சூன் 19, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

திக்கெட்டும் ஒளி கூட்டட்டும் !!! (கவிதை)

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 5, 2020

siragu Annadurai and_E._V._Ramasami

திராவிடம் மாதம் -இது
திராவிட மாதம்,
தீரமிகு தமிழ் நிலத்தை
திறன்மிகு ஆற்றலால்
மீட்டெடுத்த மாட்சிமைகள்
பிறந்த
மாதம் !!

இது திராவிட மாதம்

பகுத்தறி
பொதுவுடைமை நோக்கு
பெண் விடுதலை பறை
பழையன எறி
பகுத்து உண்
போராட்டமே பயணம்
முட்களே கீரிடம்
சிறையே போதி மரம்
சிறகுகள் எரிதழல்
ஆதிக்கத்தோடு மோது
அடக்கினால் கிளர்ந்தெழு
உரிமையை யாசிக்காதே
பகட்டு வெறு
பகடியால் சோர்வாகாதே
சலிப்பும் ஓய்வும் தற்கொலை
சரித்திரம் மலர்வது புரட்சியால்
சாவிலும் சுயமரியாதை உண்டென
உரைத்த ஈரோட்டுக் கிழவனின்
பிறந்தநாள் செப்டம்பர் 17;

கிழவனின் போர்த்தளபதியாய்
காஞ்சியில்  புத்தன் பிறந்தான்
செப்டம்பர் 15;

அண்ணா எனும் அன்பு
ஆன்றவிந்த பேரறிஞர்
இகலினர்க்கும் இன்முகத்தோன்
ஈர்ப்பின் விசையவன்
உண்மையின் உரைகல்
ஊக்கினன் தமிழ் நிலம்
எண்மையின் உறைவிடம்
ஏழிலின் நன்னனவன்
ஐயவன்
ஒடிவு உடல் சூழ்ந்தபோதும்
ஓய்வில்லா ஓட்டம் கொண்டோன்
கட்டுரையின் கட்டூர் அவன்
காவியத் தலைவனவன்
கிழக்கு நம்பிக்கையவன்
கீழோர்க்கும் புன்னகையளித்தவன்;
குணத்தில் தன்மையவன்
கூர்த்த மதியாளன்
கெடுப்போர்க்கும் நிழலானான்,
கேட்டார்ப் பிணிக்கும் சொல்லவன்
கைதூவா தலைவனவன்
கொடியோர் முன் தலைவணங்கான்;
கோட்டையில் திராவிடக்
கொடியேற்றினான்,
கெளவை உடைத்துக்
கோலோச்சினான்;

இருவர் பிறந்த மாதமிது
தமிழர் உரிமை உணர்வு
ஒளியேற்றும் காலமிது
தவறாது கொண்டாடு
தகைமைத் தலைவர்களை;
திராவிடமாதம்

திக்கெட்டும் ஒளி கூட்டட்டும் !!!


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திக்கெட்டும் ஒளி கூட்டட்டும் !!! (கவிதை)”

அதிகம் படித்தது