அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தலையங்கம்

க.தில்லைக்குமரன்

Sep 3, 2016

Siragu Thalayangam sports1அண்மையில் ஓர் அருமையான கவிஞரின் மறைவு நம் அனைவரையும் துக்கத்தில் ஆழ்த்தியது. ஆனந்த யாழை தம் தங்கத்தமிழில் மீட்டிய கவிஞர் நம்முடன் இன்றில்லை என்பதை நம்பமுடியவில்லை. சிறிய காலத்தில் அழகான தமிழில் நம்மை ஆட்கொண்டவர் இன்றில்லை. இந்த இளம் வயதில் மற்றொரு உலகைக்காண ஏன் அத்துனை அவசரமோ? உடல்நிலையை சரியாக கவனித்துக்கொள்ளாதது ஒரு காரணம் என்று அறிகிறோம். இந்தக் குற்றச்சாட்டிற்கு நம்மில் பெரும்பாலோர் உள்ளாவர் என்பதுதான் உண்மை. ஏன் இந்த நிலை, உடல்நிலைக்கு ஒவ்வாத உணவை ஏன் உண்டு மாள வேண்டும்? சரியான உடற்பயிற்சியின்மை இதற்கு பெருங்காரணம். இந்த துக்க நிகழ்வை ஒரு பெரும்பாடமாக எடுத்துக்கொண்டு நம் வாழ்க்கை முறையினை மாற்றுவது மிக முக்கியம்.

Siragu Thalayangam sports2கடந்த சில வாரங்களாக உலக மக்களின் கவனம் பிரேசிலின் ரியோ நகரில் இருந்தது. ஒரு கோடி இந்திய மக்களின் ஏக்கமும் நம் கண் முன்னால் தெளிவாகத் தெரிந்தது. கோடி மக்களில் ஒரு சிலராவது பதக்கம் வென்று வருவாரா என்கிற ஏக்கமிது. சிறு சிறு நாடுகளும் பல பதக்கங்களை வென்று வாகை சூடியக் காட்சி நம் அனைவர் நெஞ்சையும் கவர்ந்தது. உசேன் சாதனைகள் தொடர்ந்தது. பிரிட்டன் சீனாவையும், உருசியாவையும் மிஞ்சி இரண்டாவது நிலையை அடைந்தது ஒரு பெரும்சாதனை. ஆனால் இந்தியாவிற்கு இரு பதக்கங்கள், வெள்ளியொன்றும், வெண்கலமொன்றும் பெரும் போராட்டத்தின் முடிவில் இரு பெண்கள் வென்று உலக அரங்கில் நம் மானத்தைக் காப்பாற்றினர். அவர்களைக் கொண்டாடுவது நம் கடமை. ஆனால் வெல்லாதவர்கள் முற்றிலும் மறைக்கப்பட்டனர். விளையாட்டை ஒரு பொருட்டாகக் கருதாத சமூகம் இந்திய சமூகம். மேல்தட்டு மக்களுக்கும் பணம் படைத்தவர்களுக்கு மட்டும் விளையாட்டின் பலன் அடைந்து வருவது, நல்ல உடல்வாகு கொண்ட கிராம மக்கள் இது போன்ற போட்டிகளில் பங்கேற்க முடியாத நிலை தொடர்வதுதான் இந்த அவல நிலைக்கு முதன்மைக்காரணம்.

Siragu Thalayangam sports5

Siragu Thalayangam sports6இந்த அவல நிலைக்கு வெறும் அரசை மட்டும் குறை கூறாமல் அனைத்துப் பெற்றோர்களும் இதற்குக் காரணம் என்று உணர வேண்டும். அரசின் பங்கு விளையாட்டை கட்டாயப் பாடமாக்கி அதிலும் தேர்ச்சி பெறவேண்டும் என்கிற நிலை உருவாக வேண்டும். எந்நேரமும் புத்தகமும் கையுமாக இருக்கும் நிலை மாறி தினமும் ஒரு மணிநேரமாவது விளையாட்டை கட்டாயமாக்கப்படவேண்டும். கோடி மக்கள் கொண்ட இந்திய நாட்டிற்கு வெறும் இரு பதக்கங்கள் என்கிற அவமானம் போக்க அரசும், பள்ளிகளும், பெற்றோர்களும் வெறும் மட்டைப்பந்து விளையாட்டை மட்டும் போற்றாது, மற்ற விளையாட்டுகளிலும் ஈடுபட ஊக்கம் கொடுக்க வேண்டும். இந்த அவலநிலைக்கு நாம் மட்டைப்பந்து விளையாட்டிற்கு மட்டும் கொடுக்கும் முக்கியத்துவம்தான் பெரும் காரணம் என்பேன். விளம்பரதாரர்களின் 95 விழுக்காடு விளம்பரச்செலவு மட்டைப்பந்துக்கு மட்டும் போகிறது. என்றைக்கு இந்த நிலை மாறி அனைத்து விளையாட்டு போட்டிகளும் ஊடகங்களிலும், பள்ளிகளிலும் ஆதரவு பெறுகிறதோ அன்றுதான் உலக அரங்கில் நமக்கு மதிப்பு பெருகும்.

இந்தியா உலக அரங்கில் மேலைநாடுகளுக்கு இணையாக போட்டி போட விரும்புகிறது, நியாயமானதும் கூட. ஆனால் அந்நிலையை அடைய மேன்மையான திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்துவதில் முனைப்பு காட்டுவதில்லை. வெறும் ‘பாரத் மாதாக்கி ஜே’ என்று வரட்டு கத்தல் மூலம் மட்டும் இச்சாதனைகளை அடையமுடியாது. இந்தியர்கள் சிறிது சிறிதாக சுயநலவாதிகளாக மாறிவருவது கவலைக்குரியது. அதற்கு நம் கல்வி முறை பெரும்காரணம். வெறும் புத்தகங்களை மட்டும் படித்து பொறியியல் வல்லுநராகவும், மருத்துவராகவும் மட்டும் தம் குழந்தைகளை மாற்ற பெற்றோர்கள் முயலுகிறார்கள். அதுதான் அக்குழந்தைகளின் கனவாகவும் இருப்பதுதான் வேதனை.

Siragu Thalayangam sports8தாய்மொழி கற்பதில் ஆர்வமில்லை. தாய்மொழியில் மற்ற பாடங்களை கற்பதில் ஆர்வமில்லை. விளையாட்டில் ஆர்வமில்லை, நல்ல புத்தகங்கள் மற்றும் இலக்கியங்கள் கற்பதில் ஆர்வமில்லை, செய்தித்தாள் படிப்பதுகூட நின்று விட்டது. ஆனால் மேலை நாடுகளில் கலை சார்ந்த பாடம் படிப்பது கட்டாயம். உயர்நிலைப்பள்ளியில் இசையோ அல்லது வேறு ஏதாவது கலையோ முதல் ஈராண்டுகள் படிக்க வேண்டும், வேற்று மொழியொன்று கட்டாயம் படிக்க வேண்டும். தொண்டு செய்யும் எண்ணத்தை வளர்க்க, குறைந்தபட்ச அளவில் பொதுத்தொண்டில் ஈடுபடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேடைப்பேச்சு, விவாதம் போன்றவைகளினால் மாணவர்கள் இன்றைய உலக அரசியலை அறிய வாய்ப்பு பெருகின்றனர். சமூக இழிநிலைகளைக் குறித்து வகுப்புகளில் விவாதித்து, ஏன் இந்த அவலங்கள் நடைபெறுகின்றன என்று உணர்கின்றனர். இது போன்ற கல்வியினால்தான் பல நல்ல தலைவர்களும், மனிதநேயவாதிகளும் மேலைநாடுகளில் உருவாகி அந்நாட்டை வளப்படுத்துகின்றனர்.

ஆனால் இந்தியாவின் நிலையோ, அரசு மானியத்தில் ஐ.ஐ.டி, என்.ஐ.டி, ஐ.ஐ.எம், ஐ.ஐ.எஸ் போன்ற கல்வி நிறுவனங்களில் படித்து வெளிநாடுகளுக்கு அடிமைகளாகச் செல்கின்றனர். இவர்களுக்கு பணம் சம்பாதிப்பது மட்டும்தான் வாழ்வின் நோக்கம். இக்கல்விக்கூடங்களில் படிப்பவர்கள், குறைந்தது 5 ஆண்டுகள் இந்தியாவில் வேலை செய்ய வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்தால், மேல்தட்டு மாணவர்கள் அக்கல்வி நிறுவனங்கள சீண்ட மாட்டார்கள். அப்படியாவது கீழ்த்தட்டு மாணவர்களுக்கு அந்த வாய்ப்பு கிட்டினால் நல்லது.


க.தில்லைக்குமரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தலையங்கம்”

அதிகம் படித்தது