மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

திருமணமாகாத தாய் – குழந்தையின் இயற்கை பாதுகாவலராக இருக்க முடியுமா?

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Dec 17, 2016

siragu-natural-guardian5

ஒரு குழந்தையை பத்து மாதம் கருவில் சுமந்து, பெற்று, கண்ணும் கருத்தும் கொண்டு வளர்க்கும் தாய்தான் ஒரு குழந்தையின் இயற்கை பாதுகாவலர் (natural guardian) என்பது தான் சரியாக இருக்க முடியும். ஆனால் இந்தியா போன்ற குடும்ப அமைப்பும், ஆண் ஆதிக்கமும் கொண்ட நாட்டில் அத்தகைய பரந்த நோக்கு மக்களுக்குக் கிடையாது. குறிப்பாக ஒரு பெண் திருமணம் ஆகாமல் தாய் ஆகும் நிலையில், அவளுக்கு விருப்பம் இல்லை என்றாலும் அந்தக் குழந்தையின் தந்தை யார்? என்பதை வெளியிட்டே தீர வேண்டும், அந்த நபர் தான் குழந்தையின் முதன்மை பாதுகாவலர் என்ற நிலையே இருந்து வந்தது. இந்த நிலையினை மாற்ற, இந்திய உச்சநீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு மிகச் சிறந்த தீர்ப்பினை வழங்கியது.

டெல்லி உயர்நீதிமன்றம் மற்றும் டெல்லி கீழ்மைநீதிமன்றம் நிராகரித்த மனுவை உச்சநீதிமன்றம் விசாரித்தது. குழந்தை 2010 ஆம் ஆண்டு பிறந்தது. அந்த நேரத்தில் இருந்தே தாய் மட்டும்தான் குழந்தையை தந்தையின் எந்த ஆதரவும் இன்றி வளர்த்து வந்தார். எனவே தன் சேமிப்புகள் மற்றும் காப்பீட்டு ஆவணங்களுக்கு தன் மகனையே வாரிசாக நியமிக்க நினைத்தார். ஆனால் அதற்கு அவர் தந்தையின் பெயரை வெளியிட வேண்டும் என கூறப்பட்டது. அந்த நிலையில் தான் நீதி அரசர் விக்ரமஜித் சென் அந்தத் தீர்ப்பில் இந்தியாவில், திருமணமாகாது தாயாகும் பெண்ணை அந்தக் குழந்தையின் ஒரே பாதுகாவலராக நீதிமன்றம் நியமிக்கலாம் என்றும், அதை அந்தக் குழந்தையின் தந்தைக்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும் மேலும், அந்தக் குழந்தையின் தந்தை யார் என்றுகூட நீதிமன்றத்திற்குத் தெரிவிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று ஒரு தீர்ப்பு வழங்கியது.

siragu-natural-guardian6

அதே நேரத்தில் அந்தக் குழந்தை விருப்பப்படி தன் தந்தையின் பெயரை தெரிந்து கொள்ளவேண்டும் என்றால், அதற்கு முழு உரிமையும் இருக்கின்றது என அந்தத் தீர்ப்பில் மேலும் தெளிவுபடுத்தப்பட்டது.

அதே போன்று ஒரே ஒரு பெற்றோரால் வளர்க்கப்படும் குழந்தை(Single Parent) அல்லது திருமணமாகாத தாய்(unwed mother) இவர்கள் பிறப்பு சான்றிதழ் கேட்கும்போது அந்தத் துறையின் அதிகாரிகள் எந்த ஆட்சேபனையும் தெரிவாக்காமல் சான்றிதழ் வழங்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் மேலும் குறிப்பிட்டிருந்தனர்.

இந்தத் தீர்ப்பு பலரால் பாராட்டப்பெற்றது. எனினும், இந்தத் தீர்ப்பை அடிப்படையாகக் கொண்டு அனைத்து தாயாக இருக்கும் பெண்களும் ஒரு குழந்தையின் இயற்கை மற்றும் சட்டப் பூர்வமான பாதுகாவலர்( “every mother is the natural and legal guardian of a child”.) என உச்ச நீதி மன்றம் ஆணித்தரமாக நிலை நாட்ட வேண்டும் என்பதே பெண்ணிய ஆர்வலர்களின் அவா.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருமணமாகாத தாய் – குழந்தையின் இயற்கை பாதுகாவலராக இருக்க முடியுமா?”

அதிகம் படித்தது