுறை எங்களைத் தொடர்பு கொண்டு, நான் 24 வயதே நிரம்பிய ஒரு இளைஞன். ஆனால் எனது அனைத்து பற்களும் தற்போது சொத்தைப் பல்லாகவும், மஞ்சள் பூத்தும் வெளியில் பார்ப்பதற்கே மிகவும் அசிங்கமாக இருக்கிறது. இதற்கெல்லாம் காரணம் எங்கள் ஊர் தண்ணீர்தான். இதற்கு ஒரேத் தீர்வு ஒக்கேனக்கல் குடிநீர்த் திட்டம்தான். ஆனால் இதுத் தெரியாமல் அந்த மாநில மக்கள் சண்டை போட்டு அந்தத் திட்டத்தை தடுத்து வருகின்றனர். இந்த கொடுமைகளைப் பற்றி அந்த மாநில மக்கள் உணரும் வகையில் யார் மனமும் நோகாமல் நான் ஒருக் குறும்படம் எடுக்க வேண்டும். அதற்கு நீங்கள்தான் உதவ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். இப்போது அதற்கான பணிகள் நடந்துக் கொண்டிருக்கிறது. இவை இரண்டும் சிறு உதாரணங்கள் மட்டுமே. இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். இவை எல்லாவற்றையும் விட தமிழ் ஸ்டுடியோ.காம் சார்பில் “குறும்பட வட்டம்” என்கிற நிகழ்வு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை சென்னை எக்மோரில் உள்ள ஜீவன ஜோதி அரங்கில் காலை பத்து மணி முதல் இரவு ஏழு மணி வரை நடத்தி வருகிறோம். இதில் காலையில் உலகக் குறும்படங்கள் திரையிட்டு ஆர்வலர்களுக்கு உலகக் குறும்படங்கள் பற்றியத் தெளிவை ஏற்படுத்து வருகிறோம். பின்னர் மூன்று மணியளவில் இலக்கிய நிகழ்வு தொடங்கும். இதில் புகழ் பெற்ற சிறுகதைகளை பற்றி ஒரு எழுத்தாளர் அல்லது கவிஞர் சுவைபடக் கூறுவார்கள். பின்னர் அதனை எப்படி குறும்படமாக்கலாம் என்றும் ஆலோசனைகளைக் கூறுவார்கள். அடுத்ததாக குறும்பட வழிகாட்டி என்று ஒரு பகுதி. இதில் ஒவ்வொரும் மாதமும் ஒரு தொழில்நுட்பக் கலைஞர் பங்கேற்று குறும்படங்களுக்கான தொழில்நுட்ப ஆலோசனைகளை வழங்குவார். இதில் கேமரா, படத்தொகுப்பு, இசை, நடிப்பு என பல்வேறு துறைகளை சார்ந்த திரைக் கலைஞர்கள் வந்து நிகழ்வை சிறப்பித்துள்ளார்கள். அடுத்தாக குறும்பட திரையிடல் நிகழ்வு. இதில் ஒவ்வொரும் மாதமும் மூன்றுக் குறும்படங்கள் திரையிடப்படும். பின்னர் ஒரு சிறப்பு விருந்தினர் மூன்று குறும்படங்களின் நிறை குறைகளை பற்றி அதன் இயக்குனர்களுக்கு எடுத்து சொல்வார். பின்னர் குறும்பட இயக்குனர்களுக்கும், வாசகர்களுக்கும் இடையே கலந்துரையாடல் நடக்கும். இது மட்டுமின்றி திரையிடப்படும் மூன்று குறும்படங்களுக்கும் விருதுகள் வழங்கியும் சிறப்பித்து வருகிறோம். இந்நிகழ்வு சென்னையில் இதில் பங்கு பெருவோர்களில் சுமார் 80 சதவீதம் கிராமத்து ஆர்வலர்கள். நாகப்பட்டினம், கரூர், கோவை, திருப்பூர், புதுச்சேரி, காஞ்சிபுரம், ராமநாதபுரம், விருதுநகர், விழுப்புரம் எனப் பல்வேறு மாவட்டங்களில் உள்ள கிராமத்து இளைஞர்களே பெரிதும் கலந்து கொள்கின்றனர். இதில் சிறப்பு என்னவென்றால் எங்கள் நிகழ்ச்சியில் திரையிட்டு தங்கள் திறமை வெளிப்படுத்துவதற்காகவே பலரும் குறும்படங்கள் எடுத்து வருகின்றனர். குறைந்த செலவில் குறும்படம் எடுக்க கற்றுத் தருவதோடு, அதை நல்ல தொழில்நுட்பத் தரத்திலும் கொடுப்பதால் எங்கள் உறுப்பினர்கள் எடுக்கும் படங்கள் பல்வேறு குறும்படப் போட்டிகள் மற்றும் விழாக்களில் பங்கேற்று பரிசுகளையும், விருதுகளையும் அள்ளி வருகின்றன. இது மட்டுமின்றி, ஆன்லைன் வர்த்தகம் மூலம் அவர்களின் குறும்படங்களை விற்று அவர்களின் பொருளாதார சுமையையும் ஓரளவுக் குறைத்து வருகிறோம். தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்திலேயே குறும்பட விற்பனை என்றொரு பிரிவு உள்ளது. இந்தப் பகுதியில் அனைத்து குறும்படங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது.

இது மட்டுமின்றி தற்போது, கேமரா மற்றும் எடிட்டிங் ஆகியவற்றை தமிழ் ஸ்டுடியோ.காம் இலவசமாகவே செய்து தருகிறது. குறும்படம் எடுக்க ஆகும் மிகப் பெரிய செலவே, கேமரா மற்றும் எடிட்டிங் தான். அந்தப் பெரும் சுமையை குறைத்து அவர்களுக்கு உதவ தமிழ் ஸ்டுடியோ.காம் முன் வந்துள்ளது.

4. குறும்படம் எடுக்க எவ்வளவு பணம் தேவைப்படும், இதன் மூலம் வருமானம் கிடைக்குமா?

குறும்படங்கள் தயாரிப்பதற்கு இதுதான் செலவு என்று குறிப்பிட்டு சொல்ல முடியாது. அது அவர்கள் எடுத்துக் கொள்ளும் கதைக்களத்தை பொருத்து மாறுபடும். ஆனால் குறைந்த பட்சம் ஆயிரம் ரூபாய் முதல் பல லட்சங்கள் வரை செலவு செய்து ஒரு குறும்படம் எடுக்கலாம். குறும்படங்களில் வருமானம் என்பது கானல் நீர்தான். இது ஒரு பணம் ஈட்டும் துறை அல்ல. ஆனால் நல்லக் குறும்படங்கள் நீங்கள் செலவு செய்ததை விட பல மடங்கு அதிகமாக விருதுகள் மூலம் மட்டுமே உங்களுக்கு ஈட்டித் தரும். உலகம் முழுதும் ஒரு வருடத்தில் குறைந்த பட்சம் பன்னிரண்டு குறும்படப் போட்டிகள் நடக்கிறது. இதில் மூன்று குறும்படப் போட்டியில் உங்கள் குறும்படம் பரிசு வென்றால் மட்டுமே போதும். நீங்கள் செய்த செலவை விட இரண்டு மடங்கு நீங்கள் இலாபம் பார்க்கலாம். இதுத் தவிர தற்போது தமிழ் ஸ்டுடியோ.காம் ஆன்லைன் மூலம் குறும்படங்களை விற்பனை செய்கிறோம். இதில் உலகம் முழுதும் உள்ள தமிழ் / குறும்பட ஆர்வலர்கள் குறும்படங்களை வாங்கிக் கொள்கின்றனர். இதுத் தவிர நாங்கள் நடத்தும் குறும்பட வட்டத்தில் குறும்படங்கள் விற்பனைக்கு வைக்கப்படுகின்றன. இதுதான் தற்போது குறும்படங்களுக்கு வருமானம். ஆனால் எதிர்காலத்தில் இந்தத் துறை பணம் கொழிக்கும் துறையாக மாறும் என்பதில் எங்களுக்கு எவ்வித ஐயமும் இல்லை.

5. ஒரு குறும்பட இயக்குனரிடம் என்ன மாதிரியான திறமைகளை எதிர்பார்க்கிறீர்கள்?

எதையும் தெரிந்துக் கொள்ளும் ஆர்வம், தொடர்ந்து தன்னை அந்தத் துறையில் புதுப்பித்துக்கொள்ளும் திறன், கொஞ்சம் தொழில்நுட்ப அறிவு ஆகியவை எந்த ஒரு துறைக்கும் இன்றியமையாதது. அதேதான் குறும்படத் துறைக்கும். மேலும் இது காட்சிகளை கவிதையாக்கும் சீரியப் பணி ஆதலால், தொடர்ந்து படிக்கும் ஆர்வம் இந்த துறைக்கு மிக முக்கியமானது. ஒரு சிலர் கையில் கேமரா கிடைத்தவுடன் தன்னையும் ஒரு இயக்குநராகக் கருதி குறும்படம் எடுக்க கிளம்பி விடுகின்றனர். அவர்கள் ஆர்வம் மதிக்கத்தக்க ஒன்றுதான். ஆனால் அந்த துறையில் தன்னை அடையாளப்படுத்திக் காட்ட அவர்களுக்கு மேற்சொன்ன தகுதிகள் நிச்சயம் தேவை. இத்தகுதிகள் தேவை இல்லை என்று நினைப்பவர்கள் ஒன்று, இரண்டு படங்களில் வெற்றி பெறலாம். ஆனால் அவர்களால் இந்தத் துறையில் நிலைத்து நிற்க முடியாது. மேற்சொன்ன இந்தத் தகுதிகளை குறும்பட ஆர்வலர்களுக்கும், கிராமத்தில் இருந்து வரும் இளைஞர்களுக்கும் ஏற்படுத்திக் கொடுப்பதும் தமிழ் ஸ்டுடியோ.காமின் பணிகளுள் ஒன்றாகவே கருதுகிறோம்.

6. எத்தனை குறும்படங்களை இது வரை தயாரித்து உள்ளீர்கள்?

இப்போதுதான் மூன்று குறும்படங்களை தயாரிக்கும் பணியை தொடங்கியுள்ளோம். அதுமட்டுமின்றி, சிறந்த கதையம்சத்துடன் யார் வந்தாலும் அவர்களுக்கு கேமரா மற்றும் எடிட்டிங் ஆகியவற்றை இலவசமாக செய்துத் தருகிறோம். எனவே அவர்கள் ஆயிரம் ரூபாய்க்குள் ஒரு குறும்படத்தை எடுத்து விடலாம். இதற்கான விதிகள், வழிமுறைகள் அனைத்தும் தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளத்தில் உள்ளது.

7. உங்கள் தளத்தின் நீண்ட கால திட்டம் என்ன?

தமிழ் ஸ்டுடியோ.காமின் மிக முக்கிய நோக்கமே குறும்படத் துறையை மாற்று ஊடகமாக வார்த்தெடுப்பதே. மேலும், தமிழில் மட்டுமின்றி உலகின் அனைத்து மொழில்களிலும் வெளிவந்த சிறுகதைகள், நாவல்கள் போன்றவற்றையும், அழிந்துக் கொண்டிருக்கும் நமது கலாச்சாரம், இனம், மொழி, கலைகள் சார்ந்த விடயங்களை ஆவணப்படங்களாகவும் எடுத்து அதனை சர்வதேச சமூகத்தின் பார்வைக்கு வைப்பதும் எங்கள் எதிர்காலத் திட்டம். இதுமட்டுமின்றி, குறும்படத் துறையை பணம் கொழிக்கும் ஒரு துறையாக மாற்றும் முயற்சியும் எங்களின் எதிர்காலத் திட்டம்தான். மேலும், பெரியப் படங்களுக்கு அரசாங்கம் எப்படி விருதுகள் கொடுத்து ஊக்கப்படுத்துகிறதோ அதே போல் குறும்படங்களுக்கும் சிறந்த படம், சிறந்த இயக்கம், சிறந்த நடிப்பு  என சுமார் முப்பதுக்கும் மேற்பட்ட துறைகளின் விருது வழங்கி குறும்படப் படைப்பாளிகளை ஊக்கப்படுத்தும் முயற்சியை இந்த வருடம் முதல் தொடங்க இருக்கிறோம். அதற்கான ஸ்பான்சர்கள் தேடும் முயற்சியில் தற்போது ஈடுபட்டு இருக்கிறோம்.

8. இணைய தளத்தை எப்படி நடத்துகிறீர்கள்?

நானும் நண்பன் குணாவும் சேர்ந்து எங்கள் சொந்தப் பணத்தில் ஆரம்பித்ததே தமிழ் ஸ்டுடியோ.காம் இணையதளம். ஆரம்பித்த நாள் முதல் இன்று வரை யாரிடமும் கையேந்தாமல் எங்கள் சொந்த செலவில் மட்டுமே இந்த இணையதளத்தை நிர்வகித்து வருகிறோம். இது முழுக்க முழுக்க இலாப நோக்கமின்றி செயல்படும் ஒரு இணையத்தளம். ஒவ்வொரும் மாதமும் இணையதள நிர்வாகம், குறும்பட வட்டம், ஆர்வலர்களுக்கான உதவிகள் என பல ஆயிரங்கள் செலவழித்து நட்டத்தில் இயங்கினாலும், இந்த தளத்தை வியாபார ரீதியாக மாற்றும் முயற்சியில் நாங்கள் ஈடுபடவில்லை. எங்களுடன் ஒத்துப்போகும் விளம்பரதாரர்கள் வரும்பட்சத்தில் எங்கள் இணையதளத்தில் விளம்பரங்களை வெளியிடவும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.

9. உங்களின் செயல்பாடுகள் குறித்து?

தமிழ் ஸ்டுடியோவின் சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமை குறும்பட வட்டம் எனும் நிகழ்ச்சியும், வருடந்தோறும் குறும்படங்களுக்கு விருது வழங்குவது, ஆர்வலர்களை தொழில்நுட்ப ரீதியில் பலப்படுத்த மூன்று மாதங்களுக்கு ஒரு முறை தொழில்நுட்ப வகுப்புகள் எடுப்பது என எங்கள் செயல்பாடுகள் விரிந்து கொண்டே செல்கிறது.

10. இந்தத் துறை மேலும் வளர அரசும், பொதுமக்களும், ஊடங்களும் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள்?

பெரிய படங்களுக்கு அரசாங்கம் தரும் சலுகையை குறும்படங்களுக்கும் தர வேண்டும். குறும்படங்களை திரையரங்குகளில் ஒளிப்பரப்பு செய்ய அரசு ஆவண செய்ய வேண்டும். திரையரங்குகளில் திரைப்படங்கள் ஒளிபரப்பப் படுவதற்கு முன்னர் ஒரு பத்து நிமிடம் ஒதுக்கி இந்தக் குறும்படங்களை ஒளிபரப்பு செய்ய வேண்டும். அதற்காக விளம்பரதாரர்களை பிடித்து அதில் வரும் பணத்தை குறும்பட தயாரிப்பாளர்களுக்கு கொடுக்கலாம். அவர்கள் படம் மக்களை சென்றடைவது மட்டுமின்றி அவர்கள் செலவு செய்த பணமும் அவர்களுக்கு திரும்பக் கிடைக்கும். பொதுமக்களிடம் இருந்து ஆதரவை மட்டுமே எதிர்பார்க்க முடியும். காட்சி ஊடகங்கள் குறும்படங்களுக்காக குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்க வேண்டும். இன்று எப்படி நெடுந்தொடர்கள் தொலைக்காட்சியை ஆக்கிரமித்து உள்ளனவோ அப்படி ஒரு நாள் குறும்படங்களும் வளர வேண்டும். இதற்கு தொலைக்காட்சிகளின் ஒத்துழைப்பு தேவை. பத்திரிக்கைகள் திரைப்பட கலைஞர்களுக்கு கொடுக்கும் ஆதரவை குறும்பட ஆர்வலர்களுக்கும் கொடுக்க வேண்டும்.

தமிழ் ஸ்டுடியோ.காம் இணைய தளம் – http://www.thamizhstudio.com/

Writing often comes easier when you have a personal connection with the http://essayprofs.com/ topic you have chosen

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தமிழ் ஸ்டுடியோ – குறும்படத் தொகுப்பு இணையதளம் – நேர்காணல்”

அதிகம் படித்தது