மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

தாய்ப்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளும்.!

சுசிலா

Aug 5, 2017

Siragu thaaipaal1

உலகம் முழுவதும் ஆகஸ்ட் மாதம் முதல் வாரம், அதாவது ஒன்றாம் தேதியிலிருந்து ஏழாம் தேதி வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கொண்டாடப்படுகிறது. இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சமூக ஆர்வலர்கள் இதனை பயன்படுத்திக்கொள்கிறார்கள். அண்மைக்காலமாக, குழந்தைகளுக்கு தாய்ப்பால் ஊட்டும் பழக்கம் பெண்களிடையே குறைந்து கொண்டே வருகிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் நம் இந்தியாவில், இந்த சதவிகிதம் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சொல்கிறது. இங்கு பெரு நகரங்களாகச் சொல்லப்படும், சென்னை, மும்பை, டெல்லி, பெங்களூரு உள்ளிட்ட நகரங்களில் 20 வயதிற்குள்ளாக உள்ளவர்களிடம், மிகை இரத்த அழுத்தம், நீரிழிவு நோய், எலும்பு வலுவின்மை, மூச்சுக்குழாய் பிரச்சினை போன்ற நோய்கள் 43 விழுக்காடு அதிகரித்துள்ளதாம்.

இதற்கு முன்பு இந்த அளவிற்கு இல்லை. 30 ஆண்டுகளுக்குள் இந்த திடீர் மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. அதற்கு முக்கியக்காரணம் தாய்ப்பால் குடிக்காத குழந்தைகள் அதிகரித்துள்ளார்கள். நம்முடைய உணவுப்பழக்கமும் ஒன்று. நொறுக்குத்தீனி, அதிக கொழுப்புள்ள உணவுகள், மிக முக்கியமாக நோய் எதிர்ப்புத்திறன் இல்லாமையே தான் காரணம் என்று சொல்லப்படுகிறது. செயற்கையாக கடைகளில் விற்கப்படும் பால் பவுடர்கள் குழந்தைகளுக்கு எவ்வித சத்தையும் தருவதில்லை. மாறாக உடல் எடை கூடுவதற்குக் காரணமாகிறது. மந்தநிலையை குழந்தைகளுக்கு உருவாக்கி விடுகிறது. எவ்வித கலப்படமும் இல்லாத ஒரு சிறந்த உணவு தாய்ப்பால். இதில் அனைத்து சத்துக்களும் அடங்கியுள்ளன. நோய் எதிர்ப்பு ஆற்றலை அளிக்கவல்லது. மேலும் தாய்ப்பால் குடித்து வளரும் குழந்தைகள் ஆரோக்கியத்துடன் மட்டுமல்லாமல், சுறுசுறுப்புடனும், அறிவுடனும் வளருகிறார்கள் என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது.

Siragu thaaipaal3

முன்பெல்லாம் இரண்டு வயது வரை தாய்ப்பால் ஊட்டியவர்கள், ஓராண்டு என்பது போய் மாதங்கள் என்ற கணக்கில் தொடர்ந்து, இப்போது சில வாரங்கள் மட்டுமே என்ற நிலை வந்திருக்கிறது. மருத்துவர்கள், குழந்தைகள் தாங்களே, விரும்பி உணவு சாப்பிடும்வரை தாய்ப்பால் கொடுக்கலாம் என்று அறிவுறுத்துகிறார்கள். அப்படி இருக்கும்போது இந்த சத்தான உணவை ஓராண்டு வரையாவது தாராளமாகக் கொடுக்கலாமே. இதனைப்பற்றிய ஒரு தெளிவை இளம் தாய்மார்கள் அறிந்துகொள்ளுதல் நல்லது. இப்போது சமீபகாலமாக, பெண்களின் கவலை என்னவென்றால், தாய்ப்பால் சுரப்பதில்லை என்பதுதான். மருத்துவ அறிவியலின்படி, ஒரு குழந்தை பிறந்தால், பால் சுரப்பது என்பது இயற்கையில் நடக்க வேண்டிய ஒன்று. அது உடலியக்க செயல்பாடுகளில் ஒன்று. நிச்சயம் சுரக்கும் என்பதும் நிதர்சனமான உண்மை. சில பெண்களுக்கு சுரப்பதில் தாமதம் ஏற்படலாம், குறைவாக இருக்கலாம். இவை எல்லாமே நிவர்த்தி செய்யக்கூடியது தான். வீட்டில் உள்ள மற்றவர்களும் தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்களுக்கு இந்த புரிதலை ஏற்படுத்த வேண்டும்.!

அசைவ உணவு உண்பவர்களுக்கு, முக்கியமாக கடல் உணவு சாப்பிடுவார்களுக்கு, இந்தப் பிரச்சினை இருக்காது. தாய்ப்பால் குறைவாக சுரந்தாலும், சில நாட்களில் அதிகரித்துவிடும். சைவ உணவு உண்பவர்கள் முருங்கைக்கீரை, பூண்டு முதலியவற்றை உணவில் கொஞ்சம் அதிகமாக சேர்த்துக்கொள்ளலாம். தாய்ப்பால் ஊட்டும் தாய்மார்கள் சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். அதன் மூலம்தான் குழந்தைகளுக்கும் சத்து போய்ச்சேர்க்கிறது. அறிவான, ஆரோக்கியமான குழந்தைகளை நம் சமூகத்திற்குக் கொடுப்பது நம் கடமை அல்லவா.!

இந்தத் தாய்ப்பால் வாரத்தில், இதற்கான விழிப்புணர்வை, தாய்ப்பாலின் அவசியத்தை வலியுறுத்துவோம்.!

அறிவான, வலிமையான மனிதவளம் எல்லா வளத்தையும்விட சிறந்தது என்பதை அறிவுறுத்துவோம். !

ஓராண்டிற்குள் உள்ள குழந்தைகளுக்கு தாய்ப்பாலை விட சிறந்த உணவு வேறு எதுவுமில்லை என்ற உண்மையை புரியவைப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாய்ப்பாலும், ஆரோக்கியமான குழந்தைகளும்.!”

அதிகம் படித்தது