திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்-பாகம் 1
ராஜ் குணநாயகம்Jun 27, 2020
“கல்லானாலும் கணவன்
புல்லானாலும் புருஷன்”
வடக்கு-கிழக்கு தமிழர்களிடையே திருகோணமலை தமிழர்களின் அரசியல் பங்குபற்றுதல் மற்றும் பங்களிப்பானது (political participation and contribution) ஒரு தனித்துவமான பண்புடையதாகவே இருந்து வருகின்றமையை காணலாம். திருகோணமலை தமிழர்கள், இலங்கை சுதந்திரம் அடைந்த காலம் தொட்டு காலாகாலமாக தொடர்ச்சியாக தமிழர்களுக்கான உரிமைகள், நீதி, கெளரவம் மற்றும் தமிழர்களின் இருப்பு எனும் விழுமியங்களை முன்னிறுத்தி அதன் அடிப்படையில் தந்தை செல்வா காலம் தொட்டு இன்று வரையும் தமிழர் விடுதலை கூட்டணி, இலங்கை தமிழ் அரசு கட்சி என்று (இ.த.அ.க) தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பையுமே (த.தே.கூ) ஆதரித்து வருகின்றமை வெள்ளிடைமலை. மேலும் திருகோணமலை தமிழர்கள் பெருந்தேசிய கட்சிகளையோ, உதிரி கட்சிகளையோ, ஒட்டுக்குழுக்களையோ ஆதரிப்பதுவுமில்லை (மிக அரிதான சந்தர்ப்பங்களையே காண முடியும்) அல்லது அவைகளுக்கு “கோணேசர் பூமியில்” இடமில்லை என்றே சொல்லலாம்.
“செவிடர் காதில் ஊதிய சங்கு”
முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதன் பின்னரான கடந்த 1௦ வருட காலமாக திருகோணமலை உட்பட வடக்கு-கிழக்கு பகுதிகளில் த.தே.கூ இனரின் செற்பாடுகள் குறித்து குறிப்பாக மீள் புனருத்தாரணம், மீள் கட்டுமானம் மற்றும் வேலைவாய்ப்புக்கள், கல்வி, சமூக, பொருளாதார மேம்பாடுகளும் அபிவிருத்திகளும் தொடர்பாக மக்களால் தொடர்ச்சியாக பல விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுக் கொண்டிருக்கும் அதேவேளை அவர்களது அரசியல் தீர்வு (political solution) தொடர்பான பேச்சுவார்த்தைகள், 60 வருடங்களுக்கும் அதிகமான அரசியல் அனுபவத்தை கொண்ட த.தே.கூ இன் தலைவர் திரு.இரா.சம்பந்தன் அவர்களின் அரசியல் சாணக்கியம் பற்றியும் பலத்த விமர்சனங்களையும் பலரும் முன்வைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
அதேவேளை, திருகோணமலை இ.த.அ.க வின் உயர் மட்டக்குழுவானது சர்வாதிகார போக்குடையதாகவும் (autocracy) கட்சி ஆதரவாளர்கள் மற்றும் இளைஞர்களின் கருத்துக்களை செவிசாய்ப்பதில்லை, மதிப்பதுமில்லை என்றும் அத்தோடு வேட்பாளர்கள் தெரிவின்போது பொருத்தமான வேட்பாளர்களை குறிப்பாக இளைஞர்களை உள்வாங்குவதில்லை என்கின்ற பெரும் குற்றச்சாட்டும் நிலவுகின்றது.
மேலும் ஓர் கசப்பான, ஜீரணிக்க முடியாத மறைக்கப்பட்ட நிகழ்ச்சி நிரல் (hidden agenda) ஒன்று அதாவது த.தே.கூ வேட்பாளர்களிடையே திருமலை, மூதூர் வேட்பாளர்கள் என பிரதேசவாதத்துடன் கூடிய பிரித்தாளும் தந்திரம் (divide and rule) நாசுக்காக அரங்கேறி வருவதாகவும் அண்மைய காலங்களாக இளைஞர்கள் அங்கலாய்த்து வருகின்றனர்.
இது இவ்வாறிருக்கையில், இ.த.அ.க இன் ஒரு சில அதி தீவிர கட்சி ஆதரவாளர்கள் “திருகோணமலையில் அரசியலுக்கு தகுதியுள்ள தமிழ் இளைஞர்கள் இல்லை அல்லது அரசியலுக்கு முன்வருவதில்லை” எனும் பொருள்பட கருத்துக்களை முன்வைத்து வருவதையும் சமூக ஊடகங்களில் (social media) காணலாம்.
இப்பின்னணியில், திருகோணமலை இ.த.அ.க இன் உயர் மட்டக்குழுவானது அதன் கட்சி செயற்பாடுகளிலும் அத்தோடு வேட்பாளர்கள் தெரிவின்போதும் சனநாயக பண்புகளை (characteristics of democracy) மிகச்சரியாகவே பின்பற்றுகின்றதா (கட்சியின் யாப்பில்(constitution) இவையெல்லாம் உள்ளடக்கப்பட்டிருக்கும் என்று நம்புவோம்)?
திருகோணமலையில் அரசியலுக்கு தகுதியுள்ள தமிழ் இளைஞர்கள் இல்லையா? அல்லது அரசியலுக்கு முன்வருவதில்லையா? அல்லது, முன்வருகின்ற அரசியலுக்கு தகுதியுள்ள இளைஞர்களையும் கட்சி உள்வாங்குவதில்லையா?
மேலும் வரும்….அதுவரை விடைகளைத் தேடுவோம்…….
-ஈழன்-
ராஜ் குணநாயகம்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருகோணமலை தேர்தல் களமும் தமிழ் தேசிய கூட்டமைப்பை மையப்படுத்திய மாயையும் நிஜமும்-பாகம் 1”