பிப்ரவரி 27, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

திருமலைராயனும் காளமேகப்புலவரும்

தேமொழி

Feb 17, 2018

 Siragu kaalamega pulavar1

விஜயநகர அரசன் மல்லிகார்ச்சுனராயரின் (1449 – 1465)  அரசப் பிரதிநிதியான “சாளுவத் திருமலைராயன்” (1453/1455-1468) என்பவர் காலத்தவர் கவி காளமேகம் என்று அறியப்படுகிறது. சாளுவத் திருமலைராயன் என்னும் தெலுங்கு மொழி சிற்றரசனைக் குறித்துத் தனது பாடல்கள் பலவற்றில் குறிப்பிட்டுள்ளார் காளமேகம்.

சகம் 1875ல் தோன்றிய சாளுவத் திருமலைராயனைக் குறிப்பிடும் கல்வெட்டொன்று திருவானைக்காவில் உள்ளது என்று ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை குறிப்பிடுகிறார். இவனது தலைநகரம் திருமலைராயன் பட்டினம் என்ற குறிப்பு அவனது கல்வெட்டிலும் காணப்படுகிறது என்றும், இவனுடைய கல்வெட்டுக்களில் கூறப்படும், ‘சுங்கத் தவிர்த்த சோழநல்லுனரான திருமலை ராசபுரம்’ என்பது திருமலைராயன் பட்டினம் என்றும்  ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை கருதுகிறார்.  தான் பண்டைய சளுக்க மன்னர்களின் வழித்தோன்றல் என்பதாக  இவன் தன்னைச் “சாளுவத் திருமலை தேவமகாராசர்” (S.I.I.Vol.II. No. 23) என்று கூறிக்கொள்ளுகிறான். இவன் காலத்தவரான காளமேகப்புலவரும் “கல்யாணிச் சாளுவத் திருமலைராயன்” என்றே குறிப்பிடுகின்றார். தம் பாடலொன்றில்,  “…..  நிலைசெய் கல்யாணிச்சாளுவத் திருமலைராயன்”  என்ற வரியில் காளமேகம்  குறிப்பிடும் கல்யாணி என்பது மேலைச் சாளுக்கிய மன்னர்களின் தலைநகரம்.

திருமலைராயன் குறித்த கல்வெட்டுகள் சோழ மண்ணில் காணப்படுவதாக மு. இராகவையங்கார் (சாசனத் தமிழ்க்கவி சரிதம் என்ற நூலிலும்), தி. வை. சதாசிவ பண்டாரத்தார் (தமிழிலக்கிய வரலாறு -13, 14, 15 ஆம் நூற்றாண்டுகள் என்ற நூலிலும்)  குறிப்பிடுகிறார்கள். இந்தச் சான்றுகளின் அடிப்படையில் பதினைந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வாழ்ந்தவர் காளமேகம் எனக் கருத வழியுண்டு எனக் குறிப்பிடுகிறார் அ. சதாசிவம் பிள்ளை (பாவலர் சரித்திர தீபகம், பகுதி – 2).

சாளுவத் திருமலைராயன் ஆண்ட பகுதி திருமலைராயன் பட்டினம் என்று இந்நாளில் அறியப்படுகிறது. நாகைக்குச் சில கல் தொலைவிலே இருக்கும் திருமலைராயன் பட்டினம் சுருக்கமாக டி. ஆர். பட்டினம் என்றும் அழைக்கப்படுவதாகவும் தெரிகிறது.  “திருமலைராயன் பட்டினத்தில் ஏடு தேடியது” என்ற ஒரு குறிப்புடன் உ.வே.சாமிநாதையர் தாம் எழுதிய “நல்லுரைக்கோவை” நூலில் இதைக் குறிப்பிடுகிறார்.

“நாகபட்டினம் போயிருந்த போது அதற்கு வடக்கே கடற்கரையில் திருமலைராயன் பட்டினம் இருப்பதை அறிந்தேன். சிறந்த கவிராயராகிய காளமேகத்தின் பெருமையை உலகுக்கு விளக்கிய அந் நகரத்தைப் பற்றித் தமிழ்ச் செய்யுட்களால் ஒருவாறு அறிந்திருந்தேன். காளமேகம் வசைக்கவி பாட அந் நகரம் மண்மாரியால் அழிந்ததென்று சொல்வார்கள். இந்தச் செய்திகளை அறிந்த எனக்கு அவ்விடம் சென்று பார்த்துவரவேண்டுமென்ற ஆவல் மிகுதியாக இருந்தது. மண்மாரியால் அழிந்த பட்டினத்துக் கருகில் ஊரொன்று உள்ளது. அங்கே யாரேனும் புலவர் பரம்பரையினராக இருப்பாராயின் அவரது வீட்டிலுள்ள ஏடுகளையும் பார்க்கலாமென்பது என் அவா.

காலையில் நாகபட்டினத்திலிருந்து ஒரு குதிரை வண்டியில் ஏறித் திருமலைராயன் பட்டினம் போய்ச் சேர்ந்தேன். அங்கே பழைய பட்டினம் அழிந்த பிறகு உண்டாகிய புதிய பட்டினம் அதன் கீழ்ப்புறத்தில் அப்பெயரோடே இருக்கிறது. அப்பட்டினத்தில் பலவகைச் சாதியினரும் தொழிலாளிகளும் தனித்தனியே குடியிருந்த வீடுகளையுடைய பரந்த வீதிகளும் வேறு பலவகை அமைப்புக்களும் சிவ விஷ்ணு ஆலயங்களும் பல குளங்களும் காணப்பட்டன. நகரத்தைச் சார்ந்து திருமலைராயனென்னும் ஆறு ஓடுகின்றது. அது பழையகாலத்தில் அப்பெயரையுடைய அரசனால் காவிரியாற்றிலிருந்து ஒரு பிரிவாக வெட்டப்பெற்றது. அந்நதி அப்பட்டினத்திற்குக் கிழக்கே சென்று கடலோடு கலக்கிறது.”

காளமேகப் புலவருடைய இயற்பெயர் வரதன் என்பதும் சில பாடல்களின் வழி தெரிய வருகின்றது. “நள்ளாற்றுத் தொண்டிக்கு நல்வரதன் தீட்டுமடல்” என்று திருநள்ளாற்றில் வாழ்ந்த ‘நள்ளாற்றுத்’ தொண்டி என்ற தனது அன்பிற்குரிய  பெண்துணைவியாருக்கு மடல் எழுதி தன்னை வந்து சந்திக்குமாறு காளமேகமே அவருக்கு அழைப்பு விடுக்கும் பாடலும் உள்ளது.

“வாசவய னந்தி வரதா  திசையனைத்தும் வீசுகவி காளமேகமே” என்று அதிமதுர கவிராசன் என்ற புலவரும் தம் பாடலில் அவரை வரதன்  என்று குறிப்பிடுகிறார். மழைமேகம் போல பாடல்களைப் பொழிந்தார் என்பதால்  காளமேகம் என்ற சிறப்புப்பெயர் பெற்றவர் இவர்.   ‘நந்தி வரதா’ என்பதில் உள்ள நந்தி என்பது காளமேகம் பிறந்த நந்திபுரம் என்ற ஊரைக் குறிக்கிறது. இவ்வூர் கும்பகோணத்துக்கு  அருகில் தற்காலத்தில் நாதன்கோயில் என வழங்கும் ஊர். காளமேகமும் தன்னைக் ‘காளமேகம்’ என்றே அறிமுகப்படுத்திக் கொள்ளும் பாடலும் உண்டு.

காளமேகம் மிகவும் நுண்மதியாளர். மற்ற புலவர்களில் இருந்தும் மாறுபட்டவர்,  ஒரு பாடலில் இரண்டோ அதற்கும் மேலோ பொருள் கொள்ளும் வண்ணம் பாடல் இயற்றுவதில் வல்லவர். தமது மொழியாற்றலை வெளிப்படுத்தும் வண்ணம்  ‘இரட்டுற மொழிதல்’  எனப்படும் ‘சிலேடை அணி’ கொண்ட பாடல் பலவற்றை இயற்றியுள்ளார்.    இரட்டுற மொழிதல் என்றாலே காளமேகப்புலவர் பாடல்  என்று தமிழிலக்கியத்தில் முத்திரை பதித்தவர். இவர் பாடல்களைப் படிப்பதால் மொழிவளம் பெருகும் என்று புலியூர்க் கேசிகன் குறிப்பிடுகிறார்.

இவ்வாறு இவர் எழுதிய பல சிலேடைப் பாடல்களில் திருமலைராயன் பற்றிய குறிப்புகளைக் காணலாம்.  திருமலைராயனைப் புகழ்ந்தும் பாடல்களை எழுதியுள்ளார்.

சிலேடைப் பாடல்களில் திருமலைராயன்:

குறிப்பு: கீழுள்ள இரட்டுறமொழிதல்  பாடல்வரிகளின் இறுதிப் பகுதி கொடுக்கப்பட்டுள்ளது.  வரிகளின்  இறுதியில்  அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள எண் புலியூர்க் கேசிகனின் ‘காளமேகப் புலவர் – தனிப்பாடல்கள்’ என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிசை எண்ணைக் குறிக்கிறது

[1] ஆமணக்கும் யானைக்கும்:

” ….. எத்திசைக்கும் தேமணக்குஞ் சோலைத் திருமலைராயன்வரையில் ஆமணக்கு மால்யானை யாம்.” (48)

பொருள்: எல்லாத் திசைகளிலும் இனிய மணம் கமழ்ந்து கொண்டிருக்கும் திருமலைராயனுடைய மலைச்சாரலில் ஆமணக்கும் பெரிய மதயானை ஆகும்.

[2] வைக்கோலுக்கும் யானைக்கும்:

“….. சீருற்ற செக்கோல மேனித் திருமலைராயன்வரையில் வைக்கோலு மால்யானை யாம்.” (49)

பொருள்: சிறப்புப் பொருந்திய செந்நிறமான திருமேனியினையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே,  வைக்கோலும் மதயானைக்குச் சமமாம்.

[3] பாம்புக்கும் வாழைப்பழத்திற்கும்:

“….. விஞ்சுமலர்த் தேம்பாயும் சோலைத் திருமலைராயன்வரையில் பாம்பாகும் வாழைப் பழம்.” (50)

பொருள்: மிகுதியான மலர்கள் தேனைப் பொழிந்து கொண் டிருக்கும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே,  வாழைப்பழம் பாம்புக்கு ஒப்புடையதாகும்.

[4] பாம்புக்கும் எலுமிச்சம் பழத்துக்கும்:

“….. எரிகுணமாம் தேம்பொழியும் சோலைத் திருமலைராயன்வரையில் பாம்பு எலுமிச்சம் பழம்.” (52)

பொருள்: தேன் பொழிந்து கொண்டிருக்கின்ற சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே, பாம்பும் எலுமிச்சம் பழத்தினைப் போல்வதாகும்.

[5] நாய்க்கும் தேங்காய்க்கும்:

“….. சேடியே, தீங்காய தில்லாத் திருமலைராயன்வரையில் தேங்காயு நாயுநேர் செப்பு.” (55)

பொருள்: தோழியே! தீமை எனப்படுவது இல்லாதே இருக்கின்ற திருமலைராயனின் எல்லைக்குட்பட்ட நாட்டிலே, தேங்காயும் நாயும் ஒப்பிட்டு உரைத்துக் கொள்க.

[6] மீனுக்கும் பேனுக்கும்:

“….. தேனுந்து சோலைத் திருமலையராயன் வரையில் மீனும் பேனுஞ்சரியாமே.” (56)

பொருள்: தேன் பாய்கின்ற சோலைகளைக் கொண்ட திருமலைராயனின் மலையிடத்தே, மீனும் பேனும் தம்முள் ஒப்புடையன.

[7] வெற்றிலையும் வேசையும்:

“….. தெள்ளுபுகழ்ச் செற்றலரை வென்ற திருமலைராயன்வரையில் வெற்றிலையும் வேசையாமே.” (59)

பொருள்: தன்னோடு பகைத்து வந்தவரை வெற்றிகொண்ட தெளிவான புகழினையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே, வெற்றிலையும் வேசை போலாவது எனலாம்.

[8] குதிரைக்கும் காவிரிக்கும்:

“…..  நாடறியத் தேடு புகழான் திருமலைராயன்வரையில் ஆடுபரி காவிரியா மே.” (62)

பொருள்: நாடெங்கும் அறியும்படியாகத் தேடின புகழை உடையவனாகிய திருமலைராயனின் வரையிடத்திலே குதிரைக்கும் காவிரிக்கும் ஒப்பாகும்.

[9] ஆடும் கதவும்:

“….. துய்யநிலை தேடும் புகழ்சேர் திருமலைராயன்வரையில் ஆடும் கதவு நிகராம். “(64)

பொருள்: தூய்மையான தங்குமிடத்தைத் தேடி அடையும் புகழ் சேர்ந்துள்ள,  திருமலைராயனின் மலைச்சாரலிடத்தே ஆடும் கதவும் ஒன்றிற்கொன்று சமமானதாம்.

[10] ஆடும் குதிரையும்:

” ….. உம்பர்களும் தேடுநற் சோலைத் திருமலைராயன்வரையில் ஆடுங் குதிரையுநே நிகராம்.” (65)

பொருள்: தேவர்களும் தேடிவந்து மகிழும் சோலைகளையுடைய திருமலைராயனின் மலைச்சாரலிலே ஆடும் குதிரையும் தம்முள் ஒன்றற் கொன்று சமானமாகும்.

[11] துப்பாக்கியும் ஓலைச்சுருளும்:

“….. நீணிலத்தில் செப்பார்க் குதவாத் திருமலைராயன்வரையில் துப்பாக்கி யோலைச் சுருள்.” (66)

பொருள்: நெடிதான இந்த உலகத்திலே தன்னைப் போற்றிச் சொல்லாத புலவர்க்குப் பயன்படுதல் இல்லாத  திருமலைராயன் என்பவனின் மலைச்சாரலில், துப்பாக்கியும் ஒலைச்சுருளும் ஒன்றிற்கொன்று சமானமாகும்.

மேற்காணும் பாடல்களில், ‘திருமலைராயன் வரையில்’ என்பதற்கு உரையாசிரியர் புலியூர்க் கேசிகன் திருமலைராயன் என்பவனின் மலைச்சாரலில் என்றே பெரும்பாலும் பொருள் கூறியுள்ளமையைக் காண்க. ஓரிடத்தில் மட்டும் திருமலைராயன் வரையில் என்பதற்கு திருமலைராயனின் எல்லைக்குட்பட்ட நாட்டிலே என்ற பொருள் காண்கிறார்.  இவ்வாறு இவர்மட்டுமன்று, பிற உரையாசிரியர்களும் வரை என்பதற்கு மலை என்ற பொருளையே கூறிச் சென்றுள்ளார்கள். வெற்பு என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், இவர்கள் பொருள் கூறும் வகையில் திருமலைராயன் பட்டினத்தில்  எந்த ஒரு மலையும் இல்லை என்பதுதான் உண்மை.  இதன் அடிப்படையில் திருமலைராயனின் எல்லைக்குட்பட்ட நாட்டிலே என்று பொருள் கூறுதலே பொருத்தமாக இருக்கும்.  இல்லை எனில் காளமேகம் கூறும்  திருமலைராயனின் நாடு எதுவென்று மீளாய்வு செய்யத் தேவையிருக்கிறது.

இரட்டுறமொழிதலுக்குப் பெயர் பெற்றது போலவே வஞ்சப்புகழ்ச்சியிலும், வசைபாடுவதிலும் காளமேகம் வல்லவர்.  ‘கடவுள் முதல் கணிகையர் வரை’ இவரால் வசைபாடப்பட்டவர் பற்பலர்.  இவர் திருமலைராயனை வசைபாடியதாக உள்ள பாடல்களும் உள்ளன. வசைபாடல்கள் என்றாலும் இவர் பெயர் நினைவு வரும் அளவிற்கு அதிலும் தம் முத்திரையைப் பதித்துள்ளார்.

திருமலைராயனுக்கும் இவருக்கும் உள்ள தொடர்பு குறித்த கதையும் புகழ் பெற்றதே. அதையும் சுருக்கமாக அறிந்துகொள்வது  அவர் திருமலைராயனின் மீது பாடிய இசைபட, வசைபட பாடியதன் பின்புலத்தைக் காட்ட உதவும்.

நந்திபுரத்தில் வரதனாகப் பிறந்த காளமேகம் திருவரங்கத்திற்குக் குடிபெயர்ந்தார், அங்குக் கோயிலில் சமையற்காரகப் பணியாற்றினார். வைணவப் பின்னணி கொண்ட இவருக்குத் திருவானைக்காவல் கோயிலில் நாட்டியமாடும் மோகனாங்கி என்ற  பெண்ணுடன் தோழமை ஏற்பட்டது.  சைவசமயத்து மோகனாங்கி வைணவரான வரதனிடம் கொண்ட காதலால் தோழியர்களால்  எள்ளி நகையாடப்பட்டார்.  இதன் காரணமாக மனம்வருந்திய மோகனாங்கி வரதனுடன் கொண்ட நட்பை முறித்துக் கொள்ள முயன்றார்.  காரணம் அறிந்த வரதன் தனது காதலியை மகிழ்விக்கும் பொருட்டு திருவானைக்காவல் கோயிலுக்குச் சென்று சைவசமயத்தவராக தன்னை மாற்றிக்கொண்டு, அக்கோயிலின் மடைப்பள்ளியிலேயே சமையல்காரராக பணிபுரியத் துவங்கினார்.  ஒருநாள் இரவில் மண்டபத்தில் இவர் அயர்ந்து உறங்கியபொழுது அம்பிகை இவருக்குப் புலமைபெற அருள் புரிந்தார் என நம்பினார். அது முதற்கொண்டு இவர் கொடுக்கப்படும்  சொல், பொருள் எவற்றுக்கும்  உடனடியாகப் பாடல் எழுதும் ஆற்றல் பெற்றார், கவி காளமேகம் எனவும் அழைக்கப்பட்டார் என்பது இவர் குறித்துக் கூறப்படும் செய்தி.

இவ்வாறு புலமை பெற்ற இவர் பல சைவக்கோயில்களைச் சென்று பாடிவரவும் விரும்பினார்.  தமிழ்ப்புலவர் பலரை தமது அவையில் ஆதரித்த திருமலைராயனிடம் தனது திறமையைக் காட்டி பரிசில் பெற விரும்பி திருமலைராயனின் நகரத்திற்கு வந்தார்.  திருமலைராயனின் சிறப்பைப் புகழ்ந்து பாடினார். மன்னனின் அவையில் இருந்த  ‘தண்டிகைப் புலவர்கள்’ என்றழைக்கப்பட்ட அறுபத்துநான்கு புலவர்களுடன் புலமைப் போட்டியில் வெற்றி கொண்டார். தலைமைப்புலவர் அதிமதுரக் கவி என்பாரின் வெறுப்பிற்கும் ஆளானார். தனது அவைப்புலவர்களின் தோல்வியால் மனம் குமைந்திருந்த மன்னன் திருமலைராயன்  தனது பாடல்களுக்குத் தக்க மரியாதை தராது நேர்மை தவறியதாக உணர்ந்த பொழுது, அவன் நகரமே மண்மாரி பெய்து அழியட்டும் எனக் காளமேகம் அறம் பாடினார் என்பது திருமலைராயன்-காளமேகம் தொடர்பு கொண்ட செய்திகளாகக் கூறப்படுகிறது.

கீழ் வரும் பாடல்கள் மன்னன் திருமலைராயனனைக்  காளமேகம் போற்றியும் தூற்றியும் பாடிய பாடல்களாக தனிப்பாடற்றிரட்டு நூல்கள் தருகின்றன.

குறிப்பு: கீழுள்ள பாடல்வரிகளின் இறுதியில் அடைப்புக் குறிக்குள் கொடுக்கப்பட்டுள்ள எண் புலியூர்க் கேசிகனின் ‘காளமேகப் புலவர் – தனிப்பாடல்கள்’ என்ற நூலில் கொடுக்கப்பட்டுள்ள பாடல் வரிசை எண்ணைக் குறிக்கிறது

“….. சீதஞ்செ யுந்திங்கண் மரபினா னீடுபுகழ்

செய்யதிரு மலரா யன்முன்

சிறுமா றென்றுமிகு தாறுமாறுகள்செய்

திருட்டுக் கவிப்புலவ ரைக்

காதங் கறுத்துச் சவுக்கிட் டடித்துக்

கதுப்பிற் புடைத்து வெற்றிக்

கல்லணையி னொடுகொடிய கடிவாள மிட்டேறு

கவிகாள மேகம் நானே.”  (4)

என்ற பாடலில், “குளிர்ச்சி செய்யும் சந்திரனின் மரபினனும் நெடிதான புகழினை உடையோனும் செங்கோன்மையாளனுமான திருமலைராயன் என்னும் இம்மன்னவனின் முன்பாக, சீற்றமென்றும் மாற்றம் என்றும் மிகுதியாகத் தாறுமாறான செயல்களைச் செய்து கொண்டிருக்கின்ற திருட்டுத்தனம் உடையக் கவிராயரான புலவர்களாவோரை இவ்விடத்தே காதுகளை அறுத்தும், சவுக்கினாலே அடித்தும் கன்னங்களிற் புடைத்தும், என் வெற்றியாகிய கல்லான சேணத்துடனே கொடிய கடிவாளத்தை இட்டும், அவர்கள் மீது ஏறிச்செலுத்தும், கவிஞனாகிய காளமேகம் என்பவன் நானேதான்” என்று தன்னை அறிமுகப்படுத்துகிறார்.  இங்கு இவர் தன்னைக்  காளமேகம் எனக் கூறிக்கொள்வதைக் காணலாம்.

அவ்வாறே மற்றொரு பாடலிலும் திருமலைராயனைப் புகழ்ந்து பாடுகிறார்.

“வீமனென வலிமிகுந்த திருமலைரா

யன்கீர்த்தி வெள்ளம் பொங்கத்

தாமரையி னயனோடிச் சத்தியலோ

கம்புகுந்தான் சங்க பாணி

பூமிதொட்டு வானமட்டும் வளர்ந்து நின்றான்

சிவன்கைலைப் பொருப்பி லேறிச்

சோமனையும் தலைக்கணிந்து வடவரைத்தண்

டாலாழஞ் சோதித் தானே.” (7)

என்ற பாடலில், “வீமன்  என்னும்படி ஆற்றலால் சிறப்புற்றிருக்கும் திருமலைராயனின் புகழாகிய வெள்ள மானது பொங்கி எழுந்ததால்,  தாமரையில் வசிக்கும்  பிரமன் அஞ்சி ஒடிச் சத்தியலோகத்திலே நுழைந்து கொண்டான்; சங்கை ஏந்தியவனான திருமால் நிலமுதல் வானம் வரை மேனி வளரப்பெற்று விசுவரூபியாகி நின்றான்; சிவபிரான் கயிலை மலைமேல் ஏறிக் கொண்டு சந்திரனைத் தலையில் அணிந்தவனாக, இமயமலையாகிய தண்டினாலே அக்கீர்த்தி வெள்ளத்தின் ஆழத்தை சோதிக்கத் தொடங்கினான் என்று திருமலைராயனின் புகழ்வெள்ளம் முத்தேவரையும் அஞ்சச் செய்யும் அளவிற்குச் சிறந்ததாயிருந்தது என்ற பொருளில்  புகழ்கிறார்.

இன்னுமொரு பாடலில் திருமலைராயனின் வாள் சிறப்பினைக் கூறுகிறார்.

“செற்றலரை வென்ற திருமலைரா யன்கரத்தில்

வெற்றிபுரி யும்வாளே வீரவாள்-மற்றையவாள்

போவாள் வருவாள் புகுவாள் புறப்படுவாள்

ஆவா னிவாளவா ளாம்.” (8)

என்ற பாடலில், “பகைவர்களை வெற்றிகொண்ட, திருமலைராயன் கரத்தின் வாள் ஒன்றே வீரவாள் என்பதற்குப் பொருந்துவதாகும்; வாள் என்று முடியும் பிறவெல்லாம், போவாள், வருவாள், புகுவாள், புறப்படுவாள், ஆவாள், இவாள், அவாள் என்ற சொற்கள், வாள் என முடிந்தாலும் எப்படி வாளைக் குறிப்பதாகாதோ, அப்படியே வாள் என வழங்கினும் பயன் அற்றவைகளாம்” என்று அரசர்களின் ஆயுதங்களைப் போற்றுவதன் மூலமும் புகழும் மரபினையொட்டி திருமலைராயனின் வெற்றிவாளைக் குறித்துப் பாடுகிறார்.

அடுத்து வரும் இருபாடல்களில் மன்னனின் பாராமுகத்தினால் வெகுண்டு அவனை வசைபாடத் துவங்குகிறார்.

“கோளர் இருக்குமூர் கோள்கரவு கற்றவூர்

காளைகளாய் நின்று கதறுமூர்-நாளையே

விண்மாரி யற்று வெளுத்து மிகக்கறுத்து

மண்மாரி பெய்கவிந்த வான்.” (12)

மண்மாரி பெய்க!  என்ற இப்பாடலில், “கொலைகாரர்கள் இருக்கின்ற இவ்வூர், புறங்கூறவும் வஞ்சகம் செய்யவும் கற்றிருக்கின்ற இவ்வூர், காளைகளைப் போன்று மக்கள் கட்டுப்பாடில்லாமல் நின்று கதறிக் கொண்டிருக்கும் இவ்வூர், இதன்கண், நாளைக்கே இந்த வானம், விண்மாரியற்று வெளுத்து மிகக் கறுத்து வான்மழை இல்லாது போய் மண்ணே மழையாகப் பெய்வதாக” என  மிகவும் சினந்து  ஊருக்கே சாபம் தந்து வசைபாடுகிறார் காளமேகம். இப்பாடல் காளமேகம் திருமலைராயனின் மீது பாடிய பாடல் என்ற குறிப்பு கொடுக்கப்படினும் பாடலில்  திருமலைராயன் பற்றிய குறிப்பு இல்லாததையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

ஆனால், மற்றொரு பாடலில் ‘மண்மாரி பெய்தால் மட்டும் போதாது; ஊர் முற்றவுமே அழியுமாறு வாட்டுதல் வேண்டுதல்’ எனக் காளமேகம் பாடும்பொழுது திருமலைராயன் பற்றிய குறிப்பு உள்ளது.

“செய்யாத செய்த திருமலைராயன்வரையில்

அய்யா வரனே அரைநொடியில்-வெய்யதழற்

கண்மாரி யான்மதனைக் கட்டழித்தாற் போற்றியோர்

மண்மாரி யாலழிய வாட்டு.” (13)

என்ற பாடலில், மன்மதனை அழித்தது போல சிவனே! இந்த ஊரையும் எரித்து அழித்துவிடு’ என்கிறார். “என் அய்யன் சிவபெருமானே!  எனக்குச் செய்யத்தகாத எல்லாம் செய்த இந்தத் திருமலைராயனுடைய ஆட்சி எல்லைக்கு உட்பட்ட நாட்டில் உள்ள  தீயவர்களை அரைநொடிப்போதிலேயே, வெம்மையான நெருப்புக் கண் பார்வையான மழையினாலே மன்மதனின் ஆற்றலை யெல்லாம் போக்கிச் சாம்பராக்கினாற்போல, மண்மாரியினாலே அழியும்படியாக வாட்டு வாயாக” என்று பாடுகிறார்.

“இந்திரன் கலையா யென்மருங் கிருந்தான்

அக்கினி யுதரம்விட் டகலான் ” எனத் தொடங்கி

 “சாளுவத் திருமலை ராயன்

மந்தர புயனாங் கோப்பய னுதவு

மகிபதி விதரண ராமன்

வாக்கினாற் குபேர னாக்கினால் அவனே

மாசிலா வீசனா வானே. (6)

என்று திருமலைராயனின் சிறப்பு கூறும் பாடல் “நிலை பெற்ற கல்யாணி சாளுவத் திருமலைராயன், மந்தர மலைபோன்ற புஜங்களையுடையவன், புலவர்களுக்கு ராஜ மரியாதைகளை அளித்து உதவும் மன்னவன், நான்கும் தெரிந்த ராமனைப் போன்று சிறந்தவன். தன் ஆணையினாலே என்னைக் குபேர செல்வத்திற்கு உரியவனாக்கினால்  குற்றமற்ற கடவுள் எனக்கு அவனே ஆவான்” என்றும் கூறுகிறது.  எனினும் இப்பாடல் வேறு புலவர் பாடியதாகவும் கூறப்படுகிறது, பிற திருமலைராயன் பாடல்களை காளமேகம் பாடியதால் இது காளமேகத்தின் பாடலென்றே கூறுவாரும் உண்டு எனத் தெரிகிறது.

ஆகவே, சற்றொப்ப 15 பாடல்கள் திருமலைராயனையும் காளமேகத்தையும் இணைத்து தனிப்பாடல்களாக அறியப்படுகின்றன.

விநோதரச மஞ்சரி, தமிழ் புளூராக், ஆரியப்புலவர் சரிதம், அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம் போன்ற தனிப்பாடற்றிரட்டு நூல்களும்,

கா. சுப்பிரமணிய பிள்ளையின் தனிப்பாடற்றிரட்டு பதிப்பு (1948) காளமேகப்புலவரின் 187 பாடல்கள் தொகுப்பையும்,

பொன்னுசாமித் தேவரின் தனிப்பாடற்றிரட்டு பதிப்பு (1884, 1940) காளமேகப்புலவரின்  158 பாடல்கள் தொகுப்பையும்,

திருவாலங்காடு ஆறுமுகசாமி பதிப்பு  (1895) காளமேகப்புலவரின் 170 பாடல்கள் தொகுப்பையும்,

இராமசாமி நாயுடுவின் தனிப்பாடற்றிரட்டு தொகுப்பு (1908) காளமேகப்புலவரின் 169 பாடல்கள் தொகுப்பையும்,

ஔவை. சு. துரைசாமிப் பிள்ளையின் தமிழ் நாவலர் சரிதை பதிப்பு (1949) காளமேகப்புலவரின் 21 பாடல்கள் தொகுப்பையும்,

புலியூர்க் கேசிகனின் காளமேகப் புலவர் – தனிப்பாடல்கள் பதிப்பு (2010) காளமேகப்புலவரின் 219 பாடல்கள் தொகுப்பையும் கொண்டுள்ளன.

அ. சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம் நூல் கொடுக்கும் பதிப்பு வரலாற்று ஒப்பீட்டுப் பகுதியானது,  காளமேகப்புலவரின் பாடல்கள் பல பதிப்புகளில் எண்ணிக்கை வேறுபாட்டை கொண்டுள்ளதைக் காட்டுகிறது.  அத்துடன், வேறு   புலவர்களின்  பாடல்களாகக்  காளமேகப்புலவரின் சில பாடல்கள் இடம் பெற்றுள்ளமையையும் காட்டுகிறது.

காளமேகப்புலவரின் மறப்பாடல்கள் என சதாசிவம்பிள்ளை நூலில் இடம் பெறுபவை விநோதரச மஞ்சரி நூலில் இடம் பெறுபவை, இவை தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூராக், பழைய தனிப்பாடற்றிரட்டு நூல்களில் இடம் பெறவில்லை, அவ்வாறே திருவாலங்காடு ஆறுமுகசாமி பதிப்பில் இடம் பெறாத காளமேகப்புலவரின் மறப்பாடல்கள் பின்னர் வெளியான சுப்பிரமணிய பிள்ளையின் நூல்களில் இடம் பெறுகின்றன என சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம் நூல் சுட்டுகிறது.

அத்துடன், அதிமதுர கவிராயருக்கும் காளமேகப்புலவருக்கும் இடையே எழுந்த பகைமை குறித்த கதையும் விநோதரச மஞ்சரி நூலில் இடம் பெறுபவை, இவை தமிழ் நாவலர் சரிதை, தமிழ் புளூராக், பழைய தனிப்பாடற்றிரட்டு நூல்களில் இடம் பெறவில்லை எனவும் சதாசிவம்பிள்ளையின் பாவலர் சரித்திர தீபகம் நூல் சுட்டுகிறது.

இவ்வாறு காளமேகத்தின் பாடல்கள் குறித்த மாற்றுக் கோணங்கள்  எழும்பொழுது எனக்கும் ஒரு பாடலில் அது காளமேகத்தின் பாடலா என்ற ஐயம் ஏற்படுகிறது.  அது, துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் ஒப்புமை காட்டும் இரட்டுற மொழிதல் பாடல்.

“ஆணி வரையுறலா லானகுறிப் பேதரலால்

தோணக் கருமருந்தைத் தோய்ந்திடலால் – நீணிலத்தில்

செப்பார்க் குதவாத் திருமலைரா யன்வரையில்

துப்பாக்கி யோலைச் சுருள். (66)

இதன் பொருள்: நெடிதான இந்த உலகத்திலே, தன்னைப் போற்றிச் சொல்லாத புலவர்க்குப் பயன்படுதல் இல்லாத, திருமலைராயனின் வரையில்  துப்பாக்கியும் ஓலைச்சுருளும் ஒன்றிற்கொன்று சமானமாகும்.

அது எவ்வாறு எனில்,

துப்பாக்கியானது,  ஆணி மற்றும் இருப்புச் சலாகையைத் தன்பாற் கொண்டிருத்தலாலும், மேற்கொண்ட குறியினையே தாக்கி வெற்றி தருதலாலும், மிகுதியான கருமருந் தினைப் பொருந்தியதாக இருப்பதனாலும் ஆகும்.

ஓலைச் சுருளானது,  எழுத்தாணி கொண்டு எழுதப்படுதலாலும், தன்னிடத்தே எழுதப்பட்டதாகிய குறிப்பைப் படிப்போருக்குத் தருவதாலும், ஓலையில்  எழுதப்பட்டவை நன்கு புலனாகுமாறு கைக்காப்புச் செய்யப் பெறுதலை உடையதாதலாலும் என்ற உரையாசிரியர்களால் பொருள் கூறப்படுகிறது.

இப்பொருள் குறித்த கேள்வியெழாவிட்டாலும், காளமேகம் வாழ்ந்த காலமாக திருமலைராயன் குறிப்புகள் மூலம் கொள்ளப்படும் 1450-1500 என்ற பதினைந்தாம் நூற்றாண்டில் இந்தியாவில் துப்பாக்கி இல்லை என்பதே இந்திய போர்க்கருவிகள் வரலாறு கூறுகிறது.

முதன் முதலில் இந்தியத் துணைக்கண்டத்தில் துப்பாக்கி, துப்பாக்கி மருந்து, பீரங்கி போன்றவை பயன்படுத்தப்பட்டது முகமதியர்களால்.  மிகப்பெரிய படையைக் கொண்டிருந்த இப்ராகிம் லோடிக்கும், பாபருக்கும் 1526 ஆண்டு நடந்த முதலாம் பானிபட் போரில், பாபரால் பீரங்கி போன்ற புதிய தொழில் நுட்ப ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டு இப்ராகிம் லோடி தோற்கடிக்கப்பட்டார் என்பது இந்தியப் போர்க்கருவிகள் வரலாற்றில் காணப்படுகிறது.  போர்க்கருவிகளில் தொழில்நுட்ப வளர்ச்சி இன்றி இந்தியா அயல்நாட்டாருக்கு அடிமையாகும்  நிலையை நோக்கி அடியெடுத்து வைத்தது அப்பொழுதுதான்.  அதே காலகட்டத்தில்தான் ஐரோப்பியரும்  இந்தியாவின் மேற்கு கடற்கரையை எட்டினர்கள்.  வாஸ் கோட காமா  1498-1500 ஆண்டுகள் வாக்கில்தான் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார்.  ஆகவே, காளமேகம் பாடியதாகக் கூறப்படும்  துப்பாக்கிக்கும் ஓலைச் சுருளுக்கும் ஒப்புமை காட்டும் இரட்டுற மொழிதல் பாடல் அவர் எழுதிய பாடலாக இல்லாதிருக்கவே வாய்ப்புள்ளது.

_________________________________________________________

கட்டுரைக்குத் துணை நின்றவை:-

1. நல்லுரைக்கோவை (கட்டுரைகள்), பாகம் -3, உ.வே.சாமிநாதையர், https://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0441.html

2. பாவலர் சரித்திர தீபகம், அ. சதாசிவம்பிள்ளை. பகுதி 2. கொழும்புத் தமிழ்ச்சங்க வெளியீடு (பக்கம் – 97), 1979.

3. பல வித்துவான்கள் பாடிய தனிப்பாடற்றிரட்டு, முதற்பாகம், கா. சுப்பிரமணிய பிள்ளை, B. இரத்தின நாயகர் சன்ஸ், 1948.

4. தனிப்பாடற்றிரட்டு, பொன்னுசாமித் தேவர், 1884 மற்றும் 1940.

5. தனிப்பாடற்றிரட்டு, முதற்பாகம், இராமசாமி நாயுடு, 1908.

6. தமிழ் நாவலர் சரிதை, ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், முதற் பதிப்பு : ஜனவரி  1949, பக்கம் – 176, https://ta.wikisource.org/s/1uzh

7. காளமேகப் புலவர் – தனிப்பாடல்கள் , புலியூர்க் கேசிகன், மங்கை வெளியீடு , முதற் பதிப்பு : டிசம்பர் 2010, https://ta.wikisource.org/s/8hqe

8. Regiment of Artillery – https://en.wikipedia.org/wiki/Regiment_of_Artillery


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “திருமலைராயனும் காளமேகப்புலவரும்”

அதிகம் படித்தது