சூன் 16, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

திடல் கண்ட இடமெல்லாம் கடல்! (கவிதை)

மகேந்திரன் பெரியசாமி

Mar 11, 2017

Siragu-thidal2

திடல் கண்ட
இடமெல்லாம் -
நம் வெற்றிப்
படை கூடும்! காணீரோ?

நெடுவாசல்
விடுக்கின்ற
அறைகூவல் கேளீரோ?

சீறி வந்த
காளைகளாய்த்
திமில் தெறிக்கும்
இளைஞர் திறள்!

பரம்பரையாய்
ஏர் உழுதுக்
கூர்அறிவு பெற்ற
வீரர்களின் போர்க்குரல்!

மாண்புமிகு மாணவர்கள்
மலையெனத் திரண்டு நிற்பார்
விவசாயம் காத்து நிற்பார்!
விவசாயிகளைத் தூக்கி நிற்பார்!
‘மக்கள் ஆட்சி’ என்பதன்
மகத்துவம் உணர்வீரோ?

மெரினாவில் திரண்டோம்
மிரண்டீர்.. மிரட்டினீர்.. -
திரள் திரளாய் மக்கள் கூ(ட்)டியப்
அறப் படைகள் கண்டீர்.. பயந்தீர்..
‘இனி என்றும் கூடாது-
மெரினாவில் மக்கள்
திரள் போர்கள்’ என்றீர்..
தடை பல விதித்தீர்..

தடுக்கத் தடுக்கத்
தழைப்போம் நாங்கள்!
வெட்ட வெட்டக்
கிளைப்போம் நாங்கள்!

எங்கள் ஒவ்வொரு ஊரிலும்
விரிந்திருக்கும் வாசல்கள்-
வாடி வாசல்.. நெடு வாசல்
தங்கச்சி மடம் என்று
போராட்ட வாசல்கள் நீளும்;
சிறுசிறு திடல்களும் சீறும்-
மக்கள் பெருங்கடல் கூடும்!

உரிமைப் போர்களில்
உள் நெருப்பு தகிக்கும்!
தமிழ் வாசம் வீசும்
திசை யெல்லாம் படரும்!

உள்ளங்கள் ஒன்றிய
உலகத் தமிழரின்
ஒருமித்த குரலில்
போர் முரசு முழங்கும்!
உம் செவிப்பறை கிழியும்!

எல்லையின்றி ஏராளம்
எண்ணிக்கை திரளும்!
கண்டு அதிகாரம் மிரளும்!

பெருந்திரள் கூட்டம்
கடலெனப் பெருகிய எமதுயிர்ப்
பட்டாளம் பார்த்தீரோ – உறுமும்
கர்ச்சனைகள் கேட்டீரோ? இன்னும்
உரிமை மீறல் செய்வீரோ?

எங்களுக்கு நாங்களே-
ஒன்று பட்டோம் பாருங்கள்!
வென்று நிற்போம்- நகருங்கள்!
மீட்டெடுப்போம் உரிமைகள்!

எங்கள் ஆதார உரிமைகளை
மீறும் போதெல்லால்
உறுமித் திரட்சியாய்
மேலெழும் புரட்சி;
மக்கள் நல எழுச்சி!
அதுநோக்கி
உங்களுக்கோ மிரட்சி-
எல்லாம் கண்டீரே-
இனியும் தொடர்வீரோ?


மகேந்திரன் பெரியசாமி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திடல் கண்ட இடமெல்லாம் கடல்! (கவிதை)”

அதிகம் படித்தது