நவம்பர் 16, 2019 இதழ்
தமிழ் வார இதழ்

தற்காலக் கல்வி முறை பகுதி – 4

முனைவர் ஜ. பிரேமலதா

Sep 12, 2015

வாழ்க்கைக்கும் வகுப்பறைக்குமான இடைவெளி சில காரணிகள்

ஒரு காலத்தில் படித்துப் பட்டம் பெறுவது மிக உயர்வாகக் கருதப்பட்டது. ஆனால் அப்பட்டங்கள் இன்று தேர்வில் வெற்றி பெற்றதற்கான ஒரு அடையாளச்சீட்டாக மட்டுமே உள்ளது. கல்வி ஒரு விபத்தாகவும், பல்கலைக்கழகம் தரும் பட்டம் அதற்கான நிவாரணமாகவும் மாறிப்போய்விட்டது.

vaalkkaikkum vagupparaikkum1பிஎச்.டி உள்ளிட்ட  உயர்ந்த   பட்டங்களைப்   பெற்ற   மாணவர்கள்   கூடதன்னம்பிக்கை இழந்தவர்களாக, வாழ்வைச் சுமையாகக் கருதுவோராக மாறிப் போயுள்ளனர். நாடு விடுதலை பெற்றுப்பல்லாண்டு ஆகியும் வறுமை, அறியாமை, வேலையில்லாத் திண்டாட்டம் போன்ற சிக்கல்கள்நீங்காததால், நாட்டின் நிலை ஆரம்பித்த இடத்திலேயே நிற்கிறது. கல்வியைப்பெற்ற மாணவர்கள் ‘வேலையில்லாப் பட்டதாரி’ என்ற புதிய பட்டத்தைத் தவிரவேறொரு பயனையும் பெறுவதில்லை. இவர்களின் சிக்கலை அரசாங்கமோ, அரசியல்வாதிகளோ கண்டு கொள்வதில்லை. இந்தப் பல்கலைக்கழகங்கள் வேலையில்லாதவர்களைஉற்பத்தி செய்யும்/தொழிற்சாலைகளா? என்று சாடுகிறார் ஒரு கவிஞர். கல்வியின் நோக்கம், கல்வியைக் கற்பவர் தமது வாழ்நாளெல்லாம் தமக்குத் தேவையான கல்வியைத் தொடர்ந்து சுயமாகக் கற்றிடும் திறமையுடையவர்களை உருவாக்குவதாக இருக்கவேண்டும்.

vaalkkaikkum vagupparaikkum2நல்ல பாடத்திட்டம், உயரிய ஆசிரியர்களின் வழி மாணவர்களைச் சென்றடைய வேண்டும். ஆனால் நடப்பியல் கல்வி, வியாபாரமாகிவிட்ட சூழலில், மாணவர்களையும் பெற்றோர்களையும் கடனாளியாக்குகிறதேயன்றி சிந்தித்து உழைப்பால் உயரும் முதலாளியாக்குவதில்லை. ஒருவித  குற்ற உணர்வை, தாழ்வுமனப்பான்மையைத்தான் மாணவர்களிடம் தற்போதைய கல்வி  முறை      ஏற்படுத்துகிறது.      ‘ஒவ்வொரு    தலைமுறையும்    அதற்கு     முந்தைய தலைமுறையைக் காட்டிலும் சீர்கேடு அடைகிறது’ என்பது சீனப் பழமொழி.

சுதந்திரமடைந்து 65 ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது. எனினும் கல்விக்காக ஏங்கும் குழந்தைகள், பள்ளி செல்ல முடியா வறுமையில் உள்ள குழந்தைத் தொழிலாளர்கள், உயர்கல்வி கற்க முடியா மாணவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள். இன்று தனியார் மயமாகி வரும் சூழலில் ஆங்கிலப்பள்ளிகளின் மோகத்தில் சொத்தை விற்றாவது கல்வி கற்கச் செய்ய வேண்டுமென்று நடுத்தர வர்க்கம் முயல்கிறது. இதனால் பாதிக்கப்படுவது அரசுப் பள்ளிகளும் அரசுக் கல்லூரிகளுமே. தனியார் பள்ளிகளின் பெருக்கத்தில் இழுத்து மூடிவிடக்கூடிய நிலையிலுள்ள அரசு பள்ளிகளும், அரசு பொறியியல் கல்லூரிகளும் பெருகி வருவது கண்கூடு. இதனால் அரசு பள்ளிகளில், கல்லூரிகளில் படிப்பதென்பதுகூட கனவாகி உள்ள கீழ்மட்ட ஏழைகளின் பிள்ளைகளுக்கு இனி அந்த கதவும் நிரந்தரமாக மூடப்படும் அபாயம் வெகு தொலைவில் இல்லை.

இன்றைய இந்தியாவின் நிலை குறித்த கவலையும் இதை மாற்றுவதற்கான முயற்சியும் என்ற நிலையில் ஆசிரியர்களின் நிலை என்ன என்பது குறித்து ஆராய்ந்தால், ஆசிரியர்கள் அடுத்தவரிடமிருந்து அந்நியப்பட்டு நிற்பதையும், தங்களைச் சுற்றி ஒரு வட்டத்தை ஏற்படுத்திக் கொள்வதையும், சிந்தனை வறட்சியில் எதையும் வெறுத்துப் பேசுவதையும் போக்காகக் கொண்டுள்ளதைக் காண முடிகிறது. மாணவர்கள், நெருக்கடி வாழ்வின் தினசரிகளுக்கிடையே காணாமல் போய்கொண்டிருக்கும் மனிதத்தைப்படித்த ஆசிரியர்களிடமிருந்தாவது கிடைக்காதா என எதிர்பார்க்கிறார்கள். ஆசிரியர்கள் மட்டுமல்ல, படித்த இளைஞர்களும் தன் சொந்த வாழ்வைத் தாண்டி இந்த நாட்டிற்குச் செய்வது என்ன?

vaalkkaikkum vagupparaikkum5குடும்பத்தைக் காப்பாற்றவும் தேவைகளுக்குச் பொருள் ஈட்டவும், விலைவாசியோடு போராடுவதும் இளைய தலைமுறையோடு தலைமுறை இடைவெளி சிக்கலைச் சமாளிப்பதுமாய் இன்றைய ஆசிரியர்கள் சிக்கித்தவிப்பது உண்மைதான். ஆனால், எல்லாச் சிக்கல்களுக்குப் பின்னாலும் அரசின் கொள்கைகளும், மாணவர்களின் எதிர்காலமும் அவரவர்பிள்ளைகளின் எதிர்காலமும் உள்ளன என்பதை யாரும் மறுக்க முடியாது. அதேசமயம் ஒவ்வொரு மாணவனின் முன்னேற்றத்தின் பின்னும் ஒட்டு மொத்தச்சமூகத்தின் முன்னேற்றமும் உள்ளது என்பதை அனைவரும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

இந்நிலை மாற இரண்டு மாற்றங்கள் தேவை. ஒன்று மேலை நாட்டினரின் பொருள் நெறிசார்ந்த பாடத்திட்டத்தை நீக்கிவிட்டு, தமிழ்நாட்டின் அறநெறி சார்ந்த கல்வித் திட்டத்தை கொண்டு வருவது. அடுத்த நூற்றாண்டை மனதில் வைத்து, மனிதத்தை மையமாக வைத்து கல்வித்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். மனித மதிப்பு, இயற்கை மதிப்பு, அற நெறி மதிப்பு, வாழ்க்கை மதிப்பு போன்ற மதிப்புகளை வாழ்க்கை விழுமியங்களைக் கற்றுத் தருவதாக கல்வி இருக்க வேண்டும். ஒழுக்கத்தைக் கற்றுத் தருவதே கல்வியாகும். ஒவ்வொரு மனிதனுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் நல்ல தன்மைகளை வெளிக் கொணர்ந்து அவற்றை பிரகாசிக்கச் செய்வதாக கல்வி அமைக்கப்படவேண்டும். இன்றைய சமூகத்தில் ஆசிரியர் –மாணவர் இருவரிடமும் ஒழுக்கமும் கட்டுப்பாடும் மிகவும் தாழ்ந்து போயுள்ளது. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆசிரியர் பாலியல் வன்முறை சம்பவங்கள் மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கிராமப்புறங்களில் நடக்கும் பொழுது பெண்களை மீண்டும் வீட்டிற்குள் முடக்கிவிடக் கூடிய அபாயம் உள்ளது.

vaalkkaikkum vagupparaikkum4பள்ளிகளில் மட்டுமல்ல உயர்கல்விக் கூடங்களில் கூட ஆய்வாளராகச் சேரும் மாணவியரிடம் தவறாக நடக்கும் நெறியாளர்கள் பெண்களின் உயர்கல்விக்கு உலை வைக்கிறார்கள். இதற்குக் காரணம் இன்றைய கல்விமுறை வாழ்க்கை வசதிகளை உயர்த்திய அளவிற்கு வாழ்க்கையின் மீதான மதிப்புகளை உயர்த்தவில்லை என்பதே. தேர்வு முறை, வேலைவாய்ப்பு, வசதியான வாழ்க்கை இவற்றை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு கல்விமுறை வகுக்கப்பட்டிருப்பது இப்படிப்பட்ட சிக்கல்களுக்குக் காரணங்களாகும். மனிதர்களிடம் மன சிக்கல்கள் பெருகிக் கொண்டேதான் போய்க்கொண்டிருக்கிறது. உண்மையான நேர்மையான ஆசிரியர்கள் முறையான ஆய்வைச் செலுத்த விழையும் போதுபட்டத்திற்காகவே படிக்க வந்த திறமைக் குறைவான மாணவர்கள் ஆசிரியர் பாலியல் ரீதியாகத் தொந்தரவு கொடுக்கப்பதாகக் கூறி மிரட்டி பட்டத்தைப் பெற முனையும் போக்கு கலாச்சார அதிர்ச்சியை மறுபுறம் தந்து கொண்டிருக்கிறது. இந்நிலைமை கல்வியில் விழுமியக் குறைவை காட்டி நிற்கிறது.

மாணவர் –ஆசிரியர் இடைவெளி அதிகரித்து வருவதும், ஆசிரியர்கள் தங்கள் இச்சைகளுக்கு மாணவர்களைப் பயன்படுத்த நினைப்பதும் ஆசிரியர்களுக்கு எதிரான மனநிலையில் மாணவர்கள் வளர்வதும் கண்டிப்பாகத் தவிர்க்கப்படவேண்டும்.

வகுப்பறையில் ஆசிரியர்கள் கல்வியை கற்பிக்கும் போது மாணவர்களிடையே ஒற்றுமை, ஒழுக்கம், பிறருக்கு உதவும் குணம், அன்பு பாராட்டுதல், சாதி மத வேற்றுமை பாராட்டாது இருத்தல் போன்ற குணங்களை உருவாக்கிட வண்டும். இதற்கு ஆசிரியர்கள் மனிதநேயம் மிக்கவராக நன்னடத்தை உள்ளவர்களாக நடந்து கொள்ள வேண்டும். கற்கள் கடவுளாவது சிற்பியால். விதைகள் விருட்சமாவது விவசாயியால். மாணவர்கள் பண்பாளர்களாவது ஆசிரியரால். அறிவால் உலகை வெல்லும் ஆற்றல் ஆசிரியர்களுக்குண்டு. எழுத்தறிவித்தவன் இறைவன் என்பார் அதிவீரராம பாண்டியர்.

-தொடரும்


முனைவர் ஜ. பிரேமலதா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தற்காலக் கல்வி முறை பகுதி – 4”

அதிகம் படித்தது