பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

தாலாட்டுப் பாடுங்கள்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 21, 2016

thaalaattu3அழுகின்ற குழந்தையை அரவணைத்து அதனை மடியில் போட்டு தாலாட்டி தூங்க வைக்கும் மரபு தமிழ்ச் சமூகத்தில் இன்றைக்கு அருகி வருகின்றது என்றே சொல்ல வேண்டும். அழுகின்ற குழந்தைக்கு கணினியில் குழந்தைகள் பாடல் நாம் காண்பித்தாலும், நாம் நம் நாவினை அசைத்துப் பாடும் தாலாட்டுப் போல் சிறப்பாக இருக்காது. “தால்” என்றால் நாக்கு “ஆட்டுதல்” என்பது அசைத்தல், நாவினை அசைத்துப்  பாடுவதால் தால்+ஆட்டு=தாலாட்டு எனப் பெயர் பெற்றது என்று கூறுவர். அதே போன்று தால் என்றால் தொட்டில் என்றும்  பொருள்படும். தாய் தொட்டிலை ஆட்டிக் கொண்டே பாடுவதால் தாலாட்டுப் பாடல் என்று பெயர் வந்ததாகவும் கூறுவர்.

பெரும்பாலும் தமிழ்ச் சமூகத்தில் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு என்று பிரித்து பாடும் வகையும், இருபாலருக்கும் ஒரே தாலாட்டு பாடும் மரபும் உண்டு. ஆண் குழந்தைகளுக்கு வீரம் செறிந்த பாடல்களையும், பெண் குழந்தைக்கு மென்மையான பாடல்களையும் வைத்துள்ளனர் என்ற போதும் இன்றைக்கு சூழலில் இருபாலருக்கும் ஒரே தாலாட்டுப் பாடலை படுவதே  இளமையிலிருந்தே சமத்துவத்தை குழந்தைகளிடம் கொண்டுச் செல்லும்.

நம் நாட்டுப் பாடல்களில் தாலாட்டிற்கு தனி இடம் என்றும் உண்டு. அதை இயற்றியவர் யார் என்று தெரியாது. எழுத்து வடிவும் இல்லை.

செவி வழியே மக்களின் வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்த ஒன்று. குழந்தையை யாரும் கைநீட்டி அடித்திருக்க மாட்டார்கள் என்பதை தாய்  நன்கு அறிவாள். எனினும் தன் குழந்தையை யாரோ அடித்தது போல எண்ணிப்  பாடுவாள். இது நம் வீடுகளில் பெரும்பாலும் நாம் கேட்டு வளர்ந்த  பாடல்.

‘கொப்புக்கனியே, கோதுபடா மாங்கனியே
வம்புக்கழுதாயோ, வாயெல்லாம் பால் வடிய
மாமன் அடித்தாரோ மல்லிகைப்பூ செண்டாலே
அத்தை அடித்தாளோ அல்லிப்பூ செண்டாலே
அடித்தாரைச் சொல்லி அழு
ஆக்கினைகள் செய்து வைப்போம்
தொட்டாரைச் சொல்லி அழு
தோள் விலங்கு போட்டு வைப்போம்
ஆராரோ ஆரிராரோ
என் கண்ணே உறங்கு..

thaalaattu4ஏழ்மையின் தாக்கத்தை தன் தாலாட்டில் தாய் வெளிப்படுத்தும் விதமாக இந்த தாலாட்டுப் பாடல் இருக்கின்றது.

“முத்துச் சிரிப்பழகா
முல்லைப்பூ பல்லழகா
வெத்துக் குடிசையிலே
விளையாட வந்தாயோ?
ஏழைக் குடிசையிலே
ஈரத் தரைமேலே
தாழம்பாய் போட்டுத்
தவழ்ந்தாட வந்தாயோ
தரையெல்லாம் மேடுபள்ளம்
தவழ்ந்தால் உறுத்தாதோ
பச்சரிசி சோளம்
பாதிநாள் பட்டினிதான்
பசும்பால் கொடுத்துந்தன்
பசி தீர்க்கப் பார்த்தாலும்
பருத்திவிதை இல்லையடா
பசு பாலை தரலையடா
பிள்ளைப்பால் ஊட்டியுனைப்
போசனைகள் செய்திடவே
கொள்ளையுத்தம் பஞ்சங்
குரங்காகிப் போனேண்டா”

தாலாட்டுப் பாடல்களின் தொடக்கம் வெறும் நாவசைகளின் ஒலிகளேயாகும். இசை நயத்துக்காகத் தாயால் இட்டுக் கட்டப்பட்டதே. அழகான இசை நயம் அந்த வரிகளுக்கு உண்டு.

‘ஆராரோ ஆரிரரோ
ஆராரோ ஆரிரரோ
துரிதுரி….துரிதுரி…ஆஸ்
ராரீ ராரீ ராராரோ
லு-லு லாயீ..லு.. லு..லாயீ’

thaalaattu7காதணி விழா, தாய்மாமன் சிறப்பு என்று தாலாட்டுப் பாடல்கள் விரிந்தாலும் இன்றைய காலத்திற்கு அவை ஏற்புடையதாக இருக்காது. இன்றைய காலத்தில் அறிவியலின் தேவையும், கல்வியின்-சமத்துவத்தின் அவசியமும் இரு பாலருக்கும் தேவை என்பதை உணர்த்தும் விதமாக தாலாட்டு இருந்தால் மிகச் சிறப்பு.

எடுத்துக்காட்டாக

‘ஆராரோ ஆரோரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரோரோ ஆராரோ ஆராரோ

“அழகுப்  பெட்டகமே, மாதுளை முத்தழகே
அழுகை மறந்து கண்ணுறங்கு
காலத்தில் படித்து நீ உயரனும்
கண்ணுறங்கு
வீரத்தின் நிலமாம் தமிழ் நிலம்
இன்று சாதிச் சண்டையில்
கெட்டழியுது
சாதி அகற்ற நீ போராடனும் கண்ணுறங்கு
மூடப் பழக்கம் தவிர்த்தே நீ வாழனும்
கண்ணுறங்கு
கண்ணுறக்கம் கொண்டாலும்
கருத்துறக்கம் கொள்ளாதே
கண்ணுறங்கு ”

ஆராரோ ஆரோரோ ஆராரோ ஆராரோ
ஆராரோ ஆரோரோ ஆராரோ ஆராரோ

என்று நாமே இன்றைய பிள்ளைகளுக்கு பாடலாம்.

கவிஞர் வைரமுத்து அவர்கள் வேலைக்குச் செல்லும் தாய் பாடும் தாலாட்டாக  எழுதிய பாடல் ஒன்று.

சோலைக்கு பிறந்தவளே!
சுத்தமுள்ள தாமரையே!
வேலைக்கு போகின்றேன் – வெண்ணிலவே கண்ணுறங்கு!

thaalaattu1

அலுவலகம் விட்டு -
அம்மா வரும் வரைக்கும் -
கேசட்டில் தாலாட்டு – கேட்டபடி கண்ணுறங்கு!

……………………………………………….
……………………………………………..

20-ம் நூற்றாண்டில் என் கருவில் வந்தவளே!
இது தான் கதியென்று – இன்னமுதே கண்ணுறங்கு!

தூரத்தில் இருந்தாலும் தூயவளே -
உன் தொட்டில் ஓரத்தில் -
என் நினைவு – ஓடிவரும் கண்ணுறங்கு!

உறவுக்கு தடையாக
‘ஒ’ என்று அலறாமல் -
இரவுக்கும் மிச்சம் வைத்து
இப்போது – நீ உறங்கு!

தாயென்று காட்டுவதற்கும்
தாவி எடுப்பதற்கும்
ஞாயிற்றுகிழமை வரும் – நல்லவளே கண்ணுறங்கு!

அதே போன்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் ஆண் குழந்தை தாலாட்டு, பெண் குழந்தை தாலாட்டு  என்று எழுதி இருப்பார்கள்.

ஆண் குழந்தை தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
காராரும் வானத்தில் காணும் முழுநிலவே!
நீராரும் தண்கடலில் கண்டெடுத்த நித்திலமே!
ஆசை தவிர்க்கவந்த ஆணழகே சித்திரமே!
ஓசை யளித்துமலர் உண்ணுகின்ற தேன்வண்டே!
உள்ளம் எதிர்பார்த்த ஓவியமே என்மடியில்
பிள்ளையாய் வந்து பிறந்த பெரும்பேறே!
…………………………………………………………………….
……………………………………………………………………..
மூடப் பழக்கத்தைத் தீதென்றால் முட்டவரும்
மாடுகளைச் சீர்திருத்தி வண்டியிலே பூட்டவந்த
ஈடற்ற தோளா, இளந்தோளா, கண்ணுறங்கு!
மானிடரின் தோளின் மகத்துவத்தைக் காட்டவந்த
தேனின் பெருக்கே,என் செந்தமிழே கண்ணுறங்கு!

thaalaattu6

பெண் குழந்தை தாலாட்டு

ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
ஆராரோ ஆரரிரோ ஆரரிரோ ஆராரோ!
சோலை மலரே! சுவர்ணத்தின் வார்ப்படமே!
காலைஇளஞ் சூரியனைக் காட்டும் பளிங்குருவே!
வண்மை உயர்வு மனிதர் நலமெல்லாம்
பெண்மையினால் உண்டென்று பேசவந்த பெண்ணழகே!
மூடத் தனத்தின் முடைநாற்றம் வீசுகின்ற
காடு, மணக்கவரும் கற்பூரப் பெட்டகமே!
வேண்டாத சாதி இருட்டு வெளுப்பதற்குத்
தூண்டா விளக்காய்த் துலங்கும் பெருமாட்டி!
சாணிக்குப் பொட்டிட்டுச் சாமிஎன்பார் செய்கைக்கு
நாணி உறங்கு; நகைத்துநீ கண்ணுறங்கு!

என்று எழுச்சியுற எழுதி இருப்பார்கள்.

தாலாட்டுப் பாடுவது குழந்தைக்கு தாய்மொழியின் அழகியலை, மொழி அறிவை இளமையிலேயே  கொண்டுச்  சேர்க்கும் ஒரு கருவியாகவே கருத வேண்டும். இன்றைக்கு முன் போல் முழு நேரமும் வீட்டில் குழந்தைகளுடன் நேரம் கழிக்க முடியாத பெற்றோர்களை நாம் காண்கின்ற நிலையில் இரவில் உறங்குவதற்கு ஓரு மணி நேரம் முன்பு குழந்தைகளோடு உரையாடினால் தான் அந்தக்  குழந்தை தன்னம்பிக்கையோடு வளரும் என்கிறது உளவியல். அந்த அடிப்படையில் தாலாட்டும் சேர்ந்து கொண்டால் குழந்தைக்கு மொழி வழியே இசையை, பண்புகளை நாம் கொண்டுச் சேர்க்க முடியும்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “தாலாட்டுப் பாடுங்கள்”

அதிகம் படித்தது