மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை.

ஆச்சாரி

May 10, 2014

மீன்களுக்கு வேட்டையாடவும், சிங்கங்களுக்கு பறக்கவும் கற்றுத்தரப்படுகிறது. பயிற்சி முடியும் முன்னரே, காடுகளை பராமரிக்கும் பன்னாட்டு நிறுவனத்தில் மீன்களுக்கும், வானத்தை கண்காணிக்கும் வெளிநாட்டு நிறுவனத்தில் சிங்கங்களுக்கும் வேலை வாய்ப்பு. இவையனைத்தும் மிகக்குறைந்த கட்டணத்தில்!

அதெல்லாம் சரி, மீன்கள் எதற்காக காட்டில் வேட்டையாடவேண்டும்? சிங்கங்கள் எதற்கு வானத்தில் பறக்கவேண்டும் ?

கோவையிலுள்ள ஒரு நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றிய என் அனுபவத்தை இவ்வாறாக என்னால் எழுத முடிகிறது. மூன்று பேர் இல்லாமல் இன்றைய உயர் கல்வி கூடங்கள் செயல்படுவதில்லை. அவர்களில் முதன்மையானவர் தரகர், வெளிமாநிலங்களில் இருந்து எப்பாடுபட்டாவது மாணவர்களை இறக்குமதி செய்து வருவது தான் இவரது தலையாய பணி. இதற்காக அவருக்கு ஒரு மாணவருக்கு 5000 முதல் 10000 வரை தரப்படுகிறது. இவ்வாறாக அவர் கொண்டு வரும் ஒரு மாணவன், தன் படிப்பு முடிந்து போகும்பொழுது தான் பயின்ற நிறுவனத்திற்கு குறைந்தது 4 முதல் 5 இலட்சம் பணம் செலுத்தி செல்கிறான். மாணவன் விரும்பும் பாடப்பிரிவுகளில் ஒருவர் கூட சேராத பொழுதும், “சீட் இல்லை பாஸ் , உங்களுக்காக வேணா ரிஸ்க் எடுத்து பாக்கறேன் ” என்று இருப்பதை இல்லை , இல்லை என்று கூறி நன்கொடை பெறுவதில் இவர்கள் கில்லாடிகள்.

அடுத்து வருவது அலுவலர்கள், உள்ளே வந்துவிட்ட மாணவர்களுக்கு அடையாள அட்டை பெற்றுத்தருவது, மாணவர்களிடமிருந்து அபராதம் பெறுவது, விடுப்பு விண்ணப்பங்களை பெறுவது போன்ற கோப்புகளை பராமரிப்பது இவரது பணி. AICTE, UGC  போன்ற அமைப்புகள் தனிக்கைக்காக வரும் பொழுது தேவைப்படுவதை பல நேரங்களில் பொய்யாகவும், சில நேரங்களில் உண்மையாகவும் தயார் செய்து வைப்பது இவரது வேலை.

மூன்றாவதாக TPO(Training and Placement Officer), கடந்த 5 வருடங்களில் கல்லூரியின் தவிர்க்க முடியாத ஒரு பொறுப்பாக இது மாறி வருகிறது. மாணவர்கள் தங்களின் படிப்பை  முடிக்கும் முன்னரே அவர்களுக்கு ஏதாவது ஒரு வேலை வாங்கி தருவது தான் இவரது வேலை. இதற்காக படிப்பின் இறுதி ஆண்டில் மாணவர்களுக்கு தீவிர பயிற்சி அளிக்கப்படும்.

சுயமாக ஒரு மாணவன் தொழில் தொடங்க விரும்புவதாக சொன்னாலோ, மேற்படிப்பு படிக்க விரும்பினாலோ அல்லது ஆராய்ச்சியில் ஈடுபட போவதாக சொன்னாலோ, அதை நிராகரித்து இறுதியாண்டில் வேலை வாய்ப்பு பயிற்சியில் வழுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படுவர். தன் விருப்பத்திற்கு துளியும் சம்பந்தம் இல்லாத ஒரு துறையில் வேலைக்குச்செல்ல நிர்ப்பந்திக்கபடுகின்றனர். Civil, Mechanical , EEE, ECE ,Physics , Chemistry என்று எந்த படிப்பைப் படித்தாலும் இறுதி ஆண்டில் அவர்களுக்கு IT துறை சம்பந்தப்பட்ட பயிற்சியே அளிக்கப்படுகின்றது.

இதை தாண்டி ஒரு மாணவன் சுயமாக சிந்தித்தால் ஒட்டு மொத்த கல்லூரியும் ஏளனமாக பார்க்கும். இயற்பியலில் ஆராய்ச்சி மனப்பான்மை கொண்ட ஒரு மாணவன் எதற்காக மென்பொருள் துறையில் வேலை செய்ய வேண்டும்? மீன்கள் காட்டில் வேட்டையாடுகின்றன.

சிங்கம் வானத்தில் பறக்கின்றது, நீரிழிவு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் ஆர்வத்துடன் வேதியியல் துறையைத் தேர்ந்தெடுத்த மாணவன் மென்பொருள் நிறுவனம் ஒன்றின் நேர்முகத் தேர்வுக்காக நீண்ட வருசையில் நிற்கின்றான்.

எப்படி இந்த சூழல் உருவாகியது? இந்த மூன்று பேர் மட்டும் இருந்தால் போதுமா? ஒரு கல்லூரியை நடத்தி விடலாமா?

ஆசிரியர்கள் வேண்டாமா?

ஆசிரியர்களின் தேவை என்பது இன்றைய கல்வி சூழலில் குறைந்து கொண்டே வருவது தான் உண்மை. நேர்முக தேர்வின் போது ஆசிரியர் என்ற பட்டத்துடன் தான் உள்ளே செல்கிறோம், ஆனால் தேவைக்கேற்ப நாங்கள் தரகர்களாகவும், குமாஸ்தாவாகவும், TPO க்களாகவும் கல்லூரி நிர்வாகம் பயன்படுத்தி கொள்கிறது.

மாணவர்களின் இயல்பில் இருந்து அவர்களுக்கு எந்த துறை சிறந்தது என்று கணிக்கும் காலம் போய், எந்த துறையில் வேலை வாய்ப்பு இருக்கிறதோ அந்த துறைக்கு ஏற்றார் போல் மாணவர்கள் தயார் செய்யபடுகின்றனர். மறுபடியும் சிங்கம் பறக்கிறது, மீன் வேட்டைக்குப் போகிறது.

சமீபத்தில் பார்த்த படம் ஒன்றில் அந்த நாயகன் திரும்பத் திரும்ப “குமுதா ஹேப்பி அண்ணாச்சி” என்பார், இந்த இரண்டு ஆண்டுகளில் நான் திரும்பத் திரும்ப கேட்டதும் சொன்னதும் “பசங்க பாவம் சார்”.

Now that you’ve successfully navigated your smartphone monitoring talk, it’s up to free mobile spy software at spyappsinsider.com you to keep it up

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

6 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் தேவை- ஆசிரியர்கள் தேவையில்லை.”
  1. […] தரகர், அலுவலர்,வேலை பெற்றுத் தருபவர் … […]

  2. Sasikala says:

    We are forced to do the marketing rather than teaching!!!!!!

  3. azar says:

    Nce but tis was the fact in the clg.v r nt trained 2 our own thoughts of profesion instead of tis v r trained 2 the vacancy available profesion…the othr thing is an individual thoughts are nt accptd by othrs

  4. poorni says:

    vaasthavam thanuganna………

  5. rubya says:

    Factu…factu….factu…..

அதிகம் படித்தது